தமிழ் அறிவியல் மரபு:
முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே-(1). என்கிறார் தொல்காப்பியர். முதற்பொருளை நிலம் அதாவது இடம், காலம் என வகைப்படுத்துவதோடு, முதற்பொருள் என்பது இடம்-காலம் ஆகிய இரண்டின் இயல்புகளே எனத் தம்முன்னோர் வகைப்படுத்தியிருந்ததையும் தொல்காப்பியர் தெளிவு படுத்துகிறார். அடுத்து,
ஒரு நெறி பட்டாங் கோரியன் முடியுங்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப -(2) என்கிறார் தொல்காப்பியர்.
அதாவது, கரும நிகழ்ச்சி என்பது காமப்புணர்ச்சி என்னுஞ்செயப்படுபொருள் நிகழ்ச்சியாகும். அது இடம் எனப்பட்டது என விளக்குவார் பேராசிரியர். ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இடமெனப்படும் என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. கரும நிகழ்வை அஃதாவது நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் என விளக்கிய தொல்காப்பியர், அந்த நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன என்று குறிப்பதையே காலம் என்றும் விளக்குகின்றார்.
இடம்-காலம்:
இடம்-காலம் பற்றி மெய்யியல் அகராதி(DICTIONARY OF PHILOSOPHIES), காலமும் இடமும் பொருள் நிலைப்பின் அடிப்படை வடிவங்களாகும்..... கருத்து முதலாளர்கள் காலம்-இடம் இரண்டுமே பொருளோடு தொடர்புடையன என்பதை மறுக்கிறார்கள்...... பொருள் முதலாளர்கள் காலமும் இடமும் பொருளிலிருந்து பிரித்தறிய முடியாதவை..... எனக் கருதுகிறார்கள் என்கிறது. அடுத்ததாக தொல்காப்பியர் ‘நிகழ்ச்சிகள் என்பவை இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” எனச்சொல்வதுதான் பெருவியப்பைத்தருகிறது.
இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான -தொல்.பொருளதிகாரம்,பொருளியல்,
என்கிறார் தொல்காப்பியர். ‘அவையில் காலம் இன்மை யான’ என்பதன் நேரடிப்பொருள் என்பது ‘நிகழ்ச்சிகள் இல்லாமல் காலம் என்பது ஒன்றில்லை” என்பதாகும். அதாவது “நிகழ்ச்சிகள் என்பது இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” என்பதுதான் தொல்காப்பியரின் கூற்றாகும்-(3). இதற்குச் சார்பியல் கோட்பாடும், பொது-சிறப்பு சார்பியல் கோட்பாடுகளும் வெளி-காலம் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ன சொல்கின்றன எனப்பார்ப்போம்.
ஸ்டீவன் ஆக்கிங்சு(STEPHEN HANKINGS):
ஐன்ஸ்டைனுக்குப்பின் நவீன உலகின் மிகப் பெரிய அறிவாளியாகக் கருதப்படுபவர்தான் ஸ்டீவன் ஆக்கிங்சு ஆவார். இவரது கருத்தின் சுருக்கத்தைக் கேட்போம்.
“சார்பியல் கோட்பாடும், சிறப்புச் சார்பியல்(SPECIAL RELATIVITY) கோட்பாடும் வெளியும் காலமும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒரு நிலையான அரங்கம் என்றும், அந்த அரங்கம் அதில் நடப்பனவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்றும் கருதியது. ஆனால் பொதுச்சார்பியல் கோட்பாடு(GENERAL RELATIVITY), ‘வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கின்றன. அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப்பற்றி எப்படி வெளியையும் காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச முடியாதோ அதைப்போன்றே பொதுச் சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும்-காலமும் பற்றிப் பேசுவதும் பொருளற்றதாகி விடுகிறது’ எனக் கூறுகிறது” இதுவே ஸ்டீவன் ஆக்கிங்சு அவர்கள் கூறும் கருத்தாகும்.
“அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப்பற்றி எப்படி வெளியையும் காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச முடியாதோ அதைப்போன்றே பொதுச் சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும்-காலமும் பற்றிப் பேசுவதும் பொருளற்றதாகி விடுகிறது” அஃதாவது, அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேச காலமும் வெளியும் வேண்டும். அண்டத்தின் எல்லைகளுக்கு வெளியே நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் அங்கு காலமும் வெளியும் பற்றிப்பேசுவது பொருளற்றதாகி விடுகிறது. ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இருக்கமுடியாது. “அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும்-காலமும் பற்றிப் பேசுவதும் பொருளற்றதாகி விடுகிறது” எனும் கருத்துதான் தொல்காப்பியரின் ‘அவையில் காலம் இன்மையான’ எனும் ‘நிகழ்ச்சி இல்லை எனில் காலமும் இல்லை’ என்கிற நூற்பாவின் கருத்தை விளக்குகிறது(4).
அண்மைக்கால அறிவியல் அறிஞர்களின் வெளி-காலம், அண்டவியல் பற்றிய கருத்துக்களை தொல்காப்பியார் சொல்லி உள்ளார். மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு தான் இதற்கான காரணம் ஆகும். தமிழிய சிந்தனை மரபான ஐந்திரம் என்பது எண்ணியம், ஓகம், பூதவாதம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு பொதுப்பெயராகும். அவை மூன்றும் இணைந்து பொருள்முதல்வாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஐந்திரம் என்ற பெயரில் ஒன்றாக இயங்கின. இங்கு ஓகம் என்பது சிறப்பியலையும், அளவையியலையும் கொண்டதாகும். ஐம்பெரும் பூதங்களின் இயல்பை, இயற்கையை இந்த ஐந்திரம் கொண்டு தமிழர் ஆய்ந்தனர். அவ்வாய்வின் ஒரு கூறுதான் இடம்- காலம் பற்றிய ஆய்வாகும். இவ்வாய்வு 1000 ஆண்டுகால நீண்ட நெடிய மரபைக் கொண்டதாகும். இடம்-காலம் பற்றிய அவ்வாய்வு மரபில் கிடைத்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு தொல்காப்பியரின் ஆய்வும் அதன் விளைவாகக் கிடைத்த முடிவும் தான் தொல்காப்பியரின் இக்கருத்து எனலாம். மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு, தனது அடிப்படையாகத் தூய, கலப்பற்ற பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்டிருந்ததே தொல்காப்பியரின் இதுபோன்ற ஆய்வுமுடிவுக்குக் காரணமாகும்..
தொல்காப்பியமும், சரக சம்கிதையும்:
சரக சம்கிதை முதலில் எழுத்துவடிவம் பெறாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சரக சம்கிதையில் சொல்லப்படும் தருக்கவியல்-எண்ணியம் தொடர்பான பல செய்திகள் எழுதப்பட்ட நூலுக்குரிய இலக்கணங்களாக உள்ளன. தொல்காப்பியர் விளக்கும் எழுதப்பட்ட நூல்களுக்கான இலக்கணம், முதல் நூலின் வரையரை, பத்துவகை குற்றங்கள், 32 தந்திர உத்திகள் முதலியன தொல்கப்பியத்தைப்போலவே சரக சம்கிதையிலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.(5). இவை இவ்விரு நூல்களுக்கும் இடையே உள்ள அடிப்படைக்கோட்பாட்டு ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகின்றன.
அறம், பொருள், இன்பம்:
தொல்காப்பியம், சாரக சம்கிதை ஆகிய இரு நூல்களையும் ஒப்பிட்டு க. நெடுஞ்செழியன் அவர்கள் ‘தமிழர் இயங்கியல்’ என்கிற நூலை எழுதியுள்ளார். சதீசு சந்திரா என்பவர் சாரக சம்கிதை நூலை விரிவாக ஆய்வு செய்தவர் ஆவார். சாரக சம்கிதை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றி கி.பி. 1ஆம் நூற்றாண்டில் உருவான மருத்துவ இலக்கண நூலாகும். தமிழ் மரபு, மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று கோட்பாடுகளை வகுத்தது. பொருள்வயிற் பிரிவும், அறத்தோடு நிற்றலும் தமிழ் மரபிற்கே உரியதாகும். பொருளையும், இன்பத்தையும் அறத்தின் அடிப்படையில்தான் ஈட்டவும், துய்க்கவும் வேண்டும். இவை தொல்காப்பியர் தரும் வாழ்வின் இலக்கணம் ஆகும். வைதீகம் இம்மூன்றோடு வீட்டையும் சேர்த்துக்கொண்டது. சாரக சம்கிதை வடமொழியில் அமைந்த மருத்துவம் பற்றிய முழுமையான இலக்கண நூல். சாரக சம்கிதை அதன் முதல் அத்தியாயத்தில் நல்ல உடல்நல வாழ்விற்கு இந்த நான்கு உறுதிப்பொருள்களும் அடிப்படை எனப் பேசுகிறது.
ஆனால் இடையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றைத்தவிர மனதிற்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தரக்கூடிய வேறு ஒன்றும் கிடையாது எனவும் இம்மூன்றும்தான் மனிதர்களின் மனஇருளைப்போக்கும் மாமருந்து எனவும் சொல்கிறது. அறம், பொருள், இன்பம் பற்றிய இச்செய்திகள் அதன் மூலநூலில் இடம் பெற்றுள்ளன. சாரக சம்கிதை இவ்வாறு முரண்பட்டு பேசுவதற்கு மூலநூலில் உள்ளதைத் திரித்துக் கூறுவதே காரணமாகும்.. பகுத்தறிவையும், மனித நேயத்தையும் வளர்த்து, வேதவழிப்பட்ட வருணதருமங்களைக்கண்டித்து அறம், பொருள், இன்பம் எனும் வாழ்வியல் உண்மைகளைப் பாதுகாத்து மக்களை நெறிப்படுத்திய சாங்கியம், யோகம், உலகாய்தம் போன்ற கோட்பாடுகள் வேதங்களுக்கு முற்பட்டவை எனவும் ஆரியர் அல்லாதவருக்குரியவை எனவும் கார்பே அவர்கள் ஆய்ந்துரைத்துள்ளார்-(6). ஆகவே அறம், பொருள், இன்பம் என்கிற மூன்றும் தமிழ் மரபு எனவும் வேத, உபநிடத வழியில் வீடு வடமரபில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம்.
தொழில் முதல்நிலை:
வடமொழியில் இது காரியாபினிவிருத்தி எனப்படும். பக்குடுக்கை நன்கணியாரின் தத்துவ ஞானத்திலிருந்து தோன்றியதுதான் கணாதரின் வைசேடிக தரிசனம் என தருமானந்த கோசாம்பி கூறுகிறார். காரியாபினிவிருத்தி தொடக்ககால வைசேடிகத்திற்கு அஃதாவது பக்குடுக்கை நன்கணியாரால் புரக்கப்பட்ட சாங்கியத்திற்கு-ஐந்திர மரபிற்கு உரியது. அதனை கோதமனார் எனப்படும் கௌதமரின் யோக சூத்திரம் சாங்கியக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக பக்குடுக்கை நன்கணியாரின் புறநானூற்றுப்பாடலை மேற்கோள் காட்டுவது நம் கருத்தை அரண் செய்கிறது. ஒரு செயலைச் செய்வதற்கான மூலவளங்களின் தொகுப்பு என்பதுதான் காரியாபினிவிருத்தி என்பதன் பொருளாகும். தொழில் முதல்நிலை எனத் தொல்காப்பியர் அதனைக் குறிப்பிடுவார். செயல்களின் முதல்நிலைகளை தொல்காப்பியர் பண்டைய மரபுப்படி எட்டாக வகைப்படுத்த சாரக சம்கிதை அந்த எட்டோடு இரண்டைச் சேர்த்து 10 எனக் குறிப்பிடுகிறது. ஆனால் அந்த இரண்டும் எட்டினுள் அடங்கும். ஆதலால் தொல்காப்பியர் கூறும் தொழில் முதல்நிலைதான் சாரக சம்கிதை குறிப்பிடும் காரியாபினிவிருத்தி ஆகும்-(7).
ஐம்பூதம்-புருடன்:
தொல்காப்பியம் ‘உலகம் என்பது நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் ஐந்தும் கலந்த மயக்கம்’ எனக் கூறுவது போலவே சாரக சம்கிதையும் குறிப்பிடுகிறது. அதன்பின் சாரக சம்கிதை சாங்கியக் கோட்பாட்டில் இடம்பெற்ற புருடன் குறித்துப் பேசுகிறது. தொல்காப்பியம், திருக்குறள் இரண்டும் சாங்கிய, யோக, உலகாய்த மெய்யியலையும், அவற்றிற்குரிய அளவை இயலையும் அடியொற்றி அமைந்தவை. ஆயினும் அவற்றில் சாங்கியம் ஆராயும் புருடன் பற்றிய செய்தி இல்லை. சாங்கியம் குறிப்பிடும் ஐம்பூதக்கோட்பாடுகளும், உயிரின் படிமுறை வளர்ச்சியும், காரணகாரிய விளக்கமும் கடவுள் மறுப்பும் தொல்காப்பியத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளன. திருக்குறளில் அதன் அளவை இயலே அடிப்படையாய் அமைந்துள்ளது. ஆனால் அவைகளில் புருடன் இல்லை. அக்கினிவேசர் என்கிற மாணவர் புனர்வசு ஆத்திரேயரிடம் சாங்கியத்தில் உள்ள புருடன் குறித்து 23 கேள்விகளைக்கேட்டதாக சாரக சம்கிதை கூறுகிறது. அந்தக் கேள்விகள் அனைத்தும் புருடன் எனும் கருத்தை மறுத்துரைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. மேலும் கார்பே, சிம்மர், சாத்திரி முதலான அறிஞர்கள் மூலச்சாங்கியம் வேதமறுப்பானதே என்பதைத் தம் வாதங்களினால் நிலை நாட்டியுள்ளனர். சட்டோபாத்யாயா அவர்கள் புருடன் என்பது இடைச்செருகலாய் வந்ததே என்பார்.
அணுக்கோட்பாட்டையும் உயிர்களின் படிமுறைக்கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட மூலச்சாங்கியத்தில் புருடன்-ஆன்மா இடம்பெறவில்லை என்பதும், மூலச்சாங்கியமும் அதனோடு இணைந்த யோகமும் வேதத்திற்கு மாறானவை என்பதுடன் எதிரானவை என்பதும் தெளிவாகின்றது. தொல்காப்பியம் அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பஞ்சபூதங்களைப் பற்றியும் உயிர்களின் படிமுறைகளைப் பற்றியும் விளக்குவதாலும் அவ்விளக்கத்தில் ‘புருடன் – ஆன்மா’ பற்றிய சுவடுகளே இல்லை என்பதாலும், உயிரின் இலக்கணம், ‘உணரும் தன்மை’யதே என்று கூறுவதாலும் சாங்கியத்தின் மூலவடிவங்களை அஃதாவது மூலச்சாங்கியத்தின் வடிவங்களைத் தமிழ் நூல்களில் மட்டுமே காணமுடியும் என்பதே உண்மையாகும்.
ஆசீவகக் கோட்பாட்டிற்குரிய மூலச்சுவடுகள் எவ்வாறு தமிழ் இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றனவோ அதைப் போலவே சாங்கியத்தின் மூலச் சுவடுகளும் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே சாங்கியம், யோகம், உலகாயதம் ஆகிய மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ளன என்பதும், அவ்விலக்கியங்களும் அகத்திணை இலக்கியங்களே என்பதும் தெளிவு. தொல்காப்பியர் கூறும் அகத்திணை மரபுகள் அனைத்தும் அம்மெய்யியல்களின் அளவை இயலை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் என்பதும் உறுதி. இதனைத் தமிழர் அளவை இயலும் அகத்திணை மரபுகளும் எனும் தனி ஆய்வாகவே காணலாம்-(8). மேலே காட்டிய பல்வேறு காரணங்களாலும் மூலச் சாங்கியத்தில் ‘புருடன்’ பற்றிய கருத்திற்கு இடம் இல்லை என்பது தெளிவாகின்றது.
தேர்வு:
சாரக சம்கிதை தேர்வுக்கான உறுப்புகளாக மேற்கோள், காட்டு(பிரத்தியட்சம்), உய்த்தறிவு(அனுமானம்), உத்தி ஆகிய நான்கைச் சொல்லும். சாங்கியம் காட்சி, உய்த்தறிவு, மேற்கோள் ஆகிய மூன்றை மட்டும் குறிப்பிடும். தொல்காப்பியம் சாங்கியம் குறிப்பிடுவதை விளக்குவதோடு அதனை மேலும் செலுமைப்படுத்தும்வகையில் புலனறிவையும், நூல்களையும் சான்றுகளாகக் கொண்டு புலன்வழிவரும் காட்சி அளவையை, ஐயம், மருட்சி, தெளிதல் என்கிற அடிப்படையில் விளக்கி இதுதான் முடிந்த முடிபென துணிய வேண்டும் என்கிறது. தேர்வு பற்றிய விளக்கத்தில் சாரக சம்கிதையைவிட தொல்காப்பியம் தருக்கவியலைத் தெளிவாக நிலை நாட்டுகிறது-(9).
சரக சம்கிதை-தமிழ் மரபு:
சரக சம்கிதையின் முன்னுரையில் அந்நூலுக்கு ஒரு புராண மரபும், தெய்வீகத்தன்மையும் வழங்கப்பட்டு அது ஒரு வைதீக நூலாக மாற்றப்பட்டுள்ளது. அடிப்படையில் அது பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அறிவியல் நூல் ஆகும். இந்நூலை எழுதிய சரகர் பழைய நூலில் உள்ள சிலவற்றை நீக்கி, சிலவற்றைப் புகுத்தி ஒரு புதுப்பித்த நூலை உருவாக்கினார். அது அவரது பெயரால் சாரக சம்கிதை என அழைக்கப்படுகிறது என அந்நூலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆதலால் முழுமையான அறிவியலாகவும், உடலியலின் அடிப்படையில் உருவானதும், தமிழ் மரபுக்கே உரியதும் ஆகிய தமிழ் சித்த மருத்துவமே சரகரால் சாரக சம்கிதையாக உருமாறியுள்ளது எனலாம். தொல்காப்பியத்திற்கும், சரக சம்கிதைக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்பது அவை இரண்டும் ஒரே மரபான தமிழ் மரபை அடியொற்றி இருப்பதால் ஏற்பட்ட ஒற்றுமையே ஆகும்-(10).
பொருள்முதல்வாத மெய்யியல்-தமிழ்ச் சிந்தனை மரபு சார்ந்தது:
தந்திர உத்திகள்:
தந்திர உத்தியின் துணைகொண்டு ஒருவாதி தன் குறிக்கோளை நிலைநாட்டி அவையில் வெற்றிபெறவும் எதிரிகளை புறங்காணவும் முடியும் எனவும் இந்த தந்திர உத்திகள், அளவை நூலாகிய நியாயதத்துவத்திற்கே பெரிதும் பயன்படும் எனவும் சதீசு சந்திரா கூறுகிறார். சாணக்கியரும், சாரக சம்கிதை, சிசுரத சம்கிதை ஆகிய இரு மருத்துவ நூல்களின் ஆசிரியர்களும் இந்த தந்திர உத்திகளை எடுத்தாண்டுள்ளனர். ஆனால் அந்த மூன்று நூலாசிரியர்களும் இந்த தந்திர உத்திகளை தொகுத்திருக்க முடியாது என்கிறார் சதீசு சந்திரா அவர்கள். தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளைக்கொண்ட தொல்காப்பியம் இந்த தந்திர உத்திகளை தங்களது முன்னோர்களின் மரபுப்படி 32 ஆக வகைப்படுத்துகிறது. சாரக சம்கிதை இந்தத் தந்திர உத்திகளை 36 ஆக வகைப்படுத்துகிறது. எனினும் தொல்காப்பியத்தில் காணப்படும் செறிவும், திட்பமும் சாரக சம்கிதையில் காணப்படவில்லை. சாணக்கியரும், சிசுரத சம்கிதையும் தொல்காப்பியம் போலவே 32 ஆகவே வகைப்படுத்துகின்றனர்.
தந்திரம் என்பது தமிழ் சொல். இச்சொல்லிற்கு நூல் என்பது பொருள். தொல்காப்பியம் நூல்களுக்கு உரிய உத்தியாக இத்தந்திர உத்திகளை வகைப்படுத்துகிறது. பரிமேலழகர் தனது திருக்குறள் உரையில், சொன்னூலைக் கற்றபின்பே அளவை நூலைக் கற்க வேண்டும் எனவும் அறத்தை அறியவும், அறிந்தவற்றை நிலை நிறுத்தவும் அடிப்படையாக இருப்பது அளவை இயல் அறிவுதான் என வள்ளுவர் வலியுறுத்துகிறார் எனவும் ஆதலால் சொன்னூல் என்பது தந்திர உத்திதான் எனவும் கூறுகிறார். தந்திர உத்திகளோடு உள்ள நூல்களை தொல்காப்பியர் பாராட்டுவது மேற்கூறிய வள்ளுவர், பரிமேலழகர் கருத்தை அரண் செய்கிறது. மேலே கண்ட தரவுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, தந்திர உத்தி தமிழ் மரபுக்குரியதுதான் என்பதை உறுதி செய்கின்றன-(11). தந்திர உத்திகள் மிக நீண்ட காலமாகத் தமிழ் மரபில் இருப்பதும், அதனைச் சாரக சம்கிதையில் உள்ளதைவிடச் செறிவாகவும், திட்பமாகவும் தொல்காப்பியர் சொல்லியிருப்பதும், சதீசு சந்திரா அவர்கள், வடமொழியில் தந்திர உத்திகளைப் பேசும் மிகப் பழைய மூன்று நூல்களும் அதனைத் தொகுத்திருக்க முடியாது எனச்சொல்வதும், தந்திரம் என்பது தமிழ்ச்சொல்லாக, நூல் எனப்பொருள்தருவதாக இருப்பதும், பண்டைய தமிழ்ச்சமூகச் சூழலும், இன்னபிற காரணங்களும் தந்திர உத்தி என்பது தமிழ் மரபுக்குரியதுதான் என்பதை உறுதி செய்கின்றன.
இந்திய மரபுக்குப் புதியது:
“கணாதரின் சிறப்பியமும், நியாயவாதத்தின் அளவையியலும் பண்டைய காலத்தைச் சேர்ந்தவை அல்ல எனவும் இவைகளுக்கு அத்தகைய மரபு இல்லை எனவும் இவ்விரு தத்துவங்களில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள் இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் இவைகளின் அணுக்கொள்கை இவைகளுக்கு முந்தைய தத்துவ ஆசிரியர்களால் எடுத்துரைத்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் இந்த அணுக்கொள்கை போன்றே பொதுமைக்கொள்கை, முக்கூற்று முடிபுக்கொள்கை, உலகில் உள்ள எல்லாவற்றையும் தெளிவான வகைப் பிரிவில் பகுத்தல் போன்றவைகளும் புதியவை” எனவும் சட்டோபாத்யாயா கூறுகிறார். கணாதரின் சிறப்பியமும், நியாயவாதத்தின் அளவையியலும் அவற்றின் கூறுகளும் இந்திய மரபுக்குப் புதிதாக இருப்பதாக சட்டோபாத்யாயா கருதுகிறார்.
சாங்கியமும் இந்திய மரபுக்குப் புதியதுதான். ஆனால் அது குறித்த மூலநூல் கிடைக்காததால், சாங்கியம் பற்றிய செய்திகள் பழைய இந்திய நூல்களில் பரபக்கமாகத்தான் கிடைப்பதால், ஈஸ்வர கிருஷ்ணருடைய சாங்கிய காரிகை இந்திய மரபுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டதால் சாங்கியம் இந்திய மரபுக்கு புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் கணாதரின் வைசேடிக சூத்திரமும், நியாய சூத்திரமும் ஓரளவு மூல நூலை ஒட்டி இருப்பதால் அவை இந்திய மரபுக்குப் புதிதாக இருக்கிறது. வட இந்திய மரபு என்பது அடிப்படையில் கருத்துமுதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்திய மரபுக்குப் புதிதாக இருக்கும் கணாதரின் சிறப்பியமும், நியாயவாதத்தின் அளவையியலும் அவற்றின் கூறுகளும் கிரேக்கத் தத்துவ மரபில் வழக்கில் இருந்தவை எனவும் அதற்கான சமூகச்சூழல் அங்கு இருந்ததற்கான ஆய்வுகள் அங்கு நடந்துள்ளன எனவும் சட்டோபாத்யாயா கூறுகிறார். பண்டையத் தமிழ்ச் சமூகச் சூழல், கிரேக்கச் சமூகச்சூழல் போன்றதும் அதைவிட பலவிதங்களில் பொருள்முதல்வாதக் கருத்துகள் உயர் வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவானதாகவும் இருந்தது என்பதும் உண்மை.
தமிழ்ச் சமூகச் சூழல்:
வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் உருவாகி மகதப் பேரரசு உருவாகும் வரையிலான இடைக்காலத்தில்(கிமு.750-550) பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரளவு இருந்தது. ஆனால் அச்சூழல் அங்கு நீடிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் தமிழகத்தின் பொருள்முதல்வாதக் கருத்துக்களான பூதவாதமும், சாங்கியமும் அங்கு பரவின. அதனைக் கற்றுக்கொள்ளப் பல வட இந்திய அறிஞர்கள் தமிழகம் வந்தனர். தமிழறிஞர்கள் பலர் தங்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பினர். புத்தர்கூட சாங்கியம் கற்றவர்தான். அப்பொழுது அதற்கானச் சமூகச் சூழல் அங்கு இருந்தது. அதன் பின்விளைவாகவே சமண, பௌத்த மதங்கள் அங்கு உருவாகின. ஆனால் அதற்கு முன்பே கி.மு. 1000 வாக்கிலேயே அல்லது கி.மு. 1000க்கு முன்பே 16 ஜனபதங்கள் போன்ற பல சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அவை தங்கள் தமிழ் மொழிக்கான ஒருவகை வரிவடிவத்தையும் கொண்டிருந்தன. முனைவர் கா. இராசன் அவர்கள் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் சொல்வதுபோல் கி.மு. 1000 வாக்கில் அல்லது அதற்கு முன்பே ஒரு பெரிய பண்பாட்டுப் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. அப்பாண்பாட்டுப் புரட்சி தெற்கே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் கி.மு. 1000க்கு முன்பே நடை பெற்றிருக்கவேண்டும். அப்பண்பாட்டுப் புரட்சி பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அக்கால கட்டத்தில்தான் “மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” ஒரு வடிவம் பெற்றது. அதன்பின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி வேகம் பெற்றது.
பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரிரு நூற்றாண்டுகள் கூட வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அச்சூழ்நிலை 1000 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளது. அதனால்தான் பூதவாதம், சாங்கியம், சிறப்பியம் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கானப் பல சான்றுகளை க. நெடுஞ்செழியன் அவர்கள் தமது நூல்களில் தந்துள்ளார்கள். அதனால்தான் தமிழ் மரபு அடிப்படையில் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறோம். தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், கணாதர், நருவெரூஉத் தலையார், கோதமனார் போன்ற பலரும் தமிழர்கள். தொல்கபிலரின் சாங்கியம், பக்குடுக்கை நன்கணியாரின் எண்ணியம் ஆகியவற்றின் தொடர்ச்சிதான் கணாதரின் சிறப்பியம் ஆகும். இந்தியத்தத்துவ மரபுக்குப் புதியதாகத் தோன்றுகிற சிறப்பியத்தின் அணுவியலுக்கும், நியாயவாதத்தின் அளவையியலுக்கும் உரியதுதான் தந்திர உத்தி ஆகும். ஆகவே பூதவாதம் எனப்படுகிற உலகாயதமும், சாங்கியத்தின் எண்ணியியலும், சிறப்பியத்தின் அணுவியலும், நியாயவாதத்தின் அளவையியலும், தந்திர உத்திகளும், இன்ன பிற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து தோன்றியவைதான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலம்-வெளி குறித்தத் தற்காலத்திற்குரிய ஒரு வளர்ச்சிபெற்ற பொதுச் சார்பியல்(GENERAL RELATIVITY) கோட்பாட்டுக்குரிய கருத்தை அன்றே வெளிப்படுத்தியதற்கு, மிக நீண்ட நெடிய, தூய கலப்பற்ற பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபுதான் காரணம் ஆகும்.
பேரரசுக் கொள்கை-வைதீகச் சிந்தனை:
கி.மு. 1000 முதல் கி.மு. 250 வரை பெரு நகரங்களை, சிறுசிறு நகரங்களை, அடிப்படையாகக் கொண்ட நகர்மைய அரசுகளும் வணிக நகர அரசுகளும் தமிழகத்தில் இருந்தன. அவைகள் மூவேந்தர்களின் குடும்ப உறுப்பினர்களாலும், கிளை அரசர்களாலும், சிறு குறு மன்னர்களாலும், வேளிர்களாலும் முழுமையான சுதந்திரத்தோடு ஆளப்பட்டு வந்தன. கி.மு. 250க்குப் பின்னர் பேரரசுக்கொள்கையால், வைதீகச் சிந்தனையின் செல்வாக்கால் சிறுகுறு அரசுகளை அழித்து அவைகளை மூவேந்தர் அரசுகள் தங்கள் பகுதியோடு சேர்த்துக்கொள்ளும் வழக்கம் துவங்கியது. வேந்தர்களின் நலன் சார்ந்த இந்த பேரரசுக்கொள்கையை வைதீகச்சிந்தனை ஆதரித்ததால் அதற்கு வேந்தர்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. இருந்தும் கி.மு. 50 வரை ஓரளவு நகர்மைய அரசுகளும் வணிகநகர அரசுகளும் இருந்தன. மூவேந்தர்களின் குடும்ப உறுப்பினர்களும், கிளை அரசர்களும் சிறுகுறு மன்னர்களும் வேளிர்களும் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தனர்.
ஆனால் கி.மு. 50க்குப்பின் அதாவது சங்கம் மறுவிய காலத்தில், இந்நிலை மாறியது. கிளை அரசர்களும் சிறுகுறு மன்னர்களும் இல்லாது போயினர், தனியான சுதந்திரமான நகர, நகர்மைய அரசுகளும் இல்லாது போயின. பேரரசுக் கொள்கை இவைகளை இல்லாது செய்து, வைதீகச் சிந்தனையை முழுமையாக ஆதரிக்கத்தொடங்கியது. அதன் காரணமாக தமிழகம் பலவீனமாகியது. பொருள்முதல்வாத மெய்யியலும் பலவீனமடைந்தது. தமிழ்ச் சமூகம் நாளடைவில் புரையோடிப்போன சமூக மாக மாறியது. இந்நிலையில் நடந்த களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தை வீழ்த்தியது. அது பொருள்முதல்வாத மெய்யியலின் அடித்தளத்தை அடியோடு அழித்து சமண, பௌத்த மத ஆதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அதன்பின் ஓரிரு நூற்றாண்டுகளில் பக்தி இயக்கம் உருவாகி வைதீக ஆதிக்கத்தை தமிழகத்தில் நிரந்தரமாகக் கொண்டு வந்தது. பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் சிறிது சிறிதாக, முழுமையான வைதீகச் சிந்தனைக்குள் கொண்டுவரப்பட்டது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில்(கி.பி. 640) தமிழகம் வந்திருந்த யுவான் சுவாங்(HHIUEN- TSANG) அவர்கள், மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த பொது மக்களின் சமயநிலை குறித்துக் குறிப்பிட்டுள்ளதை இந்நூலின் முதல் தொகுதியில் தந்துள்ளோம். அதன்படி கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில்கூட, “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை; வணிக நோக்குடனும், இலாபங்களையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர்” எனத் தமிழ் மக்களிடம் இருந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே பண்டையத் தமிழகத்தில் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது எனலாம்.
(தொடரும்)
- கணியன் பாலன், ஈரோடு
பார்வை:
1.தொல்காப்பியம்-பொருளதிகாரம், 4ஆவது செய்யுள், அகத்திணையியல்.
2.தொல்காப்பியம்-பொருளதிகாரம், 502ஆவது செய்யுள், செய்யுளியல்.
3, 4. க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், பதிப்பாசிரியர்-இரா. சக்குபாய், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்:105-111.
5. “ “ பக்: 75.
6.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:13-21.
7. “ “ பக்:22-27.
8. “ “ பக்:44-52.
9. “ “ பக்:137-138.
10. “ “ பக்:143-145.
11. “ “ பக்:9-12, 139, 140.