tholpaavai koothuகலைமாமணி பரமசிவராவின் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிகளை பல தடவைப் பார்த்திருந்தாலும் முறையாகப் பதிவு செய்தது 90களின் ஆரம்பத்தில்தான். “உங்கள் ராமாயணக் கூத்து முழுவதையும் பதிவு செய்யப் போகிறேன்” என்று பரமசிவராவிடம் சொன்னேன். அவர் இணங்கினார். கூத்து நடத்துவதற்கு நாகர்கோவில் தட்டான்விளை கிராமத்தை அவர்தான் தேர்வு செய்தார்.

“தட்டான்விளையில் தனிப்பட்ட ஒருவரின் வீட்டு மைதானத்தில் கூத்து நடத்தப்போகிறேன்; இடம், மின்சாரம் இலவசம்; டிக்கட் வசூலிக்கலாம்; வேறு தொந்தரவு இருக்காது; கட்டுப்பாடுள்ள ஊர்” என்றார் பரமசிவராவ். என் பங்கிற்கு ஒரு நாளைக்கு கொஞ்சம் பணம் தருவதாகவும் சொன்னேன். அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி; எனக்கும் வசதி.

பத்து நாட்கள் இரவு 10 முதல் 12 வரை ராமாயணக்கதை முழுதும் நல்லதங்காள் கதையும் நடத்த வேண்டும். சுப்பையாராவ் மிருதங்கம்; அவருக்குத் தனிச் சம்பளம். பொதுவாக இராமாயணம் பட்டாபிஷேகம் முடிந்ததும் தொடர்ந்து அரிச்சந்திரன் கதை, மச்சவல்லபன் போர், மயில்ராவணன் கதை, லவகுசா கதை போன்ற கதைகளையும் நடத்துவது வழக்கம். ஆனால் தட்டான்விளையில் இந்தக் கதைகளை நடத்த வேண்டாம் என பரமசிவராவே சொல்லிவிட்டார்.

நான் பரமசிவராவ் கூத்து நடத்திய வேறு இடங்களுக்கும் சென்றேன். ராமாயணம் தவிர்த்த பிற கதைகளைப் பதிவு செய்தேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞானசவுந்தரி கதையும், மதுரை பகுதியில் அல்லி கதையும், கோவில்பட்டி பகுதியில் கட்டபொம்மன் கதையும் மிகச் சிலர் நடத்தினார்கள். பரமசிவராவின் அண்ணன் ராமச்சந்திரராவ் திருநெல்வேலி மாவட்டம் மாவடியில் அல்லி கதை நடத்திய போது பதிவு செய்தேன்.

தட்டான்விளையில் பரமசிவராவின் இராமாயணக் கூத்தை 21 காசட்டுகளில் பதிவு செய்தேன். பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு இடங்களில் மற்ற கதைகளை எல்லாம் பதிவு செய்தேன். டிஜிட்டல் தொழில்நுட்பம் வராத காலம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காசட், டேப்ரிகார்டர். தனி மைக் சகிதம்தாள் கூத்து பார்க்கப் போனேன், இன்று கற்பனை செய்ய முடியவில்லை.

இராமாயணக் கூத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு புத்தகமாக்கி விட்டேன் (காவ்யா பதிப்பகம் 203). சுப்பையாராவுடன் விஷயங்களைப் பதிவு செய்த காசட் முக்கியமான பொக்கிஷமாகத் தோன்றுகிறது. அவர் தோல்பாவைக்கூத்துக்குரிய இராமாயணம் காலந்தோறும் மாறிய செய்தியையும் பார்வையாளர்களின் ரசனை மாறிய செய்தியையும் தொடர்ச்சி இல்லாமல் துண்டு துண்டாகச் சொன்னார்.

இராமாயணம் காலந்தோறும் மாற்றம் அடைந்திருக்கிறது. இந்திய மொழிகளில் உள்ள ராமாயணம் எல்லாம் ஒன்றல்ல. இப்படியான மாற்றத்திற்குத் தனியான காரணம் உண்டு. தோல்பாவைக் கூத்திலும் ராமாயண நிகழ்ச்சிகளைச் சொல்லும் முறையில் பாடல்களில் உரையாடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சுப்பையாராவின் கொள்ளுத் தாத்தா சாமிராவ் காலத்தில் இலக்கிய ரசனையுடன் கவித்துவ உரையாடலுடன் நடந்து தோல்பாவைக் கூத்து 90களில் வட்டாரக் கதையாக - தமாஷ் நிகழ்ச்சியின் பின்னணியில் நடக்க ஆரம்பித்ததள் காரணம் என்ன என்பதை சுப்பையாராவைப் பதிவு செய்தபோது அறிந்து கொண்டேன்.

சுப்பையாராவ், என்னிடம் சொன்ன வயதை வைத்துத்தான் அவர் பிறந்த வருஷத்தைக் கணக்கிட்டேன். இவருக்கு மட்டுமல்ல, தோல்பாவைக் கூத்து நடத்திய வணிகர்சாதிக்காரர்கள் பலருக்கும் பிறந்த தேதி தெரியாது, அவர்கள் சொன்ன வயது உத்தேசம்தான். ஒருவகையில் முற்காலப் பாண்டியர், முற்காலப் பல்லவர் காலங்களைக் கணித்தது போல்தான்.

இந்த விஷயத்தைச் சொல்லும் போது வள்ளியூரில் நான் கேட்ட ஒரு செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இதைத் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தோல்பாவைக்கூத்து பார்க்கப்போன போது கேட்டேன். இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வள்ளியூரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்களாம். அப்போது பல பேருக்கு பிறந்த வருஷம் தெரியவில்லை, சொல்லவும் முடியவில்லையாம்.

இதனால் மாவட்ட நிர்வாகம் ஒரு வழியைக் கூறியது. இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்லி அதற்கு முன் எத்தனை ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் அல்லது பின் பிறந்தவர் என்று சொல்லலாம் என்றார்களாம். அவர்கள் குறித்த நிகழ்ச்சி ஒன்று செம்புலிங்கம் என்னும் புகழ்பெற்ற கொள்ளைக்காரன் சுட்டுக் கொல்லப்பட்ட வருஷம் (1922). இன்னொன்று மகாத்மா காந்தி வள்ளியூருக்கு வந்து கூட்டத்தில் பேசிய வருஷம் (1924). இந்த இரண்டில் பெருமளவு மக்கள் செம்புலிங்கத்தைச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியைத்தான் அறிந்திருந்தார்கள்.

சுப்பையாராவுக்கு திருநெல்வேலி தென்மண்டல கலை பண்பாட்டு மையம் கொடுத்திருந்த நலவாரிய அட்டையில் அவர் பிறந்த ஆண்டு 1908 என்று இருந்தது. 1999ல் அவர் இறந்தது எனக்குத் தெரியும்; அவரது இறப்புச் சடங்கிற்கு நான் போயிருந்தேன்.

சுப்பையாராவ் அவரது தம்பிகள் பரமசிவராவ், கணபதிராவ், ராமச்சந்திரராவ் ஆகியோருடன் பேசியபோதெல்லாம் அவர்களின் முன்னோர்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்த விஷயங்களைக் கதையாய் சொல்லி இருக்கிறார்கள்.

சுப்பையாராவ் தனக்கு முந்திய நான்கு தலைமுறைகளைப் பற்றிய செய்திகளை நினைவு வைத்திருந்தார். கிருஷ்ணராவ் (1800 -1882) சாமிராவ் (1830 -1900) கிருஷ்ணாராவ் (1860 -1940) கோபாலராவ் (1882-1976) ஆகிய இவர்கள் வாழ்ந்த காலம் சுப்பையாராவ் உத்தேசமாகச் சொன்னதுதான்.

கோபாலராவின் மகனான சுப்பையாராவ் (1908 - 1999) தன் தாத்தா கிருஷ்ணராவிடம் தங்களின் குடிப்பெயர்ச்சியை விரிவாகக் கேட்டிருக்கிறார். கணிகர்கள் முதலில் தஞ்சையிலிருந்து மதுரைக்குத்தான் குடிபெயர்ந்தனர். பின் திருவிதாங்கூர் வந்தனர் என்றார்.

சுப்பையாராவிற்கு முறைப்படி இரண்டு மனைவிகள். அவரின் 50 வயதுக்குள் இரண்டு பேரும் இறந்து விட்டார்கள். இவர்களைத் தவிர உப்பிலியக் குறத்தி சாதியில் ஒருத்தி, கம்பளத்தார் ஒருத்தி, புல்லுக்கட்டி நாயக்கரில் ஒருத்தி என வேறு சாதிப் பெண்கள் நாலைந்து இருக்கலாம். ஒருமுறை என்னிடம் இதெல்லாம் கணக்கு வைக்க முடியுமா? என்றார்.

சுப்பையாராவ் நாடோடியாய் அலைந்தவர். பொறுப்பில்லாமல் திரிந்தவர். மதுரை ஸ்பெஷல் நாடகம், சாக்கஸ் கம்பெனி, கரகாட்டக்குழு என அவர் பல இடங்களில் இருந்திருக்கிறார்.

கணிகரின் பூர்வீக வரலாற்றை அறிவதற்குத் தஞ்சையில் மராட்டியர்கள் வந்த வரலாற்றை அறிந்து கொள்ளுவது அவசியம். தஞ்சை மராட்டிய ஆட்சியை நிறுவியதில் எகோஜிக்கு முக்கிய பங்கு உண்டு. வெங்காஜி என்னும் பெயருடைய இவர் சத்ரபதி சிவாஜியின் சித்தியின் மகன். எகோஜி 1676ல் தஞ்சை மராட்டிய ஆட்சியை ஆரம்பித்தார். இதிலிருந்து 1856 வரை 180 வருஷங்கள் 8 அரசர்கள் ஆண்டனர். கடைசி அரசன் சிவாஜிக்கு வாரிசு இல்லை என்பதால் கிழக்கிந்தியக் கம்பெனி தஞ்சையை எடுத்துக் கொண்டது.

தஞ்சையில் மராட்டிய அரசு செயல்பட்ட காலத்தில் மகாராட்டிரத்திலிருந்து பிராமணர் உட்பட பல்வேறு சாதியினர் தஞ்சையில் குடியேறினர். இவர்களில் நாட்டார் கலைஞர்களும் உண்டு. இவர்களில் கணிகர் சாதியினரும் அடங்குவர். கணிகர்கள் ஆரம்பத்தில் தோல்பாவைக்கூத்துக் கலையை நடத்தினார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

‘சரஸ்வதி மகால்’ என்னும் நூல் நிலையத்தை உருவாக்கிய இரண்டாம் சரபோஜி (1798 - 1833)க்குப் பின்னர் மராட்டிய அரசு சீரழிய ஆரம்பித்து விட்டது. இக்காலத்தில் அரசரை நம்பி வாழ்ந்த கலைஞர்களின் நிலை மோசமானது. இவர்களில் சிலர் தஞ்சையை விட்டு குடிபெயர்ந்தனர்.

இக்காலத்தில் திருவிதாங்கூரில் சுவாதித்திருநாள் அரசராய் இருந்தார். (1829 - 1847) இவர் நாட்டின் அரசராகவும் இசை சக்கரவர்த்தியாகவும் இருந்தவர். இவர் கலைஞர்கள் பலரை ஆதரித்தார். அவர்களுக்காக பணத்தை வாரி இறைத்தார் என்ற குற்றச்சாட்டு கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளுக்கு உண்டு.

சுவாதித் திருநாள் காலத்தில் தஞ்சையிலிருந்து வடிவேலு, பொன்னையா, சின்னையா, சிவானந்தன் ஆகிய நான்கு சகோதரர்களும் திருவிதாங்கூர் வந்தனர், இவர்கள் தஞ்சையில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இக்காலத்தில் தான் கன்னையா பாகவதரும் இசை பரதநாட்டியக் கலைஞர்களும் திருவிதாங்கூர் வந்தது. இது 1830 - 40க்களில் நடந்திருக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில்தான் கணிகர்களும் மதுரைவழி திருவிதாங்கூர் வந்தனர். மராட்டியைத் தாய் மொழியாகக் கொண்ட கணிகரின் உட்பிரிவினராகிய மண்டிகர் தோல்பாவைக் கூத்து உட்பட பல்வேறு கலைகளை நிகழ்த்தி இருக்கின்றனர். இவர்களின் மராட்டியில் கொங்கணிக் கலப்பு அதிகம் என்கிறார் எட்கார் தர்ஸ்டன்.

கணிகர்கள் தஞ்சையிலிருந்து குடிபெயருவதற்குச் சில காரணங்கள் இருந்தன. முக்கியமாக அரசியல் குழப்பம், கலை நிகழ்த்த ஆதரவின்மை, இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மானிய நிலங்களை அரசும், தனிப்பட்ட சிலரும் பிடுங்கிக் கொண்டமை ஆகியன. இசுலாமியர்களாலும் இவர்களுக்கு பாதிப்பு இருந்தது.

கணிகரில் ஒரு பிரிவினர் மதுரைக்கும் இன்னொரு பிரிவினர் திருவிதாங்கூருக்கும் வந்தனர். கன்னியாகுமரிக்கு வந்த முதல் கணிகர் கிருஷ்ணராவ் என்று அடிக்கடி சொல்லுவார் சுப்பையாராவ். கணிகர்கள் கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் என்ற சிறு கிராமத்தில் திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் வீடுகட்டிக் கொண்டார்களாம். வீடு என்பது ஓலைக்குடிசைதான்.

ஆரம்ப காலத்தில் தென்மாவட்டங்களில் குடியேறிய கணிகர்கள் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரா பவுர்ணமியில் ஒன்றாகக் கூடி பல விஷயங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கும் தோல்பாவைக்கூத்து கலையின் மையப் பொருளான ராமாயணம் வான்மீகி கம்பனிடமிருந்து வேறுபட்டது. நான் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி முழுவதையும் பதிவு செய்து புத்தகமாக்கும் போது அந்த ராமாயணக்கதையில் நுட்பமான வேறுபாடுகள் இருந்ததைக் கவனித்தேன்.

தோல்பாவைக்கூத்து ராமாயணம் பற்றி சுப்பையாராவிடம் பலமுறை விவாதித்திருக்கிறேன். அவரும், பரமசிவராவும் தங்களின் ராமாயணம் தஞ்சையில் வழங்கியது என்று அடிக்கடி சொன்னார்கள். ஆனால் அந்த ராமாயணம் ஆந்திர மக்களின் செல்வாக்குடையது என்பதை ஆதாரபூர்வமாக அறிந்து கொண்டேன். பெரும்பாலும் தஞ்சையில் இருந்த ஆந்திர மக்களின் செல்வாக்கால் நுழைந்த ராமாயணம் தமிழக நாட்டார் கலைகளில் நுட்பமாய் கலந்து கிடக்கிறது.

தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியில் ராமாயணத்தை பத்து நாட்களாக நடத்துகின்றனர். பால காண்டம், மிதிலையில் வில் ஒடித்தல், பரதன் பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பனகை கவுரவபங்கம், சீதையை சிறை எடுத்தல், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், இராவணன் முதல்நாள் போர், கும்பகர்ணன் போர், இராவணன் வதையும் பட்டாபிஷேகமும் என்றும் பத்து பகுதிகளும் உத்தேசமாக 46 காட்சிகள் கொண்டவை.

தோல்பாவைக்கூத்து இராமாயண கதையில் பல கிளைக்கதைகள் வருகின்றன. இவை வான்மீகியின் மூலத்திலிருந்து பெருமளவில் வேறுபட்டவை. அந்தக் கிளைக்கதைகள் குருபத்திரன் கதை அகலிகை கதை, பரசுராமன் கதை, விராடன் கதை, ஜடாயுகதை, சூர்ப்பனகையின் வரலாறு, ராவணன் சனீஸ்வரன் கதை, கவந்தன் கதை, சபரி கதை, வாலி சுக்கிரீவன் பூர்வஜென்மக்கதை, அனுமன் கதை, அனுமன் ஆணவம் தீர்¢த்த கதை, லட்சுமணன் சந்தேகம் தீர்த்த கதை என இப்படியாக 13க்கு மேற்பட்ட கதைகள் உள்ளன.

இந்தக் கதைகள் எல்லாமே மூலத்திலிருந்து மாறுபட்டவை. சில வாய்மொழி வடிவில் இப்போதும் இருப்பவை. சாதாரண நம்பிக்கைகள், வழக்காறுகள் தொடர்பானவை. இராமன் காகாசுரனைக் கொல்ல அனுப்பிய புல் ஆயுதம் தொடர்பான ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழி தொடர்பான கதை ஒரு உதாரணம்.

தோல்பாவைக் கூத்தின் ஆரம்பகாலப் பார்வையாளர்கள் ராமாயணக்கதையைக் கேட்பதற்கென்றே வந்தார்கள். இவர்களே தங்கள் ஊருக்குக் கலைஞர்களை அழைத்தார்கள். அவர்களுக்கு இடம், உணவு என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். இதனால் இக்காலத்தில் நிகழ்ச்சி விரிவாகவும், மரபுவழிப் பாடல்களுடனும் நடந்தது. அப்போது அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை கூட பாடப்பட்டது.

பொதுவாக இந்திய நாட்டார் மரபில் ராமாயணத்தைப் பாடு பொருளாகக் கொண்டு நடந்த வடிவங்கள் எல்லாமே வட்டார ரீதியான ராமாயணக்கதை நிகழ்வுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத் தோல்பாவைக் கூத்தும் இதற்கு விதிவிலக்கல்ல.

சுப்பையாராவின் தனிப் பேச்சில் இதற்கு நிறைய உதாரணம் சொன்னார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் அனுமன் மருந்து மலையைத் தூக்கிய நிகழ்ச்சியுடன், இந்த மாவட்ட மருந்துவாழ் மலையை இணைத்துப் பேசுவது சாதாரணம். திருநெல்வேலி மாவட்ட நிகழ்ச்சிகளில் அகத்தியரைப் பற்றி வரும் நிகழ்ச்சியில் தாமிரபரணியின் தோற்றம் குறித்த கதை வரும். இப்படிப் பல.

பொதுவாக ஒரு வீரன் அல்லது கதாநாயகனின் உயிர் அவனது உடலின் எதோ ஒரு பாகத்திலோ வேறு ஒரு இடத்திலோ இருக்கும். அந்த இடத்தை கண்டு பிடித்து அழித்தால் வீரன் இறந்து விடுவான். இது கதைப் பாடல்களிலும் வாய்மொழிக் கதைகளிலும் புராணங்களிலும் பொதுவாகக் கூறப்படும் செய்தி (எ.கா. கான்சாகிப் கதை, மயில் ராவணன் கதை).

இதே விஷயம் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியிலும் வருகிறது. ஜடாயு தன்னை எதிர்த்துப் போரிடும் ராவணனிடம் தன் உயிர் சிறகில் இருப்பதாகவும், அட்சயகுமாரன் அனுமனிடம் தன் உயிர் இலங்கைக் கோட்டை வடக்கு வாசல் கல்லில் இருப்பதாகவும், ராவணனின் உயிர் அவனது உடலின் உள்ளே அமிர்த கலசத்தில் இருப்பதாக விபீஷணன் கூறுவதான நிகழ்ச்சிகள் தோல்பாவைக் கூத்தில் நாட்டார் கதைப் போக்கிலே கூறப்படுகின்றன.

கூனி மந்தரை யார் என்பதிலும் இராமனை அவள் ஏன் வெறுத்தாள் என்பதிலும் பல்வேறு வடிவங்கள் இந்திய ராமாயணங்களில் உள்ளன. மந்தரை ஓர் அனாதை என வான்மீகி கூறுவார். பத்மபுராணம் அவள் அம்சமான பெண் எனக் கூறும். மகாபலியின் தந்தை விரோசனின் மகள் என அத்யாத்ம ராமாயணம் கூறும். மாயையின் அவதாரம் மந்தரை என தொரவெ ராமாயணம் கூறும்.

கூனி மந்தரை இராமனை வெறுத்ததற்கும் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றன ராமாயணங்கள். களிமண் உருண்டையை வில்லில் வைத்துக் கூனியின் மேல் இராமன் அடித்தான் என்பது கம்பராமாயணம். மந்தரை பரதனின் வைப்பாட்டியாக விரும்பினாள் என்பது அசாமி ராமாயணம். ராமனின் திருமணத்தின் போது கூனி பரிகாசமாகப் பேசினாள் அதனால் இராமன் கூனியின் காலை ஒடித்தான் என்பது ஒரிய ராமாயணம் இப்படி எத்தனையோ!

தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியில் கூனி மந்தரை இராமனை வெறுத்ததற்கு பல்வேறு காரணங்களை வட்டார ரீதியாகக் கூறுகின்றனர். முக்கியமாக நான்கு வடிவங்களை நானே சேகரித்தேன்.

கோபாலராவ் நடத்திய கூத்தில் கூனி விதவையாக வருகிறாள். இவள் அபசகுனம் பிடித்தவள் என்னும் பெயரை வாங்கியவள்; ஒருமுறை இராமனும் சீதையும் வெளியே செல்ல ஒப்பனைக் கோலத்துடன் வந்த போது கூனி எதிரே வந்தாள். சீதைக்கு அது பிடிக்கவில்லை. கூனியை அவமானப்படுத்தி அப்புறம் போகச் சொன்னாள். அதனால் இராமனைப் பழிவாங்கக் கருதிக்கொண்டாளாம் மந்தரை.

கணபதிராவ் கோவில்பட்டியில் நடத்திய கூத்தைப் பார்த்தேன். அதில் கூனி இராமனை வெறுத்ததற்கு கிண்டலான ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். இராமன் வில்லை வளைத்து அம்பு நுனியில் களிமண்ணை வைத்து கூனியின் முதுகில் அடிப்பான், அடுத்த நிமிடம் லட்சுமணன் தன் வில் அம்பால் எடுத்து விடுவான். இதைக் கூனியே சொல்லுகிறாள்.

கூனியின் முதுகில் உருண்டையான சதைப்பிண்டம் இருக்கிறது. இதைத் துணியால் மூடி இருப்பாள். இதைப் பார்த்து இராமன் பரிகசிப்பானாம். இப்படி ஒரு செய்தியை சுப்பையாராவ் சொன்னார். கூனி முதுகில் உருண்டையுடன் நடக்கும் சுவரோவியங்கள் உள்ளன. இது ஆந்திர ராமாயணச் செல்வாக்கு.

இப்படியாக உள்ள வேறுபாடு வட்டார ரீதியானது. நடைமுறை வாழ்க்கையில் பேசப்படும் வழக்காற்றுப் பேச்சும், தோல்பாவைக்கூத்தில் தொன்மமாகக் காட்டப்படுகிறது.

காகம் ஒரு பக்கம் சாய்ந்து பார்க்கும் என்பதற்கு ஏராளமான நிகழ்ச்சியை தொடர்புபடுத்தும் கதை வழக்கில் உண்டு. தோல்பாவைக்கூத்தில் இக்கதை காகாசுரன் கதையுடன் சார்த்திக் கூறப்படுகிறது. சீதையின் மார்பை காகாசுரன் (காகம்) கொத்தி துன்புறுத்திய கதை தோல்பாவைக்கூத்தில் சொல்லப்படுவதில்லை. இராமன் சீதையின் மடியில் கிடக்கும் போது ஆகாயத்தில் காகம் பறக்கிறது. அப்போது காகத்தின் நிழல் இராமனின் உடம்பில் விழுகிறது. இதைப் பார்த்த சீதை கோபப்படுகிறாள். பறவையின் நிழல் உடலில் படுவது அபசகுனம் என்கிறாள். இதனால் இராமன் காகத்திற்குத் தண்டனை கொடுக்கிறான்.

பல கிளையாறுகள் பேராறாய் மாறுவது போல பல கிளைக்கதைகள் காவியத்தில் சங்கமமாகும் என்னும் பொதுவிதி ராமாயணத்துக்கும் பொருந்தும். இங்கு கிளைக்கதைகள் என்பது காவியகர்த்தாக்களோ புராணப்படைப்பாளிகளோ மட்டும் உருவாக்கிய தல்ல. பழைய தொன்மத்திலிருந்து வாய்மொழிப் படைப்பாளி இணைத்துக் கொண்ட வட்டார ரீதியான கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சமூகத்தில் ஒரு தொன்மத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்றதில் கதாகாலட்சேபக்காரருக்கு என்ன பங்கு உண்டோ அதே பங்கு நாட்டார் கலைஞனுக்கும் உண்டு, தோல் பாவைக்கூத்து இதற்கு நல்ல உதாரணம்.

ராமாயண யுத்தம் முடிந்தது. இராமன் சீதையுடன் அயோத்திக்குப் புறப்படுகிறான். விபீஷணனின் மகள் திரிசடை இராமனின் பாதத்தில் விழுந்து வணங்குகிறாள். ராமன் நீ அடுத்த பிறவியில் அல்லியாய் மதுரையில் பிறப்பாய் என்று வரமளிக்கிறான். இந்த நிகழ்ச்சியை மதுரையில் கணபதிராவ் நடத்தியபோது பார்த்தேன். ராமன் திரிசடைக்கு வரமளிக்கும் உரையாடல் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் நிகழ்த்துவதில்லை.

திருச்செந்தூரில் ஒருமுறை மாவடி ராமச்சந்திர ராவ் நடத்திய மிதிலையில் வில்லொடித்தல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இராமன் தாடகையை வதை செய்கிறான். அவள் கந்தர்வப் பெண்ணாக மாறி இராமனின் காலில் விழுகிறாள்; வரம் கேட்கிறாள். ராமன் அடுத்தபிறவியில் வள்ளியாகப் பிறப்பாய் என்கிறான். இந்த உரையாடல் கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் நடத்தப்படுவதில்லை.

அனுமன் இலங்கையை எரித்து விட்டு ராமேஸ்வரம் வந்து இராமலிங்கரை வணங்கிவிட்டு ஜாம்பவானைப் பார்க்கிறார். அந்த முதியவர் “அனுமா நீ கையோடு கன்னியாகுமரிக்குப் போய் பகவதியைப் பார்த்துவிட்டு சுசீந்திரம் தாணுமாலயனை வணங்கிவிட்டு வா” என்று சொல்லுகிறார். அனுமன் அப்படியே செய்கிறார். சுசீந்திரம் தாணுமாலயன் "அனுமனே, நீ இங்கு வந்த அடையாளமாக உனக்கு வழிபாடு நடக்கும்” என வரமளிக்கிறார். இந்த உரையாடல் சுப்பையாராவின் கற்பனை.

இப்படியாக சுப்பையாராவ் சொன்ன ராமாயணக் கதை நிகழ்வுகளில் சிலவற்றையே நான் பதிவு செய்தேன்; முழுதும் பதிவு செய்யவில்லை; காலம் கடந்துவிட்டது. இன்றைய நிலையில் தோல்பாவைக்கூத்து நடத்தும் கலைஞர்களிடம் உரையாடுவதில் பலன் இல்லை என்பதும் தெரிகிறது.

- அ.கா.பெருமாள்

Pin It