தலைகீழாய் நிற்கிறது வாழ்க்கை
வெயில் போட்ட நிழல் பிச்சையில்
ஒதுங்கியிருக்கும் அதன் கனம் தாளாத
நொடியே தற்பொழுதும் நீள்கிறது

பார்வைகளைத் திருப்புவதற்கு
பரிதாபங்களைத் தூண்டுவதற்கு
வித்தைகள் பலவற்றை உடலுக்குள்
வளர்த்து இருக்கிறோம்

தெருப்புழுதி படிந்த தலையும்
வழியும் சளி உறைந்த முகமும்
ஆடைகளற்ற உடலும்
மனிதர்களாய் எம்மை நினைக்க வைக்காதவை

குப்பைகளைப் போல வீதியின்
ஓரங்களில் கொட்டப்பட்டிருக்கிறோம்
பசி கிள்ளும் வயிற்றின் கூப்பாட்டுக்கு
பதில் சொல்ல முடியாமல் மிரள்கிறது
வாழ்வு

எதைச் செய்தும் ஆற்ற முடியாதது
புழுக்களென நாங்கள் நெளியும்
எங்கள் வாழ்க்கை பெரும்புண்

கை கால்களை வீசி வித்தைகள் காட்டுவது
இழந்தவற்றை மீட்பதற்கோ
இல்லாதவற்றைப் பெறுவதற்கோ அன்று
மொய்க்கும் ஈக்களை ஓட்ட மட்டுந்தான்.