சந்து பொந்துகளில் சுழலும்
செவ்விருட்டு நான்
சதா சிந்திக்கும் சுய அரிப்போடு
நீளும் என் இரவு கண்களற்றது
நிலைக்க மறுக்கும் நிர்பந்தத்தை
நிறுத்தி விட்டு சுழன்று பார்க்கும் சிறு பூமி
என் தலையில் இருக்கிறது
இருண்மைக்கும் இருத்தலியலுக்கும்
இடையிலிருக்கும் பாலத்தில்
நேற்றிரவின் துண்டு இருள் என் நிழல்
தவித்த வாயை தவிப்போடே வைத்துக் கொள்ளும்
சுய பச்சாதாபம் பேரின்பம் தான்
மௌனிக்கும் காஃப்காவுக்கும் இடையே
மயானம் காக்கும் சிறு காக்கை
என் செவிகளில் சிறகடிக்கும்
ஒரு தூங்கும் நாயின் வேட்கையோடு
வரி வரியாய் மௌனித்து நகரும்
அதிகாலை எனக்கு இல்லை
நான் என் பலவீனங்களை
எழுத்துக்களாகி விடுகிறேன்
பிறகு பலம் கொண்டவனாகி
வெகு நுட்பத்தோடு என்னை நானே
பலவீனப்படுத்திக் கொள்கிறேன்
திறந்து கிடக்கும் பேனாவின் இருள் முனைக்குள்
திரும்ப திரும்ப ஒரு மரணம் எனக்காக
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது..!
- கவிஜி