கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது ஒரு வைரஸ் நுண்கிருமிக்கும் மனித உடலுக்கும் இடையேயான போராட்டமாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் மனிதர்களின் சார்பாக மருத்துவர்கள் கிருமியைக் கட்டுப்படுத்தி ஒழித்துக் கட்டுவதற்கு போராடுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தங்களது திறமையையும், கல்வியையும், அறிவையும், அறிவியலையும் பயன்படுத்தி இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த வைரஸ் நுண்கிருமிப் பிரச்சனை என்பது வெறும் மருத்துவப் பிரச்சனையாக இல்லை. இதைத் தாண்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த சமூக, பொருளாதார முரண்பாடுகளை இது வெளிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அரசு, சமூக அமைப்பு, சமூகத்தில் இருக்கக் கூடிய பிரிவினைகள், வர்க்கங்கள், இவை ஒவ்வொன்றுக்கும் இடையே இருக்கக் கூடிய பிரச்சனைகள், முரண்பாடுகள் எல்லாம் இப்போது துலக்கமாக வெளிப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் சொன்ன மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம். 'மூலதனத்தின் இலாபப் பசிக்கு இரை போடுபவர்களுக்கு மட்டும்தான் மருத்துவம்' என்று உயிர் காக்கும் சேவையையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது உலக முதலாளித்துவம்; கடந்த 20-30 ஆண்டுகளில் மருத்துவர்களின் சிறப்பையும், மதிப்பையும் குலைத்து அவர்களை பணத்துக்காக வேலை செய்யக் கூடிய கூலித் தொழிலாளர்களாக சிதைத்து விட்டிருந்தது. அந்த தனியார், தனிநபர் சார்ந்த மருத்துவ சேவை என்ற கருத்தாக்கம் இன்று முழுவதும் உடைபட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று இந்த உடைப்பை செய்து மருத்துவம் குறித்த கண்ணோட்டத்தை புரட்டிப் போட்டிருக்கிறது.
எங்கெல்லாம் அரசு மருத்துவத் துறையும் பொது மருத்துவக் கட்டமைப்பும் வலுவாக இருக்கிறதோ அங்குதான் இந்த வைரசுக்கு எதிரான போராட்டம் முறையாக சரியாக நடக்கிறது. மருத்துவர்கள், ஏழை பணக்காரன் பாராமல் அனைவருக்கும் மருத்துவம் அளிக்கும் உன்னத நிலையை மீட்டிருக்கிறது, இந்த நெருக்கடி. மருத்துவர்களை அவர்கள் சிக்கிக் கிடந்த கார்ப்பரேட் பொருளாதார சிறையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு உரிய சமூக மதிப்பையும் மரியாதையையும் மீட்டுக் கொடுத்திருக்கிறது.
இந்தக் கிருமி சாதி, மதம், இனம், மொழி, ஏழை/பணக்காரன் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லோரையும் போய் பிடிக்கிறது என்பதும், வேகமாகப் பரவுகிறது என்பதும் முதலாளித்துவ மருத்துவ உலகை விரைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளியிருக்கிறது. இதனால் இதுவரை பிரிவினை பார்த்து, தனிநபர் வாதத்தை முன் வைத்து, 'தனியார் மயம், லாப வேட்டை மட்டும்தான் மனித குல முன்னேற்றுத்துக்கு ஒரே வழி' என்று காலாவதியாகிப் போன முதலாளித்துவக் கோட்பாட்டை பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு செய்வதறியாது அம்பலமாகி நிற்கிறார்கள்.
இது மட்டும்தானா என்றால், இல்லை. எல்லாக் கோயில்களும் சர்ச்சுகளும், மசூதிகளும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்படுகின்றன. அறிவியலை எள்ளி நகையாடிய மதவாதிகள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் "கூட்டம் கூடாதீர்கள், வீட்டில் பத்திரமாக இருந்துக்கோங்க, உடல் நிலை சரியில்லை என்றால் கோயிலுக்கு வராதீர்கள், டாக்டர்கிட்ட போய் சிகிச்சை பார்த்துக்கோங்க" என்று அறிவியல் ரீதியாகப் பேச வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்; அறிவியல் ரீதியாக செயல்படவில்லை என்றால் நாம் அழிந்து விடுவோம் என்ற விளிம்பு இலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆக, அறிவியலை நம்ப வேண்டும், அறிவியலை சார்ந்திருக்க வேண்டும், அறிவியல் சொல்லும் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவியலின் காலடியில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் சரணடைய வைத்து அறிவியல் பூர்வமான வழியைத் தேட வைத்திருக்கிறது இந்த கொரோனா நோய்த் தொற்று.
இன்னொரு பக்கம் முதலாளித்துவ தனிநபர் வாதமும் இந்திய சாதிக் குழு கட்டமைப்பும் பல்லிளிக்கின்றன. நம் நாட்டில் சாதாரண மக்களுக்கு இந்த யதார்த்தம் கண் முன்னால் தெரிகிறது. "நம்மைக் கை விட்டு விட்டார்கள். ஏதேதோ சொன்னார்கள், மக்களுடைய நலனுக்காகத்தான் இருக்கிறேன், எல்லாம் இந்துக்கள், இந்துக்களின் நலனை நான் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னார்களே ஆட்சியாளர்கள், இப்போது உ.பியிலிருந்து பீகாரிலிருந்தும் ராஜஸ்தானுக்கும், குஜராத்துக்கும் டெல்லிக்கும் 1000 கிலோ மீட்டர் தூரம் வேலை செய்யப் போன தொழிலாளர்கள் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்களே" என்று கலங்கி நிற்கிறார்கள்.
"ஒரே நாடு, நாம் எல்லோரும் இந்துக்கள் என்று சொன்னார்களே, 3 வாரம் வேலை இல்லை என்றதும் குஜராத்திலும், இராஜஸ்தானிலும், டெல்லியிலும் நம்மைக் கைவிட்டு விட்டார்களே" என்று தமது சொந்த கிராமத்தை நோக்கிப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வெளியூரில் வெளி சாதிக் குழுக்கள் தம்மைக் கைவிட்ட நிலையில் தமது சாதியக் குழுவுக்குள் போய்ச் சேர்ந்து பாதுகாப்பைப் பெறும் உந்துதலில் நடக்கிறார்கள். வேறு வழியில்லை என்று 600 கி.மீ, 1000 கி.மீ நடந்தே தமது கிராமத்துக்குப் போகிறார்கள். நடந்து போகும் போது 22 பேர் இறந்து விட்டார்கள் என்று செய்தி வருகிறது.
முதலாளித்துவம் இயங்குவதற்கு அவசியத் தேவையான வங்கிகள், பங்குச் சந்தைகள், தகவல் தொழில்நுட்பம் போன்றவை இயங்குகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் ஐ.டி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இது போக, மக்கள் உயிர் வாழத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருத்துவ சேவைகள், தூய்மைப் பணிகள் தவிர அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பிற பொருள் உற்பத்தி, போக்குவரத்து, பெரும்பான்மை மனித உழைப்பு செயல்பாடு நிறுத்தப்பட்டிருக்கிறது அல்லது முடக்கப்பட்டிருக்கிறது. இது நமது நாட்டின் அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப் பெரிய சிக்கல், சீர்குலைவு, வீழ்ச்சியில் கொண்டு விட்டிருக்கிறது.
அன்றாடம் உழைத்து பொருள் ஈட்டி வந்த தொழிலாளர்கள் வருமானம் இழந்து அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்; எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்க விடப்பட்டிருக்கிறார்கள். சிறு தொழில், சிறு வணிகம் செய்பவர்கள் வர வேண்டிய பணம் வரவில்லை, கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியவில்லை, சரக்குகள் அங்கங்கே தேங்கிப் போயிருக்கின்றன. சில சரக்குகள் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வரி கட்டுவதையும், கடனுக்கு தவணை கட்டுவதையும் அடுத்த மூன்று மாதஙகளுக்குத் தள்ளிப் போடுகிறோம் என்கிறது அரசு. ஆனாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகு எப்படி கட்டப் போகிறோம் எனும் நெருக்கடியில் உள்ளனர், மக்கள்.
மருத்துவப் பணியாளர்களாக இருக்கட்டும், தூய்மைப் பணியாளர்களாக இருக்கட்டும், வங்கி ஊழியர்களாக இருக்கட்டும் அல்லது அரசின் உத்தரவுக்கு இணங்க மக்கள் மீது அடக்கு முறையை அவிழ்த்து விடுகிற காவலர்களாக இருக்கட்டும், இவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், அவர்களுக்கான உணவு வசதி போன்றவற்றை செய்து கொடுக்கக் கூட வக்கற்றுப் போயிருக்கிறது, இந்த அரசு. அடக்குமுறைக் கருவியான காவல் துறையை பராமரிக்கக் கூட முடியாத அளவுக்கு செயலற்றிருக்கிறது, அரசு.
கண் முன்னால் இறப்பையும், பசியையும் குழந்தைகளின் வலியையும் மக்கள் பார்க்கிறார்கள். "நம்ம நாடுன்னு சொன்னாங்களே, நம்ம மதம்னு சொன்னாங்களே, நம்மை கை விட்டுட்டாங்களே" என்று அரசுகள் மீது மக்கள் கோபம் கொள்கிறார்கள்.
"சீனாதான் வில்லன், அங்கு ஜனநாயகம் இல்லை, அந்த நாட்டு மக்கள் எல்லாம் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்" என்றெல்லாம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆதரவு அறிவாளிகள் இன்று அலறுகின்றனர். ஆனால், சீனாவில் அந்த நாட்டில் நோய்க் கிருமி பரவுகிறது என்று தெரிந்ததும் வூகான் நகரத்தை முழுவதுமாக மூடி எல்லா மக்களையும் வீட்டில் இருக்கும் படி சொல்லி கிருமியைத் தடுத்து நிறுத்தினர்; அது மட்டுமில்லாமல், மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நேரடியாக வீட்டுக்கே கொண்டு கொடுக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் அணி திரட்டப்பட்டு இந்தக் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். நோய் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அதே நேரம், "ஏன் நம் நாட்டில் இப்படி எல்லாம் நடக்க மாட்டேன் என்கிறது" என்ற பிற நாடுகளின் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறப்பு வீதம் சீனாவை விட 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக உள்ளது. நோய்த் தொற்று வெகு வேகமாகப் பரவுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? கொரோனா கிருமிக்கும் சீனா ஒரு சர்வாதிகார நாடு என்ற பயம் தொற்றிக் கொண்டு விட்டதோ? அங்கிருந்து மூட்டையை கட்டிக்கொண்டு இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளில்தான், தான் சுதந்திரமாக வளர்வதற்கும் பரவுவதற்கும் சாதகமான அனைத்து ஜனநாயக உரிமைகளும் உள்ளன என்பதை கொரோனாவும் புரிந்து கொண்டு விட்டதோ?!
"இத்தாலியிலும், அமெரிக்காவிலும் பிரான்சிலும் இருப்பது தப்பான முறையா, அரசு சரியில்லையா. இது வரைக்கும் நம் நாடு நமக்கு சொன்னது எல்லாம் தவறா" என்ற கேள்வி அந்தந்த நாட்டு மக்கள் மத்தியில் எழுவதை யாரால் தடுத்து விட முடியும்? இதுதான் சீனா மீதான அவதூறாக வெளிப்படுகிறது.
பேராசிரியர் பிரபாத் பட்னாயக் "உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோசலிசமும்" என்ற தன் கட்டுரையில் "உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்திலிருக்கும் உலகம் சோஷலிசத்தை நோக்கித் திரும்புவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கட்டாயமாக மக்கள் அனைவருக்கும் அறிவியல் உணர்வு தேவை என்கிற நிலைதான் அது. அறிவியல் உணர்வு என்பது சோஷலிசத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் முக்கிய அடியாகும்." என்று சொல்கிறார்.
இயற்கையைப் புரிந்து கொண்டு அதனை எதிர்த்து அதனுடன் உறவாடுவதற்கு இயற்கை அறிவியலை நாம் பயன்படுத்துவது போல, சமூக இயக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கான அடிப்படையாக மார்க்சியம் உள்ளது. மார்க்சியம் என்பது சமூகத்துக்கான அறிவியல். இயற்கை அறிவியலும், மார்க்சியமும் இன்றைய நவீன உலகத்துக்கான நடைமுறை யதார்த்தமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் முன் வந்து நிற்கிறது.
மனிதர்கள் எல்லோரும் ஒன்றுபடுவதை இந்தக் கிருமி கட்டாயமாக்கி உள்ளது. முன்னே எல்லாம் இது போல ஒரு தொற்றுக் கிருமி வந்தால் அது ஒரு சில ஊர்கள், அல்லது நகரங்களோடு நின்று விட்டது. உதாரணமாக 1994ம் ஆண்டில் சூரத் நகரில் பிளேக் நோய் பரவியது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், கொல்லப்பட்டார்கள். ஆனால், அது உலகளாவிய நோயாக பரவவில்லை. 1918-ல் பரவிய உலகளாவிய நோய்த் தொற்று முதல் உலகப் போரிலிருந்து தம் ஊர் திரும்பிய படைவீரர்களால் பரப்பப்பட்டது. இவ்வாறு நோய்த் தொற்று பரவுதலில் சமூகப் பொருளாதார காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்போதைய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவதும் மனிதர்கள் நெருங்கி வந்திருப்பதை, தகவல் தொடர்பாகட்டும், பொருட்களின் பரிவர்த்தனையாக இருக்கட்டும், மனிதர்களின் பயணங்கள் ஆகட்டும், மனிதர்களுக்கு இடையேயான உறவு நெருக்கமாக வந்திருப்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதை எதிர்த்து "நாங்க எல்லாம் தனி நாடு, எங்க நாட்டு நலனை மட்டும் நாங்கள் பார்த்துக் கொள்வோம், எங்க மதம் வேற, அந்த மதக் காரன்தான் எதிரி, சாதி ரீதியாகப் பிரிந்திருப்போம்" என்று மனித குலத்துக்கு இடையேயான ஒற்றுமைக்கு எதிராக பிரிவினை பேசியவர்கள் எல்லாம் திகைத்துப் போய் நிற்கிறார்கள். கடைசியாக பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் என்ற ஏற்றத் தாழ்வைக் கூட ஒழித்து அந்த இருவரும் என் முன் சமம்தான், பணக்காரனுக்கு நான் சலுகை தர மாட்டேன் என்று கொரோனா கூறி விட்டது.
அமெரிக்க அரசு நேரடியாக ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் $1000, $1200 போடுகிறோம் என்று முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. உலக நாடுகளின் அரசுகள் எல்லாம் அனைத்து மக்களுக்கும் சேர்த்து கூட்டான, சமூக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியை எப்படி கையாளுகின்றன?
• கேரளாவில் ஆட்சியில் இருக்கும் அரசும், அந்தக் கட்சியின் இளைஞர் அணியும் இணைந்து அந்த மக்களுக்கு இந்த நெருக்கடியைக் கையாளவும், மருத்துவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எப்படி உதவுவது என்பதற்கு உறுதியான சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு உணவு சமைத்து வினியோகிக்கிறது.
• தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட திராவிட ஆட்சியின் முற்போக்கான வளர்ச்சிப் பாதையிலான மருத்துவக் கட்டமைப்பும் அரசும் இணைந்து இதை சிறந்த முறையில் கையாண்டு கொண்டிருக்கின்றன. அம்மா உணவகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
• வேறு வழியில்லை என்ற நிலையில் எப்படி ஸ்பெயினில் தனியார் மருத்துவமனைகளை அரசு எடுத்துக் கொண்டதோ அதே போல ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை அரசு கைப்பற்றுகிறது.
• தெலுங்கானாவில் முதலமைச்சர் சொல்கிறார், “வெளியில் இருந்து வந்த தொழிலாளர்களே நீங்க எங்கேயும் போக வேண்டாம், நீங்க எல்லாம் எங்க விருந்தாளிகள், இங்கேயே இருங்க. உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம். என்ன தேவை என்றாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்கிறார்.
இன்றைய உலகமயமான, சமூக மயமான உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தில் எழும் பிரச்சனைகளை சமூக ரீதியாகத்தான் சமாளிக்க முடியும், நிர்வகிக்க முடியும் என்று உணர்த்திக் கொண்டிருக்கிறது, இந்த நெருக்கடி. அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பகுத்தறிவுக் கண்ணோட்டத்தின் மூலம்தான் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் என்று காட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இது வரைக்கும் அறிவியலை எதிர்த்தவர்கள், சமூக மயமான மனித வாழ்க்கையை எதிர்த்து தனிநபர் வாதம், தனியார் மயம் என்று பேசியவர்கள் கோபத்திலும் ஆத்திரத்திலும் துடிக்கிறார்கள். சமூக மயமான நிர்வாகத்தின் செயல் திறனையும், அறிவியலின் முதன்மையையும் பார்க்கும் போது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், அவர்களுடைய நேரடியான சொத்துடைமை நலனும் போலி மதப் பெருமிதங்களும் பாதிக்கப்படுகின்றன. இது வரை நம்மை வாழ வைத்து அதிகாரத்தில் அமர வைத்திருந்த அடித்தளம் தகர்ந்து கொண்டிருக்கிறதே என்று துடிக்கிறார்கள்.
மக்களின் கேள்விகள், கோபம் தங்கள் மீது வந்து விடக் கூடாது, அரசின் மீது வந்து விடக் கூடாது என்பதற்காக பிரச்சனையைத் திசை திருப்புகிறார்கள், எதிரிகளை உருவாக்குகிறார்கள். வெறுப்பை உமிழ்கிறார்கள்.
யார் சமூக மயமான நிர்வாகத்தின் மூலமாக, அறிவியல் ரீதியாக திட்டமிட்டு இந்தக் கிருமியின் தாக்கத்தை, விளைவுகளை மிகச் சிறப்பாக கையாண்டார்களோ அவர்கள் மீது, யாரை உலக மக்கள் வியந்து பார்க்கிறார்களோ அவர்கள் மீது வெறுப்பைக் கொட்டுகிறார்கள்.
இந்தக் கிருமி இயற்கையின் பரிணாம மாற்றம் அடைந்து விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் 'சீனாதான் இந்தக் கிருமியை உருவாக்கி உலகம் முழுக்க பரப்பி விட்டது' என்று அவதூறைப் பரப்புகிறார்கள். 'சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 அல்ல, இன்னும் பல மடங்கு அதிகம்' என்று பொய் சொல்கிறார்கள். யார், என்ன என்று எந்த ஆதாரமும் இல்லாமலேயே பெரிய பெரிய முதலாளித்துவ பத்திரிகைகள் பொய்ச் செய்தியை பரப்புகின்றன. 'சீனர்களைப் பார்த்து உலகமே காரித் துப்புகிறது' என்று அரசியல்வாதிகளும், முதலாளித்துவ அறிவுஜீவிகளும் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்புகிறார்கள்! உண்மையில் இவ்வுலகம் அமெரிக்காவின் கையாலாகாத்தனத்தை பார்த்துத்தான் காரித் துப்பிக் கொண்டிருக்கிறது.
நாளை இந்திய ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தை பார்த்து அதை செய்யப் போகிறது. அதற்கு முன் தயாரிப்பாக, இந்தியாவில் அந்த அவதூறு இஸ்லாமியர்கள் மீதான மதவெறுப்பாக, மதவெறியாக வடிவம் கொண்டிருக்கிறது. 'இசுலாமியர்கள் நடத்திய மத மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பேர்கள்தான் இந்தியாவில் கிருமியைப் பரப்புவதற்கு காரணமானவர்கள்' என்று நாக்கூசாமல் பொய் சொல்கிறார்கள்; பரப்புகிறார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றவாளிகள் என்றால், அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய ஆட்சியாளர்களை என்னவென்று கூறுவது?
இசுலாமியர்கள் மீதான இந்த வெறுப்புப் பிரச்சாரம் இன்று உருவானது அல்ல. 100 ஆண்டுகளாக இந்த வெறுப்பை மட்டுமே தனது ஆதாரமாக வைத்து செயல்பட்டு வருகின்றன ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க. அவர்களது அரசியலின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இதை மையமாக வைத்தே நகர்ந்து வந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இசுலாமியர்கள் படுகொலை, காஷ்மீரின் உரிமைகள் பறிப்பு, குடியுரிமைச் சட்டம் என்று அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த இயற்கைப் பேரிடரையும் இசுலாமியர்கள் மீதான வெறுப்பாகக் கட்டியமைக்கிறார்கள்.
அவர்கள் கையில் பணபலம் இருக்கிறது. மனித குலம் படைத்த நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. அரச அதிகாரம் இருக்கிறது. இவற்றை புராதன இனக்குழுக்களுக்கு இடையிலான பகையை ஒத்த வெறுப்பை விசிறி விடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதற்கு இணையாக 'மாலை நேரத்தில் கைத்தட்டினால் கிருமி கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்’, 'இரவு நேரத்தில் விளக்கேற்றினால் கிருமி ஒழிந்து விடும்' என்று மத முட்டாள் தனங்களை இன்னொரு பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
"மக்கள் அனைவரும் ஒரு நாள் ஊரடங்கில் இருக்க வேண்டும், வெளியில் போகக் கூடாது" என்று அறிவிக்கிறார், மோடி. எல்லா மக்களும் வீட்டில் இருக்கிறார்கள். "அன்று மாலை 5 மணிக்கு கைத்தட்ட வேண்டும், தட்டுகளை தட்ட வேண்டும்" என்று சொல்கிறார், எல்லா மக்களும் செய்கிறார்கள். "ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு எல்லோரும் லைட் எல்லாம் அணைத்து விட்டு செல்போன் வெளிச்சத்தை ஆன் செய்யணும்.” என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். வேலைக்காரன் திரைப்படத்தின் இறுதிக் காட்சி ஐடியாவை சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது.
இதை எல்லாம் ஆளும் சக்திகள் எதற்காக செய்கிறார்கள்? பரிசோதித்துப் பார்க்கிறார்கள், ஆளும் ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க தலைவர்கள். நாம் சொல்வதை மக்கள் கேட்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். ஆனால், மோடி போன்ற யாரும் சொல்லாமலேயே சமூக ரீதியாக செயல்படுவது மக்களின் இயல்பாக உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், சுனாமி, கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போதும் எந்தத் தலைவரின் உத்தரவுக்கும் காத்திராமல் சக மனிதர்களுக்கு உதவி செய்ய மக்கள் சமூக உணர்வுடன் முன் வந்தார்கள். கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த அன்றைக்கு, இறந்து விட்டார் என்ற அறிவிப்பை நள்ளிரவு வரை வெளியிடவில்லை. ஆனால், அந்தச் செய்தி மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. சென்னை நகரத்தில் 5, 5.30 மணிக்கே எல்லா ஊழியர்களையும் நிறுவனங்கள் வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டார்கள். மக்கள் இரண்டு நாளைக்குத் தேவையான காய்கறிகளையும், பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டில் போய் அடைந்து கொண்டார்கள். எந்தத் தலைவரும் அறிவிக்கவில்லை. யாரும் உத்தரவு போடாமல் மக்கள் தங்களது உணர்வால் இப்படி ஒரு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள். அது தாங்கள் பாதிப்புக்கு எதிரான அச்ச உணர்வு என்ற போதிலும் அந்த உணர்வால் உந்தப்பட்டு அந்த ஒழுங்கைக் கடைப்பிடித்தார்கள்.
இது இந்த உற்பத்தி முறையி்ன் மூலமாக மனித சமூகம் நெருங்கி வந்திருப்பதன் வெளிப்பாடாக இருக்கிறது. ஆனால், 'நான் சொன்னவுடன் அது நடந்து விட்டது' என்று நினைப்பது இந்த பாசிச ஆட்சியாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அப்படி நடக்க வைக்கணும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
"எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் வந்தால் போலீஸ் அடிக்கும்” என்பதைக் கட்டமைக்கிறார்கள். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை பொருளாதாரத் தேவைகள் அவர்களை உந்தித் தள்ளுகின்றன. கிருமித் தொற்றால் தனக்கும் சமூகத்துக்கும் பாதிப்பு என்ற அச்சத்தை வீட்டிலேயே இருந்தால் குழந்தைகளும் குடும்பமும் பட்டினியில் கிடக்க நேரிடும் என்ற கொடுமை விஞ்சுகிறது. மளிகைக் கடைகளும், காய்கறி கடைகளும், மருந்துக் கடைகளும், அது தொடர்பான போக்குவரத்தும் படிப்படியாக விரிவடைகின்றன.
இதை வன்முறை, அடக்குமுறை மூலம் ஒடுக்கி விட முயற்சிக்கிறது அரசு. தெலங்கானாவில் வீட்டுக்கு வெளியில் இருந்து சீட்டாடிக் கொண்டிருந்தவர்களை வீட்டு முன்னாலேயே முட்டி போட வைத்து பிரம்பால் அடிக்கிறார்கள். வெளியில் வரக் கூடியவர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். அகமதாபாதில், நடுத்தெருவில் தள்ளுவண்டியில் இருக்கும் காய்கறிகளை ரோட்டில் கொட்டி அழிக்கிறார்கள் போலீஸ்காரர்கள். தருமபுரியில் சாலையில் ஓடும் இரு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குகிறார்கள் போலீஸ்காரர்கள். உத்தரப் பிரதேசத்தில் பல நூறு கிலோமீட்டர் நடந்து தமது கிராமத்துக்கு வந்து சேர்ந்த மக்களை கூட்டமாக உட்கார வைத்து ஆட்டு மந்தை போல மேலே இரசாயன நீரைப் பீச்சி அடிக்கின்றது அரசு நிர்வாகம். படித்தவர்களுக்கும், மேட்டுக்குடி சாதியினருக்கும் ஒரு நடைமுறை, உழைக்கும் சாதியினருக்கு இன்னொரு நடைமுறை என்ற இந்தியாவின் ஆன்மா அசிங்கமாகவும் அருவெருப்பாகவும் பல்லிளிக்கிறது.
மக்களை ஒடுக்கி கட்டுப்படுத்த, எந்த உரிமைகளும் இல்லாமல் அவர்களை அடக்கி வைப்பதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி ஓர் ஒத்திகையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாளைக்கு என்ன சொல்வார்கள்? "கிருமி ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. அரசு அனுமதி வாங்கினால்தான் வெளியே வர முடியும். வெளியே வர வேண்டுமானால் ஓர் அனுமதி சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும், வெளியூர் போக வேண்டும் என்றால் நிர்வாகத்திடம் சீட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும்" என கட்டுப்பாடுகளை நிரந்தரமாக்குவது அவர்களது மிகப் பெரிய ஆசையாக இருக்கும். 'யாரும் வெளியே வரக் கூடாது, அரசை எதிர்த்துப் பேசக் கூடாது, பேச்சுரிமை இருக்கக் கூடாது, அரசு சொல்வதைத்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும், வீட்டில் இருந்து நாங்கள் போடும் சீரியலை பார்த்துக் கொள்ள வேண்டும்.’ இப்படி தங்களுடைய சுரண்டலையும், அடக்குமுறையையும் நிலைநாட்டுவதற்கான கருவியாக வாய்ப்பாகக் கருதி நவீன தொழில்நுட்பங்களையும் தொலைபேசிகளையும் பயன்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கூட கனவு காணலாம். ரோபோக்கள் மூலம் உற்பத்தி, எந்திர மயமான உற்பத்தி என தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கும் போது உழைக்கும் மக்களை உற்பத்தியில் இருந்து விலக்கி வைத்து விட்டு அவர்களை தமது தயவில் வைத்து அடக்கி ஆளலாம் என்று கூட அவர்கள் பகல் கனவுகூட கண்டு கொண்டிருக்கலாம்! ஆனால் ரோபோக்களை வைத்து உற்பத்தி செய்த பொருட்களை அவற்றிடமே விற்க முடியாதே! உணர்வுள்ள உழைக்கும் மக்களை அடக்கி வைத்து விட முடியாதே!
இதைக்கூட தெரியாத அளவுக்கா இந்திய ஆட்சியாளர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்! மூடத்தனத்தின் தலைமையகமான, மோடியின் குஜராத்தில் இப்போது கோமாதா மூத்திரத்திற்கு பயங்கரத் தட்டுபாடாம்! இப்போது சொல்லுங்கள் இவர்களை நாம் எப்படி புரிந்து கொள்வது என்று! ஒரே இரவில் 500,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தவர்கள் வேறு எப்படி சிந்திப்பார்கள்!?
இந்த நெருக்கடி இதுவரை மனிதகுலம் பார்த்திராத ஒரு நெருக்கடி. இதுவரை எப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் நெருக்கமான உலகமயமான உற்பத்தி, உலகமயமான தகவல் தொடர்பு, உலகெங்கும் பயணித்தல், சந்தித்தல், படிக்கப் போவது, வேலைக்குப் போவது என்று உலகத்தை ஒரு சின்னஞ்சிறு கிராமமாக கடந்த 20-30 ஆண்டுகளில் உருமாற்றி இருக்கிறோம். இதனை மூலதனம் தன்னுடைய லாப நோக்கத்துக்கேற்ப வடிவமைத்திருக்கிறது.
இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும்?
இதற்கு முன்பு உலகப் போர்களின் போது கூட உற்பத்தி நிறுத்தப்படவில்லை. போருக்குத் தேவையான உற்பத்தி நடந்தது, மக்கள் அதிகமாக உழைத்தார்கள். இலட்சக்கணக்கான மக்கள் போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால், யாரும் முடங்கி வீட்டில் உட்காரவில்லை. உற்பத்தியும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை.
1930-களின் பொருளாதாரப் பெருமந்தத்தின் போது பல தொழிற்சாலைகள் திவாலாகின என்றாலும் இன்னும் பல தொழிற்சாலைகள் செயல்பட்டன. மக்கள் வெளியில் போய் முயற்சி செய்து தங்களுக்குத் தேவையான பொருள் ஈட்டி வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு முடிந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும் போது இது எப்படி தொடங்கும்? இவ்வளவு நாட்கள் வேலை இல்லாமல் இருந்தவர்கள், வருமானம் இல்லாமல் இருந்தவர்கள் எப்படி சமாளிப்பார்கள்?
ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் சங்கிலிக் கண்ணிகள் எல்லாம் துண்டு துண்டாகப் போயிருக்கின்றன. உதாரணமாக, நூல் உற்பத்தி செய்து விற்பவருக்கு ஆர்டர் வேண்டும் என்றால், துணி உற்பத்தியாளர் செயல்பட வேண்டும். அவர் செயல்பட, சட்டை தைப்பவர் செயல்பட வேண்டும், அவர் செயல்பட சட்டை வாங்கப்பட வேண்டும். இந்த உற்பத்திச் சங்கிலிகள் அறுந்திருக்கின்றன.
மக்களின் மனநிலையிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன. "இளைஞர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரத்துக்கு 6 நாட்களும் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்" என்று முதலாளிகளின் வேட்கையை சீனப் பெருநிறுவனமான அலிபாபாவின் முதலாளி ஜாக்கி மா சென்ற ஆண்டு மத்தியில் சொல்லியிருந்தார். உற்பத்தி சக்திகளும், தொழில்நுட்பமும் வளர வளர உழைப்பைக் குறைப்பதற்குப் பதிலாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை அதிகரித்துச் செல்வது முதலாளித்துவத்தின் போக்காக உள்ளது. ஆனால், ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்று வரும் போது உழைக்கும் மக்களின் நலன்களைப் பராமரிக்கும் நடவடிக்கையை அரசுகள் எடுக்க முடியும் என்பதையும் மக்கள் இந்த நெருக்கடியில் பார்த்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் தனிச் சொத்துடைமை, தனியார் நலன் என்ற முதலாளித்துவ சட்டத்தை உடைத்து சமூக ரீதியிலான கூட்டுத்துவ மக்களின் அரசு என்ற முன்னேறிய அமைப்பை நோக்கிப் போவதற்கான உந்துதல்; இன்னொரு பக்கம் இதுவரை மனித குலம் ஈட்டிய முன்னேற்றங்களை எல்லாம் பின்நோக்கி இழுத்துச் செல்வதற்கான முயற்சியில் இறங்கும் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களும் அவர்களது அரசுகளும். ஒன்று சோசலிசம் அல்லது இனக்குழுக்களின் அநாகரீக காலம் என்ற தேர்வு நம் முன் உள்ளது.
எந்தத் திசையில் நாம் போகப் போகிறோம்? அறிவியலா அல்லது மூடநம்பிக்கையா? மதமா, சோசலிசமா? சோசலிசமா அல்லது அநாகரிக காலத்தின் இனக்குழுக்களாக பிரிந்து சாதிகளாகவும், மதங்களாகவும் மோதிக் கொள்வதா? ஒரு சிலரின் சர்வாதிகாரமா அல்லது மக்களின் கூட்டு நிர்வாகமா என்று தேர்வு செய்து பயணிக்க வேண்டிய முச்சந்தியில் மக்கள் நிற்கிறார்கள்.
இந்த புதிய ஒழுங்கு எப்படி வரப் போகிறது? 'பிற மதத்தினர், பிற நாட்டினர், பிற தேசிய இனத்தவர் மீது வெறுப்பு வளர்க்கும் விதமாகக் கொண்டு போக வேண்டும். மக்கள் மீது அடக்குமுறை கட்டுப்பாடு, ஜனநாயக உரிமைகளைப் பறித்தல் என்ற விதத்தில் கொண்டு போக வேண்டும்' என்று ஆளும் சக்திகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், யதார்த்தம் அறிவியலை நோக்கிப் போக வேண்டும், சோசலிசத்தை நோக்கிப் போக வேண்டும் என பெரும்பான்மை மக்களுக்கு அதிக உரிமை வழங்கும் கூட்டு முடிவுகளின் படி சமூகத்தை நிர்வகிக்கும் முறையை நோக்கிச் செலுத்துகிறது.
இந்த இரண்டுக்கும் இடையேயான போராட்டத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வலிமையாக உள்ளார்கள் என்பதும், அரசு எந்திரத்தையும் ஊடகங்களையும் பண பலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம்.
ஆளும் வர்க்கத்தின் பலவீனம் அவர்கள் தோற்றுப் போய் அம்மணமாக நிற்பது. மக்களுக்கு சாப்பாடு போடவோ, அவர்களது உயிரை காப்பாற்றவோ கூட வக்கற்றவர்களாகப் போய் விட்டார்கள் என்பது பலவீனம். இதுவரை அவர்கள் சொன்ன பொய்க் கதைகள் எல்லாம் அம்பலமாகி, அறிவியல்தான் முதன்மையானது ஆகி விட்டது அவர்களது பலவீனம். அதிகார வர்க்கத்தில் கூட கீழ்நிலை ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கொரோனாவிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, மக்களை விட கூடுதலான தற்காப்பு வசதி ஏதும் உள்ளதா? இல்லை என்ற நிலையில், அவர்களின் உணர்வுகள் பிற உழைக்கும் மக்களின் மனநிலையில் இருந்து எவ்வகையிலும் வேறுபட்டதாக இருக்குமா?
உழைக்கும் மக்கள் என்ன கோர வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?
• இரண்டு மாதத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் காரணத்தை மக்களுக்கு விளக்கியாக வேண்டும். தொடக்கத்திலிருந்து இப்போது வரையும், இனியும் எடுத்த எடுக்கவிருக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும் என்று அரசுகளை வற்புறுத்த வேண்டும்.
• இந்த நோய்ப் பரவல் நடவடிக்கையில் சீனாவும், கியூபாவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே அந்த நாடுகளோடு உதவியும், ஆலோசனையும் பெற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்ப வேண்டும்.
• மருத்துவமனைகளை மட்டுமல்ல அனைத்து சேவை நிறுவனங்களையும் அரசே நடத்த மக்கள் கமிட்டிகளை அமைத்து அதன் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என்ற வலியுறுத்த வேண்டும்.
• அலோபதிக்கு இணையாக பிற மரபு மருத்துவ முறைகளையும் அறிவியல் ரீதியாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் எனப் போராட வேண்டும்.
• இந்த ஊரடங்கு காலத்தைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு, மக்கள்நல அரசு என்ற அடிப்படையில் மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை அரசே வழங்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
• இந்தக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்த ஒரு கூட்டு அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தும் அளவுக்கு மக்கள் அரசியல் உணர்வு பெற்றாக வேண்டும்.
அதற்காகவும் தமது கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் இவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அணி திரள வேண்டும். பொதுக் கல்வி, பொது மருத்துவம், நிரந்தர வேலை, ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புகளை உறுதி செய்ய ஒன்று சேர வேண்டும்.
தொழிற்சங்கங்களிலும், விவசாய சங்கங்களிலும், குடியிருப்பு சங்கங்களிலும் இந்தத் தோற்றுப் போன முதலாளித்துவ கட்டமைப்புக்கு மாற்றாக சமூக ரீதியான நிர்வாகத்துக்கான அடிப்படையைத் திட்டமிட வேண்டும். சிறு வணிகர்களும், சிறு முதலாளிகளும், ஒத்த கருத்துடைய, ஒத்த பிரச்சனைகளை எதிர் கொள்ளும், ஒத்த வேலையை செய்யும் நண்பர்களோடு சக ஊழியர்களோடு உறவாடி குழுக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அவற்றை எதிர் கொள்ள திட்டமிட வேண்டும்.
கார்ப்பரேட்டுகள், பெருவங்கிகள், பங்குச் சந்தை போன்றவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு உழைக்கும் மக்கள் தங்கள் ஜாதி மத இன மொழி வேறுபாடுகளைக் கடந்து தங்களின் சொந்த நலன்களின் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.
முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உலகளாவிய அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி, உலக வர்த்தக கழகம் வரையிலான அமைப்புகள் மக்களுக்காக இருக்கின்றனவா? இல்லை என்பது தெளிவு.
எனவே, உழைக்கும் மக்களுக்கான அகிலம் போன்ற உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலும், அதற்கான தொடக்க முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கான முதற்படியாக தமிழ்நாட்டு அளவில், இந்திய அளவில் இருக்கும் அனைத்து வடிவிலான சோசலிசம் நோக்கிய கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
இந்த உலகையும் உலக மக்களின் வாழ்வையும் பேரழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் முதலாளித்துவத்தையும் அதனோடு கூட்டு சேர்ந்த சாதி,மத பிற்போக்கு சக்திகளையும் அறிவியலின் துணை கொண்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு