எங்கள் கிராமத்தில் ‘கொல்ல’ என்பது வெகுவாகப் புழங்கக்கூடிய ஒரு சொல் வழக்காகும். ‘கொல்லய போயி பாரு’, ‘கொல்லக்கி போயி வரே(ன்),’ ‘கொல்லக்கி போவியா’ என்ற சொல்லாடல்களை அன்றாடம் கேட்க முடியும். ‘கொல்லப்புறம்’, ’கொல்லக் காடு’ என்ற சொற்களும் வழக்கில் இருக்கின்றன. இந்தச் சொல்வழக்கிலுள்ள ‘கொல்ல’ என்பது ‘கொல்லை’ என்பதன் மூல வடிவமாகும். ‘ஐ’ பேச்சு வழக்கில் ‘அ’கரமாகி ஒலிக்கும். ‘கொல்ல’ என்பது நிலத்தைக் குறித்து நிற்கும் சொல்லாக வட தமிழக வழக்கில் புழங்குகின்றது. இந்தச் சொல்லைப் போன்று வயல், காடு, கழனி என்பனவும் நிலத்தைக் குறிக்கும் சொற்களாகத் தமிழக வட்டார மொழிகளில் வழங்கு கின்றன. இந்தச் சொற்கள் அனைத்தும் நிலத்தின் ஒவ்வொரு உட்பிரிவுகளைக் குறிப்பனவாக வழங்கி வந்து பொதுவாக நிலத்தைக் குறிப்பனவாக நிலைபெற்றிருக் கின்றன.
நிலத்தின் தன்மைக்கேற்ப ’பொட்டாங்காடு’ (வானம் பார்த்த நிலம்), ‘கரம்பு’ (பயிர் செய்ய ஏற்ற; ஆனால் பயிர் செய்யாமல் கிடக்கும் நிலம்), ‘மணங்கால்’ (மணல் பாங்கான நிலம்) என்று சுட்டும் வழக்கமும் எங்களூர் உழவுக் குடிகளிடம் உண்டு. நெல், மல்லாட்டைப் பயிர் அறுவடை செய்யப்பட்ட பின்னர் உழவு செய்யாமல் கிடக்கும் நிலத்தைத் ‘தாளடி’ என்பதும், அதை ‘நெல் தாளடி’, ‘மல்லாட்ட தாளடி’ எனப் பாகுபடுத்திப் பேசுவதும் வழக்காக உள்ளது. நெற்பயிரிட நீர்ப் பாய்ச்சி உழப்பட்ட கழனியைச் ‘சேடை’ என்பர். நெல்லைத் தவிர ஏனையவற்றைப் பயிரிட உழவு செய்யப்பட்டுப் பயிரிடாமல் இருப் பதைப் ‘புழுதி’ எனச் சுட்டுவர்.
உழவுத் தொழில் சார்ந்த இடங்களில் ‘மொரம்பு’ என்றொரு சொல் வழக்கு உண்டு. ‘முரம்பு’ என்ற எழுத்து வழக்கின் பேச்சு வடிவமாக ’மொரம்பு’ வழங்குகின்றது. இந்தச் சொல் பழந்தமிழ் நூலொன்றான நற்றிணையில் (முரம்பு - 33, 274) ஆளப்பட்டுள்ளமை அதன் தொன்மையை உணர்த்துகின்றது. ‘வன் நிலம்’ என்பதையே ‘முரம்பு’ எனச் சுட்டியுள்ளனர். இதை ‘முரண் நிலம்’ (அகம். 21) என்றும் அழைத்துள்ளனர். உடையத்தக்க சிறுசிறு துகற் கற்களையும் மண்ணையும் கொண்ட நிலம் ‘வன்நிலம்’ ஆகும். நெல், வாழை, கரும்பு பயிர் விளையும் நிலத்தை ‘நன்செய்’ என்றும், கம்பு, சோளம் போன்ற பயறு வகைகள் விளையும் நிலத்தைப் ‘புன்செய்’ எனச் சுட்டும் வழக்கும் தமிழக உழவுக் குடிகளிடம் உண்டு.
‘களர் நிலம்’ என்றொரு சொல் வழக்கு உண்டு. எந்தப் பயிர் செய்வதற்கும் தன்மையற்ற நிலத்தைக் ‘களர் நிலம்’ என அழைக்கின்றனர். பண்டைத் தமிழில் இதை ‘உவர்நிலம்’ (புறநானூறு. 142) எனச் சுட்டி யுள்ளனர். உழவுத் தொழில் சார்ந்து வழங்குகின்ற இவ்வகைச் சொற்கள் அத்தொழிலின் தொன்மையை அறிவதற்கு பெருந்துணை செய்கின்றன.
பழங்காலத்து உழவுத் தொழிலின் தன்மைகளைச் சங்க இலக்கியங்களில் உள்ள நிலப் பிரிவுகள் பற்றிய பல்வேறு சொற்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. அவல் - விளை நிலம் (மலை. 450); புன்புலம் - புன்செய் நிலம் (குறு. 183); கொல்லை - முல்லைநிலம் (குறு. 186); முதைப்புனம் - பழைய நிலம் (குறு. 155); கழனி - நெல் வயல் (ஐங். 25); செறு - வயல் (ஐங். 26); அரிகால் - நெல் அறுவடை செய்யப்பட்ட நிலம் (ஐங். 47) ஆகியன அவற்றுள் சிலவாகும். இவ்வகைச் சொற் குறிப்புகளுடன் தினை பயிரிடப்பட்டுள்ள நிலம் ‘தினைப் புனம்’ என்று சுட்டப்பட்டுள்ள குறிப்பும் பழங்கால வேளாண் தொழிலின் நிலையை அறிந்து கொள்ள துணைசெய்கின்றது.
சங்க இலக்கியங்களில் வேளாண் தொழிலுக்கன்றி, ஏனைய நிலப் பிரிவுகளின் வகைகளும் சிறப்புற பதிவாகி யுள்ளன. அவைகளுள் சில இவ்வாறு வருகின்றன.
· அத்தம் - பாலை நிலம் (குறு. 207, 255)
· அழுவம் - கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலம் (குறு. 340)
· எக்கர் - மணல் மேடான இடம் (நற். 267)
· கடம் - பாலை நிலம் (குறு. 174)
· கடறு - வன்நிலம் (குறு. 209)
· களரி - களர் நிலம் (உப்பு நிலம்) (நற். 126, 384, 374)
· கானல் - கடற்கரைச் சோலை (குறு. 145)
· சுடலை - சுடுகாடு (குறு. 231)
· சுரம் - பாலை நிலம் (நற். 246)
· சுவல் - மேட்டு நிலம் (மலை. 436, நற். 202)
· சூழ்கழி - ஊரைச் சுற்றிக்கிடக்கும் உப்பங்கழி (ஐங். 111)
· பழனம் - ஊர்ப்பொது நிலம் (ஐங். 4, 53); வயல் (அகம் 146)
· புறவு - முல்லை நிலம் (நற். 59)
· முரம்பு - வன்நிலம் (நற். 33, 274)
· மென்புலம் - நெய்தல் நிலம் (ஐங். 138)
· வன்புலம் - முல்லை நிலம் (ஐங். 469)
இந்தச் சொற்குறிப்புகள் பண்டைய தமிழ் மக்களின் உழவுத் தொழில்நிலை அறிவதற்கு மட்டுமின்றி அவர் களின் நிலம் சார்ந்த வாழ்க்கை முறையினை அறிந்து கொள்வதற்கும் துணை செய்கின்றன. இவைகளன்றி ‘நிலம்’ எனும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு நிலத்தைக் குறிக்கும் சொற்கள் சிலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றுள்
· முரண்நிலம் - (அகம். 21) - வன்னிலம்
· செந்நிலம் - (அகம். 54) - சிவந்த நிலம் (செம்மண் நிலம்)
· விடுநிலம் - (அகம். 321) - தரிசு நிலம்
· ஈர்நிலம் - (அகம். 334) - ஈரமான நிலம்
· உவர்நிலம் - (புறம். 142) - களர் நிலம்
என்பன சில வகைகளாகும். பண்டைக்காலத்தில் நிலத்தின் வகையைச் சுட்டக்கூடிய பல்வேறு வகையான சொற்களுள் ‘கொல்லை’ என்ற சொல் வழக்கு மட்டும் இன்றைக்கும் வழக்கில் நிலைபெற்றிருப்பதைக் காண முடிகின்றது. ‘தொடக்ககாலத்தில் முல்லை நிலத்தைச் சுட்டிய அச்சொல், பின்னர் பொதுவாக நிலத்தைச் சுட்டுவதாக நிலைபெற்றிருக்கின்றது. முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த இடமாகக் கொள்ளப் படுகின்றது.
வேட்டையாடித் திரிந்து ஓரிடத்தில் நிலை பெறாமல் வாழ்ந்த ஆதிமனிதர்களுக்கு நிலையாக ஓரிடத்தில் நிலைபெறக் கருதியபோது வேட்டைப் பொருள்களுக்கு மேலான உணவுப் பொருளின் தேவை உணரும்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது, இருக்க விரும்பிய இடத்திலுள்ள நிலத்தைப் பண்படுத்தி உணவுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ‘கொல்லை’ எனும் சொல் இந்தக் காலப் பகுதியில் தோன்றியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. தொடக்க காலத்தில் இயற்கையாகக் காடு - மேடாகக் கிடந்ததைப் பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில் பண்படுத்திய நிலம் ‘கொல்லை’ எனப் பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
கொல்லுதல் என்னும் சொல்லிற்கு அழித்தல், வெட்டுதல், அறுத்தல் ஆகிய பொருட்களைத் தருகின்றது தமிழ்ப் பேரகராதி (ப...) அச்சொல்லிற்கு ‘உழுது’ என்ற பொருளும் உண்டென்பதைக் குறுந்தொகை 155ஆம் பாடல்வழி அறியமுடிகின்றது. அந்தப் பாடலில்
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் (குறு. 155: 1)
என வரும் பாடலடி ஒன்று கவனிக்கத்தக்கதாய் உள்ளது. ‘முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்’ என்பதற்குப் ‘பழைய கொல்லையை உழுத உழவர்’ எனப் பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றது. இங்குக் ‘கொன்ற’ என்பதற்கு ‘உழுத’ எனப் பொருள் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. இதனால், காடுமேடாகக் கிடந்த நிலத்தைப் பயன்கொள்ளத்தக்க வகையில் உழுது பண்படுத்தியவை ‘கொல்லை’ எனச் சுட்டப்பட்டுள்ளமை தெரிகிறது.
சங்க இலக்கியப் பாடல்களுள் ‘கொல்லை’ எனும் சொல் பல இடங்களில் பயின்று வந்திருக்கின்றது. அவற்றுள் ஒரு பாட்டு, இன்றைய உழவுக் குடிகளிடம் காணப்படும் பல வழக்கங்களை நினைவுகொள்ளச் செய்து நம் கவனத்தை ஈர்க்கின்றது. அகநானூற்றில் இடைக்காடனார் எனும் புலவர் பாடியுள்ள அந்தப் பாட்டு இவ்வாறு வருகின்றது.
பேர்உறை தலைஇய பெரும்புலர் வைகறை,
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறம்மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி,
இரலைநல் மானினம் பரந்தவை போல,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்குபறைச் சீரின் இரங்க வாங்கி,
களைகால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்
கார்மன் இதுவால் - தோழி! - ‘போர்மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
விரிஉளை, நல்மான் கடைஇ
வருதும்’ என்றுஅவர் தெளித்த போழ்தே (அகம். 194)
பெருமழை பெய்த, பேரிருள் புலர்கின்ற காலைப் பொழுதில், ஏர்களால் உழுது இடம்படுத்த, இருபுறமும் புழுதி கீழ்மேலாகப் புரண்டிருக்கும் செம்மண் நிலத்தின் ஈரத்திலே, ஊனைக் கிழித்தாற் போன்ற சிவந்த மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற நெடிய உழவு சாலிடத்து விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்தன. நல்ல கலைமானின் கூட்டமானது பரந்து நிற்பதுபோலக் கொம்புடைய ஓலைக் குடைகளைச் சூடிய உழவர்கள், ஒலிக்கும் பறையின் ஒலிமுறையோடு, பூமியிலே இறங்கும்படி களைக்கொட்டுக்களை இழுத்து வாங்கிக் களை வெட்டித் தூய்மைசெய்த புனத்திலே வரகுகளும் விளைந்தன. கவைத்த வரகுக் கதிர்களின் கரிய புறத்தினைப் பற்றிக் குடுமி பொருந்திய தலையை யுடைய நீண்ட பெரிய தோகையையுடைய மயில்கள் உண்ணும். உண்ட அவை, தம் அழகிய தோகையை விரித்தும் இன்பமுறக் கொல்லையிலே வேலை செய்யும் உழவர்கள் கூழ் உண்ணுவதற்கு நிழலுக்காக விட்டு வைத்திருக்கின்ற வன்மையான இலையினையுடைய குருந்த மரத்தின் வளைந்த கிளையிலே அமர்ந்து கொண்டு, கிளிகளை ஓட்டும் குறமகளிரின் ஒலி போலத் தம் துணையை அழைத்து அகவிக்கொண்டிருக்கும். அந்தக் கார்காலம் என்பது இதுதானோ? (அகநானூறு, என்.சி.பி.எச், ப. 582, 583)
இந்தப் பாடலில் வரும் ஏர் உழுதல், உழுத உழவுச் சாலில் விதையைப் போடுதல், களை வெட்டுதல், களை வெட்டுவோர் வெயிலுக்காகத் தலையில் ஓலைக் கூடையைக் கவிழ்த்துக் கொள்ளுதல், களைவெட்டுபவர் களுக்கு உணவாகக் கூழ் தருதல், கிளி ஓட்டுதல் ஆகிய வழக்கங்கள் இன்றைய உழவுக் குடிகளிடமும் இருப்பதைக் காணமுடியும்.
உழவுத் தொழில்சார்ந்த வழக்கங்கள் மட்டுமின்றி ஏர், பூழி, சால், களைகால், கொல்லை, கூழ் ஆகிய சொற்கள் நம் காலத்திலும் வழக்கிலிருப்பதைக் கண்டுணர முடியும். ‘பூழி’ என்பது ‘புழுதி’ எனச் சிறிதளவு மருவியும் ஏர், சால், கொல்லை, கூழ் என்பன மருவாமலும் இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் நிலைபெற்று வந்திருக்கின்றது. களைவெட்டும் கருவியைக் ‘களைகால்’, ‘களைக்கோல்’, ‘களைக் கொட்டு’, ‘களைக்கொத்து’, ‘களைகட்டி’ ஆகிய சொற் களால் சுட்டும் வழக்கம் உண்டு. இவற்றுள் ‘களைக் கொட்டு’ என்பது எங்கள் வட்டாரத்தில் ‘களுகுட்ட’ என மருவி வழங்குகின்றது.
‘கொல்லை’ எனும் சொல் இன்றைய எழுத்து வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வட்டார மொழிகளில் வெகுவாக வழங்கி வருகின்றது. இப்படியான பல்வேறு வளமையான சொற்கள் தமிழக வட்டார மொழிகளில் வழங்கி வருகின்றன. அவை களைக் காதுகொடுத்துக் கேட்டுவைத்தல் வரலாற்று மொழி சார்ந்த ஆய்வுகளுக்குப் பெரிதும் துணை செய்யும்.