இந்த ரோடு முடியறதுக்கு முன்னால
கிழக்க ஒரு வீதி போகும்
அதுக்குள்ளே ஒரு ரோடு மேக்கால பிரியும்
அங்க ஒரு தள்ளுவண்டி இருக்கு
சீக்கிரம் போங்க தம்பி
இட்லி தீந்திட போகுது

சொல்லி விட்டு சாலை தடுப்பில்
திரும்பி படுத்தவன் முதுகில்
வியர்வை படிந்த வரைபடம்

கடவுள் முகமோ....!
         ***
காலை சற்று தூக்கி
தொடையில் சொரிந்து கொண்டதை
கண்டு விட்டேன்
இப்போது தொடையோ கால் தூக்கியதோ
சொரிந்து கொண்டதோ
கவனத்தில் இல்லை
அது சிலை என
யாரோ சொன்னது மட்டும் தான்
         ***
எல்லாரும்
ஏதேதோ கேட்டார்கள்
நான் நீயாவதை கேட்டேன்
அடுத்த கணம் என்னைப் போலவே
தலையாட்டினாய்
அந்த கணம்
தன்னை நீ என்றது நம் நான்.
      ***
ஆயிரத்தில் ஒரு மீனாவது
தானாக வந்து
தூண்டிலில் சிக்கிக் கொள்ளும்
உயிர்களிடத்தில்
தற்கொலைகள் பொது
       ***
உங்களுக்கு முன்பே தெரிந்தது தான்
சற்று தாமதமாக எனக்குத்
தெரிந்திருக்கிறது
பிறகு
அவர்களுக்கும் தெரியத்தான் போகிறது
விடுங்கள்
தெரிந்து கொள்ளத்தானே
நீங்களும் நானும் அவர்களும்
       ***
நான்கு கை தட்டலும்
இரண்டு பொன்னாடையும் போதும்
நண்பன் எதிரியாக
குறிப்பாக ஒரே ஒரு விருது போதும்
அவனே பரம எதிரி ஆக
        ***

- கவிஜி

Pin It