ஊரின் தாகம் தீர்க்கக்
கால்வாய் வெட்டுகையில்
தன் தாகம்
தீராமல் மாண்டவர்கள்
தான் விளைவித்த
அரிசியை
உண்ண வழியின்றி
பட்டினியில்
செத்தவர்கள்
சாலை சமைப்பதில்
ரயில் தடங்கள் அமைப்பதில்
தடம் தெரியாமல்
போனவர்கள்
ராஜகாதலுக்கான
நினைவுச் சின்னம்
கட்டுகையில்
மடிந்து
தன் காதலியைத்
தவிக்கவிட்டவர்கள்
கம்பீரமான
கற்கோயில் எழுப்புதலில்
தவறி விழுந்து
சமாதியானவர்கள்
நிலத்தை மாற்றியவர்களின்
நினைவுகளை
அதே நிலத்தில்
புதைத்துவிட்டு
மாற்றி எழுதப்படுகிறது
வேறொரு வரலாறு
- ஆலங்குடி வெள்ளைச்சாமி