திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொது விதியாகவும், குழந்தையைப் பெற்று வளர்த்தும், சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தம் வாரிசை பெறுவதற்குமான காரணியாகவும் பொதுப்படையாகக் கருதப்படுகிறது. எனின் உலகளவில் மனிதக் குழுக்கள் செய்து கொண்ட திருமண முறைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப பலவகையில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை ஆராய்ந்து, பல சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் திருமணம் பற்றி பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.

ancient loveஇனக்குழு வாழ்வு தொடங்கி தாய்வழிச் சமூகம், தந்தை வழி சமூகமாக நிலைபெற்ற பின்னர் வரையும் பல வகையில் குடும்பச் சூழல்களும் திருமண முறைகளும் மாறுபட்டு வந்திருக்கின்றன என்பதை முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும். திருமண வரையறைகள் ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு, பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல். பொருள் - II நூ. 43)

என்று சமூகத்தில் பொய்யும், தவறான பாலியல் ஒழுக்கக் கேடுகளும் தோன்றிய பின்னரே பெரியோர்கள் திருமணம் என்ற வரையறையை ஏற்படுத்தினர் என்பார்.

திருமணம் - அறிஞர் கருத்துக்கள்

Google - இணைய தளத்தில் Marriage and Domestic Partnership என்ற தலைப்பில்,

Marriage, Meaning the institution regulating sex, reproduction and family life is a route into classical philosophical issues such as the good and the scope of individual choice, as well as itself raising distinctive philosophical... என்று விளக்கிச் செல்கின்றது அதாவது,

உலகெங்கும் ஓர் ஆண், ஓர் பெண்ணுடனும் ஒரு பெண் சில ஆண்களுடனும், ஒரு ஆண் சில பெண்களுடனும், திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரிந்து பின்னர் வேறொருவருடனும் யென பலவகை போக்கில் நிகழ்கின்ற அனைத்து முறைகளையுமே திருமணம் (ஆயசசயைபந) என்ற சொல்லாலேயே அடக்குகின்றது. சாதாரணமாக ஆண், பெண் பார்த்து காதல் வயப்பட்டு நிகழும் திருமணம் முதல், வானில் பறந்து கொண்டே மணம் செய்து கொள்கின்ற புதிய கவர்ச்சியாக எல்லோரும் நம்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையுடனும், சாதாரண பந்தலிட்டும், உலகமே வியக்கும் அளவிற்குமென பல நிலையில் மணமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன, இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்திருமண முறைப்பற்றி, பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.

“மனித இனம் தன் பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்பிற்குள் நிறைவு செய்து கொள்ள ஏற்படுத்திய முறையே திருமணமாகும் (பக். 379, பண்பாட்டு மானுடவியல், பக்தவத்சலம்) என்கிறார் பண்பாட்டு மானுடவியலாளர் சமூகவியல் நூலில்,

“குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்காக ஏற்பட்ட திட்ட வட்டமான தொடர்புகளின் பால் உறவும் அமைந்த குழுவே குடும்பம் ஆகும் ” என்று மக்ஐவர் என்னும் சமூகவியலாளர் கூறுகிறார். “இரத்த உறவின் அடிப்படையில் ஏற்பட்ட இரு தலைமுறையினரின் சிறிய சமுதாய நிறுவனமே குடும்பம் ஆகும்” என்று சம்னர், கெல்லர் (Sumner and Keller) ஆகியோர் கூறுகின்றார்.” (பக். 124, சமூகவியல், சா. சாவித்ரி)

மேலும், ஆண், பெண் இருவரிடையே ஏற்படும் நிலைத்த உறவையே குறிப்பதாகும் என்று லோவி (Lowie) யும், குழந்தையைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்காக செய்யப்படும் ஒப்பந்தமே என பாலினோவ்ஸ்கியும் (Balinowshki) குறிப்பிடுகின்றனர். இதனுள் ஏங்கெல்ஸ் ‘குடும்பம், தனிச் சொத்து, அரசு தோற்றம்’ எனும் நூலில்,

தகராறுக்கு இடமில்லாத வகையில் தந்தையை உறுதிபடுத்தி, குழந்தையை உற்பத்தி செய்வதே அதன் நோக்கமாக இருந்தது. இவ்வாறு, தந்தையை உறுதிப்படுத்துவது ஏன் அவசியமாயிற்று என்றால், இந்த குழந்தைகளே பிற்காலத்தில் தந்தையின் வாரிசுகளாக, அவருடைய சொத்தைப் பெற வேண்டியிருந்தது’ என தந்தை வழிச் சமூகமான அடிமையுடைமை சமூகத்தில் தனிமையுடைமை சமூகமாய் நிலைபெற்ற பின்னர் தந்தையின் சொத்தை பெறவும், பாதுகாப்பதற்கும் குழந்தைப் பிறப்பும், தந்தை வழி சமூகமாதலால் ஆண் குழந்தையே முதன்மை தேவையெனவும் கருதினர். அங்கு பெண்கள் இன உற்பத்தி செய்யும் கருவியாகவே மாறினர். தாய்வழி சமூகச் சூழலை பின்வருமாறு குறிப்பிடுவர்.

“பூர்வீக குடியமைப்பில் தொடக்கத்தில் பெண்களே ஆதிக்க நிலையில் இருந்தனர். பூர்வீகக் குடி தாய்வழி மரபுடையதாய் இருந்தது. அக்காலத்தில் வேட்டையோடும் உணவு சேகரிப்போடு; கூட ஆரம்ப காலச் சாகுபடியும் சிறிதளவு நடைபெற்று வந்தது. வீட்டிலிருந்த பெண்களே பெரும்பாலும் சாகுபடியை நடத்தி வந்தனர். உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்த போது தாய்வழி மரபு மறைந்து தந்தை வழி மரபு தலை தூக்கியது. ஆடவர்கள் ஆதிக்க நிலை பெறலாயினர். நாடோடி முறையிலான கால்நடை வளர்ப்பின் உதயமே இந்த மாறுதலுக்கு பெருமளவு காரணமாக இருந்தது” (பக். 32, அரசியல் பொருளாதாரம், லெவ் லியேன்டியேவ்) என்று அரசியல் பொருளாதாரம் தாய்வழி மரபின் முடிவுறு நிலையை தெளிவுற விளக்கிச் செல்கின்றது.

தாய்வழிச் சமூகத்தில் (Matriarchal Family) பெண்ணே குடும்ப பொறுப்பிலும், தலைமை நிலையிலும், இருந்தனர். தந்தை வழிச் சமூகத்தில் (Patriachal Family) தந்தையே அதிகாரம் படைத்தவராகவும், பிறர் குடும்ப உறுப்பினர் அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தனர்.

“தாய் உரிமைக் குடும்பத்தில் குடும்பத் தலைவியே எல்லா அதிகாரங்களையும் கொண்டிருக்கிறாள். குடும்பங்கள் தோன்றிய காலத்தில் முதன்முதலில் அவை தாய்வழிக் குடும்பங்களாகவே அமைந்திருந்தன. சொத்துரிமையும் தாய்வழியிலேயே பெண்களுக்கு மட்டுமே இருந்தது. பழங்குடி மக்களிடையேயும் இந்தியாவில் கேரளத்திலும,; அஸ்ஸாமிலும் தாய் உரிமைக் குடும்பங்கள் காணப்படுகின்றன. தாய் உரிமைக் குடும்பத்தில் கணவன் தன்னுடைய மனைவியின் வீட்டில் வாழ்ந்து வந்து வாழ்கிறான். இவ்வாறு தாயின் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தங்குவதை அல்லது கணவன் வீட்டில் மனைவி தங்குவதை ‘வீட்டுக் குடும்பம்' என்று கூறுகின்றனர்.” (பக். 126, சாவித்ரி, சமூகவியல்) என்று தாய்வழி குடும்ப அமைப்பு முறையை சாவித்ரி, திறனாய்வாளர்கள் கருத்தின்படி விளக்கி செல்கின்றார். மேலும்,

“குடும்பத்தின் தலைமைப் பொறுப்பானது பெரும்பாலும் குடி வழி (descent), மரபுரிமை (Inheritance) போன்ற இன்றியமையாதக் கூறுகளால் நிர்ணயிக்கப்படுவதால் தந்தை வழியில் அமையும் குடும்பம் தந்தை வழிக் குடும்பம் என்றும், தாய்வழியில் அமையும் குடும்பம் என்றும் கூறப்படும். தாய்வழிக் குடும்ப முறை கேரோ, காசி போன்ற வட இந்தியப் பழங்குடிகளிடமும், காணிக்காரர், மலைப்பண்டாரம், முத்துவர், ஊராளி, தீயார் - போன்ற கேரளப் பழங்குடிகளிடமும் உள்ளது. நாயர்களின் குடும்பமான தரவாகு (taravad) தாய்வழி குடும்ப முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தந்தை வழி அமைப்பு சீமா, நாகரி, புரும் (Purum), லூஷைய் (Lushai), ரியாங் (Riang), பிங்கர், ஹோ (Ho), ஓரவன், காரியர், மரியா கோண்டு, காமர், பில்லர், செஞ்சு, தோடர் போன்ற பல இந்திய பழங்குடிகளிடம் உள்ளது. தமிழர்களின் குடும்ப முறையும் தந்தை வழியுடையதே, தாய் மாமனாட்சிக் குடும்ப முறை பிரோபிரியாண்டுத் தீவினரிடம் காணப்படுகிறது. அமெரிக்க இந்திய பழங்குடியினரான ஹோப்பி (Hopi) ஆப்பிரிக்க பழங்குடியான சூனி (Zuni) ஆகிய குடிகளிடமும் இம்முறை சற்று மாறுபட்ட முறையில் காணப்படுகிறது. தாய்மாமனாட்சிக் குடும்பமுறை தாய்வழிச் சமுதாயங்களில் மட்டுமே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.” (பக். 367, பண்பாட்டு மானுடவியல், பக்தவத்சல பாரதி) என்று தெளிவுபட மணமுறை நிகழ்வை கள வழி ஆய்வின் மூலம் விளக்குவதைக் காண முடிகிறது.

“திருமணத்தின் அடிப்படையிலும் குடும்பங்கள் வகைபடுகின்றன. இன்று குறைந்த எண்ணிக்கையிலான சமுதாயங்களில் ஒருவன் ஒருத்தியை மணந்து வாழும் ஒருதுணை மணமே (Monogamy) வழக்கமாக உள்ளது. இவ்வகை மணங்களால் ஏற்படும் குடும்பமுறை ஒருதுணை மனக்குடும்பம் (Monogamian Family) எனப்படும். இங்கு நேர்மாறாக ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களையோ, ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களையோ மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துவர். இவ்வகையான மணங்களால் ஏற்படும் குடும்ப முறை பல துணை மணக் குடும்பம் (Polygamous Family) எனப்படும். இவ்வகைத் திருமண முறைகளைக் கணக்கிட மர்டாக் எடுத்துக் கொண்ட 238 - சமுதாயங்களில் 193 - சமுதயாங்களில் இவ்வகைத் திருமணம் நடைபெறுகிறது.” (பக். 367, பண்பாட்டு மானுடவியல்) என்று G.P.Murdock அவர்கள் Social Structure எனும் நூலில் பொதுப்படையாக குறிப்பிட்டு செல்கின்றார்.

மேற்கூறியவற்றுள் பெரும்பாலும் மேலைநாட்டுக் கருத்தியலாகவும், சில கருத்துக்கள் உலகெங்கிலுமுள்ள ஒட்டுமொத்த மக்களைப் பற்றிய கருத்தாக்கங்களாகவும் சமூகவியலாளர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இந்திய, தமிழக வரலாற்றில் திருமணம்

மிக தொன்மையான நிலப் பகுதியாய் விளங்கக் கூடிய இப்பகுதியில் சிந்து சமவெளி (ஹரப்பா, மொகஞ்சதாரோ) எனப்படும் நாகரீகமும், தமிழகம், குஜராத் இன்ன பிற இடங்களின் வழியாக பழம்பெரும் நிலப்பகுதி என்பது வரலாற்று தொன்மையியலாளர்கள் ஆராய்ந்தனர், ஆராய்ந்தும் வருகின்றனர்.

சுமார் 5000 மொழிகள் வழக்கிலிருந்ததாகவும், அவற்றுள் 2500 மொழிகள் தற்போது வழக்கில் ஏதோ ஒரு நிலப்பகுதியில் பேசப்படுவதாகக் கருதப்படுகின்றது. அவற்றுள் சுமார் 1600-க்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் பேசப்படுகிறது. இதன் வழி பல நூறு ஆயிரம் குடிகள் இங்கு வாழ்ந்ததையும், வாழ்வதையும் அறிய முடிகிறது.

இங்குள்ள சமூகச் சூழலில் தாய்வழிச் சமூக திருமண முறையையும், தந்தை வழி சமூகச் சூழலையும் அறிய முடிகிறது. குறிப்பாக தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களையும் ஆங்காங்கே காண முடிகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் குல அடிப்படையிலான திருமண முறையே நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட திருமணமாக இருந்து வருகின்றது. குறிப்பாக வருண அடிப்படைக்குப் பின்னர் திருமண முறை மிகுந்த கட்டுப்பாடுடைய சூழலைக் கொண்டிருந்தது. தந்தை வழிச் சமூக குறையாயினும் அச்சமூகக் கட்டமைப்பிலேயே பல வகை நியதிகளும், வரையறைகளும் வகுக்கப்பட்டன. பெண்கள் பல கட்டுப்பாடுகள் உடையவர்களாக நிர்பந்திக்கப்பட்டனர்.

“இந்தியாவில் சாதி அமைப்புடைய சமுதாய முறை மலர்ச்சியடைந்த காலத்தில் மணத்துணையைத் தேடிக் கொள்வதில் சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக வர்ண அமைப்பு வலிமையாகப் பின்பற்றப்பட்ட காலத்தில் இம்முறை கண்டிப்புடன் செயல்படுத்தப்பட்டது. அதற்கான காரணங்கள் வருமாறு, ஓர் உயர்குடிப் பெண் கீழ்குடியைச் சேர்ந்த ஆணை மணந்து கொண்டால் மணப்பெண் அவள் சாதித் தகுதியை இழந்து விடுகிறாள். இங்கு சாதித் தகுதி என்பது சமய சார்புடைய ஒழுக்கத்தோடு (ritul purity) தொடர்புடையது. ஆகவே, ஒரு பெண் கீழ்சாதியைச் சேர்ந்த ஒருவனை மணந்து கொண்டால் திருமணம் வரை மணப்பெண் சாதி தகுதி உயர்ந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே பெண்களின் தகுதி குறையாமலும் அவர்களின் சமய ஒழுக்கத்திலிருந்து குறைவடையாமலும் இருக்கவும் வேண்டி ‘மனுஸ்மிருதி’ போன்ற பண்டைய இந்துச் சமய வழிபாட்டு நெறிகள் இரு திருமண நெறிகளைச் சுட்டிக் காட்டின.” (பக். 407, பண்பாட்டு மானுடவியல், பக்தவத்சல பாரதி.)

மேலும், இந்து சமயச் சாத்திரங்கள் குடும்பத்தின் தலையான பணி இன விருத்தி செய்வதே ஆகும் என்றும் கூறுகின்றது. ஒருவன் முதலில் மணந்த மனைவி மூலம் குழந்தை பெறத் தவறினால் இரண்டாம் முறை மணம் செய்யலாம் என்றும், இனப்பெருக்க முறையை நோக்காகக் கொண்டு ஒவ்வொரு சமுதாயமும் இக்கருத்ததை ஏற்கிறது. முறையற்ற பிறப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. அந்தந்த குலத்தில் இன்னும் சொல்லப் போனால் ஒரு குலம், அக்குலத்திற்கு உள்ளான உட்சாதிய கட்டமைக்குள்ளேயே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முறையையே இந்திய சமூகம் பொதுவாக பின்பற்றி வருகிறது.

“சில இந்திய பழங்குடிகளில் திருமணத்திற்கு முன் மணமக்கள் பல நிலைகளில் பழகும் வாய்ப்பு பெறுகிறாள். அசாம் மாநிலத்தில் வாழும் குக்கிப் (Kukki) பழங்குடியினர் வாழ்வில் மணமகன் அவன் தேர்ந்தெடுத்தப் பெண்ணின் வீட்டில் சில வாரங்கள் தங்கி, அனைத்து வகையான பொருளாதார, சமுதாய செயல்களிலும் ஈடுபடுவான். அக்காலத்தில் அவனது மனநிலை, தகுதி, திறமை போன்றவற்றைப் பெண் வீட்டார் மதிப்பிடுவர். அவனை மணமகள் வீட்டாருக்குப் பிடித்துவிட்டால் பின்னர் திருமணம் நடைபெறும். இவ்வகைத் திருமணம் தகுதிகாண் திருமணம் (Probationary Marriage) எனப்படும். பில்லர் (Bhils) பழங்குடியில் சமயச் சடங்குகளின் போது கம்பம் அல்லது மரத்தின் மீது தேங்காய்க் கட்டி அதனைச் சுற்றி பெண்கள் உள்வட்டமாக... (பக். 354, பண்பாட்டு மானுடவியல்)

இதனைப் போன்ற மணமுறைகள் பழங்குடி இனத்தவரிடத்தே ஆங்காங்கே காண முடியும்.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய வடமொழி நூல்களின் வழியாக, பல கணவர் மணமுறை, பலதார மணமுறை ஆகிய இருவகை மணமுறையையும் காண இயலும். குறிப்பாக, மஹாபாரதத்தில் பீ~;மனின் தந்தையின் இளைய மணையாளான சத்தியவதியின் மகன் விசித்திர வீரியனுக்கு இரு பெண்களைத் திருமணம் செய்ய முற்படுகின்றனர். திருமணத்திற்குப் பின்னரே வீரியன் இறந்து போக, விதவை எனும் நிலைக்கு ஆளாகுகின்றனர். அப்போது நாட்டை ஆள்வதற்கு வாரிசுகள் இல்லாத நிலை ஏற்படுகின்றது. அதனால் சத்தியவதியானவள் இரு பெண்களும் பிள்ளை பேறு பெற வேண்டும் எனும் நோக்கில் ஓர் பிள்ளை பேறு பெற வேண்டும் எனும் நோக்கில் ஓர் ஆடவனுடன் (அதாவது உயர்நிலையிலுள்ள, முனிவர் போன்று இருக்கக் கூடிய சிலரிடம் மட்டுமே இம்முறை நிகழ்ந்திருக்கின்றது.) உறவு கொள்ள செய்ததும், திருதராட்டினன், பாண்டு ஆகியோர் பிறந்ததும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. இவை தாய்வழி சமூகச் சூழலை நமக்கு எடுத்துரைக்கின்றது. அதே சூழலில், திருதராட்டினன் ஓர் மனைவியுடனே வாழ்ந்த நிலையையும் அறியலாம். இராமாயணத்தில் தசரதனுக்கு 3 மனைவிகள் இருந்ததும் இராமன் ஓர் மனைவியுடனேயே வாழ்ந்த நிலையையும் அறியலாம். இக்கதையில் வரும் ‘வாலி’ பாத்திரத்தின் வழியாக அவன் தம்பி சுக்ரீவனின் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்ட நிலை யாவும் சமூகத்தின் நிகழ்ந்த மணமுறை நிகழ்வுகளே ஆகும்.

தமிழக திருமண முறைகள்

‘தொல்காப்பியம்’ எனும் பழமை இலக்கண நூல் 8 வகை திருமண முறை பண்டைய காலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது.

“காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ் துணைமையோர் இயல்பே”
(தொல். பொருள் - II நூ. 89)

என்று உரைக்கிறது. எட்டு வகை திருமணமாவன,

1. பிரமம்
கன்னிப் பெண்ணொருத்தியை அணிகலன் அணிந்து பிரம்மச்சாரியாய் இருப்பவனுக்கு கொடுப்பது.

2. பிரசாபத்தியம்
மகளை கொடுப்பதற்குரிய குலத்தைச் சார்ந்தவர் மகளை வேண்டி வந்து கேட்க, ஒத்த குலத்தினர் இருவரும் ஒத்து போக நிகழும் திருமணம் (Arrange Marriage)

3. ஆரிடம்
பெண்ணோடு ஒன்றோ அல்லது இரண்டோ பசுக்கள் அல்லது ஆனேறு ஆகியவற்றோடு பெண்ணைக் கொடுப்பது.

4. தெய்வம்
வேள்விக்கு ஆரியராய் நின்ற பலருள்ளும், ஒருவருக்கு வேள்வித் தீ முன்னர் பெண்ணைக் கொடுப்பது.

5. காந்தர்வம்
ஒத்த ஆண், பெண் இருவரும் தாமாகக் கூடும் கூட்டம் (காதல் திருமணம்.)

6. அசுரம்
வில் ஏற்றி வலிமையின் பொருட்டு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது.

7. இராக்கதம்
பெண்ணைக் கட்டாயப்படுத்தி வலிந்து மணம் செய்து கொள்வது.

8. பைசாசம்
வயதானவர்கள், உறக்கத்தில் இருப்போர்களிடம் கொள்ளும் தகாத உறவு முறை.

என்று 8 வகை திருமணத்தினை பற்றியதாக தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் மேற்கண்டவாறு விளக்கம் தருகின்றார்.

மேற்கூறியவை வட பகுதியில் நிகழ்ந்த திருமண முறையென்று சிலர் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் கற்பு மணம் பற்றியும், உடன்போக்கு (தாமே இணையும் காதல் மணம்) ஆகிய இரண்டைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

கற்பு மணம்

“கற்பெனப் படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே”
(தொல். பொருள் நூ. 140)

என்று சுட்டப் பெறுகிறது. இதன் வழி, பெண்ணை பெற்றுக் கொள்வதற்குரிய மரபினை உடைய ஒத்த குலத்தார் கொடுத்தற்குரிய தலைவியை கொடுக்கும் மணமே ‘கற்பு மணம்’ என்றுரைக்கப்படுகிறது. இது அடிப்படையில் தந்தை வழி சமூகச் சூழலை வெளிப்படுத்துகின்றது.

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலை யான”
(தொல். பொருள் நூ. 141)

ஒத்த தகுதியையுடைய ஆணும், பெண்ணும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் செய்து கொள்ளும் காதல் திருமணம் ஆகிய உடன்போக்கு மணம் இரண்டும் பண்டைக் காலத்தில் நிகழ்ந்த மணமுறையாகும் என்பர்.

இவை பொது அடிப்படையில் கூறப்பட்டிருப்பினும் சங்க இலக்கியத்தில் வழியாகவும், தொல்காப்பியத்தின் வழியாகவும் பண்டையோர் சிலர் ‘பரத்தை’ வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டதை அறியலாம்.

ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ்ந்த சூழலிலும், தந்தை வழியான ஆணாதிக்கச் சமூக நிலையால் ஒரு ஆண் பல பெண்களுடன் கூடி வாழும் நிலையை ‘மருதத்திணை’ பாடல்கள் பலவும் எடுத்துரைக்கின்றது.

திருமண முறைகளுள் ‘கற்பு மணம்’ யார் செய்து கொள்ளுதற்கு தகுதியுடையோர் என,

“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர் காகிய காலமும் உண்டே.” (தொல். பொருள் - II நூ. 142)

என்று அந்தணர், அரசர், வணிகர் ஆகியோர்க்குரிய திருமண முறை கீழோராகியவருக்கு உண்டு என்று சுட்டுகிறது. இதில் அந்தணர் பற்றிய பல குழப்பங்கள் இன்னும் நிகழ்கிறது. இந்நூற்பா இடைச் செருகல் என்றும் சிலர் கூறுகின்றனர்.

“பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே” (தொல். பொருள் - II நூ. 220)

என்ற வழி பரத்தை வைத்து கொள்ளுதலையும் உரிமையெனவும் இயம்பினர்.

“பண்டையரசரும் பெருஞ்செல்வரும் பெரும்பாலும் சிற்றின்பவுணர்ச்சி சிறந்து காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற் பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமையால் ஓருயிரும் ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதப் பாண்டியனும் அவன் தேவியும் போன்ற ஒரு சில அரசக் குடும்பங்களிடையும், உழவரும் இடையரும் போன்ற பொது மக்களிடையும், புல மக்களிடையும் தாம் பெரும்பாலும் இருந்து வந்தது.” (பண்டைத் தமிழ நாகரீகமும் பண்பாடும், தேவநேயர், பக். 74)

என்று தேவநேய பாவாணர் பண்டைச் சமூகத்தை ஆராய்ந்து குறிப்பிடுவதும் நோக்கத்தக்கதாகும்.

மேலும், மன்னர்கள் பிற பெண்டிரைத் திருமணம் செய்து கொண்டதை ‘மகட்பாற் காஞ்சி’ யும் உணர்த்துகிறது. பெண் கேட்டு செல்லுதல், தர மறுத்தால் போரிடும் நிலையும் பழந்தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

வரலாற்று வழியில் ஆராய்கின்ற போது, பிற்கால சோழர்கள் தம் ஆட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட குலத்தினரின் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, தந்தை வழி சாளுக்கியரான முதல் குலோத்துங்கச் சோழன் (II -ம் இராசேந்திரன்) வடபகுதியில் ஆட்சி செய்தவன். சோழ மண்டலத்தை ஆட்சி செய்ய ஆண்மகன் இல்லாமையால் சோழ மண்டலத்தை தலைமை தாங்கி ஆட்சி செய்ததை அறிகிறோம்.

தமிழக இலக்கிய வரலாற்றில் காப்பியங்களின் வழி (கி.மு. 2. அதற்குப் பின்னர்) திருமணங்களை பற்றி அறியலாம். கோவலன், கண்ணகியை திருமணம் செய்து கொண்டமையும் (ஒத்த குலத்தார் மணமுறை, மாசாத்துவான், மாநாயக்கன் பெருவணிகர்கள்) அதன் பின்னர் மாதவியை காமக் கிழத்தியாக வைத்துக் கொண்டு வாழ்ந்த சூழலையும், அவளோடு கூடி ‘மணிமேகலை’ என்ற பிள்ளையை பெற்றதையும் அறியலாம்.

சீவக சிந்தாமணியில் சீவகன் 8 பெண்களைத் திருமணம் செய்து கொண்டமை யாவும் அடிப்படையில் ஆணாதிக்க சூழலை தெளிவுற எடுத்துரைக்கும்.

தமிழகத்தில் நில அடிப்படையில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களை, ஆயர் - ஆய்ச்சியர்; குறவர் - குறத்தியர்; உழவர் - உழத்தியர், நுழையர் - நுழைச்சியர் ஆகியோர் முறையே தத்தம் குலத்திலுள்ளோரையே மணம் செய்திருக்க வேண்டும். ஆண்கள் வேறு பெண்ணோடோ, பெண்கள் வேறு ஆடவனோடே இருந்ததாகக் குறிப்பு இல்லை. எனினும் சில புராண கதை வழி சில செய்திகளை அறிய முடிகிறது. முருகன் தெய்வாணைக்கு பிறகு ‘வள்ளி’ என்ற வேட்டுவ பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை சான்று காட்டலாம்.

மேலும், ‘ஏறு தழுவுதல்’ மூலம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட நிலையை ‘கலித்தொகை’ வழி அறிய முடிகிறது. இது இந்நிலத்தில் தான் நிகழ்ந்தது என சான்று இல்லை. எனின், ஆயர் குடிகளிடம் இவ்வழக்கம் தோன்றி அது பிற நிலத்து எங்கும் பரவியிருக்கலாம்.

பக்தி இலக்கிய காலத்துள், சுந்தரர் சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் ஆகிய இருவரை திருமணம் செய்து கொண்ட சூழலையும் அறிகிறோம்.

“தன் மனைவியைச் சிவனடியார் ஒருவரிடம் சேர்ந்திருக்க விட்டதாக இயற்பகை நாயனார் புராணமும், வறுமையில் மனைவியையே விற்றதாகக் கலியநாயனார் புராணமும் பேசுகின்றன. இவற்றைச் சமுதாய பொது மரபாகக் கொள்ளுதற்குப் போதிய சான்று இல்லை. தன் மனைவி திரௌபதியைப் பந்தய பொருளாக வைத்து சூதாடியது போல, இழந்தது போல சான்றுகளும் கிடைக்கவில்லை.” (பக். 216, தமிழ் மக்கள் வரலாறு, க.ப. அறவாணன்)

அரிச்சந்திர புராணத்தில் தன் மனைவியை விற்கும் நிலையையும், சிலப்பதிகாரத்தில் மாதவியை விலை கொடுத்து வாங்கும் நிலையையும் அறிய முடிகிறது.

புறநானூற்றில்,

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறு யில்லைத் தாம் வாழு நாளே” (புறநானூறு. 188)

என்று மனை வாழ்க்கையில் நன்நலம் நன் மக்கட்பேறே ஆகும் என்றும்,

“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே”
(புறம். பா. 312)

என்று, குழந்தை பெற்றெடுத்து தருதல் பெண்ணின் கடமையென சுட்டப்படுதலையும், குழந்தை செல்வமே முதன்மைச் செல்வமென கருதப்பட்டதையும் அறிகிறோம்.

ஆணும் பெண்ணுக்குமான இன்ப நுகர்வு உணர்ச்சியின் தேடலாய் மணம் அமைகின்றது. அதாவது ஓர் உயிர் பிற ஒத்த உயிரோடு இணைதலே இயற்கை விதியானது. இவ்வியற்கை விதியில், சமூகத்தின் விதிகளால் பல்வகையான சூழலுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக தாய்வழி சமூகத்திற்குப் பின்னர் தந்தை வழி சமூகத்தில் சொத்துடைமை பாதுகாக்கும் பொருட்டும், வலிமையை நிலைநாட்டுதல் பொருட்டும் ஆண் மகனே ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையென கருதப்பட்டிருக்கிறது. பெண்களின் தேவையோ குழந்தை பெற்று வளர்ப்பதற்கான நிலையிலேயே நின்றுவிட்டது.

குழந்தையை பெற்றெடுத்தவள் பெண்; எனின் அப்பெண்ணிற்கு சொத்தில் பங்கு இருந்ததா என்றால் இல்லை; குழந்தையை வளர்ப்பவள் தாய்; ஆனால் அரசாட்சி செய்தாளா எனில் இல்லை. அதிகார வர்க்கம் அதிகாரத்தில் இருந்த பெண்களை ‘இன உற்பத்தி செய்யும் கருவி’யாகவே பாவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் கூட பெண் பிள்ளையை கள்ளிப்பால் வைத்து கொல்லும் கொடிய பழக்கத்தையும் கொண்டிருந்தனர். இக்காலம் வரையும் திருமணம் ஆணின் ஆதிக்கத்திலேயே நிலைபெற்று இருக்கிறது. மாறுபாடான பெண்ணின் சிந்தனையும் அழிவை நோக்கியே பயணிக்கிறது.

துணை நூல்கள் :

1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை (அடிகளாசிரியர் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர். மு.ப. 2008.
2. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மு.ப. 1947.
3. புறநானூறு, உ.வே. சாமிநாதர் உரை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை. ஏ.ப: 1971.
4. சமூகவியல், சா. சாவித்ரி, மோகன் பதிப்பகம், சென்னை. மு.ப. 1987.
5. பண்பாட்டு மானுடவியல், பக்தவத்சல பாரதி, வல்லினம் பதிப்பு, மு.ப. 2005.
6. தமிழ் மக்கள் வரலாறு, க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை. மு.ப. 2005.
7. பண்டைத் தமிழ நாகரீகமும் பண்பாடும், தேவநேயர், தமிழ் மண் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை. மு.ப. 1996.
8. Google இணையதளம்.
9. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு & பிற இலக்கிய சமூகவியல் நூல்கள்.

- முனைவர் பா.பிரபு, உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306.