எத்தனை முறை எத்தனை  

புகைப்படங்களைத் 

திருப்பித் திருப்பி பார்த்தாலும் 

அத்தனை முறையும் பரவசம் 

நீர்க்குமிழி போல கணந்தோறும் 

உடைப்படுகின்றது வாழ்க்கை 

இந்தப் பயணங்கள் தொடர்ந்தாலும் 

ஏதோ ஒன்று உணர்வின் 

மையப் புள்ளியில் நின்று சுழன்று 

கொண்டு தான் இருக்கிறது 

விநோத உலகில் 

ஐஸ்கட்டியென கரைந்து வழிகின்றது 

நிழல் உருவில் நிஜங்களின் எச்சம். 

-- 

கவிதை வெளி 

தன்னைப் பற்றி நிறைய 

பதிவு செய்கிறது கவிதை 

நசிந்து பிதுங்கிய 

சொற்களுக்குப் பின்னே 

ஒளிந்து கொள்கிறது  

மௌனத்தின் அதிர்வுகள் 

வார்த்தைகளுக்கிடையே ஏதோவொரு 

புள்ளியில் மோதித் தெறிக்கின்றது 

ஆதிச் சொல்லொன்று 

எவ்வளவு தான் துரத்த 

முயற்சி செய்தாலும்  

மறுபடியும் மறுபடியும் 

நேர்த்தியாக நீண்டு கொண்டிருக்கிறது 

முடிவில்லாத இருட்டு. 

Pin It