நீ ஜன்னல் திறக்கும்
ஒவ்வொரு முறையும்
நான் வண்ண வண்ண காகம்
தேநீரில் முகம் கழுவி
விடிய விடிய தூங்கித்
தொலைக்கும் நாய் மனம் எனக்கு
சுவற்றுப் பல்லிக்கு
சுருக்கென்று பதில் சொல்லும்
மொழி நடை எனது
விருட்டென்று எழுந்து செல்லும்
பெரும் கோபத்தை
பூனை நகத்தில் வளர்க்கிறேன்
மறுகன்னத்திலும் பளார் என
கடிக்கும் கொசுவின் மங்கிய கண்களில்
ரத்தவங்கி நான்
முத்துப் பல் சிரிப்பை முகம் கோணி
காணும் சிறு குரங்கின்
தலைகீழ் நிர்வாணம் எனக்கும்
பைத்தியக்கார பெருச்சாளியின்
கண்களில் முயலாகி துள்ளும்
விடைத்த காதுகளில் என் காதல்...!
- கவிஜி