கவியரங்கம் என்றாலே குதூகலம் தான். அதுவும் எங்கள் காமு சார் தலையில் என்றால் கரும்பு தின்ன கூலியும் போல தான். தித்திப்பும் தீராத வேட்கையும்.. கூடவே fun-ம் கலந்து கட்டி அடிக்கும்.

கவிஞர்கள் என்றாலே பவ்யமாய் அல்லது பாய்ந்து நோக்கும் புரட்சியாய் அப்படி எல்லாம் ஒன்றும் தேவை இல்லை. அவரவர் இயல்போடு இருத்தலின் வழியே கருத்து பரிமாற்றம் மிக மெல்லிய கோட்டில் தேவைக்கு கேற்ப அளவோடு இருந்தால் நலம் என்பது போல... நேற்றைய கவியரங்கத்தை தலைமை தாங்கி நடத்தி சென்ற காமு சாருக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள். சரி என்றால் பாராட்டி விட்டு தவறென்றால் சுட்டி காட்டவும் தயங்காத முகஸ்துதி அற்ற முன்னோடி அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்துக்கும்... தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பெருமன்றத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை கொண்டாட்டத்தோடு பயன்படுத்திக் கொண்டோம்.

மாணவர்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவித்தல்... கலை இலக்கியம் சார்ந்து தொடர்ந்து பணி ஆற்றுபவர்களுக்கான அங்கீகாரம்... விருதுகள்.. பாராட்டுகள்.. என்று ஒரு முழுநாள் இலக்கிய கொண்டாட்டத்துக்கு குறைவில்லை.

தலைவர் சுப்பிரமணி சார் அவர்களோடு அருகே இருந்த தருணத்தை பொக்கிஷமாக மனம் கொண்டேன். அவர் முகம் முழுக்க சிரிக்க... கண்கள் முழுக்க பார்ப்பதே ஓர் அரவணைப்பு. கவிஜி கவிதைகள் குறித்து அவர் வாயாற புகழ்ந்தது தனிப்பட்ட முறையில் இதயம் நிரம்பிய தருணம். அவரோடு இருப்பதே பாசிட்டிவ் வைப்ரேஷன் தான். சின்னவர் பெரியவர் எந்த பேதமும் அவருக்கு இல்லை. எல்லாருக்கும் கை கூப்பும் அந்த மனதில் நாமும் இருப்பதை அறிகையில்... மனம் நிரம்பியது.

அடுத்து நிறைய நண்பர்களை சந்திக்கும் களமாகவும் நிகழ்வு இருந்தது. எனதருமை தோழி கதை சொல்லி பூங்கொடிக்கு விருது கிடைத்தது குறித்து பெரு மகிழ்வு. முகம் பார்த்து பேசி நட்பின் ஆழத்தோடு அருகே உடன் அமர்ந்திருந்த தருணம் நட்பின் வடிவத்தை மேலும் மெருகூட்டியது. ஒரு சிறு பிள்ளையின் சிரிப்போடு அருகே இருந்த பூவுக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் நிறைய விருதுகளை வாங்க காலம் ஆசீர்வதித்திருக்கிறது. சிறார் கதை சொல்லி மட்டும் அல்ல. எல்லா தரப்பு வயதுக்கும் சொல்ல பூங்கொடியிடம் கதைகள் இருக்கின்றன. வெறும் வெளிப்பூச்சோ... பாவனையோ இல்லை. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்படும் சக மனிதர்களுக்கான கதைகள் நிறைய இருக்கின்றன. மெல்ல மெல்ல வெளிப்படும். ஆசீர்வதிக்கின்றோம். நெடுநாளைய உறவை நெருங்கி காணும் உணர்வு தான் என்னிடம் இருந்தது. வேறன்ன சொல்ல.

அதே போல தோழி வேலுமணி எங்களோடு கலந்து கொண்டதில் ஆத்மார்த்த ஆவல் மேலோங்கியது. இலக்கியத்தில் அடுத்தடுத்த வெளிப்படுவார் என்று எதிர் பார்க்கிறோம். வாழ்த்துகிறோம்.

எழுத்தாளர் முருகவேள் தோழரோடு பேசியது... தோழர் பிரதீப் அவர்களோடு அளாவியது... எங்கள் மீசை ஜெயபால் சார் ஆசையோடு கண்கள் விரிய எம்மை வரவேற்றது... என்று மனதுக்கு நெருக்கமான சம்பவங்கள் நிறைய.

வழக்கமான சந்திக்கும் தோழர்களின் பார்வையும் விசாரிப்பும் அதே நேரம் முகத்தை திருப்பிக் கொண்டு போன தோழர்களும் உண்டு. இலக்கியத்தில் இதெல்லாம் சகஜம் தானே என்றுணர்ந்த போது நிறைகளே மனதில் நிம்மதியை தாலாட்டியது. கவிஞர் யாழினி அவர்களின் வருகையும் அவருக்கு உண்டான விருதும் அவரை கனப்படுத்திய தருணமும் நேற்றைய நிகழ்வின் நட்சத்திரம் பூத்தது போல.

கவியரங்கத்தில் கவிஞர்கள் அவரவர் தங்கள் பாணியில் அசத்தினார்கள். தோழர் சிக்கந்தர் பாஷாவாகட்டும்... தம்பி காதலாராவாகட்டும்... தோழர் தங்கம் ஆகட்டும்... இன்னும் கவிதை பாடிய அனைத்து தோழர்களுமே... இதயத்தின் வழியே இசை கோர்க்கும் வித்தையை செய்தார்கள். கவிஞர்கள் இந்த சமூகத்தின் கண்ணாடிகள். பிரதிபலித்தே ஆவார்கள்.

கதை கவிதை கட்டுரை என்று சகலத்திலும் தடதடக்கும் எழுத்து எக்ஸ்பிரஸ் என்று கவிஜியை... காமு சார் அறிமுகம் செய்த தருணம்... மனத்தில் மிக அற்புதமாக ஒரு சோலைவனம் பூத்ததை நொடியில் உணர்ந்தேன். பெருமைமிகு தருணம் என்பதை பெருமையோடு உணர்கிறேன். இந்த ரயில் நிற்காது... நிற்க கூடாது என்பது தான் என் எழுத்தின் விதி என்று நினைத்துக் கொண்டேன்.

எப்போதும் தோழர்கள் மத்தியில் எனது பெயர் குறித்தான தவறான அபிப்ராயம் இருந்து கொண்டே வருவதை நான் அறிவேன். நிறைய முறை விளக்கம் கொடுத்த பிறகும் நான் என்னவோ ஜிக்கெல்லாம் கிளை பரப்பு செயலாளர் என்பது போல சிலர் பாவிப்பதை...அது அப்படி இல்லை என்று காமு சார் மிக நாசூக்காக விளக்கி விட்டார். கவிதா விஜி என்பது தான் புனைபெயர் நோக்கத்திலும் காலத்தின் போக்கிலும் கவிவிஜி ஆகி பிறகு இரண்டு வி களும் இணைந்து கவிஜி என்றே ஆகி போனது. அதுவும் எங்கள் திருமண பத்திரிகையில்... அச்சடித்தவர் ஒரு வி யை விட்டு விட்டு தவறாக அடித்து விட அதை என் நண்பன் சதீஷ் பார்த்து விட்டு... அட இதே நல்லாருக்குபா இப்பிடியே இருக்கட்டும் என்று சொல்ல... காதல் வாலை பிடித்த கதையாய் கவிஜி காலத்தில் நிற்க ஆரம்பித்து விட்டது. ஜி களின் வழி ஒருபோதும் நமது கிடையாது. பையனுக்கு சே என பெயர் வைத்திருக்கும் நான் எப்படி வலது பக்கம் இருப்பேன். இடதுசாரி என்பதில் பெருமிதம் தான் எப்போதும். அது தான் எனது வழியும் கூட. ஒரு இடதுசாரியாய் வீட்டளவில் இழந்தது அதிகம். ஆக அந்த ஜி இந்த ஜி இல்லை. நம்புங்கள். பிறகும் விஜியில் வரும் ஜி கெல்லாம் நான் பொறுப்பல்ல. அது என் பெயர்.

மற்றபடி நேற்றும் நேற்று சார்ந்த நிகழ்வும்... மனதுக்குள் கவிதை வனத்தை சூடியது. கண்டெடுக்க கண்டெடுக்க கால்களிலும் சிறகு முளைக்க... கவிதை வானத்தில் எப்போதும் நமது சிவப்பு பறவைகள் தான்.

கவிஞர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் மேடை பிரஸ்தாபம்... அத்தனை ஆளுமை. சிரித்துக் கொண்டே சிக்கனமாக அவர் பேசுவது எப்போதும் எமக்கு நெருக்கம். மனம் முழுக்க விரிந்திருக்க செய்யும் வார்த்தை லாவகம்.. மற்றும் புதிதாக எதையாவது சொல்லி விட்டு சென்று விடும் அவரின் வழக்கம் என்று அவர் கோட் செய்யும் சம்பவங்கள் வழியே கற்றல் அதுவாகவே நிகழும். நேற்றும் நிறைவு தான் அவர். அதுவும் தன் மரணத்தை பற்றிய அவர் கவிதையில்... வாழ்வின் சூட்சுமம் மிகு தெளிவாக தன்னை தகவமைத்துக் கொண்டதை மிக மெல்லிய கோட்டில் அணு அணுவாய் உள் வாங்கினேன்.

நிறைவு கழுத்து வரை இருக்க... கண்களில் கொஞ்சூண்டு இருந்த குறையையும் சொல்ல வேண்டும் தானே. இந்த இடைச்செருகல் மட்டும் இல்லாமல் இருந்தால்... நேரம் தலைமையின் கட்டுக்குள் இருந்திருக்கும் என்பதை மட்டும் தலைமைக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மொத்தத்தில்... தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. அதில் சிறு துரும்பாக நமக்கும் இடம் கொடுத்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள். தோழர் ஜீவாவின் செங்கதிர் சிந்தனைக்கு எப்போதும் நாம் ஊற்றுகள் தான். வாய்ப்பு கொடுத்த ரமணி சார்.. ஜான் சார்... ராஜன் சார்... அஸ்ரப் அலி சார்... ஞானி சார் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இறுதியாக... நான் சிவப்பு மனிதன் என்பதில் துளி அளவும் எனக்கு சந்தேகம் இல்லை...

மீண்டும் உங்கள் பார்வைக்கு கவிஜியின் "அன்பு செய்யுங்கள்" கவிதை இங்கே.

 

அன்பு செய்யுங்கள்- கவிஜி
**************************************
அன்பு நடும் உயிர்களையே
ஆதி மனம் தேடும்
அறம் சூடும் மனிதர்களையே
அகிலம் போற்றி பாடும்

நான் என்பதை அழித்து பாரு
நாம் என்பது செழிக்கும் பாரு
நெஞ்சம் நிறைந்திருக்க கலகம் உதவாது
மானுட பஞ்சம் தலை விரிக்க
உலகம் நிலைக்காது

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நன்னடை என்னாச்சு
உள்ளங்கை சவப்பெட்டியில்
தலை தாழ்ந்து அது நின்னாச்சு

அளவோடு இருந்தால் அது mobile phone
அளவுக்கு மிஞ்சினால் அதுவே coffin box
நிறைவோடு இருக்க மனதை திற
குறையொன்றும் இல்லை என ஞானம் பெற

இயந்திரம் தாங்கிய குணத்துக்கு
முழுக்கு தேவை
இன்பம் பொங்கும் வெண்ணிலா தான்
இன்றைய தேவை

கண்கள் நோக்கி
முகம் காணுதல் குறைந்து போனது
உண்மை ஏந்தி
அகம் தேடுதல் மறைந்து போனது

பறவைகளை கவனிக்காத
விழுதில் எல்லாம்
வேரின் தற்கொலைகள் தான்

சக மனிதர்களை ஒதுக்கும்
மனிதரெல்லாம்
ஊரின் முட்புதர்கள் தான்

நின்று பேச நேரமில்லை
ஓடிக்கொண்டே இருந்தால்
தேகம் இல்லை

உடலை வளர்க்காத உயிருக்கு
தாளமில்லை
உண்மை சுடுகையில் உலகத்தில்
காலமில்லை

எவனுக்கு என்ன பலமோ
அவனுக்கு அது களம்
எவனுக்கு எது வருமோ
அவனுக்கு அது பலம்

நின்றால் நடந்தால்
தின்றால் கிடந்தால்
எல்லாமே சுட சுட செய்தி
கூட சுய விளம்பரம் சேர்ந்து கொண்டு
இது முகநூலின் தனி பகுதி

ஆசை பேராசை ஆனது
அரைகுறை அனுபவம் ஆனது
அறிவு செருக்கென ஆகுது
அன்பு ஐயோவென போகுது

நேரமில்லை என்பது
மானுட சாபம்
சுகர் பிபி அட்டாக் எல்லாம்
அதனின் தூபம்

சிறுவனுக்குள்ளும்
புத்தன் உண்டு
அரை கிழவனுக்குள்ளும்
சிறு புத்தி உண்டு

பொறுமை கொள்
போட்டு கொடுத்தல் கூடாது
பொறாமை கொல்
புறங்கூறுதல் ஆகாது

தற்பெருமை தனி கணக்கு
தவித்த வாய்க்கது நீர் தராது

தொழில்நுட்பம் சரி தான்
தோகை மயிலையும்
கதிர் வீச்சில் காணுதல் சரியா
இதயத்தில் இரும்பு முளைத்தல் முறையா
மனிதத்தில் சிறைகள் வளர்ந்தால்
அது நிறையா
கூட்டாஞ்சோற்றையும்
ஸ்விக்கிகாரன் தருவதெல்லாம்
எது வரைய்யா

எதிரே இருக்கும் நீயின்றி
நான் என்பது வீண்
என அறி மனமே

நின்று நிதானி இசைந்து இளைப்பாறு
ஓடிக்கொண்டே இருக்க
நீ குதிரை இல்லை
புரி மனமே

அன்னை தெரசா சொன்னது போல
நேரம் குறைவாக இருக்கிறது
அன்பு செய்யுங்கள்

நான் கூட கூறுகிறேன்
அன்பை குறைய விட கூடாது
நேரம் தாருங்கள்

- கவிஜி

Pin It