students protest 343கடந்த இரண்டு ஆண்டு காலமாகத் தொடரும் கொரோனா பேரிடர் உயிரிழப்புகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் உருவாகிய நிலையில் தேசிய கல்விக் கொள்கையினை இந்திய ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த பல்வேறு எதிர்ப்பும், நிராகரிப்பும் எழுந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நடுத்தர, அடித்தட்டு, கிராமப்புற மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதைப் போன்று கல்வி கற்கும் மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள்.

ஊரடங்கு காரணமாகக் கல்வியில் இணைய வழிக் கற்பித்தல், தேர்வுகள் ரத்து, அனைவரும் தேர்ச்சி முதலான அரசின் அறிவிப்புகள் யாவும் மாணவர்களின் கற்றல் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் இணைய வழிக் கற்றல் வழியாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருபெரும் சுமையைச் சுமக்கிறார்கள்.

ஒன்று கல்விக் கட்டணம். மற்றொன்று இணையத்திற்கான கட்டணம். இவை இரண்டுமே மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பெரும் சுமையேயாகும்.

இணையவழிக் கற்றலை விரிவுபடுத்த நினைத்ததும், இதன் மூலமாக மிகப்பெரிய அளவில் லாபம் இருப்பதை அறிந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேலும் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவதற்குக் கலப்பு கல்வி முறையைக் கொண்டு வர, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நினைக்கின்றது.

அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுச் செயலாளர் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் புதிய வழிமுறை வழிக் கற்பித்தலுக்கான அறிவிப்பையும், பரிந்துரையையும் விடுத்துள்ளார்.

கலப்பு கற்றல் முறை என்பது புதிய கற்றல் முறையாகவும், மாணவர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களின் சுதந்திரம் சார்ந்தாக இருப்பதாகவும் கலப்பு கற்றல் குறிப்பேடு குறிப்பிடுகிறது.

இந்தக் கலப்பு கற்றலில் நாற்பது விழுக்காடு இணையவழிக் கற்றல் கற்பித்தல் சார்ந்ததாகவும், மீதமுள்ள அறுபது விழுக்காடு ஆசிரியருக்கும் மாணவருக்குமான நேருக்கு நேர் கற்பித்தல் சார்ந்ததாகவும் அமைய இருப்பதாக கலப்பு கற்றல் கற்பித்தலின் அணுகு முறை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கற்றல் முறை மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை உள்ளடக்கிய தொடர் செயல்பாட்டைப் பின்னுக்குத் தள்ளக் கூடியதாகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி தேசிய புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான டிஜிட்டல் வழி கற்றல் கற்பித்தலைப் பரவலாக்கம் செய்ய யுஜிசி நினைக்கின்றது.

கலப்பு கற்றல், மெய் நிகர் கற்பித்தல் என்பதான டிஜிட்டல் கற்றல் முறை வழியாக, கல்வி நிலைய வகுப்பறையை ஒழித்து கூகுள் வகுப்பறையை உருவாக்க நினைக்கின்றது.

இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாட்டு மக்கள்களுக்குப் பொருளாதார சமத்துவம் உருவாக்காமல் டிஜிட்டல் இந்தியா எனும் கற்பனையுலகை உருவாக்க முற்படுவது போலித்தனத்தைக் காட்டுகிறது.

வாழ்விடம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் எனத் தன்னிறைவு அடையாத இந்திய நாட்டில் பெரு நிறுவன லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களும் மக்கள் விரோதத் திட்டங்களாகவே இருக்கின்றன.

கல்வி, மருத்துவம் இவையாவும் இலவசமாகக் கிடைக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் சிறு, பெரு முதலாளிகளின் வளர்ச்சி சார்ந்து செயல்படுவதே டிஜிட்டல் இந்தியாவின் திட்டம். இந்நிலையில் கலப்பு கற்றல் முறை எனும் புதிய கல்விமுறையை உயர் கல்வியில் கொண்டு வர நினைப்பது கார்ப்பரேட் மயமாகும், கல்விக்கான வெள்ளோட்டமாகும்.

இதை மனிதவள மேம்பாட்டுத் துறையும், பல்கலைக்கழக மானியக்குழுவும் உணர வேண்டும். கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள், கொரொனா காலத்திலும் அதற்குப் பிறகும் ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படாமல்,மாணவ சமுதாயத்தின் மேல் அக்கறையோடு செயல்படவேண்டும்.

மாணவர்களின் அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் வகுப்பறையைப் புறந்தள்ளி விட்டு தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் மட்டும் அறிவு வளர்ந்து விடாது என்பதை உணர வேண்டும்.

கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கற்றலுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை இலவசமாக வழங்கிய பின்னர் கலப்பு கற்றலை உருவாக்க வேண்டுமே ஒழிய பெரு நிறுவன லாபத்தினை உள்ளீடாகக் கொண்டு உருவாக்கக் கூடாது.

குலக் கல்வியின் மறுவடிவமாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் நிராகரிக்கப்பட வேண்டியவை ஏராளம் இருக்க, அதன் ஒரு பகுதியாகச் சொல்லப்படும் கலப்பு கற்றல் முறையைக் கொரோனா பொது முடக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கலப்பு கற்றலை கொண்டு வருவதற்கு எதிராக, கல்வியாளர்கள் எதிர்நிலைப்பாட்டினை உருவாக்க வேண்டும்.

பிற்காலத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் இணையக் கற்றலை முழுமையாக்கப்படுமானால் ஆசிரியர்களின் அறப்பணி ஒழிக்கப்படும் நிலை உருவாகும்.

நமக்கு நாமே கற்றல் எனும் நிலை உருவாகினால் பின்னர் ஆசிரியர்கள் எதற்கு? கல்வி நிறுவனங்கள் எதற்கு? எனும் பிற்போக்குத்தனமான தரகு முதலாளிகளின் கேள்விகள் அபாயச் சூழலை உருவாகக் கூடும்.

ஒவ்வொரு மாணவக் குழுக்களும் தமக்கான கற்றல் பயிற்றுநரை தாமே நியமித்துக் கொண்டு தமது வீட்டிலே ஒரு கூகுள் வகுப்பறையை உருவாக்கிக் கொண்டு, கல்வி கற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதே உருவாகும். இளைய தலைமுறை மாணவர்களின் அறிவு சார்ந்த சமூகமே நாளை பொதுமைச் சமூகத்திற்கானதாகும்.

வெறுமனே மாணவர்களை ஒரு வங்கியின் உறுப்பினர் போன்றும் முதலீட்டாளர் போன்றும் பங்குதாரர் போன்றும் நினைக்கும் கலப்பு கற்றல் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும்.

கலப்பு கற்றல் முறையில் ஏபிசி (அகடமிக் பேங்க் ஆப் கிரடிட்) எனக் கூறுவது மாணவர்களின் கற்றலை ஒரு வங்கியில் பணத்தைச் செலுத்துவது, வட்டி விகிதத்தை கருத்தில் கொள்வது எனும் வங்கிச் செயல்பாட்டோடுப் பொருத்திப் பார்ப்பது பிற்போக்குத்தனமானதாகும்.

இதனால்தான் மாற்றுக் கல்வியின் தேவையை உணர்ந்த அறிஞர் பாவ்லோ, கற்றல் செயல்பாட்டை வங்கிச் செயல்பாட்டோடு ஒப்பிடுவது மிக மோசமானது என்று கூறியுள்ளார்.

கலப்பு கற்றல் முறையின் பின்விளைவுகள்

• சமூகநீதிக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையை உள்ளடக்கியுள்ளது.

• கலப்பு கற்றல் மாணவர்களைப் பங்குதாரர் போன்றும் முதலீட்டாளார் போன்றும் நினைக்கின்றது.

• கூகுள் வகுப்பறை வழியாகப் புதிய கொள்கையாக நேருக்கு நேர் கற்றல், ஆன்லைன் கற்றல், தொலைதூரக் கல்வி, மெய்நிகர் பயன்முறை உள்ளிட்ட பல கற்றல் முறைகளை ஏற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கிறது.

• கலப்பு கற்றல் கற்பித்தலில் கவனம் செலுத்துவதன் மூலம் தொழிற்கல்வி படிப்புகள், பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகளில் கார்ப்பரேட்களின் லாத்திற்கான பல மாதிரி அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதையும் இது ஊக்குவிக்கிறது.

• மாணவர்களின் கல்வி கற்றல் விழுக்காடு குறைவதற்கும், கல்வி கற்றலில் மாணவர்கள் முழு ஈடுபாடு குறைந்து இடைநிற்றல் உருவாகும்.

• நாற்பது விழுக்காடு இணைய வழக் கற்றலை உருவாக்குவதால் ஆசிரியா் பணிக்குறைப்பு ஏற்படும்.

• நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட கல்வி கற்றலை இணைத்தல், தெலைதூரக் கல்வியை உருவாக்கல், ஆன்லைன் மற்றும் மெய்நிகர் தரவுகள், டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவமளிக்கிறது.

• மாணவர்கள் பட்டப் படிப்பை டிப்ளோமா படிப்பாக தாராள மயமாக மாற்றிக் கொள்ளலாம் என்று உரைக்கின்றது.

• தொழிற்கல்விப் படிப்பை தொழில் மய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள கலப்பு கல்வி வழிவகுக்கிறது.

• பள்ளி, கல்லூரிகளில் கட்டிடங்கள், நவீன வகுப்பறைகள் இல்லாத சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வழிக்கற்றல் மற்றும் பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில், கலப்புகற்றல் மாதிரிகளைப் பயன்படுத்த புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP2020) பரிந்துரைக்கிறது.

• கலப்பு கற்றல் கற்றலின் ஒரு பகுதியாக OER(Open educational resources), MOOC (Massive open online courses), Swayam முதலான இணையவழிக் கற்றலை முதன்மைப் படுத்துகிறது.

• மாணவர்களுக்கான வினாடி வினா, மாணவர்களின் ஒப்படைவு, வகுப்புத் தேர்வு, அகமதிப்பீட்டுத் தேர்வு மற்றும் ஏனைய தேர்வுகளை இணைய வழியாக கூகுள் வகுப்பறை வழியாக நடத்தப் பரிந்துரை செய்கிறது.

• பாடத்திட்டத்தில் புலமைத்துவ நிறைந்த பாட ஆசிரியர் ஒவ்வொரு முறையும் கற்பிக்கும்போது கற்றல் திறன் மாறுபடக் கூடியதாகும். ஆனால் மின் பாடப் பதிவுகள் மாறுபாடற்ற நிலைத்த தன்மையைக் கொண்ட மின் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

• கலப்பு கற்றல் மெய்நிகர் ஆய்வகத்தின் வழிக் கற்றலை உருவாக்குகிறது.

• தேசிய தொழில்நுட்பக் கற்றல் திட்டத்தின் (NPTEL - National Programme on Technology Enhanced Learning) வழியாகத் தயாரிக்கப் பட்டப் பாடங்களைக் கலப்பு கற்றலுக்குப் பரிந்துரைப்பது மொழி வாரியான மாநில அரசுகளின் சுயாட்சிக்கான கல்விச் செயல்பாட்டை மறைமுகமாக மறுதலிக்கின்றது.

• கல்வி என்பது மாநில சுயாட்சி சார்ந்ததாக இருக்க வேண்டுமே ஒழிய இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பது மாநில உரிமையைப் பறிப்பதாகும். கலப்பு கற்றலில் இவ்வாறான சிக்கல்களை சரி செய்து புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில அரசின் சுய முடிவெடுத்தலுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு கலப்பு கற்றலை செயல்படுத்துவதற்குத் தடையற்ற இணைய நிகர இணைப்பு வசதி, வன் பொருள், மென் பொருள், ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி முதலான கற்றலுக்குத் தேவையான உள் கட்டமைப்புகள் அமைய வேண்டும்.

இதற்குப் பின்னரே கலப்பு கற்றல், கற்பித்தலை சீராக செயல் முறைப்படுத்த முடியும். கலப்பு கற்றல் இணையவழிக் கற்றலை உள்ளடக்கியிருப்பதால் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம் ஈட்டித் தரக் கூடியதாகும்.

இதைக் கருத்தில் கொண்டே ஒன்றிய அரசு 4ஜி அலைக்கற்றை ஒதிக்கீட்டை அரசுத் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு ஒதுக்காமல் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஏலமிட்டு விற்பனை செய்துள்ளது.

இணைய வழிக் கல்வியை 100 விழுக்காடு விரிவாக்கம் செய்யப்பட்டால் 5ஜி அலைக்கற்றை ஒதிக்கீட்டைத் தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவது உருவாகும்.

நாற்பது விழுக்காடு டிஜிட்டல் கற்றல் என்று கூறி, இனி வரும் காலத்தில் நூறு விழுக்காடு நடைமுறைப் படுத்தப்படும். ஆதலால், கொரோனா பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி இணையவழிக் கற்றலை மையப்படுத்தும் கலப்பு கற்றல் கொள்கையை நிராகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

- ம.கருணாநிதி

 

Pin It