தமிழை ஒரு பாடமாகக் கற்றல், தமிழ்வழிக் கற்றல், தமிழ் ஆட்சிமொழி என்னும் இம்மூன்றின் தளமும், பயனும் வேறு வேறு. தமிழை ஒரு பாடமாகக் கற்றல் என்பது பழந்தமிழரின் உயர்ந்த சிந்தனைகளையும், சிறந்த பண்பாடுகளையும், ஆழமான அறிவுத் தொகுதிகளையும், நல்ல ஒழுகலாறுகளையும் இந்தத் தலைமுறையினர்க்கு உணர்த்து வதாகும். நம் முன்னோர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, அதே நேரத்தில் இயற்கை வளத்தைப் பெருக்கி அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்து வைத்த உணர்வு அறிவைத் தருவது இலக்கியக் கல்வியாகும். அறிவு என்பது தொழில்நுட்ப அறிவு. ஆனால், அந்தக் கணினியைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தல் கூடாது என்ற ஒழுக்க அறிவின் உறுதியைத் தருவது இலக்கியக் கல்வி. மாணவர்க்கான 2010ஆம் ஆண்டு ‘வெற்றி நிச்சயம்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய நெல்லை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ‘வாழ்க்கையில் மாணவர்களின் 75 விழுக்காடு வெற்றியை வரையறுப்பது அவர்களது படிப்பு அன்று, ஒழுக்கம்தான்’ என்று கூறியதை நடைமுறைச் செய்திகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

ஒழுகலாறு என்பது பண்பாட்டிலிருந்து வெளிப்படுவதாகும். ‘தமிழ் இலக்கியம் சிறப்பான பண்பாட்டின் கொள்கலன்’ என்கின்றார் வா.செ. குழந்தைசாமி. பண்பாட்டின் வேர் இல்லாத பணக்கல்வி மாணவர்களை இந்த மண்ணிலிருந்து அயன்மைப்படுத்தி, இந்த மண்வளம் சீரழிவதைப் பற்றிக் கவலைப்படாத, பொறுப்பற்ற சமுதாய உறுப்பாக அவர்களை உருவாக்கிவிடும். ஒரு மொழியின் சிறப்பு அதன் வழி அறியும் கருத்துக்களைப் பொறுத்தது என்று பெரியார் தமது ‘எழுத்துச் சீர்திருத்தம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்முன்னோர் சான்றோரையும், உழவரையும் தலையாய இடத்தில் வைத்து மதித்ததையும், நீர், நிலம், மண், இயற்கைவளம், அறம், பக்தி, வாழ்வியல் போன்றவை குறித்த சிறந்த சிந்தனைகளையும் நம் மொழிக் கல்வி மூலம்தான் அறிய முடியும். காலச் சுழற்சியில் வேறுபட்ட கருத்துக்கள் தோன்றினாலும், மனிதன் என்ற நோக்கில் உலக மக்களை ஒன்றுபடுத்தும் பொதுப்பண்பு, பொதுக் கொள்கைகள், பொதுநோக்கு சங்க இலக்கியங்களில் உள்ளன. மனிதனை மாமனிதனாக்கும் நம் இலக்கியச் சிந்தனைகள் சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்பதன் வழி தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர இயலும்.

சான்றோரை மதிக்கும் பண்பு

சான்றோரை - அறிஞரைப் பேணி மதிக்கும் பண்பு சங்க இலக்கியங்கள் முதல் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பெறும் நமது பண்பாகும். நீண்ட நாள் வாழச் செய்யும் அரிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல் ஒளவையார்க்கு மன்னன் அதியமான் வழங்கினான் (புறம். 91). அறிஞர் பெருமக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்பதே அதியனின் விருப்பம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும்போது, மாங்குடி மருதனார் முதலான புலவர்களது நட்பை இழத்தற்கரிய உயர்ந்த பொருளாகப் போற்றுகின்றான் (புறம். 72). பிசிராந்தையாரது ஊரில் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழ்வதால்தான் அவர் முதுமையிலும் இளமைத் தோற்றத்தோடு விளங்குவதாகப் பெருமை கொள்கின்றார் (புறம் 191). அறிவுடையோன் சென்ற நெறியில்தான் அரசன் செல்வான் என்று ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் அறிவிக்கின்றான் (புறம் 183). குட்டுவன் கோதையினது அரசவையினுள் சான்றோர் தடுப்பாரின்றி எந்நேரமும் செம்மாந்து செல்லலாம் (புறம். 54). முரசு கட்டிலில் துயில்பவரைத் தன் வாளுக்கு இரையாக்கும் சீற்றத்தோடு சென்றான் பெருஞ்சேரல் இரும்பொறை. ஆனால் துயில்பவர் தமிழறிஞர் மோசிகீரனார் என்பதறிந்தபோது வாள்வீச்சை விடுத்துப் புலவருக்குக் கவரி வீசினான் (புறம். 50). ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் என்ற அரசன் அறிஞர்களைக் கண்டவிடத்து அன்புடன் கைகுவித்து வணங்குவான் (சிறுபாண். 231). நாடிழந்த குமணன் தன்னைச் சந்தித்த பெருந்தலைச்சாத்த னாரின் வறுமையைப் போக்கத் தன் தலையைக் கொடுக்கவும் துணிந்தான் (புறம். 165).

 புறநானூற்றுப் பாடல்களின் அடிக்குறிப்பில் ‘அவர் அவனைப் பாடியது’ என்று புலவரை அவர் என்றும் அரசனை அவன் என்றும் சுட்டுவதிலிருந்து அறிஞர்களுக்கான மதிப்பை அறிகின்றோம்.

சங்க இலக்கியம் உயர்த்திப் பிடித்த இப்பண்பைத் தொடர்ச்சியாகப் பிற்கால இலக்கியங்களும் போற்றி வளர்த்தன. சீவகசிந்தாமணி ‘கற்ற மாந்தரைக் கண் எனக்’ கொள்ள வேண்டுகின்றது. ‘அறனறிந்து மூத்த அறிவுடைய பெரியாரைப் போற்றிச் சுற்றமாகக் கொள்ளுதல் அரிய பேறுகள் எல்லாவற்றிலும் தலையாயது’ என்பது வள்ளுவர் கருத்து (அதிகாரம். 45). மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின், மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்று மூதுரை சிறப்பிக்கின்றது. “பாடும் கவிப்பெருமான் ஒட்டக்கூத்தன் பாதாம் புயத்தைச் சூடும் குலோத்துங்கச் சோழன் என்றே எனைச் சொல்லுவரே’’ என்ற ஒட்டக்கூத்தர் பாடல்வழி அறிவுக்கு அதிகாரம் தலைவணங்கியதை அறிகின்றோம். ‘சான்றோர் இனத்து இரு’ என்பது ஒளவை வாக்கு. ஆசானைத் தெய்வமென வணங்க வேண்டும், அவர் சொல்லும் அறிவுரைக்கு இணங்க வேண்டும் என்கின்றார் நாமக்கல் கவிஞர். உ.வே. சாமிநாதையர் தன் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் ஊருக்குச் செல்லும்போது காலில் செருப்பு அணிவதில்லையாம்.

இவ்வாறு சான்றோரை மதித்தல் என்ற உயர்வான பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் சமுதாயத்தைத் தமிழ் இலக்கியங்கள் வளர்த்தெடுக்கின்றன. ஆனால் இன்று, ஊடகங்கள் யாரை முதன்மைப்படுத்தி, எத்தகைய கருத்தை உருவாக்குகின்றன? நடிகர், நடிகையர், மட்டைப்பந்து வீரர், சிறிதளவு அரசியலார் ஆகியோரின் பின்னே அவை இளையோரைத் திரட்டி அழைத்துச் செல்கின்றன. காலங்காலமாகப் போற்றி வந்த சான்றோரை மதிக்கும் நம் பண்பாட்டை ஊடகங்கள் அழித்து வருகின்றன. அறிஞர்களை இழிவாகச் சித்திரிக்கும் போக்கு திரைப்படங்களில் பெருகி வருவது கவலையளிக்கின்றது. திரைப்படங்களில் கல்லூரி வகுப்பறைக் காட்சிகள் பெரும்பான்மையும் ஆசிரியர்களைக் கேலி செய்தல், எதிர்த்து ஏளனமாகப் பேசுதல், தரம் தாழ்ந்த கேள்விகளைக் கேட்டு வேதனைப்படுத்தி மகிழ்தல், பாடம் நடத்தவிடா மல் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தல், மதிப்பற்ற புனைபெயர் களை வைத்து ஆசிரியர் உள்ளத்தைப் புண்படுத்துதல் போன்ற காட்சிகளையே அமைக்கின்றனர். இந்தக் காட்சி களின் விளைவு மாணவன் என்றால் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற தரம் தாழ்ந்த எதிர்பண்பாட்டை மாணவர் அடிமனத்தில் தோற்றுவித்துக் குழுக்களை உருவாக்குகின்றன. வகுப்பறைகளில் இக்காட்சிகள் அரங்கேற்றப்பெறுகின்றன. இச்செயல்களால் குறிக்கோள் மிகுந்த ஒப்பற்ற மாணவர் சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டிய கடமையிலிருந்து ஆசிரியர்கள் ஒதுங்கும் நிலை உருவாகின்றது. ஆசிரியரைக் கேலி செய்து இழிவுபடுத்தும் குழுக்களின் கட்டுப்பாடற்ற  செயல்களிலிருந்தே இளைய மாணவர்களைக் கொடூரமாக இழிவு செய்யும் ‘பகடிவதை’ப் பண்பாடும், மாணவியரைக் கேலி செய்யும் ‘பெண்வதை’யும் தோன்றின என்பதை மறுக்க இயலாது. பொறியியல், மருத்துவப் படிப்பை வளமான வாழ்க்கைக் கனவோடு படிக்க வந்த எத்தனையோ மாணவ, மாணவியர் மன அதிர்ச்சிக்கு ஆளாகி வடுக்களைச் சுமந்து திரிகின்றனர். பகடிவதையால் தற்கொலைகள் மட்டுமல்லாமல் கொலை நடந்ததும் உண்டு.

ஆசிரியரிடம் பணிந்து கல்வி கற்றல் வேண்டு மென்பதைப் ‘பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்கின்றது புறநானூறு (புறம். 183). ஆசிரியர் முன் ஏங்கித் தாழ்ந்து நின்று கல்வி கற்பவரே உயர்ந்தவர் என்கின்றார் திருவள்ளுவர். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பது வெற்றிவேற்கையின் முதற்செய்யுள். இவ்வாறு தமிழ் இலக்கியங்கள் சங்க காலம் முதல் பாரதி காலம் வரை சான்றோரைப் போற்றி மதிக்கும் பண்பை வார்த்து, வளர்த்து உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கும் கடமையை ஆற்றின. ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றிப் பிறரது தன்மான உணர்வைக் கிளறிக் காயப்படுத் தாமல் வாழ வழிவகுக்கும் ஒழுக்கப் பண்பைக் கற்போர் கற்பிப்போர் உள்ளத்தில் சங்க இலக்கியங்கள் பதியவைக்கின்றன.

நம்முடைய உயர்ந்த பண்பாட்டுச் சிந்தனைகளை நாம் அறிந்திருந்தால்தான் மாற்றுப் பண்பாட்டுச் சீரழிவு களை அடையாளம் கண்டு ஒதுக்க இயலும். பண்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தவறுகளையும் பிசகையும் இலக்கியங்களால்தான் தீர்க்க முடியும். நம்முடைய சிந்தனைச் சிறப்பை உணர்ந்து, போலித்தனமான கேடுபயக்கும் மூடத்தனம் மிகுந்த மாற்றுப் பண்பாட்டை இனம் கண்டு புறக்கணிக்கத் தமிழை ஒரு பாடமாகப் படிப்பது இன்றியமையாத ஒன்றாகும். கல்வியும், ஊடகங்களும் மக்களின் அறிவை வளர்ப்பதோடு தரத்தையும் உயர்த்தல் வேண்டும். தரத்தை உயர்த்த சிறந்த பண்பாடுகளைத் தொடர்ந்து மக்கள் சிந்தனையில் பதியவைத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்த பண்பாட்டுச் சிந்தனைகள் நம் இலக்கி யங்களில்தான் உள்ளன. எனவே, சான்றோரை மதித்தல் போன்ற அக உணர்வுப் பண்புகளை வளர்க்கத் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டியது சமூகத் தேவையாகும்.