கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு

காலம்வரும் வேளைவரும் கண்மணியே கண்ணுறங்கு

சிங்களவன் வெடியாலே ஈர்கையும் இழந்தவனே

ஓர்காலம் நமக்குவரும் இப்பொழுது கண்ணுறங்கு

(கண்ணுறங்கு)

 

மாடிவீடும் பால்சோறும் பாழாய்ப் போனதடா

தேடிவரும் மேகம்நிலா தீயாய் எரியுதடா..

அடுப்படி குளியலறை தூங்கும்அறை இல்லையடா

சாக்குகூரை கட்டாந்தரை ஆடுமாடா ஆனமடா

(கண்ணுறங்கு)

 

கும்புடுர சாமியெல்லாம் குடிமுழுகி போயிருச்சா

சிங்களவன் வெறியாட பயங்கொண்டு ஓடிருச்சா

ஊருநாடு அழியயிலே உலகம் தூங்கிருச்சா

ஆயுதமும் துரோகமும் அறத்த அழிச்சிருச்சா

(கண்ணுறங்கு)

 

ஒரு முலை அறுத்தெரிந்து மதுரையை எரியவிட்டா

நீதிகேட்ட கண்ணகியின் கதகேட்டு வளர்ந்தோமடா

இனமே கருகுதடா ஈரக்கொல பதறுதடா

எந்(த)நாட்ட நாமெரிக்க.. கண்மூடி தூங்கடா

(கண்ணுறங்கு)

 

விதைகள் சிதறிருக்கு மண்ணுக்குள்ள புதஞ்சிருக்கு

வான்மழையும் மண்தழுவ உயிர்த்தெழும் தமிழினம்

உலகத்தமிழ் உறவிருக்கு சத்தியம் உயிர்கொடுக்க

தவிக்கும் தமிழீழம் தழைக்கும் நாள்வரும்

(கண்ணுறங்கு)

 

இருட்டான காலமிது விடிந்தே தீருமடா

விடியலுக்கு நீயும்வந்து களமாட வேண்டுமடா

குகையில புலியெனவே மகனே உறங்கிவிடு

பாயும் நாள்வருமே அப்போது எழுந்துவிடு

(கண்ணுறங்கு)