அறிவியலும் தமிழும் என்ற ஆய்வு இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஐரோப்பியர் வருகைக்கு முன் தற்கால அறிவியல் - தொழில்நுட்பக் கல்வியின் அறிமுகத்துக்கு முன் தமிழகத்தில் தமிழர்களிடையே நிலவி வந்த அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகளைத் தொகுத்து விளக்குவது. விளங்கிக் கொள்வது. மற்றது, தற்கால அறிவியல் தொழில் நுட்பக் கருத்துக்கள் தமிழகத்தில் எவ்வாறு கால் கொள்ளத் தொடங்கின, வளர்ந்து வருகின்றன என்பதைக் கண்டு கொள்வது. இரண்டுமே தமிழர்களோடு தொடர்புடையன. ஒன்று அவர்கள் அறிந்தது, அனுபவித்தது, பயன்படுத்தியது, பயன்பெற்றது, அன்றைய அவர்களது சமுதாய வளர்ச்சிக்கு உதவியது. மற்றது அவர்கள் பிறரிடமிருந்து பெற்றது, வளர்த்தது, சமகாலச் சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்திப் பயன் பெற்றது. ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இல்லை என்றாலும் ஒன்றோடு ஒன்றினை ஒப்பிட்டுக் காணக் கூடியதாக உள்ளது.

robotநிலவுடைமைச் சமுதாயத்தில் இடம்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப அறிவும், தொழில் மயமான சமுதாயத்தில் இடம் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப அறிவும் ஒன்றாக இருக்க முடியாது. பல்வேறு சோதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், பயன்படுத்தலுக்கும் ஆளான தற்கால அறிவியலுக்கு, சோதனைக்கு அதிகம் ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்த நோக்கலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட பண்டைய அறிவியல் ஈடு கொடுக்க முடியாது.

பண்டைய அறிவியல்

பண்டைய தமிழக தொழில்நுட்பச் சிந்தனைகளை அக்காலத்திய அரேபிய, கிரேக்க, ரோமானிய சிந்தனைகளோடு ஒப்ப வைத்துக் காண வேண்டியுள்ளது. அப்படி ஒப்பிடும்போது தான் அறிவியலின் உலகளாவிய தன்மை வெளிப்படுகிறது.

தொல்காப்பியர் உயிர்களை ஆறு வகைப்படுத்துவார். இது உமாஸ்வாதி என்ற சைனரின் தத்துவார்த்த சூத்திரத்தில் சொல்லப்படும் உயிர் வகைப்பாடுகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. சரக சம்ஹிதை கூறும் ஆயுர்வேதக் குறிப்புகளை மனதில் கொண்டு திருக்குறள் மருந்து அதிகாரத்தைப் படிக்கும்போது பல செய்திகள் புலனாகின்றன.

சங்கப் புலவர்கள் அறிவியலாளர் அல்லர். ஆனால் பல அறிவியல் உண்மைகளைப் பாடல்களில் பொதிந்து வைத்துள்ளனர். அதன்பின்னர் அறிவியலைத் தமிழில் கொணர்ந்த பெருமை அதற்குப் பின்வந்த புலவர்களுக்கும் உரையாசிரியர்களுக்கும் இது பொருந்தும். தமிழில் வெளியான கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், கோளதீபிகை, பூலோக விலாசம், கூவநூல், அசுவ சாஸ்திரம் முதலியன தற்போது கிடைக்காது. ஆனால் இலக்கிய, இலக்கண உரைகளில் குறிக்கப்படுகிற பல அறிவியல் நூல்கள் பண்டைத் தமிழரில் அறிவியல் (தொழில்நுட்ப) சிந்தனையின் ஆவணங்களாக உள்ளன.

அறிவியல் தொழில்நுட்பக் கண்ணோட்டத்துடன் பண்டையத் தமிழ் நூல்களையும், உரைகளையும், கல்வெட்டுக்களையும் மறு ஆய்வு செய்தால் உடனடித் தேவை என்பது கீழ்க்கண்ட அறிவியலைத் தாங்கி நிற்கும் பாடல்களை ஆராயும்போது தெளிவாகிறது.

தமிழ்மொழி பன்னூறு ஆண்டுகளுக்கு முன் இலக்கியம் கண்டது. இம்மொழி மானுடனின் வாழ்வை மட்டும் புலப்படுத்தவில்லை. அதில் ஆங்காங்கு நுணுகி அவன் வாழ்வினை மேம்படுத்துவதற்காகத் துணையான அறிவியல் கூறுகளும் நுவலப் பெற்றுள்ளன.

இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சுவடுகூடப் படாத தமிழரிடையே இருந்த அறிவும் உணர்வும் நம்மை வியக்க வைக்கின்றன.

ஐம்பூதங்களின் கூட்டே உலகம் / உடல் உலகின் தோற்றம்

ஐம்பூதங்களின் கூட்டாக இவ்வுலகும் உடலும் அமைந்துள்ளன. அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள இந்த அடிப்படை ஒற்றுமையைத் தமிழர் அறிந்திருந்த செய்தியை,

“மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரும் வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை (புறம்.2)

தீ, வளி, விசும்பு, நிலன், நீர் ஐந்தும் (பரி. 3 - 4)

என்ற பாடல் வரிகள் விளக்குகிறன்றன.

அணுக்களால் செறிந்த நிலம், நிலத்தின் கண் ஓங்கி இருக்கும் வானம், வானளவு பொருந்தித் தடவி நிற்கும் காற்று, காற்றினால் பெருகும் தீ, தீயுடன் மாறுபட்ட நீர் என்று ஐந்து வகை பொருந்திய ஆற்றல்கள் உடையதென ஐம்பூதங்களைக் குறிப்பிடுகின்றன.

“நிலம், தீ, நீர், வளி, விசும் பொடைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”       (தொல். மரபியல். 644)

என்ற நூற்பா உலகம் என்று உலகினையும் உலகிலுள்ள பொருள்களையும் குறிக்கும். இதனை ஒட்டியே சித்த மருத்துவத்தின் ஐம்பூதக் கொள்கையும் அமைந்துள்ளது. அதாவது மனித உடல் 96 தத்துவங்களில் முதலாவதாக உள்ளது ஐம்பூதக் கொள்கை.

பாரம்பரியக் கூறுகள்

“மெய்யோ டியை யினும் உயிரியல் திரியா” (தொல்.எழுத்து; நூன்மரபு;10)

என்ற நூற்பாவின் உட்கருத்தாக, உயிர் தத்தம் உடம்போடு இயைந்தாலும் அவ்வுயிரின் தன்மையிலிருந்து திரியாது என்று கூறுகிறார். அதாவது உயிரின் பாரம்பரியக் கூறுகள் (Hereditary Character) மாறாது என்பதாகும். இக்கருத்துக்கு அரண் செய்வதுபோல் பிறிதோர் இடத்தில் ஓய்வு என்பதற்குத் “தந்தையர் ஒப்பர் மக்கள்” (கற்பியல். 6) என்பதும் தொல்காப்பியத்துள் காணப்படுகின்றது. இது தான் மரபுவழிப் (genetic) பண்பாகும்.

ஆண், பெண் தோற்றம்

பெண்ணின் கருவறையிலுள்ள 44 பண்பிணக் கீற்றுகளும் 4xy  பாலின கீற்றுகளும். ஆணின் 44 பண்பிணக் கீற்றும் 4XX பாலினக் கீற்றும் கவரும்போது பிறக்கும் குழந்தை தந்தையின் கீற்றும் சேர்ந்து (44xxy) ஆணாகவும் தாயின் பாலினக் கீற்றும் சேர்ந்து (44XX) பெண்ணாகவும், இதில் பாலினக் கீற்று தவறுகளால் அலியாகவும் தோன்றும் என்பதை இன்றைய அறிவியல் கூறுகிறது. இக்கருத்தைத் தான் திருமூலர்,

“பூண்பது மாதா பிதா வழிபோலவே

ஆம்பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே” (திருமந்திரம்.461)

“ஆண்மிகில் ஆணாகும் பெண் மிகில் பெண்ணாகும்

பூண் இரண்டும் ஒத்துப் பொருந்தில் அலியாகும்” (திருமந்திரம்.462)

என்று கூறியிருப்பது வியப்பைத் தருகிறது.

மருத்துவம்

கருப்பை அறுவைமுறை

வசந்தபுரத்தை ஆண்ட வேந்தன் மகள் பிரசவ வேதனையில் துடிப்பதைப் பார்த்து நறையூர் மருத்துவச்சி வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்தாள். அவள் தன் மருத்துவத் திறமையால் குணப்படுத்தினாள் என்பதை,

“குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத் தொருநல்

இறை மக ளார்மக வீனப் பொறாதுட லேங்கவகிர்

துறைவழி யேற்று மகிழ்வூட்டு மங்கலை தோன்றி வளர்

முறைவழி நேர்நறை யூர்நாடு சூழ்கொங்கு மண்டலமே”

என்ற கொங்கு மண்டலச் சதகம் (92) பாடல் வழி இந்நிகழ்ச்சியினை எடுத்து வைக்கிறது.

தமிழ் மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் நாடிப் பார்த்து மருந்து தருவது ஆகும். மருந்து பற்றிப் பேசும் திருவள்ளுவர்,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்றார். நோயை ஆராய்தல், நோய் உண்டாக்கிய மூலம் ஆராய்தல், நோய் தீர்க்கும் வழி வகைகளை ஆராய்தல், நோய் தீரும் வகையில் செய் நேர்த்தியுடன் செயல்படுதல் என்பவை மருத்துவக் கூறுகள் எனத் திருக்குறள் கூறுகின்றது. இம்முறைகளையே மருத்துவ உலகம் ஏற்றுப் போற்றுகிறது.

ஆழ்கடல் சிந்தனை

நீர் பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீ£¢ப் பொருளின் இச்சுருங்கா இயல்பை அறி­வியல்பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் பாஸ்கல் என்னும் அறிஞர். இப் பாஸ்கல் விதிக்குச் சான்றாக,

“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது”

என்ற ஒளவையின் பாடல் கூறுகிறது. இங்கு ஆழத்தைப் பொருத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு உண்மையையும் எடுத்துரைக்கிறார்.

நீர்த்தேக்கத் தொழில்நுட்பம்

நீர்த்தேக்கங்களை வளைவாக அமைத்தால் நீரின் விசைமுகம் கட்டுப்படும். இத்தொழில் நுட்பத்தைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதை

“எண்ணாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

தெண்ணீர் சிறுகுளம்”                      (புறம். 118)

என்ற வரிகள் மூலம் சிறு குளங்கள் எட்டாம் நாள் பிறைச் சந்திரனைப் போல் வளைவான கரைகளையுடையனவாக தமிழர்கள் அமைத்தனர் எனத் தெரிகிறது. இது போலவே வேந்தன் கரிகாற்சோழனின் கல்லணை ஆற்றின் குறுக்கே நாக வடிவில் கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகள் ஆகியும் திடமாக உள்ள கல்லணை பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சான்றாகும். இது போன்றே அணைக் கட்டுகள் கற்சிறைகள் என்றழைக்கப்பட்டன. இவை நீரின் வேகத்தையும் அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வளைவாக இருந்தன:

 “வருந்திக் கொண்ட வல்வாய் கொடுஞ்சிறை” (அகம். 346: 9)

என்ற அகநானூற்றுப் பாடலில் இருந்து அறியமுடிகிறது.

இயற்பியல் கோட்பாடு

இயற்பியல் அறிஞர் நியூட்டன் மூன்று இயக்க விதிகளைக் கண்டறிவித்தார். இதில் இரண்டாவது விதி “உந்தமாறுபாடானது ஒரு பொருளின் மீது செயல்படும் விசையைப் பொருத்தது என்றும் இது அந்த விசை செயல்படும் திசையிலேயே ஏற்படும்” என்றும் கூறினார். இதையே

“பேர் யாற்று

நீர் வழிப்படூஉம் உம் புணை போல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது”      (புறம். 192: 8-10)

என்ற வரியில் ஆற்றின் வழியே செல்லும் ஓட்டம் நீரின் விசையை மட்டும் பெற்று அது செல்லும் திசையிலேயே செல்லும். இதில் வேறு விசை தாக்கவில்லை. அதுபோல் வாழ்க்கை சீராக செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அறிவியல் தொழில் நுட்பத்துடன் தமிழர் வேளாண் அறிவியல், நீர்த் தேக்கம், வானியல், கணிதவியல், அளவையியல், கால அளவு, கணிப்பு, வேதியல், கப்பல் கட்டுதல், நெசவு, கட்டிடம், இசைக் கருவி, அணிகலன், தொழில்நுட்பம் போன்ற பலதுறைகளிலும் சிறந்து விளங்கியது. இவற்றை இலக்கிய, இலக்கண, கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் அறிய முடிகிறது,

மேலைநாட்டினர் அறிவியல் - தமிழில்

இன்று நாம் படித்துக் கொண்டிருக்கின்ற அறிவியல் வாழ்வியல் படிப்பு, பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். 1830களில் இதற்கான தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் ஏற்பட்டது. முதல் அறிவியல் நூல் இரேனியசு பாதிரியின் “பூமி சாஸ்திரம்” என்கிற நூலை எழுதி 1832இல் வெளியிட்டார். 1849இல் இலங்கையில் பால கணிதம் என்ற நூல் வெளியாயிற்று. 1935இல் அல்ஜிப்ரா பற்றிய நூல் இயற்கணிதம் எனத் தமிழாக்கப்பட்டு வெளி வந்தது. வீச கணிதம் என்ற இன்னொரு நூல் இதே ஆண்டில் வெளிவந்தது. இதன் பின்னர் 1857இல் இலங்கையில் டாக்டர் ஃபிஷ்கிறீன் என்ற மருத்துவர் பதினொரு மேலை மருத்துவ நூல்களையும் இரண்டு கலைச்சொல் தொகுதியையும் வெளியிட்டார். இம்முயற்சியால் வெளிவந்த நூல்கள் மனுஷ அங்காதிபாதம், மனுஷ சுகரணம் போன்ற இந்நூல்களின் பெயர்களே வடமொழியில் உள்ளன. கிறீனின் கலைச் சொற்கள் எண்ணிக்கையில் வடசொற்கள் முதல் நிலையில் உள்ளன. டாக்டர் கிறீனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ம.ஜகந்நாத நாயுடுவால் சாரீர வினாவிடை பைஷ ஜகல்பம் போன்ற மருத்துவ நூல்கள் எழுதப்பட்டன. இந்நூல்களின் தலைப்பு வடமொழி. கலைச் சொற்களில் வடமொழிச் சொற்களே மிகுதி. இவர் நூலில் கலைச் சொல் பட்டியலில் நல்ல தமிழ்ச் சொல் இருந்தாலும் வடசொற்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக சுகாதார வாழ்விற்குப் பலவித இடையூறுகள் ஏற்பட்டு பல நோய்கள் பரவின. இதன் காரணமாக வெளிவந்த நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. இதுபோலவே புதிய கண்டுபிடிப்புகளான எந்திரங்களைப் பற்றிய “ஆயில் எஞ்சின்”, “மோட்டார் ரிப்பேர் இரகசியம்” போன்ற நூல்கள் வடமொழிச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதப்பட்டன. இந்நூல்கள் அறிவியலைத் தமிழ்வழி கடத்தின.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதற் பாதிப் பகுதியிலேயே ஐரோப்பியர் வருகைக்குப் பின் தமிழகத்தில் வடமொழிக் கல்வி கற்பிப்பது பற்றிய கருத்துகளும் விவாதங்களும் தொடங்கின. முதல் வகுப்பு முதல் 8ஆவது வகுப்பு வரை பல பள்ளிகளில் தாய்மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அதன் விளைவாக தமிழில் அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் எழுதப்பட்டன.

1932இல் தமிழை பயிற்று மொழியாக அறி­வித்தபின் அரசால் வெளியிடப்பட்ட கலைச்சொற்கள் பெரும்பாலும் வடசொல்லாகவும் ஆங்கிலமாகவும் இருந்தன.

எ.கா. விபேதன ரஸாயன நூல்

இதன் பிறகு சென்னை தமிழ்ச் சங்க முழு முயற்சியால் சிறந்த தமிழ் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கிறித்தவ இலக்கியச் சங்கம், சோவியத் மீர் முன்னேற்றப் பதிப்பகம் வாயிலாகவும் மற்றும் இலங்கை மருத்துவர் சின்னத் தம்பி, மருத்துவர் அ.கதிரேசன், கு.கணேசன், சு.நரேந்திரன் போன்றோர்களால் பலநூறு அறிவியல் நூல்கள் வெளிவந்துள்ளன. இதில் இலக்கண நெகிழ்வுகள் நிகழ்ந்துள்ளன. கிரந்த எழுத்துக்கள் தேவையான இடத்தில் இடம்பெற்றன. புதிய சொற்கள் உருவாகி உள்ளன. இவைகளைப் பார்க்கும் போது அறிவியல் துறையில் தமிழ் வளர்ச்சியடைந்திருப்பதை அறிய முடிகிறது. இலக்கிய நெகிழ்வுகளுக்கு புதிய சொற்கள், புதிய இலக்கணம் தோன்றும் வரை இந் நெகிழ்வுகள் தேவைப்படும்.

களஞ்சியங்கள்

தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947இல் தொடங்கப்பட்டு இந்திய மொழிகளில் பத்து தொகுதிகளைக் கொண்ட கலைக் களஞ்சியம் தமிழ்மொழியில் வெளி­யிடப்பட்டது. இக்கழகமே 1968இல் குழந்தைக்கென தனியே வண்ணப் படங்களுடன் 9 தொகுதிகளை வெளியிட்டது. அதன் பிறகு மருத்துவக் களஞ்சியம் 1990ஆம் ஆண்டு அலோபதி மருத்துவம் 12 தொகுதிகளும் சித்த மருத்துவம் 5 தொகுதிகளும் வெளி வந்துள்ளன.

இது போலவே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு அறிவியல் களஞ்சியம் 13 தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் இப்பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் கீழ் பொறியியல் 14, மருத்துவம் 13 நூல்களை எழுதி வாங்கப்பட்ட நிலையில் பெரும்பாலான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அகராதிகள்

புதிய அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பல ஆயிரக் கணக்கான தமிழ்க் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு பட்டியல்களாக தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் 150 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1850களில் பிஷ்கிறீனினால் தொடங்கி வைக்கப்பட்ட அகராதி பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பட்டியல்கள் என்ற நிலைமாறி பல அகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் கலைச் சொற்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

பல நிறுவனங்கள், பதிப்புகள் வாயிலாக தமிழில் பல நூறு புத்தகங்கள் மற்றும் கலைக் களஞ்சியங்கள், அறிவியல் நூல்கள் வெளிவரக் காரணம், தமிழில் கலைச் சொற்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லை என்பதே ஆகும். இதற்கு சென்னை பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகராதி, மணவை முஸ்தபாவின் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கலைக் களஞ்சிய அகராதி, அ.கி.மூர்த்தியின் அறிவியல் அகராதி, டாக்டர் சம்பத் குமாரின் அறிவியல் அகராதி, முனைவர் ஜோசப், டாக்டர் சாமி.சண்முகம் ஆகியோரின் அகராதிகள் துணைபுரிகின்றன.

எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் சுடச் சுடத் தருவதில் அறிவியல் மாத இதழ்களான கலைக் கதிர், அறிக அறிவியல், அறிவியல் ஒலி போன்ற பல தமிழ் இதழ்கள் தவறவில்லை. துளிர் என்ற சிறுவர் அறிவியல் இதழும் பல ஆயிரக்கணக்கில் வெளிவருகின்றது. இத்துடன் தின இதழ்களும் குறிப்பாக தினத்தந்தி, தினகரன் போன்ற இதழ்களில் அறிவியல் இணைப்பு இதழ்கள் வெளிவருகின்றன.

இம்முயற்சிகள் தற்கால நவீன அறிவியலைத் தமிழர்களுக்குத் தமிழில் சொல்லும் நடவடிக்கையில் நம்பிக்கையூட்டும் பகுதிகளாகும். ஆயினும் இந்த முயற்சிகள் முழு வெற்றி பெறத் தமிழ் அனைத்து மட்டங்களிலும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

தேவை மிகும்போதுதான் அதன் வெளிப்பாடு மிகும். மேலும் அதன் பயனாக அறிவியல், தமிழில் எல்லா நிலைகளிலும் இடம்பெறும். அப்போது தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட ஜப்பான், ஜெர்மன், ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளைப் போல் தமிழ்நாடும் பொருளாதாரத்தில் சிறப்புற முடியும்.

அறிவியலைத் தமிழில் சொல்ல முடியாது என்பது தமிழக அறிவியல் வரலாறு பற்றி அறியாதோரின், அறிய விரும்பாதோரின் கூற்றேயன்றி வேறன்று, ஏனெனில் தமிழுக்கு அறிவியலைச் சொல்லுகிற திறமுண்டு.

“உலகியலின் அடங்கலுக்கும்

துறைதோறும் நூல்கள்

ஒருவர் தயை இல்லாமல்

ஊரறியும் தமிழில்

சலசலவென எவ்விடத்தும்

பாய்ச்சி விட வேண்டும்”

என்ற புரட்சிக் கவிஞரின் கனவு தங்கு தடையின்றி நிறைவேறி வருகின்றது என்பது கண்கூடு.

டாக்டர் சு.நரேந்திரன்