பக்தியிலக்கியத்திற்கு முன்பு தோன்றிய தமிழ் இலக்கியங்களில் சங்கத்தமிழ் என்னும் சொல்லாடல் இடம்பெறவில்லை. குறிப்பாக ஆண்டாளின் திருப்பாவையில் சங்கத்தமிழ் (30)என்றும் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சங்கமலி தமிழ் (930), சங்கமுகத் தமிழ் (1187) என்றும் கம்பரின் இராமாயணத்தில் தமிழ்ச் சங்கம் (4477) என்றும் அவ்வையாரின் நல்வழியில் சங்கத் தமிழ் (கடவுள் வாழ்த்து) என்றும் கூறப்பெற்றுள்ளன. இவற்றைப் பொருண்மையின் அடிப்படையில் தமிழ்ச் சங்கம், முத்தமிழ், சங்கமலி தமிழ் - சங்கமுகத் தமிழ், சங்கத் தமிழ் என நான்காக வகைப்படுத்த முடிகிறது.

தமிழ்ச் சங்கம் என்ற சொல்லாடல் இடம்பெற்றுள்ள பதிவை,

தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு

முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல் (கிட். நாடு,31:1-2)

என்ற கம்பராமாயணப் பாடலடிகளின் வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்பாடலடிகளில் தமிழ்ச் சங்கத்தோடு அகத்தியரும் பொதிகை மலையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன. எனவே, சங்க காலம் முதல் பக்திக் காலம் வரையில் உள்ள தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பொதிகை மலை பற்றிய பதிவுகளையும் அகத்தியர் பற்றிய பதிவுகளையும் அறிவது இன்றியமையாததாகிறது.

பொதிகை மலை சங்க இலக்கியம் தொடங்கிப் பக்தி இலக்கியம் வரையில் உள்ள தமிழ் இலக்கியங் களில் ‘பொதியில்’ என்றே கூறப்பெற்றுள்ளது. பொதிகை மலை யாருக்குரியதாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவதோடு, அவற்றை வகைதொகைப் படுத்தி அறிவதும் இங்கு இன்றியமையாததாகிறது. இது தொடர்பான தரவுகளைக் குறுநில மன்னர்கள், வேந்தர்கள், உவமைப்படுத்துதல் என மூன்றாகப் பகுக்க முடிகிறது. பொதிகை மலை குறுநில மன்னர்களுக்கு உரியதாக இடம்பெற்றுள்ளதை,

பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்

(அகம். 25: 20)

கழல் தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்

(குறுந். 84: 3)

என்ற பாடலடிகளின் வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள முதல் பாடலடியில் திதியன் என்பவனுக்கு உரியது பொதிகை மலை என்று கூறப்பெற்றுள்ளது. இரண்டாவது பாடலடியில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுடையது பொதிகை மலை என்று கூறப்பெற்றுள்ளது.

திகை மலை வேந்தர்களுக்கு உரியதாக இடம்பெற்றுள்ளதை,

திருந்துஇலை நெடுவேற் தென்னவன் - பொதியில் (அகம். 138: 7)

மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து (மணி.1:22)

என்ற பாடலடிகளின் வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள முதல் பாடலடியில் தென்னவன் என்பவனுடையது பொதிகை மலை என்று கூறப்பெற்றுள்ளது. பாண்டியர்களின் சிறப்புப் பெயர்களில் தென்னவன் என்ற பெயரும் ஒன்றாகும். ஆக, இங்கு இடம்பெற்றுள்ள தென்னவன் என்ற பெயருக்குப் பாண்டியன் என்று பொருள் கொள்ளுவதே பொருத்தமுடையதாகிறது. எனவே, அப்பாடலடியின் பொருளை நெடிய வேலினையுடைய பாண்டியனது பொதிகை மலை என்று கூறலாம். இரண்டாவது பாடலடியில் குடுமி என்பவனுடையது பொதிகை மலை என்று கூறப்பெற்றுள்ளது. குடுமி என்பது பாண்டியர்களின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகும். ஆகவே இங்குக் கூறப்பெற்றுள்ள குடுமி என்ற பெயருக்குப் பாண்டியன் என்று பொருள். இங்குப் பாண்டியனுடையது பொதிகை மலை என்று பொருள் கொள்ள முடிகிறது.

பொதிகை மலை உவமையாகக் கூறப் பெற்றுள்ளதை, ஆடுமழை தவழும் கோடு உயர் பொதியில் (நற். 379: 11) என்ற பாடலடியின் வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. இங்கு இடம்பெற்றுள்ள பொதிகை மலை என்பது தலைவியின் கூந்தலுக்குப் பொதிகை மலையில் பூக்கின்ற காந்தள் மலரோடு ஒப்புமைப் படுத்தவே கூறப்பெற்றுள்ளது. இதன் வழிப் பொதிகை மலை சிறப்புக்குரிய மலை என்பதைக் கருத்தில் கொண்டே கையாண்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

சங்க இலக்கியம் தொடங்கிப் பக்தி இலக்கியங்கள் வரையில் பொதிகை மலையோடு தொடர்புபடுத்தப் பெறும் அகத்தியருடைய பதிவுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை அறிவதும் இங்கு இன்றியமையாததாகிறது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை அகத்தியரும் பொதிகை மலையும், அகத்தியர் தெய்வம் என இரண்டாக வகைப்படுத்த முடிகிறது.

சங்க இலக்கியங்கள் தொடங்கிப் பக்தி இலக்கியங்கள் வரையில் சிலப்பதிகாரத்தில் மட்டுமே அகத்தியர் பொதிகை மலையுடன் சேர்த்துக் கூறப்பெற்றுள்ளதை,

தெய்வ மால்வரைத் திருமுனி யருள (அரங்:1)

வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த (வேனிற்:8)

மாதவ முனிவன் மலைவலங் கொண்டு

(அடைக்:14)

மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு

(சமயக்: 68)

என்னும் அடிகளின் வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. அமர முனிவ னகத்தியன் றனாது (22: 35) என்று மணிமேகலையில் அகத்தியர் பொதிகை மலையுடன் சேர்த்துக் கூறாமல் முனிவன் என்று கூறப்பெற்றுள்ளார்.

திருநாவுக்கரசருடைய தேவாரத்தில் அகத்தியரைத் தெய்வங்களின் வரிசையில் வைத்துக் கூறப் பெற்றுள்ளதை, அங்ககத்திய னும்மர்ச்சித் தாரன்றே (73.3:4) என்ற பாடலடியின் வழி விளங்கிக்கொள்ள முடிகிறது. இப்பாடலில் காளி, சூரியன், திருமால், பிரம்மன் ஆகிய தெய்வங்களோடு அகத்தியரும் இணைத்துக் கூறப்பெற்றுள்ளார். அகத்தியரைப் பொதிகை மலைக்கு உரியவராகவும் முனிவராகவும் கூறப்பெற்று வந்த நிலையில் திருநாவுக்கரசர் மட்டும் அகத்தியரைத் தெய்வங்களின் வரிசையில் வைத்துக் கூறுகின்றார். இதன் மூலம் அகத்தியர் எனும் முனிவர் திருநாவுக்கரசருடைய காலத்தில் தெய்வமாகக் கருதப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது.

கம்பராமாயணத்தில் பொதிகை மலையோடு அகத்தியரையும் தமிழ்ச் சங்கத்தையும் இணைத்துக் கூறப்பெற்றுள்ளது. ஆகையால் கம்பருடைய காலத்தை அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. கம்பர் காலம் “கால ஆராய்ச்சி ஒரு முடிந்த நிலையினை எய்தாமல் கம்பன் காலம் கி.பி. 9; 10; 12 ஆம் நூற்றாண்டு” என மூன்று நிலைகளில் கூறப்படுகின்றது (சிவகாமி,1978:63). இவ்வாறு கம்பருடைய காலத்தைப் பற்றி வேறுபாடுகள் இருந்தாலும் எம். அருணாசலம் கூறுவதாக மா. வரதராசன் கூறுவதாவது:

சென்னை கம்பன் கழகம் 9. 10. 1975 இல் கம்பன் விழாவில், எம். அருணாசலம் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையில் கம்பன் காலம் பத்தாவது கட்டுரையில் பல ஆதாரங்களைக் காட்டிக் கம்பரது காலம் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும் என்று ஐயம் நிலை நிறுத்தியுள்ளார். இதுதான் பல தமிழ்ச் சான்றோர்களின் முடிந்த முடிபாகும் (1994, ப.118).

இதன் மூலம் கம்பராமாயணம் பக்திக் காலகட்டத்திற்குப் பின்னர்த் தோன்றியது என்பது தெரிய வருகிறது. கம்பர், இராவணன் சீதையைக் கடத்திச் சென்றதனால், சீதையை இராவணனிடமிருந்து மீட்க வேண்டும் என்று இராமன் சுக்கிரீவனிடம் கூறுகிறார்.‘ அதன்படி சுக்கிரீவன் வானரப்படை தலைவர்களை அழைத்து இலங்கைக்குச் செல்லும் வழியைப் பற்றிக் கூறுகிறார். அவ்வாறு கூறும்பொழுது தென் திசையில் அகத்தியன் எனும் முனிவன் பொதிகை மலையில் தமிழ்ச் சங்கம் வைத்திருந்தான். அம்மலையைக் கடந்த பிறகு பெரிய கடலைக் காண்பீர் என்று கூறுகிறான்’ (கிட். நாடு,1-8). இங்குக் கப்பனுடைய நோக்கம் வானரப்படைகள் இலங்கைக்குச் செல்லும் வழியை அறிந்து கொள்வது மட்டுமின்றிக் குறிப்பாகத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிக் கூறுவதுமாக இருந்துள்ளது. இங்குக் குறிப்பிடப் பெறுகின்ற தமிழ்ச் சங்கம் எச்சங்கம் என்று அறிதல் இன்றியமையாத தாகிறது.

பாண்டியர்கள் மூன்று சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த செய்தி இறையனார் அகப்பொருள் வழித் தெரிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று சங்கத்தில் அகத்தியர் முதல், இடை ஆகிய இரண்டு சங்கத்திற்கு மட்டும் தலைமைப் புலவராய் இருந்தார் என்று கூறுகிறது. எனவே, பாண்டிய மன்னர்கள் கூடிய தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவராய் அகத்தியர் இருந்தார் என்பதை அறிந்த கம்பர் ‘திருமுனிவன் தமிழ்ச் சங்கம் ’ என்று கூறியுள்ளார் எனலாம். ஏனெனில் தமிழ்ச் சங்கம் பற்றிய முழுச் செய்தியைக் கூறும் முதல் நூலாக இறையனார் அகப்பொருள் உரை கிடைக்கிறது.‘இந்நூல் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் தோன்றியது’ என்று செ.வை. சண்முகம் கூறுகிறார் (2012, பக். 55-56). கம்பருடைய காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே, இறையனார் அகப்பொருள் உரை கருத்தின் வழியே கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் அகத்திய முனிவரைத் தமிழ்ச் சங்கத்தோடு சேர்த்துக் கூறினார் என்று கருதமுடிகிறது. ஆக, இங்குக் கூறப்பெறும் தமிழ்ச் சங்கம் பாண்டியர்கள் வளர்த்த தமிழ்ச் சங்கம் என்பது தெரியவருகிறது.

அவ்வையார் இயற்றிய நல்வழி எனும் நூலில் ‘சங்கத்தமிழ்’ என்ற சொல்லாடல் இடம்பெற்றுள்ளது. இதனை, சங்கத் தமிழ் மூன்றும் தா (கட.வாழ்,4) என்ற பாடலடியின்வழித் தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்த நல்வழி இயற்றிய அவ்வையாரின் காலத்தைப் பற்றி மு. அருணாசலம் கூறுவதாவது:

அவ்வையார் என்ற பெயரில் பலா¢ இருந்திருக்கிறார்கள். ஒருவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குமுன் சங்ககாலத்தில் வாழ்ந்தவர் என்பதில் தவறில்லை. எட்டுத் தொகையில் காணும் பல தனிப்பாடல்கள் இவர் பாடியவை. மற்றோர் அவ்வையார் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து ஞானக்குறளும் விநாயகர் அகவலும் பாடினார். இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவ்வையார் எத்தனைப் பேர் என்பது பற்றித் தெளிவு ஏற்படவில்லை. 12 ஆம் நூற்றாண்டில் ஓர் அவ்வையார் என்பது தெளிவு. இவர் மூதுரை, நல்வழி என்ற இரண்டு நூல்களையும் அசதிக் கோவையும் செய்தார் என்று திட்டமாகச் சொல்ல முடிகிறது (1971,பக். 236- 237).

இதே கருத்தினைத் தாயம்மாள் அறவாணன் அவர்களும் கூறுகின்றார் (2015,ப.23). இத்தரவுகளின் வழித் தமிழில் அவ்வையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்தனர் என்பது தெரியவருகிறது. இவர்களில் நல்வழி இயற்றிய அவ்வையார் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று அறியமுடிகிறது.

அவ்வையார் தான் இயற்றிய நல்வழியில் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ எனும் சொல்லாடலை ஏன் பயன்படுத்தினார்? என்று கருதும் பொழுது சில கருத்துகள் புலப்படுகின்றன. சங்கத்தமிழ் என்னும் சொல்லாடல் கடவுள் வாழ்த்துப் பாடலில் இடம்பெற்றுள்ளதால் தான் இயற்றிய நல்வழி என்னும் நூல் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் பெற்று விளங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம். ஏனெனில் அவ்வையார் ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்று விநாயகரிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. ஆகவே, அவ்வையார் கூறும் சங்கத்தமிழ் மூன்றும் என்பதில் இயல், இசை, நாடகம் சேர்ந்த முத்தமிழையே கூறுகிறார் எனக் கருதமுடிகிறது. எனவே, முத்தமிழ் என்ற கருத்தியல் தொடர்பான சொல்லாடல் இடம்பெற்றுள்ளதை, ஏழ் உலகம் புகழ், முத்தும் முத் தமிழும் தந்து முற்றலாம்?” (கிட். ஆறு,52: 3-4)என்ற கம்பராமாயணப் பாடலடிகளின் வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள முத்தமிழ் என்ற சொல்லாடலே முத்தமிழ் பற்றிய தமிழில் முதற்பதிவாகும். இவற்றின் மூலம் பாண்டியர் மதுரையில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்த்தனர் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு தமிழ் மொழியில் முத்தமிழ் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன என்பதை அறிந்த அவ்வையார் தன்னுடைய பாடலில் “சங்கத்தமிழ் மூன்றும் தா” என்று கூறினார் எனக் கருதலாம்.

திருமங்கை ஆழ்வார் பாடல்களில் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்னும் சொல்லாடல்கள் இடம் பெற்றுள்ளதை,

சங்கமலி தமிழ் மாலை பத்து இவை வல்லர்கள் (பெரியதிரு.930:7)

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் (பெரியதிரு.1187:7)

எனும் பாடலடிகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. இவருடைய காலம் ‘கி. பி. 8 ஆம் நூற்றாண்டு’ என்று தெ. பொ. மீ. கூறுவதன் வழித் தெரிந்து கொள்ள முடிகிறது (2014,ப.194). திருமங்கையாழ்வார் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்னும் சொல்லாடல்களை ஏன் தன்னுடைய பாடலில் பயன்படுத்தினார்? என்று கருதும் பொழுது சில கருத்துகள் புலப்படுகின்றன. அவை:

சங்கமலி தமிழ் என்று திருமங்கையாழ்வார் தான் இயற்றிய பெரிய திருமொழி 9 ஆம் திருமொழியில் மூன்றாவது பதிகமான சலங்கொண்ட பதிகத்தின் 10 வது பாடலில் கூறியுள்ளார். மேலும், விண்ணாகரம் என்னும் பதிகத்தில் 10 வது பாடலில் சங்கமுகத் தமிழ் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளார். இவர் பதிகத்தின் இடையில் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்ற சொல்லாடல்களை ஏன் பயன்படுத்தவில்லை? என்ற இயல்பான ஐயங்களும் தோன்றுகின்றன. வேறு வகையில் நோக்கும் பொழுது தான் பாடிய பதிகத்தின் இறுதிப் பாடல்களில் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தியுள்ளதால் திருமாலைத் தமிழுடன் தொடர்புபடுத்தும் நோக்கம் திருமங்கையாழ்வாருக்கு இருந்திருக்கலாம்.

ஆழ்வார்கள் திருமாலின் மீது கொண்ட பக்தியால் பாசுரம் பல பாடியுள்ளனர். இவ்வாறு பாசுரங்களைப் பாடுவதற்கு அடிப்படையாக இருப்பது திருமால் என்பதை உணர்ந்த ஆழ்வார்கள் பலவாக வர்ணித்துப் பாடினர். அப்பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் திருமாலைப் பலவாக வர்ணித் திருந்தாலும், மேற்குறிப்பிட்ட பாடலடிகளில் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு சங்கமலி தமிழ் மாலை பத்து என்றும், சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் என்றும் கூறுவதனால் திருமங்கையாழ் வாரின் நோக்கம் திருமாலைத் தமிழுடன் தொடர்புபடுத்துவதே எனக் கருதலாம். எனவே, திருமங்கையாழ்வார் தான் பாடிய பதிகத்திற்குப் பெயர் சூட்டவே சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருந் தாலும் திருமாலைத் தமிழுடன் தொடர்பு படுத்துவதே அவருடைய நோக்கம் என்று கருதமுடிகிறது.

சங்கத்தமிழ் எனும் சொல்லாடல் இடம் பெற்றுள்ளதை,சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே (திருப். 30: 5) என்ற ஆண்டாளின் பாடலடியின் வழித் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றில் இடம்பெறும் சங்கத் தமிழ் என்னும் சொல்லாடலை ஏன் ஆண்டாள் பயன்படுத்தினார்? என்று கருதும் பொழுது சில கருத்துக்கள் புலப்படுகின்றன. ஆண்டாள் தான் இயற்றிய நூலுக்குப் பெயர் வைக்கவே இறுதிப் பாடலான 30 வது பாடலில் ‘சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே’ என்னும் அடியைப் பயன்படுத்தினார் என்று கருதலாம். மேலும், திருமாலைத் தமிழுடன் தொடர்பு படுத்தும் நோக்கத்துடன் பாடினார் என்று கருதமுடிகிறது.

அவ்வையார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகரிடம் சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டுவதாக அமைந்துள்ளது. ஆக அவ்வையாரின் அணுகுமுறையானது விநாயகரின் வழி முத்தமிழையும் பெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டே பாடினார் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவ்வையாருக்கு முன்பே தன்னுடைய திருப்பாவையில் ‘ சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே’ என்று கூறியிருப்பதனால் திருமாலுடன் தமிழைத் தொடர்பு படுத்தவே சங்கத் தமிழ் என்ற சொல்லாடலைச் சேர்த்துப் பாடினார் எனக் கருதலாம். எனவே, சங்கத் தமிழ் என்ற சொல்லாடலைத் தெய்வங்களுடன் சேர்த்துப் பாடும் மரபு அவ்வையாருக்கு முன்பே ஆண்டாளிடம் வளர்ந்து விட்டது. இது தொடர்பாகச் செ. வை. சண்முகம் கூறுவதன் மூலமும் தெரியவருவதாவது:

சங்கம் சென்ற சொல்லும் மூன்று சங்கங்கள் கூட்டப்பட்டதாகக் கருதப்படும் மரபும் தமிழில் சங்க மரபு உண்டாவதற்கான மூலமாகக் கருதுவதில் தவறில்லை. தமிழகத்தில் வாழ்ந்த சமண, பௌத்தர்கள் ஏற்படுத்திய பிட்சுகளின் சங்கம், பௌத்த சமய வரலாறு பற்றிச் சங்கம் பற்றிய கதைகள் ஒருகால் தமிழ்ச் சங்கத்துக்கு ஊற்றுக்காலாக இருத்திருக்கலாம். அந்த நிலையே ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையைச் சங்கத்தமிழ்மாலை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் (2012, ப. 76)

சங்க இலக்கியங்கள் தொடங்கிப் பக்தி இலக்கியங்கள் வரையில் பொதிகை மலையானது முதலில் குறுநில மன்னர்களுக்கும், வேந்தர்களுக்கும் உரியதாகயிருந்து, அகத்திய முனிவரோடு தொடர்பு படுத்தப்பெற்றது. கம்பராமாயணத்தில் பொதிகை மலையோடு தமிழ்ச் சங்கமும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. இதைப் போலவே சங்கத் தமிழ் என்னும் சொல்லாடல் ஆண்டாள் பயன்படுத்திய பிறகு திருமங்கையாழ்வார் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்று பயன்படுத்தியுள்ளார். இவ்விருவரும் திருமாலைத் தமிழுடன் தொடர்பு படுத்திய முறையிலேயே பின்னாளில் அவ்வையார் விநாயகரிடம் தமிழைத் தொடர்புபடுத்துவதுடன் சங்கத் தமிழ் என்ற சொல்லாடலுடன் மூன்று (முத்தமிழ்) என்று கூறியிருப்பதனால் இதனை ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க முடிகிறது.

இதுவரை விளக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் நோக்கும் பொழுது தெய்வங்களைச் சங்கத் தமிழ் என்ற சொல்லாடல்களுடன் சேர்த்துக் கூறும் மரபானது ஆண்டாளிடமே முதலில் தோன்றியது எனலாம். ஆண்டாளுக்கு முன்னர் சங்கத் தமிழ் என்ற சொல்லாடல் தெய்வங்களுடன் தொடர்பு படுத்தப் பெற்ற பதிவு கிடைக்குமாயின் இம் முடிவு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

துணை நூற்பட்டியல்

1. (...). (...).ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை. திருநெல்வேலி: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.

2. அருணாசலம், மு. (1971). தமிழ் இலக்கிய வரலாறு தமிழ்ப் புலவர் வரலாறு 11 ம் நூற்றாண்டு. திருச்சிற்றம்பலம்: காந்தி வித்யாலயம்.

3. இராசாராம் துறை, (உ. ஆ.).(2005).குறுந்தொகை தெளிவுரை. சென்னை: திருமகள் நிலையம்.

4. இராஜ கோபாலையங்கார், வே., (பதி. ஆ.). (1923). அகநானூறு மூலமும் உரையும். மெட்ராஸ்: தி டாட்டா பிரிண்டிங் ஒர்க்ஸ்.

5. சண்முகம், செ. வை. (2012). இலக்கண உருவாக்கம் பல்லவ - பாண்டியர் காலம் (இ.பதி.). திருச்சி: அடையாளம்.

6. சிவகாமி, ச. (1978). கம்பன் ஆய்வடங்கள். சென்னை: தமிழ்ப் பதிப்பகம்.

7. ஞானசம்பந்தன், அ. சா., (பதி. ஆ.). (2012). கம்பராமாயணம் இராமாவதாரம் கிட்கிந்தா காண்டம் உரையுடன். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

8. தருமபுர ஆதினம்., (பதி. ஆ.). (1961). தேவாரத் திருப்பதிகங்கள் ஐந்தாந் திருமுறை. தருமபுரம்: ஞானசம்பந்தன் அச்சகம்.

9. தாயம்மாள் அறவாணன். (2015). அவ்வையார் படைப்புக் களஞ்சியம். சென்னை: தமிழ்க் கோட்டம்.

10. பாலசுப்பிரமணியன், கு. வே., (உ. ஆ.). (2004). நற்றிணை (மூலமும் உரையும்). சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

11. மீனாட்சி சுந்தரனார், தெ. பொ. (2014). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: முல்லை நிலையம்.

12. வரதராசன், மா. (1994). கம்பன் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டே. சென்னை: ராஜேஸ்வரி புத்தக நிலையம்.

13. வேங்கடசாமி நாட்டார், ந. மு., (உ. ஆ). (1966). சிலப்பதிகார மூலம். சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

14. ... (உ. ஆ). (2012). நல்வழி (மூலமும் உரையும்). சென்னை: சாரதா பதிப்பகம்.

15. வேங்கடசாமி நாட்டார், ந. மு., துரைசாமி பிள்ளை, சு., (உ. ஆ). (1955). மணிமேகலை. சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

16. ஜெகத்ரட்சகன். (1993). ஸ்ரீ நாலாயிர திவ்யப பிரபந்தம் நயவுரை. சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

Pin It