நாடு முழுவதும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. மாநிலங்கள் கேட்கும் தடுப்பூசிக்கும் மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
இதே நிலை நீடித்தால் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட சில ஆண்டுகள் ஆகலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வைத்திருக்கும் போது இந்தியாவை ஆளும் மகாராஜா இருந்த தடுப்பூசிகளை எல்லாம் தானதர்மம் செய்து விட்டு இப்போதுதான் தடுப்பூசி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு வாங்க ஆரம்பித்து இருக்கின்றார்.
இதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிர் கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தினம் தினம் கொத்துக் கொத்தாக மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதுவரை இந்தியாவில் 3,37,989 பேர் உயிரிழந்து இருக்கின்றார்கள். ஆனால் இப்போதுதான் இந்தியா 20 கோடியே 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 84.2 கோடியாகும் என்பதை கருத்தில் கொண்டால் மொத்தமாக ஊசி போட்டு முடிப்பதற்குள் அதுவும் முதல் டோஸ் போட்டு முடிப்பதற்குள் நாடே பாதி சுடுகாடாக மாறிவிடும்.
கொரோனா பெருந்தொற்று இந்திய சுகாதார கட்டமைப்பின் சீரழிவையும் அதன் கோர முகத்தையும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. வல்லரசு கனவில் மிதக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் வெற்று பிதற்றலை கேலி செய்திருக்கின்றது.
நிச்சயம் ஒரு பெருந்தொற்றை சமாளிக்கும் அளவுக்கு இந்திய மருத்துவ கட்டமைப்பு இல்லை என்பதோடு அப்படியான தோல்விக்கு இந்த அரசின் தீவிரமான முதலாளித்துவ ஆதரவு போக்கும் முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியாவில் மருத்துவ துறை ஏறக்குறைய 75 சதவீதம் தனியாரின் கட்டுப் பாட்டிலேயே உள்ளது.
10 ஆயிரம் பேருக்கு 3 மருத்துவர்களும், 3 செவிலியர்களும் மட்டுமே உள்ளார்கள். 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நாட்டில் மொத்தம் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 13 ஆயிரத்து 986 தான். இதன் தேசிய சராசரி ஆயிரம் மக்களுக்கு 0.55 படுக்கைகளாகும்.
12 மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவான படுக்கை வசதிகள் தான் உள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் 55 ஆயிரம் படுக்கை வசதிகள்தான் உள்ளன. 2017-2018 ஆண்டு பொது சுகாதாரத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.28 சதவீதம் மட்டுமே ஆகும்.
அரசாங்கம் இந்தியாவின் வறிய மக்களின் உயிரை கிள்ளுக் கீரையாக நினைப்பதால் தான் மருத்துவ கட்டமைப்பை இப்படிப்பட்ட இழிவான நிலையில் வைத்திருக்கின்றது. அதன் காரணமாகத்தான் கங்கையில் ஆயிரக்கணக்கான பிணங்கள் மிதந்து கொண்டு இருக்கின்றன.
சுடுகாடுகள் இடைவிடமால் எரிந்து கொண்டு இருக்கின்றன. மோடி அரசாங்கம் நடத்தும் கொரோனாவிற்கு எதிரான போரில் பெரும்பாலும் வீழ்த்தப்படுவது கிருமிகளைவிட சாமானிய மனிதர்களின் உயிர்தான்.
அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகளும் மருந்துகளும் ஆக்சிஜன் வசதியும் இல்லாததால் பெரும்பாலான சாமானிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கியே தள்ளப்படுகின்றார்கள். இதனால் மிக வறிய நிலையில் இருக்கும் மக்கள் மீள முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படுவதோடு அவர்களின் குறைந்த பட்ச வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வருகின்றது.
ரங்கராஜன் கமிஷன் அறிக்கையின் படி, நாளொன்றுக்கு நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் கிராமப்புறத்தில் 32 ரூபாயும் செலவழிக்க முடியாத 36.3 கோடி வறிய மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் உண்மையில் மிக வறிய மக்களையும் ஒப்பிட்டளவில் அதாவது நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் கிராமப்புறத்தில் 32 ரூபாயும் செலவழிக்க முடிந்தவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 80 கோடியாகும்.
இதை 2020-ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்குக்கான நலத் திட்ட அறிவிப்பு உரையின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
அரசாங்கங்கள் திட்டமிட்டே மருத்துவ கட்டமைப்பை தனியார் மயப்படுத்தி அரசு மருத்துவமனைகளை சீரழித்ததன் விளைவை நேரடியாக எதிர்கொள்ளப் போவது இந்த வறிய மக்கள்தான்.
மருத்துவ செலவுகளுக்காக அதிக அளவில் செலவிடுவதால் ஆண்டுதோறும் குறைந்தது 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
3.8 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படுகின்றார்கள். இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 20 சதவீதமான தற்கொலைகள் மருத்துவ காரணங்களினால் மட்டும் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
கொரோனா பெருந்தொற்றால் உண்மையில் இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானதாக மக்கள் இறந்திருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி இருக்கின்றார்கள்.
அப்படி இறந்தவர்கள் பெரும்பாலும் சாமானிய மக்களே ஆவார்கள். காரணம் இவர்கள்தான் எந்த நோய்தொற்று ஏற்பட்டாலும் கிருமிகளின் தாக்குதலுக்கு எளிய இலக்காக இருப்பவர்கள்.
இந்தியாவில் வயது வந்தோரில் 33.3 சதவீதம் பேரின் உடல் நிறை குறியீட்டு அளவு(BMI) 18.5க்கும் குறைவாகவே உள்ளது. இது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறிப்பதாகும்.
மேலும் ஐந்துவயதுக்கு உட்பட்ட 47 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2020 ஆண்டு உலகளாவிய பசி குறியீட்டு எண்ணில் 107 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையானது ஒரு நாட்டில் வறிய மக்கள் அனைவரையும் மரணத்தை நோக்கி நிச்சயம் தள்ளும் என சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
கொரோனாவை காரணம் காட்டி பல மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்து ஏற்கெனவே வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்த மக்களை உறுதியாக சாவை நோக்கி தள்ளியுள்ளன.
எப்போதுமே அறிவிக்கப்படும் ஊரடங்குகள் நாட்டின் வளங்களில் 77 சதவீதத்தை வைத்திருக்கும் 10 சதவீத பெரும் முதலாளிகளை பாதிக்காத வகையிலும் தினம் உழைத்தால் தான் ஒரு வேளை சோறு என்றிருக்கும் மக்களை மீண்டும் மீண்டும் வேதனையில் தள்ளும் வகையிலும் தான் கொண்டு வரப்படுகின்றன.
இன்னும் மூன்றாம் அலை நான்காம் அலை எல்லாம் வரிசையாக வரும் என்று சொல்கின்றார்கள். ஆனால் அரசாங்கங்களோ எந்த அலைக்கு அசையாத பாறைகளை போல இருக்கின்றன.
மனித உணர்ச்சிகள் மறுத்துப் போன மனிதர்கள் ஆட்சியாளர்களாக இருக்கும் நாட்டில் பிணங்கள் ஆற்றில் மிதப்பதும், சுடுகாட்டில் இடம் கிடைக்காமல் சாலைகளில் பிணங்கள் எரிக்கப்படுவதும் ஒரு இயல்பான நிகழ்ச்சி போக்காக மாறினாலும் நாம் ஆச்சரியப் படுவதற்கில்லை.
மருத்துவ துறையில் தனியாரின் ஆதிக்கம் கட்டற்று பெருக வழி செய்ததும், பெரும்பாலான மக்களை வறிய நிலையிலேயே வைத்திருப்பதும், அவர்களை சாதாரண நோய்களுக்குக் கூட தாக்குப் பிடிக்க முடியாத நோஞ்சான்களாக மாற்றி இருக்கின்றது.
முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசமத்துவமும் அது உண்டாக்கும் நோய்களும் முதலில் பலி எடுப்பது சாமானிய உழைக்கும் மக்களைத் தான் என்பதை கொரோனா நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
- செ.கார்கி