முன்னுரை

        உலகியலைப் படம் பிடித்து அழகாக காட்டிய புலவர்களது நூல் காலங்கடந்து நிற்க வேண்டுமெனில் அக்கால இயல்பைக் காட்டுவது மட்டுமின்றி அக்காவியத்தினுள் காணக்கிடக்கும் அக்கால மக்களின் பண்பாட்டையும் உயிர்போன்று விளக்கிக் காட்ட வேண்டும். அத்தகைய சிறந்த, உயர்ந்த, ஒப்பற்ற பண்பாட்டை விளக்கிக் காட்டும் நூல்தான் காலத்தினால் தொன்மையான தொல்காப்பியம். இந்நூல் கருத்தின் செழுமையினால் செப்பமானது, பழந்தமிழ் நாகரிகத்தின் செம்மையினையும், செம்மாந்த பெருநிலையினையும் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டும் ஒப்பற்ற ஒளி விளக்கமாகும். அவ்வகையில் ஈராயிரம் ஆண்டுகட்டு முற்பட்ட தமிழ்ச் சமுதாய பண்பாட்டு வரலாற்றை தொல்காப்பியத்தின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்பாடு

        “பண்பாடு உடையவரைச் சான்றோர் என்றும், ஒழுக்கமுடையோர் என்றும், ஒளியோரென்றும், மாசற்ற காட்சியுடையோர் என்றும் அழைத்தனர். ஆங்கிலத்தில் Calture  எனப்படும் சொல்லைத் தமிழில் பண்பாடு என்று குறிப்பிடுகின்றோம். ஆங்கிலச் சொல் எவ்வாறு இலத்தீன் சொல்லாகிய Cultura Agri  நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து பிறந்ததோ அதுபோல தமிழ்ச் சொல்லாகிய பண்பும் நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். உழவுத்தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தையும் மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான் ‘பண்பாடு’ என்னும் பொருளில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்” என்று பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் கூறுவார்.

        தமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்து வந்த இலக்கியங்களும் கவின் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை, தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநாநூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பனவாகும்” என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்தாகும்.

        கலித்தொகையில் “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுவதும்”  - (கலி.பா.134), என்றும், திருக்குறளில் “பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்” - (குறள்.996) என்றும் பண்பாடு குறித்த சொற்கள் வருவதைக் காண முடிகிறது.

        எனவே, பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு, பொழுபோக்கு, விளையாட்டுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

பொருளதிகாரம்

        தமிழர்களின் வளமான வாழ்வை, செழிப்பான சீர்மையை அறிய தொல்காப்பியத்தில் பொருளதிகாரமே மிகவும் பயன்படுவதாக அமைவதால் அதன் துணை கொண்டே இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல். கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.

அக வாழ்வு

        ஆணும் பெண்ணும் அன்போடு ஒன்று பட்டுக் கூடி வாழும் வாழ்வே அகவாழ்வாகும். ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் ஏற்படும் இன்பத்தை எவராலும் வெளிப்படையாக எடுத்துரைக்க முடியாது. அஃது அவர்கள் உள்ளத்தால் உணரும் ஒப்பற்ற இன்பமாகும். அவ்வாறு அகத்திலே நிகழும் இன்பத்தையே அகத்திணை என்றனர்.

        அகத்திணை கைக்கிளைத்திணை, குறிஞ்சித் திணை, பாலைத் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பெருந்திணை என்று ஏழு வகைப்படும்.

                        “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

                முற்படக் கிளந்த எழுதிணை என்ப” – (தொல்.பொருள்.அகத்.நூ.1)

        அஃது, தொல்காப்பியருக்கு முன்பிருந்த தமிழர்கள் தமது அக வாழ்வினை வகுத்துக் கொண்ட முறையாகும். கைக்கிளை என்பது ஆண், பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும் காதல் உணர்வு ஏற்படுவதாகும். அஃதாவது காதல் வயப்பட்ட ஒருவன், பருவம் அடையாத இளம் பெண் ஒருத்தியிடம் காதல் கொள்வது இதனால் பருவம் அடையாத பெண்களை மணந்து கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்கிறார். அப்படியானால் பால்ய விவாக முறை இருந்தது என்பது தெளிவாகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். பிறர் பழிக்கும் வகையில் கணவனும் மனைவியும் காம வெறி கொண்டு வாழ்தல். இந்தக் கைக்கிளை, பெருந்திணைகளைப் பற்றிச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. ஆதலால் இந்த இரு திணைகளும் தொல்காப்பிய காலத் தமிழர்களால் அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை என்பதை அறியமுடிகிறது.

ஐந்திணை

                “அவற்றுள்

                நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்

                படுதிரை வையம் பாத்திய பண்பே” - (தொல்.அகத்.நூ.2)

        என்ற நூற்பாவால் தொல்காப்பியர் கால மக்கள் நானிலத்தை அடிப்படையாகக் கொண்டே வாழ்ந்தனர் என்பதை உணரமுடிகிறது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாகும். சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில்,

                “முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து

                நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்

                பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” – (சிலம்பு.11.64-66)

        என்று காட்டப்பெறும், பாலை நிலம், தொல்காப்பியத்தில் ‘நடுவு நிலைத்திணை’ என்று கூறப்பட்டுள்ளது.

                        குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஒழுக்கங்கள் அந்தந்த நிலங்களிலேயே நடைபெறுவன. இவை போலக் கைக்கிளைத் திணைக்கும், பெருந்திணைக்கும் தனித்தனி நிலங்கள் குறிக்கப்படவில்லை.

குறிஞ்சித்திணை

        குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒழுக்கத்தைப் பற்றி உரைப்பது. மக்கள் வாழும் மலையும், மலைச்சாரலும் குறிஞ்சி நிலம். சேயோன் என்பவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம். சேயோனை முருகன் என்பர். இதனை,

                “சேயோன் மேய மைவரை உலகமும்”  - (தொல்.பொருள்.அகத்.நூ.5)

        என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

        கண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்த மலையிலோ, மலைச்சாரலிலோதான் முதலில் காதலர்கள் சந்திப்பு ஏற்படும். இருவரும் ஒருமனப்பட்டுக் கணவன் மனைவியாக வாழ்வார்கள். இவர்களுடைய சந்திப்பைப் பற்றியும், இதற்கான காரணங்களைப் பற்றியும் எடுத்துரைப்பதே குறிஞ்சித் திணையாகும். குறிஞ்சித்திணையின் ஒழுக்கம் தம்பதிகளாதல்.

பாலைத்திணை

        நீரற்று வறண்டு போன நிலப்பகுதியே பாலை நிலம், தொல்காப்பியர் பாலைக்குத் தனி நிலம் குறிக்க வில்லை. முல்லையிலும் பாலை தோன்றலாம்; குறிஞ்சியிலும் பாலை தோன்றலாம்; மருத்திலும் பாலை தோன்றலாம்; நெய்தலிலும் பாலை தோன்றலாம்; வானம் பொய்த்து வறண்டு போன எந்த நிலத்திலும் பாலை தோன்றும். பாலைக்குத் தனித் தெய்வமும் கூறப்படவில்லை. எந்த நிலத்தில் பாலை தோன்றுகிறதோ அந்த நிலத்துத் தெய்வமே பாலைக்கும் தெய்வமாகும். காதலன் தன் காதலியை விட்டுப் பிரிந்து செல்வதைப் பற்றி சொல்வதும், பிரிவதற்கான காரணங்களைச் சொல்வதும் பாலைத்திணை, பாலைத்திணையின் ஒழுக்கம் பிரிவாகும்.

முல்லைத்திணை

        காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலமாகும். முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன் (திருமால்) என்பதை, “மாயோன் மேய காடுறை உலகமும்” - (தொல்.பொருள்.அகத்.நூ.5) தொல்காப்பியம் சுட்டுகிறது. பிரிந்து போன காதலன் திரும்பும் வரையிலும் காதலி தன் கற்பின் வலிமையால் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பது முல்லை ஒழுக்கம். அவள் ஆறுதலோடு இருப்பதற்கான காரணங்களைக் கூறுவதும் முல்லைத் திணையே. முல்லைத்திணையின் ஒழுக்கம் இருத்தல் ஆகும்.

மருதத்திணை

        நீர் வளமும், செல்வம் கொழிக்கும் நிலவளமும் அமைந்த நிலப்பகுதிகளும், ஊர்களும் மருத நிலமாகும். மருத நிலத்தின் தெய்வம் வேந்தன். மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்றதனால் நல்ல அரசும், நாகரிகமும் அமைந்த இடமே மருத நிலம் என்பதைக் காணமுடிகிறது. பிறகாலத்தவர் வேந்தனை இந்திரன் என்றனர். ”வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” - (தொல்.பொருள்.அகத்.நூ.5) என்பது தொல்காப்பியம். காதலன், காதலி இடையே தோன்றும் ஊடல்; ஊடல் உண்டாவதற்கான காரணங்கள்; பாணன், கூத்தன், பாங்கன், தோழி, விறலி, பார்ப்பான் முதலியோர் தூதர்களாயிருந்து இவர்கள் ஊடலை நீக்கிக் கூடி வாழச் செய்யும் நிகழ்வுகள் ஆகிய இவை பற்றி எல்லாம் எடுத்துக் கூறுவது மருதத்திணை. மருதத்திணையின் ஒழுக்கம் ஊடல் ஆகும்.

நெய்தல் திணை

        கடற்கரையும் கடற்கரையைச் சேர்ந்த இடங்களும் நெய்தல் நிலம். நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன். “வருணன் மேய பெருமணல் உலகமும்” -(தொல்.பொருள்.அகத்.நூ.5) என்பது தொல்காப்பியம். காதலன் பிரிவை எண்ணிக் காதலி மனம் வருந்துதலும், தன் உள்ளத்துயரத்தை வாய்விட்டு உரைப்பதும் நெய்தல் திணையே. இரங்கல் என்னும் செய்தியே நெய்தல் ஒழுக்கமாகும்.

பண்டைத்தமிழர் திருமணம்

        தமிழர் திருமண முறை களவு, கற்பு என இருவகைப்படும். இதில் களவு மணம் என்பது பெற்றோர், உற்றார், உறவினர் ஆகியோர் அறியாமல் ஓர் ஆணும் பெண்ணும் மறைவில் மணமக்களாக வாழ்தல். இவ்வாறு ஊரார் அறியாமல், உறவினருக்குத் தெரியாமல் நடத்தும் வாழ்வே களவு மணமாகும். இந்தக் களவுச் செய்தி பெண்ணின் பெற்றோருக்குத் தெரிந்ததும், பெண்ணை வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெற்றோரை மீறிச் சென்றால் தடுத்து விடுவார்கள். அப்போது அவளுடன் கூடி வாழ்ந்த ஆடவன், உறவினர் மூலம் பெண் கேட்கச் செய்வான். அவர்களும் சம்மதிப்பார்கள். சில சடங்குகளுடன் மணவினை நடைபெறும். இப்போது இருவரும் வெளிப்படையாக இல்லறம் நடத்துவர். இதற்குக் கற்பு மணம் என்று பெயர். இந்த இருவகை மணத்தைத் தொல்காப்பியர், “வெளிப்பட வரைதல், படாமை வரைதல் என்று ஆயிரண் டென்ப வரைதல் ஆறே” - (தொல்.பொருள்.களவு.நூ.30) என்று கூறுவார். எனவே, களவு மணம் நடைபெறாமல் கற்பு மணம் நடைபெறுவதில்லை என்பதற்கு இந்த நூற்பாவே சான்றாகும்.

காலம்

        காலத்தைப் பகுக்கையில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பெரும்பொழுதையும், மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு என ஆறு சிறு பொழுதையும் கொண்டனர்.

உணவும் தொழிலும்

        குறிஞ்சி நில மக்கள் மூங்கில் அரிசி, திணை, தேன், மலையில் விளையும் கிழங்கு முதலியவற்றை உண்டனர். அருவி, சுனை நீரைக் குடித்தனர். யாழ், தொண்டகப்பறை முதலியவற்றைப் பயன்படுத்தினர். வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டனர். முல்லை நில மக்கள் வரகு, சாமை, கொள்ளு, கடலை, அவரை, துவரை முதலியனவற்றைப் பயிரிட்டு அவற்றை உண்டனர். முல்லை மலர்களைச் சூடினர். மக்கள் நிரை மேய்த்தல், புன்செய்ப் பயிர் செய்தல் ஆகிய தொழில்களைச் செய்தனர். ஆடு, மாடு முதலியவற்றை மேய்த்து அவற்றின் பால், தயிர், நெய் முதலியவற்றையும் உண்டனர். மருத நிலத்தில் உள்ளவர்களே நிலையாக வாழ்ந்து நாகரிகத்தை வளர்த்தவர்கள் எனலாம். செந்நெல்லும் வெண்ணைல்லுமே உணவு. மக்கள் நெற்பயிர் செய்தல், நெல்லரிதல் முதலிய தொழில்களைச் செய்தார்கள். நெய்தல் நிலத்தில் மீன் முக்கிய உணவு அதனை விற்று விலையாகப் பெறும் உணவுப் பொருள்களையும் உணவாகக் கொண்டனர். மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் முதலிய தொழில்களைச் செய்தனர். பாலை நிலத்தில் வழிப்பொருள் பறித்தலும் கொள்ள கொள்ளுதலுமாகிய தொழில்களைச் செய்து அவற்றால் கிடைக்கும் பொருட்களே உணவிற்குப் பயன்படுத்தப்பட்டன.

கலை

        ஒவ்வொரு நிலத்திலும் பறையொலிக்கும் தொழில் பறையனுக்கும், இசைத்தொழிலாகிய பண் பாடும் தொழில் பாணனுக்கும் அமைந்திருந்தது. இது போன்று பாணன், பறையன், கடம்பன், துடியன் என்ற நால்வகைக் குடிகளும் பரம்பரையாக நிலைத்த குடிகள் என்ற குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது. ஒவ்வொரு நிலத்திலும் வெவ்வேறு யாழைப் பயன்படுத்தியதால் பண்டைத் தமிழர் இசைக் கலையில் மிகத் தேர்ச்சியுற்றோர் என்பது தெளிவாகிறது.

வழக்கம்

        பண்டைக்காலத்தில் பெண்டிரைக் கப்பலில் அழைத்துக் கொண்டு பொருளீட்டல் பொருட்டு அயல்நாடு செல்லும் வழக்கம் இல்லை என்பதை, “முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை” - (தொல்.அகத்.நூ.37) என்னும் நூற்பாவால் அறியமுடிகிறது.

புறவாழ்வு

                “அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்

                புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்

                வெட்சி தானே குறிஞ்சியது புறனே” - (தொல்.புறத்.நூ.1)

        என்னும் நூற்பாவைக் கொண்டு அகத்திணையாகிய குறிஞ்சிக்குப் புறத்திணையாக அமைவது வெட்சி என்பதை அறியமுடிகிறது.

        அகத்திணையை ஏழாக வகுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இந்தப் புறத்திணைகளிலேயே தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் நடைபெற்ற போர் முறைகளைக் காணலாம். போரிலே தமிழர் காட்டிய வீரச் செயல்களை அறியலாம். தமிழரின் அரசியல், கொடை, புகழ் ஆகியவைகளையும் உணர முடிகிறது. உலக நிலையாமையும், அறவுரைகளும் இவற்றுள் காணப்படுகின்றன.

வெட்சித்திணை: போர் புரிய கருதிய வேந்தன் எதிரில் பசு மந்தையைக் கவர்வதும், கவர்ந்த பசு மந்தையை எதிரி மீட்டுக் கொள்ளுவதும் வெட்சித்திணை. வஞ்சித்திணை: ஒரு மன்னன் தன் பகைவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்குப் படையெடுத்துச் செல்வதும், பகை வேந்தன் அவனை எதிர்ப்பதும் வஞ்சித்திணை. உழிஞைத்திணை: படையெடுத்துச் சென்ற வேந்தன் பகைவனுடைய கோட்டை மதிலை வளைத்துக் கொள்ளுவதும் உள்ளிருக்கும் வேந்தன் அம்மதிலைக் கைவிடாமல் காப்பாற்றுவதும் உழிஞைத்திணையாகும். தும்பைத்திணை: ஒரு வேந்தன், தனது நாட்டின் மீது படையெடுத்து வந்த வேந்தனை எதிர்த்துப் போர் செய்து அவனுடைய வலிமையை அழிப்பது தும்பைத்திணை. வாகைத்திணை: பகைவரை வெல்லுதலும், ஒவ்வொருவரும் தத்தம் செயல்களை வெற்றி பெறச் செய்தலும் வாகைத்திணை. காஞ்சித்திணை:        உலகம், இளமை, செல்வம் இவைகளின் நிலையாமையைப் பற்றியும் மற்றும் பல அறிவுரைகளையும் கூறுவது காஞ்சித்திணை. பாடாண்திணை: மக்களைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ, அவர்களுடைய ஒழுக்கம், வீரம், புகழ், கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணையாகும்.

முடிவுரை

        குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணை நிகழ்வுகளைப் பற்றியே தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது. அகப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்கள் அனைத்தும் இந்த ஐந்திணை நிகழ்ச்சிகளையே அழகுபட எடுத்துரைக்கின்றன. ஒத்த பருவமும், ஒத்த உருவமும், ஒத்த குணமும், ஒத்த அறிவும், ஒத்த நிலைமையும் உடைய ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே காதல் மணமாகும். இவ்விருவருள் பெண்ணைக் காட்டிலும் ஆணின் தரம் உயர்ந்ததாகவும் இருக்கலாம். இத்தகைய மனமொத்த இருதம்பதிகளுக்குள் நடைபெறும் காதல் நிகழ்வுகளைப் பற்றியே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் கூறுகின்றன.

        கைக்கிளையும், பெருந்திணையும் சிறந்த ஒழுக்கமல்ல ஆயினும் அவ்வொழுக்கங்களும் தமிழ் மக்களிடையே நடைபெற்று வந்தன. அவைகளும் வெளியில் சொல்ல முடியாத அகவொழுக்கங்களாகவே கருதப்பட்டன. ஆகையால் அவைகளையும் அகத்திணையுடன் சேர்த்துள்ளனர். முன்னோர் பின்பற்றியவற்றையே தொல்காப்பியரும் கூறியுள்ளார். தொல்காப்பியம் புறத்திணையை ஏழு பகுதியாகவும், அகத்திணையை ஏழு பகுதியாகவும் வகுத்துக் கூறுகின்றது. மக்களின் வாழ்க்கைச் செய்திகள் அனைத்தும் இவ்விரு திணைகளில் அடங்கி விடுகிறது. தொல்காப்பியர் கால மக்களின் பண்பட்ட பழக்க வழக்கங்கள் சிறப்புற்றிருந்தன என்பது தெள்ளிதின் புலனாகின்றது.

- முனைவர் ச.அருள், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), மன்னன் பந்தல், மயிலாடுதுறை  - 609 305