ஆளுநர் பதவியை ஏற்றதிலிருந்து ஆர். என். ரவி அவர்கள் தமிழர் விரோத கருத்துக்களைப் பேசியும், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டும் வருகிறார். ஆளுநர் பதவியை ஆர் எஸ் எஸ் – பாஜகவின் கொள்கை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆர் என் ரவி. அவரது தமிழர்விரோத போக்கு அனைத்துத் தரப்பு மக்களிடத்தில் கடும் கண்டனங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இருப்பினும் அவர் அதை நிறுத்துவதாயில்லை. இந்நிலையில் தற்போது மருபாண்டியர்கள் பற்றி சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியிருக்கிறார். தமிழர்கள் மருது பாண்டியர்களை சாதியின் அடிப்படையில்தான் கொண்டாடுகிறார்கள் என மறைமுகமாக ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் விடுதலைப் போராட்ட வீரர்களை சாதித் தலைவர்களாக சுருக்கி விட்டது என்று திமுக, அதிமுக மீது நேரடியான பழியும் சுமத்துகிறார் ஆர்.என்.ரவி.“ஜம்பு தீபகற்பப் பிரகடனம்” என்கிற நாவலந் தீவு பிரகடனத்தை வெள்ளையர்களுக்கு எதிராகவும், சாதி, மதம் கடந்து தமிழர்களை ஒன்றிணைக்கவும் மருது சகோதரர்கள் ஜூன் 16, 1801 ல் திருச்சி கோட்டையில் வெளியிட்டனர். அவரின் அழைப்புக்கு இணங்க தமிழர்கள் சாதிகளைப் புறந்தள்ளி, மதத்தையும் ஒதுக்கி வைத்து அணிதிரண்டனர். இவ்வாறு தங்களின் முந்தைய தலைமுறைகள் எந்த வேறுபாடுமற்று திரண்டதைப் போல, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாளையும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிர் கொடுத்த நாள் என நினைத்தே மிகவும் மரியாதையுடன் அனுசரிக்கின்றனர். இவ்வாறு எந்தப் பிரிவினையும் அற்று சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாடும் தமிழர்கள் அனைவரையும் சில சாதிய சங்கங்களின் கூச்சலுக்கு இணையாக பொதுமைப்படுத்துகிறார் ஆளுநர். தமிழர்கள் தங்களுக்கான விடுதலை வீரர்களை சாதியாக முன்னிறுத்தியே கொண்டாடுகின்றனர் என வன்மமாகத் திரிக்கிறார்.
மருது பாண்டியர்களை சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கூறும் ஆளுநர், அந்த வீரர்கள் சாதி, மதம் கடந்து பல வீரர்களை இணைத்துப் போரிட்ட முக்கிய வரலாறான தென்னிந்தியப் புரட்சியைப் பற்றிப் பேசவில்லை. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக, மருது சகோதரர்களின் மாபெரும் அணி திரட்டலாக, அவர்கள் ஒருங்கிணைத்த தென்னிந்திய புரட்சிக் கூட்டணியே அமைந்தது. தென் தமிழகம் சார்ந்த கொங்குப் பகுதியின் தீரன் சின்னமலை, நெல்லைச் சீமையின் வீரபாண்டிய கட்டபொம்மன், மைசூரின் சிங்கம் திப்புசுல்தான், இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி, பூலித்தேவன், விருப்பாச்சி கோபாலர் போன்ற பல பாளையக்காரர்களும், கர்நாடகாவின் தூந்தாஜி வாக், மலபார் பகுதியின் பழசி ராஜா போன்றோரையும் இணைத்து சாதி, மதங்களைக் கடந்து திரண்டு வெள்ளையர்கள் இருந்த கோவைக் கோட்டையைக் கைப்பற்ற திட்டம் வகுத்தனர். ஆனால் இத்திட்டம் துரோகிகளின் காட்டிக் கொடுப்புகளால் தோல்வியுறுகிறது. 222 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விடுதலைப் போரே இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக இருக்கிறது.
மருது பாண்டியர்கள் அறிவித்த இந்த ‘ஜம்பு தீபகற்பப் பிரகடனம்’ தான் வெள்ளையர்களை வெறியேற்றியது. ஆனால் அவர்கள் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கிலேற்றப்பட்டனர். இந்தத் தியாகப் பின்புலத்தைப் பேசாமல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மதிப்பில்லை என மேம்போக்காக ஆரியத்தின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் கூறிக் கடப்பது, இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான திராவிடத்தை அழிக்க நினைக்கும் காழ்ப்புணர்வு தானேத் தவிர, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது கொண்ட பற்று காரணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு அரசு தனக்களித்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் மருது சகோதரர்களின் பெயர்கள் இல்லை என்றும், தானே தேடி அறிந்ததாகவும் பேசிய ஆளுநரின் தேடலில் இந்த வரலாறு அகப்படவில்லையா என்கிற கேள்வியே எழுகிறது.
சிவசங்கைச் சீமையின் அரசியான வேலு நாச்சியாருக்கு இரு கரங்களாக செயல்பட்டு வெள்ளையரிமிருந்து சிவகங்கையை மீட்டவர்கள் மருது சகோதரர்கள். வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்கும் உதவிக்கு ஹைதர் அலியையே நாடினார். அவரின் மகன் திப்பு சுல்தானும், ஹைதர் அலியும் வேலு நாச்சியாருக்கும், மருது சகோதரர்களுக்கும் செய்த உதவிகள் காலத்தினால் மறக்க முடியாதவை.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளாகவும், போர் வீரர்களாகவும் இருந்தவர்களில் பலரும் இஸ்லாமியர்கள். மருது சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் அனைவரையும் தூக்கிலேற்றிய வெள்ளையர்கள், பெரிய மருதுவின் ஒரு மகனையும், படைத் தளபதிகள் மற்றும் வீரர்கள் என 72 பேரை பினாங்கிற்கு நாடு கடத்தியது. அதில் நாடு கடத்தப்பட்ட முக்கியத் தளபதி சேக் உசேன் என்கிற இஸ்லாமியர். அதைப் போல தென்னிந்தியப் புரட்சிக் கூட்டணியின் வடக்குப் பிரிவுக்கு தலைமைத் தாங்கிய திப்பு சுல்தானின் தலைமைத் தளபதியுடன் இணைந்து போரிட்டவர்கள் வெள்ளையர்களால் பிடிக்கப்பட்டு தூக்கிலேற்றப்பட்டனர். அவ்வாறு சுதந்திரப் போராட்டத்திற்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய 44 பேரில் 36 பேர் இஸ்லாமியர்கள்.
இவ்வாறு இஸ்லாமியர்கள் பிற மத, மற்றும் பல்வேறு சாதியைச் சேர்ந்த வீரர்களுடன் இணைந்து பிரிட்டிசாரை எதிர்த்துப் போரிட்ட வரலாறு என்பது 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை தொடர்ந்தது. ஆனால் ஆளுநர் ஆதரிக்கும் சனாதனத்தின் வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபைக் கும்பல்கள் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களில் சாவர்க்கர் வழி நின்று பிரிட்டிசாருக்கு ஆதரவாக படை திரட்டியது. இந்தப் படை, பிரிட்டிசாரை எதிர்த்து நின்ற நேதாசி சுபாஷ் சந்திர போசு படையுடனும், நேதாஜிக்கு ஆதரவாக முத்துராமலிங்கத் தேவர் திரட்டிய படைகள் மீதும் மோதி சண்டையிட்டு பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் உயிரைப் பலி வாங்கியது என்பதுவே ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கும்பலின் வரலாறு.
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளே சாதிவாரியான சங்கங்களை வளைத்து வன்முறைத் தூண்டுபவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விடுதலைப் போராட்ட வீரர்களின் சாதியையும் முன் வைத்து பிரிக்கும் வேலையை நுட்பமாக செய்கின்றன. ஆனால் சனாதனத் தூதுவராக செயல்படும் ஆளுநர் இந்தப் பழியை திராவிடக் கட்சிகளின் மீது போட்டு விட்டு, சாதி எதிர்ப்பை, சமத்துவத்தை கொள்கையாகக் கொண்ட திராவிட சித்தாந்தத்தை களங்கப்படுத்த மெனக்கெடுகிறார்.
சாதிய சங்கங்கள் தங்களின் சமூக உரிமைக்கான தளமாக செயல்பட்ட முந்தைய கால கட்டங்களில், பெரியார் அந்த சாதிய சங்கங்களுக்கு சென்று அவர்களின் இடஒதுக்கீடு மற்றும் சமூக, பொருளாதார அங்கீகாரத்திற்கான உரிமைகளைப் பற்றி பேசியதெல்லாம் இதற்கு வரலாற்றுச் சான்றாக இருக்கிறது. ஆனால் இன்றைய பெரும்பான்மையான சாதிய சங்கங்கள் தங்கள் சமூகங்களின் வளர்ச்சியை சிந்திக்காது, சாதிவெறியூட்டும் சங்கங்களாக இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தாலும், அதன் சார்பு கட்சிகளாலும் மாற்றப்படுகின்றன என்பதே கண்கூடாக இருக்கிறது. இந்த சாதிய சங்கங்களால், ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால், பொதுவானவர்களாக வாழ்ந்து பொதுநோக்கத்திற்கு பாடுபட்ட வரலாற்று வீரர்கள் சாதிய வட்டத்தால் சுருக்கப்படுவது நிகழ்கிறது. இதனால் அமைதியுடன் நினைவு கூற வேண்டிய அவர்களின் நினைவு நாட்கள் காட்டிரைச்சலுடன், கலவரத் தன்மையுடன் மாற்றுமளவு அந்த சாதியைச் சார்ந்த இளைஞர்களின் சாதிய உணர்ச்சி வேகம் இந்த கும்பலால் தூண்டப்படுகிறது. இந்தப் பின்னணி அனைத்தும் தெரிந்தவரே ஆளுநர். ஆனால் அவரின் ஆரிய சார்பான தனிப்பட்ட காரணத்திற்காக இந்தப் பழிகளை திராவிடக் கட்சிகளின் மீது போடுகிறார். திராவிடக் கட்சிகளின் மீது அரசியல் விமர்சனம் உண்டு என்றாலும், திராவிட சித்தாந்தத்தின் மீது வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் ஆளுநரின் அநாகரிகமான பேச்சை அதனோடு சமன்படுத்த முடியாது.
வெள்ளைக்காரர்களை எதிர்க்க மருது சகோதரர்கள் சாதி, மதம் கடந்து அழைத்த “ஜம்பு தீபகற்பப் பிரகடனம்” போலவே, சமூக முன்னேற்றத்திற்கு தடையாக நின்று சாதிப் பிரிவினையை வளர்த்து மேலாதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களை எதிர்த்து உருவாக்கப்பட்டதே 1916-ல் வெளியிடப்பட்ட “நீதிக்கட்சி – பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை” அறிக்கை. ஒரு சமூக இயக்கமாக சமூக விடுதலைக்குப் பாடுபட்ட நீதிக்கட்சி ஆட்சியில்தான் பார்ப்பனர் அல்லாதார் படிக்கும் வாய்ப்பு பெருகியது. அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பிரிட்டிசார் நிர்வாகம் செய்த அலுவலகங்களில் எல்லாம் பார்ப்பனியம் அனுபவித்துக் கொண்டிருந்த வேலைகளை வகுப்புவாரி உரிமை (இடஒதுக்கீடு) மூலம் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துவக்கப்புள்ளி நீதிக்கட்சியின் ஆட்சியில் வைக்கப்பட்டது. பிரிட்டிசாரை அனுசரித்து அரசுப் பணிகளை அனுபவித்த ஆரியப் பார்ப்பனியக் கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி இன்று “ஆரியம், திராவிடம் என்பதே இல்லை, அது பிரிட்டிசார் பிரிவினைக்காக ஏற்படுத்திய சூழ்ச்சி” என திரித்துப் பேசுகிறார்.
மருது பாண்டியர்கள் மக்களின் விடுதலைக்காக பிரிட்டிசாரை எதிர்த்து நின்று உயிர் கொடுத்த விடுதலைப் போராட்ட வீரர்கள் என்பது தமிழினத்தின் பெருமை. ஆனால் அந்தப் பெருமையை சனாதனப் பற்றாளரான ஆர்.என்.ரவி தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்வான திராவிட சித்தாந்தத்தை வீழ்த்த பயன்படுத்திப் பேசுவதை தமிழர்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது. தனக்கான ஆளுநர் பதவிக்குரிய பொறுப்புகளை விடுத்து பாஜக கட்சியின் அரசியல் பொறுப்பாளர் போல செயல்படும் ஆளுநரை வீட்டுக்கு அனுப்பும் வேலைகளை தமிழ்நாட்டு மக்களே செய்ய முடியும்.
இந்தியக் குடியரசு விழாவின் போது மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களால் அலங்கரித்த வாகனத்தைப் புறக்கணித்தததைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் கொள்ளாத இவருக்கு, திராவிடக் கட்சிகள் விடுதலைப் போராட்ட வீரர்களை மதிக்கவில்லை என்கிற கவலை எழும்புவது போலித்தனம். தமிழ்நாட்டின் நலத்திட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு ஒன்றிய அரசின் கைப்பாவையாக உலவும் ஆர். என் ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் மக்களைத் திரட்டும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களை உண்மையாக மதித்து, அவர்களின் உண்மையான புனைவற்ற வரலாறுகளை எடுத்து செல்லும் நோக்கத்துடன், நம் வீரர்கள் இணைந்து நின்று ஒற்றுமையாகக் களம் கண்ட வரலாற்றை மக்கள் அறியும் வண்ணம் மே 17 இயக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அவ்வாறு தொடரும் செயல்பாட்டில் “மானம் காத்த மருதுபாண்டியர்கள்” என தென்னிந்தியப் புரட்சியை வழிநடத்திய மருது சகோதரர்கள் குறித்தும் சிவகங்கை திருப்பத்தூர் பகுதியில் நடத்துகிறது.
அரசப் பரம்பரையில் இல்லாது குடியானவர்களாகப் பிறந்து, மக்களின் துயர் துடைக்கும் பாளையக்காரர்களாய் வாழ்ந்து, வெள்ளையர்களை எதிர்க்க சாதி, மதம் கடந்த தமிழர்களாய் மானத்துடன் திரண்டு நின்ற வரலாற்று நாயகர்களைப் போற்றுவோம். மருது சகோதரர்களின் புகழை வணங்குவோம்.
- மே பதினேழு இயக்கம்