உ.வே.சா. நினைவுகள் - 15
(1935ஆம் ஆண்டு நடைபெற்ற உ.வே. சாமிநாதையரின் சதாபிஷேக விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து ரா. இராகவையங்கார் எழுதியனுப்பிய கடிதமும் வாழ்த்துப் பாடலும்)
பாண்டித்துரைத் தேவர், பாசுகர சேதுபதியின் ஆதரவோடு நான்காம் தமிழ்ச் சங்கம் என்று பெயர்பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் நிறுவியபோது சங்கத்தின் செயல்பாடுகளுக்குப் பெருந்துணையாக இருந்து விளங்கியவர்களுள் ஒருவர் மகாவித்துவான் ரா. இராகவையங்காராவார். பாசுகர சேதுபதியின் அரசவைப் புலவராக இருந்த இராகவையங்காரை அழைத்து வந்து சங்கத்தின் ஆராய்ச்சித்துறை, பதிப்புத்துறை ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பேற்கச் செய்தார் பாண்டித்துறைத் தேவர்.
சங்கத்தின் சார்பில் வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழில் பழந்தமிழ் நூல்கள் குறித்துப் பல்வேறு நிலைகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுப் பணியாற்றியவர் இராகவையங்கார். அகநானூறு, தொல்காப்பியம் - செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை, முத்தொள்ளாயிரம், இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை முதலான பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுப் பதிப்பாசிரியராகவும் புகழ்பெற்று விளங்கியவர் இராகவையங்கார். புகழ்பெற்ற காளிதாசரின் சாகுந்தலம், வால்மீகியின் இராமாயணம் என்ற இருபெரும் காவியங்களைத் தமிழுக்கு அளித்து பெருமைசேர்த்தவர். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகைக்கும், பத்துப்பாட்டுள் பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை நூல்களுக்கும் உரையெழுதி உரையாசிரியராகவும் அரும்பணியாற்றியவர்.
உரையாசிரியர், பதிப்பாசிரியர், ஆராய்ச்சியாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய ரா. இராகவையங்கார் உ. வே. சாமிநாதையருடன் நெருங்கிப் பழகி வாழ்ந்திருக்கிறார் என்பது வரலாற்றுச் சிறப்பாகும். ஆசிரியர் பணி, பதிப்புப் பணி முதலானவற்றில் ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளனர்.
சிதம்பரத்தில், அண்ணாமலை செட்டியார் 1924ஆம் ஆண்டு மீனாட்சித் தமிழ்க் கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக்கல்லூரி எனும் மூன்று கல்லூரிகளைத் தோற்றுவித்தார். தமிழ்க் கல்லூரிக்குத் தகுந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று அண்ணாமலைச் செட்டியார் எண்ணியபோது உ.வே.சாமிநாதையரின் நினைவே முன்வந்து நின்றது. அண்ணாமலைச் செட்டியார் அதற்குரிய முயற்சிகளையெல்லாம் செய்துமுடித்து சாமிநாதையரையே மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்தார். இந்தக் கல்லூரிகள்தான் பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக நிலைபெற்றது என்பது எண்ணற்குரியது. 1924, ஜூலை மாதத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்ற சாமிநாதையர் 1927ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள் அப்பணியில் இருந்து விளங்கினார்.
முதல்வர் பொறுப்பை ஏற்றது முதலாகப் பல அறிஞர் பெருமக்களைக் கல்லூரிக்கு அழைத்து வந்து சிறப்புச் சொற்பொழிவுகளையும் உரைகளையும் ஆற்றச் செய்துள்ளார் சாமிநாதையர். அவற்றுள் ரா. இராகவையங்காரின் சொற்பொழிவுகளும் இருந்தன. 1927ஆம் ஆண்டு தொடக்கம் முதலாகவே சாமிநாதையருக்கு உடல்நலம் சரிவர இல்லாமையினால் முதல்வர் பொறுப்பை விட்டு விலகிச் சென்னைக்குச் செல்ல வேண்டுமென்று எண்ணி இருந்தார்.
அதனால் முதல்வர் பொறுப்புக்குத் தக்க ஒருவரை நியமித்துவிட்டுச் செல்ல வேண்டுமென்ற விருப்பம் சாமிநாதையரிடம் இருந்தது. ரா. இராகவையங்கார் ஒருமுறை சிதம்பரம் வந்திருந்தபோது மீனாட்சி கல்லூரியின் முதல்வராகத் தாங்கள் பொறுப்பேற்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார். இராகவையங்கார் அப்போது சேது சமஸ்தானத்தில் தமிழ்ப் புலவராக இருந்து விளங்கி வந்தார். அதனால் மதுரையிலிருந்து சிதம்பரத்திற்கு வந்திருந்து முதல்வர் பொறுப்பை ஏற்பதற்குச் சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டார்.
அண்ணாமலைச் செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக மாறிய பின்னர் சில ஆண்டுகள் கழித்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தோற்றுவிக்கப்பட்டது. அண்ணாமலைச் செட்டியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளராக வந்து பொறுப்பேற்க வேண்டுமென்று இராகவையங்காருக்கு அழைப்பு விடுத்தார். அண்ணாமலைச் செட்டியாரின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சித்துறை விரிவுரையாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் இராகவையங்கார்.
சாமிநாதையர் அவர்கள் இராகவையங்காரின் புலமையை நன்கு அறிந்துவைத்திருந்த காரணத்தாலேயே தாம் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு ஏற்றவராக இராகவையங்காரைக் கருதினார்; தம் ஆசிரியருக்கு இணையாக வைத்து மகாவித்துவான் என்று பட்டமளித்துப் பாராட்டினார் என்பது எண்ணற்குரியது.
சாமிநாதையர் கல்லூரிப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்பாக 1927, பிப்ரவரி, 21இல் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் இராகவையங்கார் அவர்களை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தார். இராகவையங்கார் “கம்பர் கூறும் பெண்பாலியல்பு” என்னும் பொருளில் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவிற்குத் தலைமை தாங்கி இராகவையங்காரின் உரையைக் கேட்டு மகிழ்ந்தார் சாமிநாதையர்.
புதுக்கோட்டை சன்மார்க்க சபையின் பதினாறாவது ஆண்டு விழா 1925ஆம் ஆண்டு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த விழாவிற்குச் சாமிநாதையர்தான் தலைமை தாங்கினார். இந்த விழாவில் இராகவையங்காருக்கு “மகாவித்துவான்” என்னும் பட்டத்தை அளித்துப் பாராட்டி மகிழ்ந்தார் சாமிநாதையர். இந்த விழாவில்தான் கதிரேசன் செட்டியார் அவர்களுக்கும் “பண்டிதமணி” என்ற பட்டம் அளிக்கப்பெற்றது என்பது நினைத்தற்குரியது.
கல்லூரி விழாக்களுக்குத் தலைமை தாங்கச் செய்யவும், இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றச் செய்யவுமான நிகழ்வுகளில் இருவரும் ஒருமித்துப் பணியாற்றியுள்ளனர். சாமிநாதையரும் ராகவையங்காரும் பலமுறை சந்தித்து புலமையுரையாற்றியுள்ளனர் என்பதற்கு இருவரின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
1926, ஜூன் 16இல் ரா. இராகவையங்காரின் திருமகன் ராமானுஜனின் விவாக நிகழ்விலும் சாமிநாதையர் பங்குபெற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார். 1929ஆம் ஆண்டு மார்ச்சு 30ஆம் நாள் ரா. இராகவையங்கார் அவர்கள் சாமிநாதையரைத் தியாகராசவிலாச இல்லம் வந்து சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். பழந்தமிழ் இலக்கிய, இலக்கணம் குறித்து இருவரும் நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தனர்.
1935ஆம் ஆண்டு உ.வே. சாமிநாதையருக்கு 80ஆம் அகவை நிறைவுற்றது. சாமிநாதையருக்குச் சதாபிஷேக விழா எடுக்கப்பட்டது. அந்த விழா சென்னையில் மட்டுமின்றித் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் யாழ்ப்பாணம், ரங்கூன், கம்போடியா ஆகிய வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. சதாபிஷேக விழாவிற்கு முன்னும் பின்னுமாகப் பல்வேறு இதழ்கள் சாமிநாதையரை வாழ்த்தும் வகையில் வாழ்த்துக் கட்டுரைகள் வெளியிட்டுச் சிறப்பு செய்தன.
ந. மு. வேங்கடசாமி நாட்டார், ப. சம்பந்த முதலியார், வீ. இராமாநுஜாச்சாரியார், மு. கதிரேச செட்டியார், மு. இராகவையங்கார், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், டி. கே. சிதம்பரநாத முதலியார், வெ. ப. சுப்பிரமணிய முதலியார், எஸ். சத்தியமூர்த்தி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கட்டுரை வழியாக சாமிநாதையரை வாழ்த்திச் சிறப்பித்தனர்.
ரா. இராகவையங்கார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, முன்னீர்ப் பள்ளம் பூர்ணலிங்கம் பிள்ளை, கே. ஜி. சேஷையர், இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, வித்துவான் மா. இராசமாணிக்கம், அ. மு. பரமசிவாந்தம் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் வாழ்த்துப் பாக்களை எழுதி அளித்துச் சிறப்பித்தனர். இந்த விழா குறித்துச் செய்தி அறிந்த இராகவையங்கார் 13.2.1935இல் சாமிநாதையருக்கு இப்படியரு கடிதம் எழுதி வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்.
“பெருந்தமிழ்நூல் வள்ளலாகிய மஹாமஹோபாத்யாய டாக்டர் ஸ்ரீமான் உ.வே. ஸ்வாமிநாதய்யரவர்களை நன்றி பாராட்டி உபசரித்தற்குத் தாங்கள் முதலியோர் மேற்கொண்டுள்ள காரியம் எம்மனோர்க்குப் பெருமகிழ்விளைப்பதொன்று. அவர்கள் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்துள்ள பெருநல்லுதவிக்குக் கைம்மாறாக எத்துணைச் சிறப்புச் செய்தாலும் நிறையீடாகுமோ, தெரிகிலேன்; ஆயினும், அப்பெரியார்பால் நமக்குள்ள அன்பை இயன்ற அளவு காட்டிக்கொள்வதே இவ்வயமத்திற்குப் பொருந்துவதாகும்”
சாமிநாதையரின் சிறப்பைப் பாராட்டி வாழ்த்துப் பாடல்களையும் ராகவையங்கார் எழுதி அனுப்பியிருந்தார். சாமிநாதையரின் சதாபிஷேக விழா மலரில் வாழ்த்துப் பாக்களின் பகுதியில் இராகவையங்காரின் வாழ்த்துப் பாடல்தான் முதலாவதாக இடம்பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
பத்துப் பாட்டுப் பதிற்றுப்பத் துப்புறப்
பாட்டொ டைங்குறு நூறுசிந் தாமணி
புத்தர் கொள்கை புகன்மணி மேகலை
பொற்சி லப்பதி காரம் பெருங்கதை
மெத்து நன்பரி பாடல் பரணி நூல்
வேம்பத் தூரர் திருவிளை யாடலோ
டித்த ரைக்கிற வாதுசெய் வள்ளன்மைக்
கியாது ளோஞ்சாமி நாதற் குதவற்கே!
2. ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் மதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் காற்றின வெத்தனை
கோதி லாச்சாமி நாதன் றமிழ்க்கென்றே!
3. எத்துணைப்பொன் னளிப்பர்சிந் தாமணிக்
கேற்ற நல்விலை யென்மணி மேகலைக்
குய்த்தவண்சிலம் பின்செய்திக் கொத்ததொன்
றுண்டுகொல்லிவண் மண்டலந் தேடினும்
வைத்த செய்யுள் விளைந்த பொருண்முற்றும்
மானு மோபத்துப் பாட்டுச்செய் யுட்பொருட்
கித்த ரைப்பதிற் றுப்பத்து நூறுபொன்
இன்ப திற்றுப்பத் துக்கெதிர் நிற்குமோ!
4. பிறந்த துத்தம தானமென் பாரிவன்
பெய்த துத்தும தானமென் பேனிவன்
சிறந்த தாயதெண் ணாயிரவர் நன்குடி
தெளிந்த சொற்களேண் ணாயிர மேம்படும்
உறுந்த மிழ்ப்பர மாசாரி யன்னெனற்
கொத்த தேசாமி நாதப் பெரும்பெயர்
மறைந்த செந்தமிழ் தோற்றஞ்செய் வண்மையான்
மற்றிக் காலத் தகத்தியன் றானிவன்.
5. பொன்ப லாயிர மும்பொரு வாதுநீ
புரிந்த வண்டமிழ்த் தொண்டினுக் கொண்டுகில்
நின்ப லாயிர மான குறிப்புரை
நீடு செய்புகழ்ப் போர்வைக்கு நேருமோ
உன்ப ராவுமெய்ந் நூல்வடி வாகுநீ
ஊழி யூழியும் வாழ்கென வோதுமில்
அன்ப லாலெது வுந்தர வாய்ந்திலேன்
ஐய னேசாமி நாதநன் மெய்யவே!
(வேறு)
6. உச்சிமேற் கொளவல்ல நச்சினார்க் கினியர்
உயர்ந்தபரி மேலழக ரடியார்க்கு நல்லார்
மெச்சுமிளங் கோவடிகள் கொங்குவேள் சாத்தன்
வீறுதமிழ்ச் சங்கத்தைந் நூறுபுல வோர்கள்
அச்சயின நூலுதவு திருத்தக்க தேவர்
அம்மயிலை நாதர்புறப் பாட்டினுரை காரர்
நச்சுபதிற் றுப்பத்து னுரையாளர் கூத்தர்
நவில்சாமி நாதனிசை நாம்புகல்வ தென்னே!
இப்பாடல்களுள் சாமிநாதையரின் என் சரித்திரப் பதிப்புகளிலெல்லாம் கீழ்வரும் இந்தப் பாடல் தவறாமல் இடம்பெற்று வருவது சிறப்புக்குரியதாகும்.
ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் மதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் காற்றின வெத்தனை
கோதி லாச்சாமி நாதன் றமிழ்க்கென்றே!
1936ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் நாள் திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கத்தில் கம்பர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. டி.ஸி. ஸ்ரீநிவாசையங்கார் தலைமையில். ரா. இராகவையங்கார் உரையாற்றியிருக்கிறார். சாமிநாதையரும் விழாவிற்குச் சென்று இராகவையங்காரின் உரையைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்.
இராகவையங்காரின் அழைப்பின் பொருட்டு 1936, அக்டோபர், 30இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் கி.வா. ஜகந்நாதனுடன் சிதம்பரம் புறப்பட்டுச் சென்றார் சாமிநாதையர்.
அக்டோபர், 31ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து கடலூர், பாதிரிப்புலியூர், திருவதிகை, பண்ணுருட்டி உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்றுவிட்டு நவம்பர் 9ஆம் தேதி மாலை சென்னை வந்தடைந்தார்.
இந்தப் பயணத்தில் தமிழறிஞர்கள் தஞ்சை நீ. கந்தசாமிப் பிள்ளை, ரா. இராகவையங்கார், சோமசுந்தரம் பிள்ளை, சோமசுந்தரம் பாரதியார், மு. கதிரேசஞ் செட்டியார், ஸ்ரீநிவாச சாஸ்திரி, குப்புசாமி சாஸ்திரி, சதாசிவையர் மகள் பார்வதியம்மாள், நீதிபதிகள் குப்புசாமி ஐயர், சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட அறிஞர் பலரையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
இராகவையங்கார் திருச்சி சேசையங்கார் பள்ளியில் தமிழாசிரியராக இருந்து விளங்கிய காலம் முதலாகச் சாமிநாதையருடன் நட்பு பாராட்டி வந்திருக்கிறார் என்பதை இருவரது வரலாறுகளும் வெளிப்படுத்துகின்றன. சாமிநாதையரின் நினைவில் இராகவையங்காரும், இராகவையங்காரின் நினைவில் சாமிநாதையரும் எப்போதும் இருந்து விளங்கியுள்ளனர் என்பது நினைத்துப் போற்றத்தக்கதாகும்.
- முனைவர் இரா. வெங்கடேசன்