முன்னுரை

பண்பட்ட கால சூழலில் மக்களின் மகிழ்விற்காகவும் பண்பாட்டு விழுமியமாகவும் விளங்கியவை கலைகளாகும். கலைகளைத் தனது தொழிலாகக் கொண்டு நிகழ்த்தி வரும் ஆளுமையாளர்களாக இருப்பவர்கள் கலைஞர்கள். கலைஞர்களின் வாழ்வியல் பண்பாட்டின் உச்சமாக விளங்கிய காலம் சங்க காலம். தனித்தனிப் பாடல்களாக பாடப்பட்டவை பத்துப்பாட்டு எனும் தொகுதி உள்ளடங்கும் இதில் ஆற்றுப்படை இலக்கியங்களாக சுட்டப்படுபவை ஐந்து ஆற்றுப்படை நூல்களிலேயே அடி வரையறைகளால் பெரிய நூலான கூத்தராற்றுப்படை மன்னனிடம் இருந்து பரிசில் பெற்ற கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. தொல்காப்பியம் ஆற்றுப்படைக்கான இலக்கணம் கூறும் பொழுது கூத்தர் என்னும் மரபு வழிக்கலைஞரில் இருந்து தொடங்குகிறார். தொல்காப்பியர் சுட்டும் ஆற்றுப்படை இலக்கணங்களுக்கு உட்பட்டு பெருங்கௌசிகனாரால் பாடப்பட்ட கூத்தராற்றுப்படையில் குறிப்பிடும் நிகழ்த்து கலைஞர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் திறம்பட விளக்குவது இக்கட்டுரையின் முதன்மை நோக்காகும்.

கூத்தராற்றுப்படையும் கலைஞர்களும்

கூத்தராற்றுப்படை கூத்தர் பொருநர் பாணர் விறலியர் ஆகிய கலைஞர்களின் வகைகளை பட்டியலிட்டு குறிப்பிடுகின்றது. கூத்தரின் வாழ்வியல் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கின்றன. கூத்தர்கள் கலைகளையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் தங்களது அன்றாட வாழ்வியலின் பணியாகவே மேற்கொண்டுள்ளனர். கூத்தர்கள் கூத்து நிகழ்த்துபவர்களாகவும் கூத்தினை மன்னனிடம் நிகழ்த்தி காட்டி பரிசு பெறுபவர்களாகவும் வரையப்பட்டுள்ளனர். சங்க இலக்கிய செவ்வியல் மரபில் பண்களுக்கு என்றே தனி இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. கூத்தர்கள் நாடகம் நடிப்பவர்களாகவும் பாணர்கள் யாழ் மீட்டிப் பாடுபவர்களாகவும் விறலியர்கள் ஆடிப்பாடி மகிழ்விப்பவர்களாகவும் காண்பிக்கப்பட்டிருக்கிறார்கள். நிகழ்த்துக் கலைஞர்களின் பண்பாட்டு ஆவணப் பதிவாக மலைபடுகடாம் விளங்குகின்றது. கூத்தன் தான் கூற வரும் கருத்தினை முன்னமே திறம்படத் தொகுத்து விளக்குவதை.,

ஆற்றின் அளவும் அசையுணர் புலமும்

வீட்டு வளன்சுரக்கும் அவன் நாடுபடுவல்வல்சியும்

மலையும் சோலையும்மாப் புகழ் காணமும்

தொலையா நல்லிசை உலகம் உடு நிற்ப...... (மலைபடு :)

என்ற பாடல் அடிகள் எடுத்துரைப்பதைக் காணலாம். “கூத்தர் என்பவர் தனிக்கூத்திலும் கதை தழுவி வரும் கூத்திலும் வல்லவர்” என்கிறார் மா.ராசமாணிக்கனார். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பக் : 45) அவரே, “பொருநர் என்பவர் ஏர்க்களம், போர்க்களம் சென்று பாடும் கூத்தர்” எனவும் கூறுகின்றார். (மேலது, பக் : 45)

கூத்தரை மலைபடுகடாம் கொடிச்சியர், கோடியர் எனும் சொல் கொண்டு வழங்குகின்றது.

விறலியரின் குரல் திறத்தை,

“இரும்புது கஞலிய இன்குரல் விறலியர்” (மலைபடு : 358 அடி)

என்கிறது மலைபடுகடாம். தொல்காப்பியம் ஆற்றுப்படைக்கான இலக்கணத்தைக் கூறுகின்றது. அவை.,

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சிஉறழத் தோன்றி

பெற்ற பெருவளம் பெறார்க் அறிகுரீஇ

சென்ற பயனெதிர் சொன்ன பக்கமும்” (தொல்.புறத் : 36)

கூத்தராற்றுப்படையில் குறிப்பிடப்படும் கூத்தரும் விறலியும் முழவு, பெருவங்கியம், யாழ் போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு அரசனை வாழ்த்தி போற்றும் மரபினராக இருந்துள்ளனர் என்பதை.,

“நெடுங்கடைத் துவன்றி முன்றிலை அணுகி

முரசு இருப்பவும் தூம்பு இமிரவும்

விறலியர் யாழின் நரம்போடு புணர்ந்து” (மலைபடு : அடிகள்)

எனும் பாடல் அடிகள் உணர்த்துகின்றன. கூத்தராற்றுப்படை நிகழ்த்து கலைஞர்களின் வாழ்வியலை படம்பிடிப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் பண்பாட்டினையும் கலை மரபுப் பதிவுகளையும் ஆவணப்படுத்தி தன்னுள் பதிவுசெய்துள்ள கலைக்களஞ்சியமாகவும் விளங்குவதைக் காணலாம்.

கூத்தராற்றுப்படை குறிப்பிடும் இசைக்கருவிகளும் இசைக்கும் கலைஞர்களும்

கூத்தராற்றுப்படை மக்களின் வாழ்வியல் குறித்துப் கூறும்பொழுது பலவகைப்பட்ட ஓசையைப் பற்றியும் கூறுகின்றது. அதிலும் குறிப்பாக கொடிச்சியர்(கூத்தர்) பாடல் பாடி புலியால் ஏற்பட்ட காயத்தை ஆற்றும் பண்பாட்டின் விழுமியத்தையும் குறிப்பிட்டுள்ளது. மலைபடுகடாம் கூத்தரை கோடியர் என்ற பெயரால் வழங்குகின்றது. இசைக்கருவிகளை இயங்கள் என்னும் சொல்லைக் கொண்டு பதிவுசெய்கின்றார் டாக்டர் மா.ரா (பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பக் : 529)

பெரிய வகையான இசைக்கருவிகளை நெடும்பல்லியங்கள் என்றும், சிறிய வகையான இசைக்கருவிகளை குறும்பல்லியங்கள் என்றும் அழைப்பர். (மேலது, பக் : 529) ஆயகலைகள் அறுபத்து நான்கில் இசைக்கருவிகள் மூன்றாவதாக உள்ளது. சமணர் நூல்களில் ஆடவர் கலைகள் எழுபத்திரண்டு என்றும் பெண்களுக்கு உரிய கலைகள் அறுபத்து நான்கு என்றும் கூறப்பட்டுள்ளன. (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, பக் : 492)

நன்னன் சேய் நன்னனை கூத்தர்கள் காணச் செல்லும்போது அவர்கள் இசைக்கருவிகளை மூட்டை கட்டி எடுத்துச் சென்றனர் என்றும் அக்கருவிகளை நான்கு வகையாக வகைப்படுத்தி உரையாசிரியர்கள் உரைகண்டுள்ளனர் எனபது தெளிவு. அவை., தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி.

1. கூத்தராற்றுப்படை குறிப்பிடும் தோற்கருவிகள்

தோற்கருவிகள் என்பவை ஆவின்,மறி, கலைமான் ஆகிய விலங்குகளின் தோலால் செய்யப்படும் இசைக்கருவிகளாகும். நன்கு இறுகி வார்பிடிக்கப்பட்ட மத்தளம் எல்லா கருவிகளுக்கும் அடிப்படையானது. சிறுபறை (ஆகுளி) சல்லிகை, கரடிகை (தட்டைப்பறை) மாக்கினை, ஒரு கண் மாக்கினை என்னும் பறை, பதலை, எல்லரி, முழவு, உடுக்கை, பம்மை (பம்பை) போன்ற கருவிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இவ்விசைக்கருவிகள் பற்றி.,

          “விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்

          திண்வார் விசித்த முழவோ டாகுளி

          நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்”  (மலைபடு, 2 - 4 அடிகள்)

எனும் பாடலடிகள் கூறுகின்றன. மத்தளம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதி கண், மறுபகுதி தொப்பை(வயிறு). சமகாலத்தில் தெருக்கூத்துக்குப் பயன்படும் முக்கியமான இசையாக்கருவியாகவும் மத்தளம் (மிருதங்கம்) உள்ளது.

2. கூத்தராற்றுப்படை குறிப்பிடும் துளைக்கருவிகள்

துளைக்கருவிகள் என்பவை, காற்றின் இயக்கத்தால் ஒலி தரும் கருவிகள். காற்றினை அடிப்படையாகக் கொண்டது. இவ்இசைக்கருவிகள் பண்ணுக்குப் பயன்படும் பண்கருவிகளாகும். பண்கள் திணையை மையமிட்டதாகும். திணைசார் மக்களின் பயன்பாட்டிற்கு உரியது. துளைக்கருவிகள் பற்றிய நுட்பமான விடயங்களை இசைத்தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வகைப்படுத்தினாலும் மலைபடுகடாம் பல்வேறு கருவி வகைகளை குறிப்பிடுகின்றன.

குழல், வங்கியம், தூம்பு, நெடுந்தூம்பு, குறுந்தூம்பு, நெடுவங்கியம் (யானையின் துதிக்கையினை ஒத்தது), ஊது கொம்பு (மாட்டின் கொம்பினை அடிப்படையாகக் கொண்டது) ஆகிய இசைக்கருவிகளின் வகைகள் பற்றிய பதிவுகள் உள்ளன.

“கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி

இளிப்பயிர் இமிருங் குறும்பரந் தூம்பொடு

விளிப்பது......”                                                      (மலைபடு, 6 – 8 அடிகள்)

3. கூத்தராற்றுப்படை குறிப்பிடும் நரம்புக் கருவிகள்

நரம்பினைக் கொண்டது நரம்புக்கருவிகளாகும். நரம்புக் கருவிகளை இந்நூல் குறிக்குமிடத்து யாழ் எனும் ஒரு கருவியை மட்டும் பதிவு செய்கின்றது. யாழின் இயல்புகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. பெருங்கௌசிகனார் இசைத்தலை தொடுதல் என்னும் சொல்லைக் கொண்டு கையாண்டுள்ளார். யாழ் நான்கு வகைகளை உடையது. அவை பேரியாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், மகரயாழ். இதில் பேரியாழ், சீறியாழை மட்டும் மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. யாழ் பாணர்களின் வாசிப்புக் கருவியாக உள்ளது. இசையையும் கூத்தையும் வளர்த்துப் போற்றிய குடியினர் பாணர் என்கிறார் முனைவர் நர்மதா. (ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும், பக் : 24) யாழ் பண்கருவியாகும். யாழை வருணிக்கும் இந்நூல் மற்ற இசைக்கருவிகளைக் காட்டிலும் இக்கருவிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. யாழை பொன்நிறம் பூட்டப்பட்ட தோலைக் கொண்டு போர்த்தியுள்ள நிலையைக் காணமுடிகின்றது. யாழின் தன்மைக்கேற்ப நல்யாழ் என்னும் சொற்றொடரை பல இடங்களில் ஆற்றுப்படை குறிப்பிடுகின்றன. அவை.,

          “மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்

          நரம்புமீ திறவா”..... (மலைபடு, 534 – 535 அடிகள்)

என்றும்.,

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்

வணர்ந்து ஏந்து மருப்பின் – வள் உயிர்ப் பேரியாழ்.... (மலைபடு, 36 – 37 அடிகள்)

என்றும் பதிவுகள் உள்ளன.

4. கூத்தராற்றுப்படை குறிப்பிடும் கஞ்சக் கருவிகள்

கஞ்சக் கருவிகள் என்பவை பித்தளை, உலோகங்கங்களால் ஆக்கப்படுவது. பித்தளையை (கஞ்சம் – வெண்கலம்) தகடாக வடித்து உருவாக்கப்படுவது இக்கருவி. இதனை தாளம் என்பர். கூத்துக் கலைஞருக்கு மத்தளமும் தாளமும் இருகண்களாகும். தாளத்தை மலைபடுகடாம் பாண்டில் என்று குறித்துள்ளது. இதனை உலோகத்தாளம் என்பார் நச்சினார்க்கினியர். (மலைபடு, பக் : 59) இதனை.,

          நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்” (மலைபடு, 4 அடி)

என்கின்றது.

முடிவுரை

கலைஞர்களுக்குப் பண்பாடும், கலையியலும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் தலையாய தொழிலாக விளங்கின. கூத்தறாற்றுப்படையே அதற்கு சான்றாதாரம். தமிழ்ப் பண்பாட்டுப் பெட்டகமான பத்துப்பாட்டில் கூத்தறாற்றுப்படை கூறும் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் தனித்துவ செவ்வியல் தன்மை பெற்றிருப்பினும், இசையை மருந்தாகக் கொண்டு காயம் ஆற்றுதல் (இன்றைய பாடம் போடும் முறை), பாட்டுப் பாண்பாடு, இசைக்கருவிகளின் அளவு, செய்முறைத்தொழில் நுட்பம், பண்களை கையாளும் திறம் ஆகியவற்றை நோக்குங்கால் சங்ககால கூத்தராற்றுப்படை குறிப்பிடும் கலைஞர்களின் நீட்சியே சமகாலத் தெருக்கூத்துக் கலையின் தொடர்ச்சியாக உள்ளது என்பதை இவ்ஆய்வுக் கட்டுரை தீர்க்கமாய்க் கூறுகின்றது.

துணைநூற்பட்டியல்

  1. சங்க இலக்கியம் மலைபடுகடாம் (பத்துப்பாட்டு – 2), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை.
  2. ஆடற்கலையும் தமிழிசை மரபுகளும், தொ.ஆ சிற்பி பாலசுப்பிரமணியம், முதல் பதிப்பு : 2021, சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை.
  3. தொல்காப்பியம் தெளிவுரை, உ.ஆ ச.வே.சுப்பிரமணியன், 15 ம் பதிப்பு : 2019, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  4. சங்க இலக்கியம் (பாட்டும், தொகையும்), எஸ்.வையாபுரிப்பிள்ளை, முதல் பதிப்பு : 2012, முல்லை நிலையம், மதுரை
  5. பத்துப்பாட்டு ஆராய்ச்சி, டாக்டர் மா.இராசமாணிக்கனார், இரண்டாம் பதிப்பு : 2019, சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை
  6. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, தொ.ஆ பேரா.சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, பதிப்பு : 2022, சென்னை
  7. மலைபடு கடாம், உ.ஆ ப.சரவணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், முதல் பதிப்பு : 2022, சென்னை.

- ச.வாசுதேவன், முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010

Pin It