சாதி என்பதை, அகமணமுறை என்ற இரத்த உறவு முறையையும், படிநிலையையும் அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு தொழில் குழு அல்லது ஒரு சமூகக் குழு எனலாம். அகமணமுறை என்ற இரத்த உறவு முறைதான் சாதிக்கான அடிப்படையைப் பாதுகாத்து அது தொடர்ந்து இருந்து வருவதை உறுதி செய்கிறது. சாதிகளுக்கிடையே படிநிலை உருவாக்கப்பட்டுள்ளது. இனக்குழு காலத்தில் இருந்த இரத்த உறவு முறை என்பது உயிரினும் மேலானதாக மதிக்கப்பட்டது. அகமணமுறைதான் அந்த இனக்குழுவின் இரத்த உறவையும் அதன் அடிப்படையிலான கண அமைப்பு முறையையும் பாதுகாத்து வந்தது. ஆனால் இனக்குழுக்களிடையே சமத்துவம் இருக்கும். படிநிலை இருக்காது. ஆனால் சாதிகளுக்கிடையே சமத்துவம் இருக்காது, படிநிலை இருக்கும். இனக்குழு காலத்தில் அகமணமுறையும் அதன் அடிப்படையிலான கண அமைப்பு முறையும் உலகம் முழுவதும் இருந்து வந்தது. ஆனால் இனக்குழுவின் கண அமைப்புமுறையை அதன் அகமணமுறையை அழித்து அதன் மீது கட்டப்பட்டதுதான் இந்த நாகரிக கால ஒருதார மணமும், குடும்பமும், அரசும்.

kaniyan balan book on tamil historyஆதலால் ஒருதார மணமும், குடும்பமும், அரசும் உருவானபோது இந்த அகமணமுறையும் அதன் அடிப்படையிலான கண அமைப்பும் இல்லாது போனது. பழந்தமிழகத்தில் அகமணமுறையை ஒழித்து அதன் இடத்தில் நவீன குடும்பத்தை, ஒருதார மணமுறையை கொண்டு வர உருவானதுதான் ‘உடன்போக்கு’ என்ற திருமணமுறை. அகமணமுறைக்கு எதிரான இந்த உடன்போக்குத் திருமணமுறை சங்க காலத்திற்கு முன்பிருந்து இருந்து வந்துள்ளது. நமது கணிப்புப்படி சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலம். இந்த உடன் போக்குத் திருமண முறை கி.மு. 1000 அல்லது அதற்கு முன்பிருந்து கி.பி. 250 வரை, 1000 வருடங்களுக்கு மேலாக பழந்தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.

பண்டைய தமிழகம்:

இந்திய வரலாற்றில் சிந்துவெளி நாகரிக காலத்தில் அல்லது அதற்குப்பின் தமிழகம் தான் ஒரு நாகரிகம் கொண்ட சமூகமாக இருந்து வந்தது. தமிழக வரலாறு என்பது இன்றும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அதன் தொடக்க காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில் உள்ளோம். ஆதிச்சநல்லூர் அகழாய்வு கி.மு. 1500 வாக்கில் அது ஒரு தொழில் நகராக இருந்தது என்பதை உறுதி செய்கிறது. இங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டங்களின் காலம் கி.மு. 4000 என எசு. பத்ரி நாரயணன் தெரிவிக்கிறார். இவைகளைக் கொண்டு ஆதிச்ச நல்லூர் நாகரிகத்தின் தொடக்க காலம் கி.மு. 2000 என முனைவர் இராமசாமி தெரிவிக்கிறார்(1). கி.மு. 1500 வாக்கிலேயே தமிழர்கள் குறியீடுகளை எழுத்தாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது(2). குமரி நிலப்பரப்பில் நிறைய நகரங்கள் இருந்ததாக ஆகமங்கள் கூறுகின்றன. அவை கி.மு. 3000 முதல் இருந்து வருகின்றன எனலாம். எனினும் முந்தைய தரவுகளின்படியும், இன்றைய அகழாய்வு அடிப்படையிலும் தமிழக நாகரிகத்தின் தொடக்க காலத்தை கி.மு. 1500 எனக் கொள்ள முடியும்.

சேர சோழ பாண்டிய முதுகுடிகள்:

தமிழகத்திலும் இனக்குழு காலத்தில் கண அமைப்புதான் இருந்து வந்தது. தமிழகத்திலும் ஒரு கட்டத்தில் இந்த கண அமைப்புகளைச் சேர்ந்த நான்கைந்து சகோதர குலங்கள் ஒன்று சேர்ந்து குலக்குழுக் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி சிறு மக்கள் சமூகங்கள் உருவாகின. அந்த மாதிரியான சிறு மக்கள் சமூகங்களாக முதலில் ஆனவர்கள்தான் சேர, சோழ, பாண்டியர்கள். இந்த சிறு மக்கள் சமூகங்களை முதுகுடிகள் அல்லது தொல்குடிகள் என்பர். பாண்டியச் சிறு மக்கள் சமூகம் என்கிற முதுகுடியை எடுத்துக் கொண்டால் அதன் படைத்தளபதியைத் தந்து வந்த குடும்பமே பாண்டிய அரச குடும்பமாக ஆகியது. அந்தப் பாண்டிய முதுகுடியில் இருந்த கணத்தலைவர்களின் குடும்பங்கள் அதன் வேளிர்களாக உருவாகினர். கணத்தலைவர்களாக இருந்த வேளிர்கள், பாண்டிய முதுகுடி வளர்ந்து அரசாக உருவாகியபொழுது, பல ஊர்களின் தலைவர்களாக உருவாகிப் பாண்டிய அரசின் கீழ் சிற்றரசர்களாக ஆனார்கள். ஆகவே இந்த வேளிர்கள் அனைவரும் கணத்தலைவர்களாக இருந்தவர்கள். அவ்வாறே சேர, சோழ முதுகுடியிலும் கணத்தலைவர்களாக இருந்தவர்கள் தான் அதனதன் வேளிர்கள். தமிழகச் சேர சோழ பாண்டியர்கள் தங்கள் தங்கள் வேளிர்களோடுதான் தொடக்கம் முதல் திருமண உறவு கொண்டிருந்தார்கள். நாளடைவில் இந்த வேளிர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஆனார்கள். வேளிர்கள் ஒரு குழுவாக ஆனபொழுது மூவேந்தர்கள் தங்களுக்குள்ளும், அனைத்து வேளிர்களோடும் திருமண உறவை வைத்துக் கொண்டனர்.

தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி:

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் உருவாகி தங்கள் தங்கள் அரசுகளை உறுதியாக நிலைப்படுத்திக் கொண்ட போதே தங்களுக்குள் ஒரு ஐக்கியக் கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தங்களைத்தவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆக முடியாது என்ற ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திக் கொண்டனர். ஆகவே தமிழக மூவேந்தர்களிடையே உருவாகிய ஐக்கியக்கூட்டணி என்பது கி.மு. 750 க்கு முன் கி.மு. 1000க்குள் இருக்கலாம். அதனால்தான் கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காரவேலன், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி என்பது 1300 ஆண்டுகளாக இருந்து வருவதாகத் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் தெரிவித்துள்ளான்(3). இந்த ஐக்கியக் கூட்டணியைக் கொண்டுதான் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்த மௌரியப் பேரரசின் பெரும் படையை, சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி தலைமையில் தமிழரசுகள் ஒன்று சேர்ந்து தோற்கடித்து துரத்தியடித்தனர்(4). இவன்தான் முதல் கரிகாலனின் தந்தை. இந்த ஐக்கியக் கூட்டணி கொண்டுதான் பெரும் கடற்படைகளை உருவாக்கி இந்தியாவின் கிழக்கு மேற்குக் கடற்கரைகளையும், தென்கிழக்கு ஆசியாவையும் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழரசுகள் கொண்டு வந்தன. இந்த ஐக்கியக் கூட்டணி கொண்டுதான் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து தக்காணத்தைத் தங்கள் பாதுகாப்பின் கீழ் வைத்திருந்தனர் என வரலாற்றுப்பெரும்புலவர் மாமூலனார் தனது அகம் 31ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டையத் தமிழ்ச் சமூகம்:

பழந்தமிழ்ச் சமூகம் பண்டைய காலத்திலிருந்து மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக் கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பே, தமிழ்ச் சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியைத்தோற்றுவித்துப் பலவிதங்களிலும் தன்னை வளர்த்துக் கொண்டது. அவை வளருவதற்கான சமூகச் சூழல் தமிழகத்தில் இருந்தது. கி.மு. 1000க்கு முன்பே, நிறையச் சிறு குறு நகர, நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணப் பொருட்கள், அவைகளின் திரவியங்கள் ஆகியவைகளின் உலகத்தேவையும், அவைகளால் உருவான வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றி அமைத்தது. இக்கடல் வணிகம் கி.மு. 1000க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இவை தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள், சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் நிறைய சுதந்திரமான நகர, நகர்மைய அரசுகள் இருந்தன. இவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமாக ஆளப்பட்டதோடு, ஓரளவு சனநாயக உரிமைகளையும் கொண்டிருந்ததால் இவை நாளடைவில் வளர்ச்சி பெற்ற வணிக நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும், வணிகமும் பெருகி வளர்ந்தன. இந்தநிலை கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை எவ்வித இடையூறும் இன்றி நீடித்து வளர்ந்து வந்தது.

ஆதலால் இக்காலகட்டத்தில் மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் முதலியன தொடர்ந்து இடைவிடாமல் வளர்ந்து வந்தன. இக்காலத்தின் தொடக்கத்திலேயே, அதாவது 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை, ஒரு சிறப்பு வடிவத்தைப் (தொல்கபிலரின் எண்ணியம்) பெற்றுக் கொண்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து மூவேந்தர்கள் தனித்தனி நகர, நகர்மைய அரசுகளை ஒழித்து அவைகளைத் தங்கள் ஆட்சிப்பரப்பில் இணைத்துக் கொள்ளும் பேரரசுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்நிலை கி.மு. 50 வரை தொடர்ந்து நடந்து வந்தது. அதே கால கட்டத்தில் சிறிது சிறிதாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் கிளை அரசர்களின் அரசுகளையும் பேரரசோடு இணைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வந்தது. கி.மு. 50 வாக்கில் அவை உச்ச கட்டத்தை அடைந்து குடும்ப உறுப்பினர்களின் தனித்தனி அரசுகளும் இல்லாதொழிந்தன.

இவ்விதமாகச் சிறு சிறு நகர, நகர்மைய அரசுகள், குடும்ப உறுப்பினர்களின் அரசுகள், கிளை அரசுகள், வேளிர்களின் சிற்றரசுகள், முல்லைநிலச் சீறூர், மருதநில மூதூர், குறிஞ்சிநிலக் குறுநில மன்னர்கள், பிற சிறுகுறு ஆட்சியாளர்கள் என இவைகளில் பெரும்பகுதி இல்லாதொழிக்கப்பட்டன. கொங்குப் பகுதியிலும், தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தின் வட பகுதிகளிலும் இருந்த சிறுகுறு அரசுகளின் பெரும்பகுதி கி.மு. 50 வாக்கில் இல்லாதொழிந்தன. இதன் பின்னர்தான் சங்கம் மருவிய காலம் வருகிறது. இந்தச் சிறு குறு வணிக நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணகர்த்தாக்களாக இருந்தன என்பதை மனதில் ஆழப்பதியவைத்துக் கொள்வது மிக முக்கியம். அவைகள் இல்லாதுபோனது பழந்தமிழகத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகியது.

உருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின்(V.Krapivin) அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்(5). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக் கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது அறிவியலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது. கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போதுதான் அறிவியலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது. மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு, நேபிள்சு போன்ற வணிக நகர அரசுகளில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகர அரசுகள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்க அறிவியலையும் பொருள்முதல்வாத மெய்யியலையும் நீக்கிவிட்டு அவ்விடத்தில் அறிவியலுக்கு எதிரானவைகளையும், கருத்துமுதல்வாத மெய்யியலையும் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 சனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை அங்கு உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைப்பள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத் தொடங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத் தடுத்து விடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைப் பள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. முடிய 1000 வருடங்களுக்கு மேலாக நகர, நகர்மைய அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாக அவை இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவி வந்தது. அதனால்தான் எண்ணியம் போன்ற அறிவியலை அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், வைசேடிகம் எனப்படும் சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின.

ஆகவே தமிழகத்தில் தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் அறிவியலை அடித்தளமாகக் கொண்ட, மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம். தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய அரசமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.

            “கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

      பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்”(7).   என்கிறார் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்ககாலப்புலவர் மருதன் இளநாகனார். “கயிற்றினால் பிணிக்கப்பட்ட குடத்துக்கண்ணே உள்ள ஆவண ஓலைகளை எடுத்துக்கொள்வதற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலாஞ்சினையை ஆய்வுசெய்தபின் அதனை நீக்கும் ஆவணமாக்களைபோல” என்பது இதன் பொருளாகும். இந்த ஆவணமாக்கள் என்பது அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள். ஆவண ஓலை அல்லது குழிசி ஓலை என்பது ஓட்டுச்சீட்டு. ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் எனவும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப் படுத்தப்படுகிறது.

ஆனால் இந்நிலை சங்கம் மருவிய காலத்தில் இல்லை. இந்நிலை கி.மு. 1000க்கு முன்பிருந்து, கி.மு. முதல் நூற்றாண்டுவரை இருந்த நிலை. அரசனின் அதிகாரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே எல்லையற்ற அதிகாரமாகச் சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் முடிவில் அது நிறைவு பெற்றது. அரசன் வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக மாறிப் போனான். ஆனால் சங்கம் மருவிய காலத்திலும் கிராமப்புற பேரூர்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இருந்திருப்பர். வாரியங்களும் இருந்திருக்கும். ஆனால் அவை அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இருந்த அதிகாரங்களே அவைகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் சங்க காலத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள், அரசனின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டிருந்தனர். மெகத்தனிசின் கூற்று அதனை உறுதி செய்கிறது.

ஆதலால் இந்த “மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” என்பது குறைந்த பட்சம் கிறித்துவுக்கு முன்பே 1000 வருடங்களுக்கு மேலான (ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்தது) ஒரு நீண்ட நெடிய மரபைக் கொண்டிருந்தது. அதனால்தான் கி.மு. 8ஆம் நூற்றாண்டுவாக்கில் தொல்கபிலரின் எண்ணியம் போன்ற அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிபெற்ற சிந்தனைப் பள்ளி உருவாக முடிந்தது. இந்தக் காலம் குறித்தப் புரிதல் மூலம், கி.மு. 1000 க்கு முன்பிருந்தே, அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு, தமிழ்ச் சமூகத்தில் 1000 வருடங்களுக்கு மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கிவந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள்:

பொருள்முதல்வாத மெய்யியல் பிரிவுகளில் ஒன்றான தொன்மையான சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்த, கி.மு. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்கபிலர்(சுமார் கி.மு. 750), ஒரு தமிழர். இவரது பிற்கால மாணவரான, புறம் 194ஆம் பாடலைப் பாடிய எண்ணியம் என்கிற எண்ணியத்தை இந்திய அளவில் ஒரு பெரும் சங்கமாக வளர்த்தெடுத்த, பௌத்த மரபில் பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் அழைக்கப்படுகிற பக்குடுக்கை நன்கணியாரும் ஒரு தமிழர்.  

‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாட்டைத் தொடங்கிய கணாதர், உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கிய அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார், அளவியல் எனப்படும் நியாயவாதத்தை உருவாக்கிய கோதமனார், தற்செயல் கோட்பாட்டை உருவாக்கிய பூரண காயபர் ஆகிய அனைவரும் தமிழர்களே. இவர்கள் உருவாக்கிய கோட்பாடுகள் அனைத்தும் அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும் அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து உருவானவை. சங்ககாலத்துக்குப் பிந்தைய(கி.மு.50), தமிழ்ச் சமூகச் சூழலால் பலவீனமடைந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை, சங்கம் மருவிய காலத்துக்குப் பின்(கி.பி.250) பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இருந்த போதிலும் அதன்பின் பௌத்தமரபில் தோன்றிய தமிழர்களான, தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாகர், தருமபாலர், போதிதருமர் போன்றவர்களிடமும் மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபின் தாக்கம் முழுமையாக இருந்துள்ளது என்பதை மறந்துவிட முடியாது(8).

சங்க காலத்தில் சாதி இல்லை:

சங்க காலச் சமூகம் உடன்போக்கு என்பதைத் திருமணத்திற்கான ஒரு முறையாக முழுமையாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருந்தது என்பதைச் சங்க கால அகப்பாடல்கள் உறுதி செய்கின்றன. இந்த உடன்போக்கில் தலைவி என்பவள் தன் குடிக்குரிய தலைவனோடு மட்டுமே போனதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை. முல்லைத்தலைவி குறிஞ்சித்தலைவனோடும், நெய்தல் தலைவி மருதத்தலைவனோடும் என ஐவகைத்திணைத் தலைவனோடும், அனைத்துக் குடித்தலைவனோடும், அனைத்துத் தொழில் செய்யும் தலைவனோடும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் அகமணமுறை இருக்கவில்லை. அகமணமுறை இல்லாமல் சாதி இருக்கமுடியாது என்பதால், சங்ககாலத்தில் சாதி இருக்கவில்லை. ஆனால் குடிகள் இருந்தன. குடி வேறு, சாதி வேறு. தொழில் பிரிவுகள் தான் குடிகளாக இருந்தன. குடிகள் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவன அல்ல. அவற்றில் அகமணமுறையும் இருக்காது. ஆகவே இன்றைய சாதிகளும் அன்றைய குடிகளும் வேறு வேறு என்ற புரிதல் வேண்டும்.

ஆனால் பொருளாதார உயர்வு தாழ்வுகளும், வர்க்கவேறுபாடுகளும் இந்த உடன்போக்குத் திருமணத்துக்கு ஆங்காங்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன என்பதையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. அதுபோன்றே அரச குடும்பங்களிலும், உயர்வேளிர் குடும்பங்களிலும் உடன்போக்குத் திருமண முறைக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கும். சான்றாக நற்றிணையின் 45ஆம் பாடலில் தலைவியின் காதலை வேண்டும் தலைவனிடம் தோழி, இவள் சிறுகுடிசையில் வாழும் மீனவப்பெண் எனவும் நீயோ தேருடைய செல்வந்தன் மகன் எனவும் கூறி இருவருக்கும் வர்க்க, வகுப்பு வேறுபாடு இருப்பதால் பொருத்தம் இல்லை என அவனது காதலை மறுக்கிறாள். நற்றிணையின் 328ஆம் பாடலில் மணம் செய்யாது காலம் கடத்தும் தலைவனை எண்ணி தலைவி வருந்தும்போது தோழி தலைவனின் பிறப்பு உயர்ந்தது என்பதால் அவர் என்றும் சொற்பிறழார், விரைவில் வருவார் என ஆறுதல் கூறுகிறாள். ஆகவே வர்க்க, வகுப்பு வேறுபாடுகள் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தந்து வந்துள்ளன என்ற போதிலும் உடன்போக்கைச் சங்ககாலச் சமூகம் ஏற்றுக்கொண்டிருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதன் காரணமாகவே அனைத்துக் குடிப் பெண்களும் அனைத்துக் குடி ஆண்களோடும் வேறுபாடு இன்றி உடன்போக்கு மேற்கொண்டனர் என்பதை அகப்பாடல்கள் உறுதிபடக் கூறுகின்றன.

சங்ககாலத்தில் திணை வேறுபாடுகளும், தொழில் வேறுபாடுகளும், பொருளா தார அடிப்படையிலான வகுப்பு, வர்க்க வேறுபாடுகளும் இருந்துள்ளன. ஆனால் சாதிகள் இருக்கவில்லை. குறுந்தொகையின் 40ஆம் பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயர்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்கிறது. உடன்போக்கில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதையும் அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களோடும் உடன்போக்கு மேற்கொண்டனர் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. சங்ககாலத் திருமண முறையில் சாதிகள் இல்லை என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது. ஆகவே அன்றைய சங்ககாலம் உடன்போக்குத் திருமண முறையை ஏற்று அங்கீகரித்ததால் அன்று சாதிகள் இருக்கவில்லை.

உடன்போக்கும் பொருள்வயிற்பிரிவும்:

பொருள்வயிற்பிரிவு என்பது சங்கப்பாடல்களில் ஒரு முக்கியப்பிரிவு. தலைவன் தனது திருமணத்திற்காகவும், தனது குடும்ப வாழ்க்கையை நடத்தவும் தனது தாய் தந்தைகளைச் சாராது சுயமாக பொருள் தேடிக்கொள்வது என்பது அன்றைய நடைமுறையாக இருந்து வந்தது. ஆதலால் தலைவன் திருமணத்துக்குமுன் காதலியைவிட்டுப் பிரிந்து, வெளிநாடோ வெளியூரோ சென்று பொருள் சேர்த்துக் கொண்டுவருவது என்பது தான் பொருள்வயிற்பிரிவு எனப்பட்டது. தலைவன் தாய் தந்தையரைச் சார்ந்து இல்லாமல் சுயமாகப்பொருள் சேர்த்துக் கொள்ளும் நடைமுறை என்பது உடன்போக்கு திருமணம் நடைபெற ஒரு முக்கியக் காரணியாக இருந்தது. சான்றாக சிலப்பதிகாரத்தில் கோவலன் பணத்தை இழந்த பிறகு பொருள் சேர்ப்பதற்காக தனது மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை போவான். அப்பொழுது அவர்களது தாய்தந்தைகள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்த போதிலும் அவர்களை அணுகாது சுயமாகப்பொருள் சேர்க்க விரும்புகிறான். அன்று தனது தாய்தந்தைகளிடம் பொருள் பெறுவது என்பது இழுக்காகக் கருதப்பட்டது. ஆகவேதான் அவன் சுயமாகப்பொருள் சேர்க்க மதுரை போகிறான். ஆகவே அன்றைய தமிழ் இளைஞர்கள் தாய் தந்தைகளைச் சார்ந்து இல்லாமல் சுயமாகப்பொருள் சேர்த்து வாழ்க்கையை நடத்தினர். இம்முறை இன்றைய மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் நடைமுறை. ஆகவே இந்த உடன்போக்குத் திருமணம் என்பதும் பொருள்வயிற்பிரிவு என்பதும் பழந்தமிழகத்தில் சாதி இல்லை என்பதை உறுதி செய்கிறது என்பதோடு, பழந்தமிழகம் ஒரு வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்தது என்பதையும் உறுதி செய்கிறது.

களப்பிரர் படையெடுப்பும் பேரழிவும்:

சங்கம் மருவிய காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் மிக அதிக அளவில் அதிகரித்ததின் விளைவாக சமண பௌத்த சைவ, வைணவ மதங்கள் ஓரளவு செல்வாக்கு பெறத்தொடங்கின எனினும் அன்றும் சமூகத்தின் அடிப்படையாகப் பொருள் முதல்வாத மெய்யியல்தான் இருந்து வந்தது. கி.பி. 250இல் களப்பிரர் படையெடுப்பு நடந்த பிறகு தமிழ்ச் சமூகத்தில் பேரழிவு ஏற்பட்டது. அனைத்துத் தமிழக நகரங்களும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாகின. 1000 வருட காலமாக இருந்து வந்த அதன் நாகரிகம் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனது. பொருள்முதல்வாதச் சிந்தனைக்கான அடிப்படையும் இல்லாது போனது. மிகப்பெரிய அறிவியல் தொழில்நுட்ப, தத்துவார்த்த சமூகப் பண்பாட்டு இடைவெளி உருவானது. 1000 வருடகால நகர நாகரிக வாழ்வியல் சிந்தனை அடியோடு இல்லாது போய் ஒரு பிற்போக்கான கிராமச்சமூகமாக தமிழ்ச்சமூகம் ஆகிப்போனது. அதன் பின் தமிழ்ச்சமூகம் முழுமையான சமண பௌத்த சைவ, வைணவ மதச் சிந்தனையின் செல்வாக்குக்கு உள்ளானது. களப்பிரர் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து சமற்கிருதமயமாக்கம் என்பது செல்வாக்கு பெற்றதாக ஆகியது. பக்தி இயக்கத்தின் தொடக்க காலமாக அது இருந்தது. திருமூலரும், காரைக்கால் அம்மையாரும் தோன்றினர்.

இந்த நிலையில் தமிழகத்தின் வடக்கே பல்லவர்கள் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் வைதீகமும் பார்ப்பனியமும் செல்வாக்கு பெறத்தொடங்கின. அதன் காரணமாக சாதீயத்துக்கான சிந்தனைகள் தமிழ்ச் சமுதாயத்தில் பல்லவர் காலத்தில்தான் உருவாகத்தொடங்கின. பிற்காலச் சோழ, பாண்டியப் பேரரசுகள் காலத்தில் அச்சிந்தனைகள் படிப்படியாக வளர்ந்து வந்தன. ஆனால் 12ஆம் நூற்றாண்டுக்குப் பின் தெலுங்குச்சோழர், விசய நகர, நாயக்கர் காலத்தில் வைதீகப் பார்ப்பனிய செல்வாக்கு மிகவும் வலுவடைந்ததன் காரணமாக சாதிகள் உருவாக்கப்பட்டு அவை உறுதியாக நிலைநிறுத்தப்பட்டன. அவை நாளடைவில் வளர்ந்து பிரிவுகள் அதிகரித்து, கெட்டித்தன்மை கொண்டதாக இறுகி இன்றைய நிலையை அடைந்தன. அரசு தோன்றும்பொழுதும் அதன் பின்னரும் உலகம் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் உருவாகி வளர்ந்து வந்துள்ளன. ஆனால் உலகில் எங்கும் சாதிகள் உருவாகவில்லை. சங்ககாலத்திலும் சாதிகள் இருக்கவில்லை. ஆதலால் சாதியத்தின் தொடக்ககால ஊற்றுக் கண்ணாக இருந்தது வைதீகச் சிந்தனையும், பார்ப்பனியமும்தான் என உறுதிபடக் கூறலாம். இந்திய வரலாறு முழுமையும் எங்கு எப்பொழுது வைதீகமும் பார்ப்பனியமும் சமற்கிருதமயமாக்கமும் செல்வாக்கு பெறுகிறதோ அப்பொழுது அங்கு சாதியமும் உருவாகி வளர்ந்து நிலைபெருகிறது என்பதைக் காண முடிகிறது. இந்திய வரலாற்றில் இதனை ஒரு வரலாற்று விதியாகவே கருதலாம் என்பதுதான் உண்மை.

பழந்தமிழ்ச் சமூகத்தில் வகுப்புகள்:                              

மனித சமூகத்தில் சொத்துடமை உருவானபின் உலகம் முழுவதும் வகுப்புகள் தோன்றின. சொத்துடமை இருக்கும்வரை வகுப்புகளும் இருக்கும். தொழில் அடிப்படையில், வர்க்க அடிப்படையில் இந்த வகுப்புகள் இருந்தன. பிறப்பு அடிப்படையில் வகுப்புகள் இருக்கவில்லை. பழந்தமிழகத்திலும் வகுப்புகள் இருந்தன. வேந்தர், அரசர், வேளிர் போன்றவர்கள் ஆளும் வகுப்பாக இருந்தனர். இவர்கள் முதல் வகுப்பு. அந்தணர், தாபதர், அறிவர், கணியர் போன்ற பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் கொள்கைச்சான்றோர் ஒரு வகுப்பாக இருந்தனர். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள். இந்தச் சான்றோர்கள் குறித்துக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற அரச இளவல் தனது புறம் 182ஆம் பாடலில் கூறியுள்ளான். வள்ளுவனின் 99ஆவது அதிகாரமான ‘சான்றாண்மை’ சான்றோர்களின் பண்பு நலன் குறித்துப் பேசுகிறது. இந்தச் சான்றோர்கள் இரண்டாம் வகுப்பாக இருந்தார்கள்.

வணிகர்கள், தொழில் செய்பவர்கள், வேளாண்மை செய்யும் நிழக்கிழார்கள் ஆகியவர்களில் செல்வந்தர்களும், உயர்ந்தோர்கள் எனப்படுவோரும் மூன்றாவது வகுப்புக்கு உரியவர்கள். இவர்களில் சிறு குறு வணிகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், சிறு குறு வேளாண்குடிகள் ஆகியோரும், இன்னபிறரும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர், விறலி போன்றவர்களும் இன்ன பிற அனைத்து மக்களும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள். தொல்காப்பிய இலக்கணமும், சங்க இலக்கியங்களும் சொல்லும் விடயங்களைக் கொண்டு மேற்கண்ட நான்கு வகுப்புகளை அடையாளம் காணமுடியும். இந்த வகுப்புகளும் தொழிலை, செல்வத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவை பிறப்பை அடிப்படையாகக் கொண்டவையல்ல. பண்டைய கிரேக்க உரோம சமூகங்களில் இனக்குழு கால இறுதியில் பூசாரிகள் ஓரளவு வலிமை மிக்கவர்களாக இருந்த போதிலும் நகர அரசுகளின் காலத்தில் அவர்கள் முழுமையாக இல்லாது போகின்றனர். அதைப்போலவே தமிழகத்திலும் சங்ககால நகர அரசுகள் காலத்தில் பூசாரிகள் என்ற தனி வகுப்பு இல்லாமல் போய்விடுகிறது. பக்தி கால கட்டத்திலும் அதன்பின்னரும்தான் பூசாரிகளாகிய பார்ப்பனர்கள் தமிழ்ச் சமூகத்தில் தனிவகுப்பாக, வலிமை மிக்க வகுப்பாக ஆகிறார்கள்.

சங்க காலத்தில் பார்ப்பனர்கள் நாலாம் வகுப்பில்தான் இருந்தனர். சங்க காலத்தில் புலையர்களும், இழிசனர்களும், பார்ப்பனர்களும் சில சமயங்களில் மதிப்புக்குரிய அந்தணர்களும் சடங்குகள் செய்பவர்களாக இருந்துள்ளனர்(புறம்-93) என்பதை சங்க இலக்கியம் தெரிவிக்கிறது. புலையர்களும், இழிசனர்களும் நான்காம் வகுப்பைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். ஆகவே சங்க காலத்தில் பூசாரிகள் என்ற தனி வகுப்பு இருக்கவில்லை. அந்தணர்களும் பார்ப்பனர்களும் வேறு வேறு குழுக்கள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் பார்ப்பனர்கள் பல்வேறு இடைச்செருகல்களைச் செய்து பார்ப்பனர்களும் அந்தணர்களும் ஒருவரே என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர் என்பதே உண்மை. திருக்குறளில் கூட 134ஆவது குறளில் குடிமை என்பதை பார்ப்பான் என இடைச்செருகல் செய்துள்ளனர். அதுபோன்றே 560ஆம் குறளில் அந்தணர் என்பதை நீக்கி அந்த இடத்தில் அறுதொழிலோர் என்ற சொல்லை இடைச்செருகல் செய்துள்ளனர். சிலப்பதிகாரத்திலும் இன்ன பிற சங்க இலக்கியங்களிலும் நிறைய இடைச்செருகல்கள் இடம் பெற்றுள்ளன. பார்ப்பனர்கள் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே செல்வாக்கு பெற்றவர்களாக அனைவராலும் மதிக்கத் தக்கவர்களாக இருந்தார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதே இந்த இடைச்செருகல்களின் நோக்கம்.

சங்க காலத்தில் வடவரும், இடைச்செருகல்களும்:

சங்க காலத்தில் இந்தியாவிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த சமுதாயமாக தமிழ்ச்சமூகம் இருந்து வந்தது. அரசியல். பொருளாதாரம், தொழில், வணிகம், வேளாண்மை, கலை, கல்வி, இலக்கியம், பண்பாடு ஆகிய அனைத்திலும் அவர்கள் அன்று ஒரு உன்னத நிலையை, உச்ச நிலையை அடைந்திருந்தனர். அதன் காரணமாக வடநாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு மக்கள் இங்கு தொழில், வணிக வாய்ப்புக்காகவும், வேலைதேடியும் வந்து தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர். மேற்கு நாடுகளின் யவனர்கள் கூட இங்கு வந்து காவல் பணிகளைச் செய்து வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியம் கூறுகிறது. ஆகவே மிக அதிக அளவில் அன்று வட இந்தியர்கள் வேலை வாய்ப்புக்காக தமிழகத்தில் வந்து வாழ்ந்தனர். அவர்கள் மிகவும் கடினமான தொழில்களையும் மிகக்குறைந்த கூலியில் செய்து வந்தனர். ஆகவே தமிழகத்தின் பல்வேறு தொழில்களில் அவர்கள் பணியாட்களாக, வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நிலை மிகமிக அதிகமாகியது. யானையைப்பழக்குவது, கல்வெட்டுகளில் எழுத்துகளைப் பொறித்தல் போன்ற பல்வேறு கடினமான பணிகளை அவர்கள் தமிழகத்தில் செய்து வந்தனர். அவர்கள் தங்களுக்கான வாழ்க்கைச் சடங்குகளைச் செய்வதற்குக் கூடவே வட இந்தியப் பூசாரிகளையும் வரவழைத்துக் கொண்டனர். ஆதலால் ஆங்காங்கு வட இந்தியச் சடங்குகள் இங்கு மக்களிடத்தில் பழக்கத்தில் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் தமிழகத்தில் வாழ்ந்து வந்த வட இந்தியச் சமூகத்தில்தான் இருந்து வந்தன. இதனைத் தமிழ்ப்புலவர்கள் கண்டு வியந்து பாடியிருக்க வாய்ப்புள்ளது.

தமிழில் வேள்வி எனச் சொல்லப்படுவது வட இந்திய முறையிலான யாகம் அல்ல. தொல்காப்பியத்தில் உள்ள 140 புறத்திணைத் துறைகளில் ஒன்று வேள்விநிலை என்பது. வேள்விநிலை அல்லது வேள்வியின் பொருள் என்பது வெற்றிபெற்ற வேந்தன் அனைவருக்கும் ஆநிரைகளைப்பரிசாக வழங்கும் நிகழ்வும் அதன்பின் பெருஞ்சோறு வழங்கும் நிகழ்வும். ஆநிரைகள் பரிசாக வழங்கப்படுவதற்கு முன் மரக்கம்பங்களில் கட்டி வைக்கப் பட்டிருக்கும். அதனை வேள்வித்தூண் எனவும் குறிப்பிடுவர். ஆனால் வட இந்திய யாகமுறையில் இந்த குதிரை, ஆடு, மாடுகள் அனைத்தும் யாகக் குண்டத்தில் உள்ள தீயில் போடப்பட்டு அக்னிக்கடவுளுக்கு அனைத்தும் பலியாக வழங்கப்படும். ஆனால் தமிழகத்து வேள்விகளில் அவை மக்களுக்குப் பரிசாக வழங்கப்படும். ஆகவே இரண்டும் ஒன்றல்ல. மேலும் வேத காலச் சடங்குகளை ஆதரிப்பவர்கள் மீமாம்சகர்கள் எனப்பட்டனர். அவர்கள் வேதங்களையும், அதன் சடங்குகளையும் மிகமிகப் புனிதமாகவும் கடவுளுக்கும் மேலாகவும் மதித்தார்கள். அவர்கள் ஒரு விதத்தில் கடவுள் மறுப்பாளர்களாகவும் இருந்தார்கள். கடவுள் மறுப்புக் கொள்கை குறித்த கருத்துகள் அவர்கள் சிந்தனையில் மிக ஆழமாகப் பரவியிருந்தது. ஆகவே தமிழக முறையிலான வேள்வி என்பதும் வட இந்திய முறையிலான வேள்வி என்பதும் மிகவும் வேறுபட்ட ஒன்று என்ற புரிதல் மிகவும் தேவை. தமிழகச்சடங்குகளில் அதிக அளவு நன்னீராட்டுதல் போன்ற நீரைப் பயன்படுத்தும் சடங்குகள் தான் இருக்கும். தீ சார்ந்த சடங்குகள் என்பது இருக்காது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவை இரண்டுக்கும் வேறுபாடு தோன்றாது ஒன்றுடன் ஒன்றைக் கலந்து பார்ப்பனியம் அனைத்தையும் தனது சடங்குகளாக, வேதமுறையிலான சடங்குகளாக மாற்றியுள்ளது.

ஆதலால் வேள்வி போன்ற பல தமிழ்க் கருத்துக்கள், தமிழ்ச்சடங்குகள் வைதீகக் கருத்துக்களாக வைதீகச் சடங்குகளாக மாற்றப்பட்டு வந்துள்ளன. இவை குறித்தப்புரிதல் இல்லாத இடைக்கால உரை ஆசிரியர்களாலும் பிறராலும் மிக அதிக அளவில் இடைச்செருகல்களும் மாற்றங்களும் சங்க இலக்கியத்தில் செய்யப்பட்டு வந்துள்ளன. சங்ககாலத்திற்குப் பின் வந்த சங்கம் மருவிய காலத்தில் (கி.மு.50 – கி.பி.250) உருவான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஆரியர், இரு பிறப்பாளர், அந்தணர் போன்ற சொற்கள் மிகமிகக் குறைவாக உள்ளன. இது குறித்து சி இளங்கோ, “நீதி இலக்கியங்களில் ஆரியர்களைக் குறிக்க ‘பார்ப்பார்’ என்ற சொல் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தணர்கள், ஆரியர்கள், இருபிறப்பாளர்கள் என்ற சொற்களின் பயன்பாடு சங்க இலக்கியங்களில் உள்ளது போல் இதில் பயன்படுத்தப்படவில்லை” எனக் கூறுகிறார்(9).

சங்க இலக்கியங்களில் இருந்த அந்தணர் என்ற சொல் பார்ப்பனர், ஆரியர், இருபிறப்பாளர் என இடத்துக்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது, அல்லது அவை அதிக அளவில் இடைச்செருகல்கள் செய்யப்பட்டுள்ளது. நீதி நூல்களில் இருப்பதைவிட தொல்காப்பியத்தில், சங்க இலக்கியங்களில் இடைச் செருகல்களும் திருத்தங்களும் மிக அதிக அளவில் உள்ளது என்பதை சி.இளங்கோ அவர்களின் கூற்று மறைமுகமாக உறுதி செய்கிறது. முசிறி, கீழடி அகழாய்வுகள் அன்று தமிழகத்தில் பொருள்முதல்வாத மெய்யியல்தான் இருந்துள்ளது என்பதை உறுதி செய்கின்றன. தொல்காப்பியர் தனது அகப்பொருள் இலக்கணத்தில் உள்ள முதற்பொருளில் கடவுளைச் சேர்க்கவில்லை. வள்ளுவன் தனது 50ஆவது குறளில் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ எனக் கூறுகிறான். ஆகவே இவர்கள் இருவருடைய கருத்துகளின் படி இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன்தான் கடவுள் ஆகிறான். ஆகவே பண்டைய தமிழகத்தின் மெய்யியல் என்பது பொருள்முதல்வாத மெய்யியல், என்பதாகவும் அதன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாடு என்பதாகவும்தான் இருந்தது. ஆகவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சங்க இலக்கிய நூல்களை மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்பதோடு மறுஆய்வுக்கும் உட்படுத்த வேண்டும்.

சங்ககாலப் புலையரும் இழிசனரும்:

ஆய்வாளர் முனைவர் பழனியப்பன் (Dr. Sudalaimuthu Palaniappan, President, South Asia Research and Information Institute, www.sarii.org) அவர்கள் 2008 ஆம் ஆண்டு சர்வதேச சமண சமய ஆய்விதழில் வெளியிட்ட “சங்கம் மருவிய தமிழகத்தில் சாதிகள் உருவானதில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்” என்ற கட்டுரையில் இருந்த ஒரு சில அடிப்படைத் தரவுகளைக் கொண்டு புலையர், இழிசனர் குறித்த கருத்துகள் இங்கு தரப்பட்டுள்ளன. பாவாணர் (1992), கைலாசபதி (1968), வீ. எசு. இராசம் (1992) போன்ற தமிழறிஞர்கள் சங்க இலக்கிய நூல்களில் உள்ள ‘பறையன்’, ‘புலையன்’, ‘புலைத்தி’, போன்ற தொழில் அடிப்படையிலான பெயர்கள் ஒருவரின் தாழ்ந்த நிலையைக் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்கள்.

புலையன், ‘இழிசினன், ‘இழிபிறப்பாளன்’ என்று சங்க இலக்கியங்களில் வழங்கிவரும் சொற்கள், இக்காலத்தில் நாம் கருதுவது போல, இழிந்தோன்’ என்ற பொருள் தரும் வகையில் ஒருவரைக் குறிக்கவில்லை என்று ஆணித்தரமாக மறுக்கிறார்கள்(10). வீ. எசு.. இராசம் (2015), தாம் எழுதிய ‘சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற …’ என்ற நூலில் தொல்காப்பியம் முதற் கொண்டு சங்ககால இலக்கியங்கள், இலக்கணங்கள், சங்கம் மருவிய நூல்கள், பிற்காலத்திய தொல்காப்பிய இலக்கண உரை நூல்கள் என விரிவாக அலசிப் பல சான்றுகள் வழியாகச் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தினரிடம் சாதிக் கோட்பாடு இல்லை என்று நிறுவியுள்ளார். சங்க காலத்தில் துப்புரவற்ற தொழில் புரிந்த காரணத்தினால் புலையர், புலைத்தி, பாணர், பறையர் ஆகியோர் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டனர் என்று கூறும் கருத்தினை மறுப்பதாகவே இலக்கியம், மொழியியல், வரலாற்றியல், கல்வெட்டுச் சான்றுகள் ஆகியன அமைந்துள்ளன. பாணர், பறையர், புலையர் போன்றோர் துப்பரவற்றது எனக் கருதப்படும் தொழில்களைச் செய்தவர்கள் அல்லர். அன்று சமயச் சடங்கில் ஈடுபட்ட இவர்களை மிகக் கீழானவர் எனச் சங்ககாலச் சமூகம் கருதவில்லை என்பதே உண்மை.

சங்க காலத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கவில்லை. பூசாரியாக இருந்த குயவரையும் (நற்றிணை 293), மீன் பிடிக்கும் பாணரையும் (அகநானூறு 196), சங்கு அறுத்து வளையல் செய்யும் வேள்வி செய்யாப் பார்ப்பாரையும் (அகநானூறு 24) சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்க இலக்கியப் பாடல்களில், ‘புலையன்’ என்ற சொல் ‘பாணரையும்’ குறிக்கிறது, பறை முழக்கியவரையும் குறிக்கிறது (நற்றிணை 347), ஈமச்சடங்குகளைச் செய்யும் சமயக்குருமார்களையும் குறிக்கிறது. ‘இழிசினன்’ எனப்படுபவர் தண்ணுமை இசைப்பவராகவும், கட்டில் செய்பவராகவும் காட்டப்படுகிறார். ‘புலைத்தி’ என்பவள் ஆடை வெளுக்கும் தொழிலை செய்த நற்பண்புகளைக் கொண்ட பெண்ணாகக் குறுந்தொகை (பாடல் 330) குறிப்பிடுகிறது. ‘புலைத்தி’ என்பவள் முருகனுக்கு சமயச் சடங்கு செய்பவளாகப் புறநானூறு (பாடல் 259) குறிப்பிடுகிறது. அவ்வாறே சங்க இலக்கியம் காட்டும் ‘புலையன்’ என்பவன் போரிலும் ஈடுபட்டுள்ளான் (நற்றிணை 77), துடி, தண்ணுமை, பறை, முழவு ஆகியவற்றை இசைத்திருக்கிறான். உடலை அறுத்து ஈமச்சடங்குகளைச் செய்த சமய குருக்களைப் புலையர்கள் என்று தமிழர் அழைத்தனர். இந்த ஈமச்சடங்குகளை மதிப்புக்குரிய அந்தணரும் செய்துள்ளனர்(புறம்-93). புலையன், புலைத்தி, பாணன், துடியன் ஆகியோர் செய்த தொழில்களும் சமயச் சடங்குகளும் வாழ்வில் வளமை பெற, நன்மை பெற விரும்பிச் செய்யப்பட்டவை. இதனால் ‘புலை’ என்ற சொல் தாழ்ந்த சாதியுடன் தொடர்புடையது என்ற கருத்து பொருளற்றுப் போகிறது.

சமணக் கொள்கையின்படி ‘புலை’ என்பது ‘தீயசெய்கை’யைக் குறிக்கிறது. உயர்ந்தநிலை என்பது பிறப்பால் வருவதல்ல; நற்பண்புகளைக் கொண்டோரே உயர்ந்தவர்கள், என்பன சமணம் காட்டுகிற நெறிகள். ஆகவே, மறுபிறப்பில் கீழேயுள்ள நரகத்தில் பிறக்கும் தாழ்வை ஏற்படுத்தும் தொழிலைச் செய்வோன், சமணரின் கொள்கைப்படி ‘புலையன்’, ‘இழிபிறப்பாளன்’ எனக் கருதப்பட்டான். ஆனால் தமிழகத்தில் கி.பி. 250க்குப்பின்தான் சமணம் செல்வாக்கு பெறுகிறது. அதன்பின்தான் இக்கருத்துகள் தமிழகத்தில் வலிமையடைந்தன. ஆனாலும் இக்கருத்துகள் பிறப்பின் அடிப்படையில் இருக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் வைதீகப் பார்ப்பனியம் வளர்ந்து வந்த நிலையில் புலையர், இழிசனன் ஆகிய சொற்கள் பிறப்பின் அடிப்படையில் இழிந்த பொருள் தரும் சொற்களாக ஆகின. ஆகவே தமிழகத்தில் கி.பி. 250வரை இச்சொற்கள் இழிந்த நிலையில் பொருள் கொள்ளப்படவில்லை.

இழுகுதல் என்றால் ஒரு தளத்தின் மீது தடவுதல், இழுத்துத் தேய்த்தல், பூசுதல், உரசுதல் என்று பொருள். அதே பொருளில், உரசுதல் அல்லது உராய்வு முறையில் பறை வாசிக்கும் ஒருவன் இழுகினன் என அழைக்கப்பட்டு, பின் இழுசினன், ‘இழிசினன்’ என பெயர் பெற்றான். அப்பெயர் இழிவானது, கேவலமானது என்று அன்று கருதப்படவில்லை. அது ஒரு தொழில் பெயராகவே கருதப்பட்டது. இடைக்காலத்தில்தான் அது பொருள் மாற்றம் பெற்றது. சங்கம் மருவிய காலத்திற்குப்பின் தமிழகத்தின் ஆட்சி களப்பிரர்கள் வசம் சென்றது. இதனால் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழரின் சமூகப் பண்பாட்டு வாழ்வியலில் ஒரு மிகப் பெரிய இடைவெளி தோன்றியது. இந்த இடைவெளி காரணமாகவும் சொல்லுக்கான பொருளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது எனலாம்.

கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல்லில் ‘சாக்கைப் பறையனார்’ என்ற போர் வீரர் பற்றிய கல்வெட்டுக் குறிப்பொன்று, மதிப்பைக் காட்டப் பயன்படும் ‘ஆர்’ விகுதி கொண்டு காணப்படுகிறது. தர்மபுரிக் கல்வெட்டு ஒன்று (கல்வெட்டு எண், 1974/66) ‘புலைய மன்னார்’ என்பவர் ‘புறமலை நாடு’ என்ற தர்மபுரிப் பகுதியை ஆட்சி செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது. ஆசாரக்கோவையின் 92ஆம் பாடல் சடங்குகளைச் செய்ய நல்லநாள் குறிக்க புலையரை அணுகாமல், அந்தணரை அணுக அறிவுறுத்துகிறது. அதன் 80ஆம் பாடல் பெரியவர்களையும் புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறக்கூடாது என்கிறது. ஆக இங்கு புலையர் என்பவர் நல்லநாள் குறிப்பவராகவும், போர் வீரராகவும், பெரியவர்களுக்கு இணையாக மதிப்பளிக்க வேண்டியவராகவும், ஆட்சியாளராகவும் இருந்துள்ளார். ஆகவே சங்ககாலப் பறையர், புலையர் என்பவர்கள் மதிப்புக்குரியவர்களாக இருந்துள்ளனர் எனலாம். காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறி விடுவதை இங்கு கணக்கில் கொள்ளவேண்டும். சேரி என்பது குடியிருப்பு என்ற பொருளில்தான் சங்க இலக்கியம் பேசுகிறது. ஆனால் இன்று சேரி என்பது தாழ்த்தப்பட்டவர் வாழுகிற இடம் எனப் பொருள் தருவதாக உள்ளது. ஆகவே புலையர், இழிசனர் என்பவர்கள் சங்ககாலத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கவில்லை. சங்ககாலத்தில் அவர்கள் நான்காம் வகுப்புக்குரியவர்களாக இருந்தனர். பார்ப்பனர் உட்பட சமூகத்தின் பெரும்பாலான மக்கள் இந்த நான்காம் வகுப்பில்தான் இருந்தனர்.

சங்ககாலம் என்பது வளர்ச்சி பெற்ற நகர அரசுகளின் காலம். வளர்ச்சி பெற்ற நகர அரசுகள் தொடக்க காலத்தில் இருந்த புரோகிதத்தொழில் செய்யும் பூசாரி வகுப்பை முற்றிலும் இல்லாது செய்து விடுகின்றன. சடங்குகளும் இன்ன பிறவும் அன்று பலரும் செய்யும் பணியாக இருந்து வந்துள்ளது. பாணரும், புலையரும், குயவரும், பார்ப்பனரும், அந்தணரும் புரோகிதத்தொழிலை செய்துள்ளதாக சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. தொழில் பிரிவுகளும் வகுப்பும் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையிலும், புரோகிதத்தொழில் செய்யும் தனி வகுப்பு உருவாகாத நிலை இருந்ததை சங்ககாலத்தில் காண முடிகிறது. பார்ப்பனர்கள் நாலாம் வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கீழ்நிலையில்தான் இருந்து வந்தனர். அன்று பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பாண்டியன் முதுகுடுமிப்பெருவழுதி பார்ப்பனன் ஒருவனுக்கு நிலதானம் வழங்கியதாக வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. சங்ககாலத்திலேயே பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கவே இந்த மோசடிச் செப்பேடு உருவாக்கப்பட்டுள்ளது. அல்லது பிற்காலப் பாண்டிய அரசனை ஏமாற்றி நிலதானம் பெற செய்யப்பட்ட மோசடி எனலாம். சங்ககாலம் என்பது பூசாரி வகுப்பு ஒரு தனி வகுப்பாக உருவாகாது தடுத்து, அதை அழித்து ஒழித்த ஒரு நகர நாகரிகச் சமூகம் என்ற புரிதல் முக்கியம். இதே நிலை தான் வளர்ச்சியடைந்த கிரேக்க உரோம நகர அரசுகளிலும் இருந்ததை நாம் காண முடிகிறது. ஆனால் வட இந்தியாவில் நகர அரசுகள் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே மகதப் பேரரசு உருவாகி விடுவதால், புரோகிதத் தொழில் செய்யும் பூசாரி வகுப்பு தன்னை ஒரு தனி வகுப்பாக நிலை நிறுத்தி, அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரை தனி வகுப்பாக இருந்து வந்த பார்ப்பனிய பூசாரி வகுப்பு, வாய்ப்பு கிடைத்தவுடன் மகதப் பேரரசை கைப்பற்றிக்கொண்டு தனது ஆட்சியதிகாரத்தை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. அதன்பின் தனக்கு எதிரான சித்தாந்தங்களை, கருத்தாக்கங்களை அழித்து ஒழித்ததோடு தன்னை அனைவருக்கும் மேலான தனி வகுப்பாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஏற்றவாறு வைதீக பார்ப்பனிய சிந்தாந்தத்தை படைத்துக் கொள்கிறது. பின் இவற்றை என்றென்றும் நிரந்தரமாக்க அகமண முறையையும் படிநிலையையும் அடிப்படையாகக் கொண்ட சாதி முறையை உருவாக்கி அதற்கான தத்துவார்த்த சித்தாந்த நூல்களையும் படைத்து, தன்னை கடவுளுக்கும் மேலானவனாக உறுதி செய்து கொண்டது. ஆகவே இந்திய சமூகத்தில் சாதி என்பது வைதீகப் பார்ப்பனியம் தனது சுய இலாபத்துக்காக உருவாக்கி நிலைநிறுத்திய சமூகச் சுரண்டல் வடிவம்.

பார்வை:

 

1.B.SASISEKARAN et al. ADICHANALUR: A PREHISTORIC MINING SITE, INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3 (2010) PP. 369- 394 3.D. VENKAT RAO et al., RECENT SCIENTIFIC STUDIES AT ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE, , IN SANGAM: NUMISMATICS AND CULTURAL HISTORAY, NEW ERA PUBLICATIONS, CHENNAI- 2006, PP. 146-154) & Adichanallur: a prehistoric mining site- Indian National... http://www.insa.nic.in/writereaddata UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf. & முனைவர் அ. இராமசாமி, தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 88-93.
2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 91
3. www.jatland.com/home/Hathigumpha <http://www.jatland.com/home/Hathigumpha>- inscription & சதானந்த அகர்வால், “சிரி காரவேலா” சமற்கிருத நூல் (இணையதளம்).
4. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் - 2016, பக்: 337 – 342,
5. ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ முன்னேற்றப் பதிப்பகம், மாசுகோ, வி. கிரபிவின்(V.Krapivin), 1987. பக்: 43.
6. சவகர்லால் நேரு (Jawaharlal Nehru), உலக சரித்திரம் (Glimpses of World History), தமிழில் ஓ.வி. அளகேசன், முதல் பாகம், அலைகள் பதிப்பகம், 2006. பக்: 153.
7. மருதன் இளநாகனார் அகநானூறு- 77ஆம் பாடல், வரி: 7, 8.
8. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் - 2016, பக்: 781.
9. தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு, சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், 2015, பக்: 34.
10. Kailasapathy, K. Tamil Heroic Poetry. London: Oxford University Press, 1968 & Pāvāṇar, G. Tēvanēyap. Paṇṭait Tamiḻar Nākarikamum Paṇpāṭum. Ceṉṉai: The South India Saiva Siddhanta Works Publishing Society, 1992.

- கணியன் பாலன்

Pin It