வேளாண் மக்கள் விளைவித் துலகில்
வளர்பசி தணித்தே வாழ்வு கொடுப்பார்
ஏரின் பின்னே இயங்கும் உலகின்
வேரைப் பிடுங்க விரையும் அரசுகள்
உலைக்களத் திரும்பென உழவரை உருக்கிக்
கொலைபல செய்தது கொடும்பசும் புரட்சி
எழவே இயலா உழவரை மீண்டும்
குழியில் தள்ளிக் கொழுக்கும் வணிகர்
தலைநகர் தன்னில் சளைக்கா துழவர்
பலநாள் தங்கிப் படுந்துயர் அறியார்
சிறுகுறு உழவர், சேர்ந்துடன் உழைப்போர்
வறுமையில் தவித்தே வாடுதல் முறையோ
நுகர்வோ ரெல்லாம் நொந்திடும் அவர்களின்
கைகோர்த் தணைத்தே காப்பது மென்றோ
உழவரின் கணக்கில் உழக்கும் மிஞ்சா
இழிநிலை நாட்டின் இழுக்குத் தானே!
- அர.செல்வமணி