மௌனிக்க பேச

உரிமையற்றவனின் குமுறல்களையும்

திருடிக் கொண்டவர்களிடம்

எம் வாழ்வு...

 

அவர்களின் கருணையால்

எஞ்சியிருக்கும் எமது உடல்கள்

தினமும் எண்ணப்படுகிறது

அக்கறையோடு.

 

வேலிகளுக்குள் கிடைகாக்கும்

ஆடுகளாய்

தண்ணீருக்கும் உணவுக்கும்

நேரம் வைத்து அனுமதிக்கிறார்கள் மீட்பர்கள்.

 

அப்பாவையோ, அம்மாவையோ

மகளையோ

யாரையோ யாராவது

எப்பொழுதும்

தேடிக் கொண்டே....

 

துரோகம் செய்தவனின்

உதவிக் கரம் நீட்டும்

அதே கைகளை

அணைத்துக் கொள்வதைத் தவிர

வேறிடமில்லை எமக்கு.

 

வதைத்தவனே மீட்பனாக

போக்கிட மேது?

 

உரிமைகள் கேட்ட கைகளில்

பிச்சைப் பாத்திரம்

வழியில்லை

 

மானம் மரியாதை

கௌரவம் மதிப்பு

இவ்வார்த்தைகளை

எங்கள் கூடாரத்துள்

இனி

என்று கேட்டும்.

 

வெப்பம் கொப்பளிக்கும்

மூச்சுக்காற்றால்

ஓய்வற்ற

வியர்வையும் கண்ணீரும்

கடலாய்க் கரைவதால்

 

இனி

பனி உருகும்

கடல் கொதிக்கும்

பூமி பிளக்கும்

சகலமும் அழியும்

 

நாங்கள்

இப்படித்தான்

ஜெபித்தாக வேண்டும்

எம் வாழ்விலிருந்து.

 

பசி பிணி மூப்பு மரணம் பார்த்து

பௌத்தம் போதித்த

போதிச் சத்துவனோ

 

தன் மனைவியை மீட்க

கடல் தாண்டிய இராமனோ

 

சர்வலோக மீட்பன்

இயேசுவோ

 

இல்லாத இடமில்லாத

அல்லாவோ

 

இன்றுவரை

வரவில்லை

 

ஒரு குவளை

மலையகத் தேநீர்தர.

 

- கு.பால்ராஜ், இராசபாளையம்