கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

state oppressionகொரோனா வைரஸ்-ஐ முன்வைத்து அரசுகள் கேட்கும் மனிதாபிமானமில்லா கேள்வி

2020ம் ஆண்டு என்பது ஒரு கனவுலகமாக சென்ற தலைமுறையினரால் கற்பனை செய்யப்பட்டது. இந்தியா 2020-ல் வல்லரசாகும் என மேடைக்கு மேடை பேசாத அரசியல்வாதிகளே இல்லை. முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட 2020 இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என விரும்பினர். எப்படியிருப்பினும், 2020 என்பது ஒரு கனவுலகமாக கடந்த 15 ஆண்டுகளாக நம் முன்னே கட்டமைக்கப்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் கனவுலகமாம் 2020 இன் முதல் ஐந்து மாதங்கள் இந்த நூற்றாண்டின் சோகமாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான உயிர் இழப்பும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாவதும், கோடிக்கணக்கில் பொருளாதார இழப்பும் ஈடுசெய்ய முடியா துயரங்கள். இன்னும் 2லிருந்து 5 வருடம் வரை கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு தொடரும் என மருத்துவர்கள், பொருளாதார ஆய்வாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையிலும், பல அரசாங்கங்கள் இத்தருணத்தை தனக்கான வாய்ப்பாகக் கருதி, மிகவும் மோசமான, மனித சுதந்திரத்திற்கு எதிரான பல செயல்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக உலகெங்கும் கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக வளர்ந்துள்ள வலதுசாரி அரசுகள் மனித மாண்பையும், உரிமையும் குழிதோண்டிப் புதைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றன. ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லும் அபாயம் தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் கொரோனா காலத்தைக் காட்டி மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் பறிக்கும் சூழல் நிலவுவதாக கருத்து தெரிவித்துள்ளது. அரசுகளோ பல காலங்களாக மக்களாலும், அரசியல் செயல்பாட்டாளர்களாளும் எதிர்க்கப்பட்ட சட்டத்திட்டங்களை முன்மொழிகின்றன. அவற்றில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய இரண்டு விடயங்கள், ஓன்று நெருக்கடி நிலையை சட்டரீதியில் உருவாக்குவது, இரண்டு கட்டற்ற அரச கண்காணிப்பை (totalitarian surveillance) சாத்தியப்படுத்துவது. கடந்த சில வாரங்களாகவே சர்வதேச ஊடகங்களில் இவை தான் முக்கியமான சிக்கலாகவும், தீர்வாகவும் இருவேறு கருத்துகளுடன் விவாதிக்கப்படுகின்றன.

இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து தான் சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லும். இந்த இரண்டு சிக்கல்களையும் நாம் ஒரு சர்வதேசப் பின்னணியுடன் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. கொரோனாப் பிரச்சனையை முன்வைத்து பல நாடுகளில் பலவிதமான நெருக்கடி நிலைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உருவாகின்றன. அவற்றுள் ஹங்கேரியும் (Hungary), இஸ்ரேலும் (Israel) இருவேறு தளத்தில் ஒரே நோக்கத்துடன் சட்ட மாற்றங்களைச் செய்துள்ளன. இருநாடுகளில் நடந்துள்ள மாற்றங்களின் வழியில் இந்தியா எதை நோக்கிச் செல்கிறது என்பதே இக்கட்டுரையின் மையக்கரு. இந்த மூன்று நாடுகளும் வலதுசாரி ஆட்சியாளர்களால் ஆளப்படுகிறது என்பதை நினைவில் நிறுத்துக.

நெருக்கடி நிலை:

நாம் பெரிதும் அறிந்த சட்டரீதியிலே நெருக்கடி நிலையை அறிவிப்பது என்பது சென்ற தலைமுறை ஆட்சிக் காலங்களில் நாடாளுமன்றத்தை இராணுவத்தால் முடக்கி, நெருக்கடி நிலையை அறிவிப்பது அல்லது இந்தியாவில் 1975யில் அறிவித்தது போல உள்நாட்டுப் பயங்கரவாதம், சதித்திட்டம் என்ற போர்வையில் நெருக்கடி நிலையை அறிவிப்பது. ஆனால், ஹங்கேரி வலதுசாரி ஆட்சியாளர் ஒரு மருத்துவ, பொது சுகாதாரப் பிரச்சனையை முன்வைத்து ஓர் அரசியல் நெருக்கடியை அறிவித்துள்ளார்.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பன் (Viktor Orban) கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி கொரோனா பிரச்சனையை முன்வைத்து ஒரு அவசர கால கொரோனா (நெருக்கடி) சட்டத்தை முன்மொழிந்தார். அரசுக்கு அளவு கடந்த அதிகாரத்தை இது வழங்கியுள்ளது. இந்த சட்டத்தினால் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்வது பத்திரிக்கைச் சுந்திரம். தவறான செய்தியைப் பரப்புதல் (spreading falsehoods) என்ற சரத்தின் கீழ் அரசின் தவறை சுட்டிக் காட்டும் அனைத்து பத்திரிக்கையாளர்களைக் கைது செய்து இரண்டு முதல் ஐந்து ஆண்டு வரை சிறையில் அடைக்கலாம். மேலும், அரசு கூறும் தவறான வழிகாட்டுதலைக் கூட பத்திரிக்கைகள் சுட்டிக் காட்ட முடியாத சூழல் நிலவுகிறது. ஒரு பொது சுகாதார ஆபத்து காலகட்டத்தில் தான் பத்திரிக்கையாளர்களின் பங்கு இன்றியமையாதது. அரசு நிறுவனம் தவற விடும் இடங்களை சுட்டிக் காட்டுவதால் தான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்ற பெருமையைப் பத்திரிக்கைத் துறை பெற்று உள்ளது. அத்தேவையுள்ள இக்காலத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது ஹங்கேரி அரசு.

மேலும், இந்தச் சட்டத்தில் குறிப்பிட வேண்டிய மிக முக்கிய சிக்கல் என்னவென்றால், கால நிர்ணயம் செய்யாமல் நிறைவேற்றப் பட்டுள்ளதே. சட்ட நிபுணர்கள் இந்தச் சட்டத்தை ஒரு நெருக்கடி சட்டமாகத் தான் கருதுகின்றனர். இந்தச் சட்டத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பல ஆயிரம் மக்கள் இணையத்திலும் மற்ற தளங்களிலும் எதிர்த்துப் போராடுகின்றனர். சர்வதேசப் பத்திரிக்கையாளர்களும், அய்ரோப்பிய அரசும் இந்தச் சட்டத்தின் தீவிரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். சர்வதேச எதிர்ப்பை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் “நாய் குரைக்கத்தான் செய்யும், நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்” (Dogs bark, the caravan carries on) என்று ஏளனம் செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஹங்கேரி அரசு அந்நாட்டு அரசியல் சாசனத்தையும், நாடாளுமன்றத்தையும் செயலிழக்கச் செய்து தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) அறிக்கையில் ஹங்கேரி மக்களாட்சியில் இருந்து சர்வாதிகார ஆட்சிக்கு வேகமாக நகர்ந்ததாக அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் விரோதச் சட்டங்கள் எவ்வாறு சாத்தியப்படும் என்பதற்கு ஹங்கேரி கண்முன்னால் உள்ள ஒரு சாட்சி.

அரசாங்கம் எவ்வாறு நெருக்கடி காலச் சட்டங்களை நிறைவேற்றுகிறது என்பதற்கு ஹங்கேரி ஓர் உதாரணம் என்றால், இஸ்ரேல் அரசு மற்றொரு புறத்தில் இந்த சிக்கலான காலகட்டத்தைப் பயன்படுத்தி எவ்வாறு மக்கள் விரோத அரசுக் கட்டமைப்பை எந்த எதிர்ப்புமின்றி உருவாக்குகிறது என்பது அடுத்த உதாரணம். இஸ்ரேல் அரசு இந்த கொரோனாவைக் காட்டி தன் அரசுக் கண்காணிப்பை எவ்வாறு வலுபடுத்துகிறது, அரசுக் கண்காணிப்பின் சிக்கல் என்ன என்பதை விரிவாகப் பார்கலாம்.

உள்நாட்டு மக்களைக் கண்காணிக்க அவர்களின் கைப்பேசியின் மூலம் அவர்களின் (குடிமக்களின்) நகர்வுகளை உளவு பார்ப்பதே இதன் முக்கிய குறிகோள். இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முக்கிய பிரச்சனையாக வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படுவது இந்த அரசக் கண்காணிப்பு. அரசுக் கண்காணிப்பு (Mass Surveillance/ Surveillance State) என்றால் என்ன? எவ்வாறு அது மக்களாட்சிக்கு விரோதமானது? அதன் வரலாறு என்ன? என்று சுருக்கமாக முதலில் தெளிவுபடுத்தலாம்.

அரசு கண்காணிப்பு

வரலாறு நெடுக கண்காணிப்பும், உளவும் அரசுகளின் முக்கியமான செயலாகவே கருதப்பட்டன. குறிப்பாக அரசுக்கு எதிரான மக்கள் புரட்சி வந்து விடுமோ என்ற அச்சம் அனைத்து அரசர்களிடமும், அரசுகளிடமும் இருந்தன. உளவும், கண்காணிப்பும் புரட்சியைத் தடுக்கும் ஒரு கருவியாகவே கருதப்பட்டன. ஆனால் இன்றைய நவீன அரசுகள் கண்காணிப்புகளை அச்சவுணர்வால் மேற்கொள்ளவில்லை, தமது அரசின் அஸ்திவாரமாகவும் தமது மூலதனமாகவும் பார்க்கின்றன. பல வருடங்களாக ஆதாரமில்லா புரளியாகக் கருதப்பட்ட இந்த கருத்துகள், 2013இல் அமெரிக்க உளவு நிறுவனத்தில் வேலை செய்த ஊழியரும், விசில்ப்ளோவரான எர்வாட் ஸ்னோடன் (Edward Snowden) வெளியிட்ட ஆதாரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. முகநூல், கூகிள், மைக்ரோசாஃப்ட் எனும் ஏனைய நிறுவனங்கள் வழியாக எவ்வாறு பயங்கரவாதிகளுக்குச் சிறிதும் தொடர்பற்ற கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமாக சேகரிக்கவும், காண்காணிக்கவும் படுகிறது என்று உலகிற்கு அறிவித்தார்.

அப்போது, பல அரசு சார்புள்ள லிபரெல் (Liberal) சிந்தனையாளர்கள் "தீவிர கண்காணிப்பு என்பது தேசப் பாதுகாப்புக்கு இன்றியமையாத ஒன்று. மேலும், முழுப் பாதுகாப்பும், முழு சுதந்திரமும் என்பது என்றுமே சாத்தியமற்ற ஒன்று. பாதுகாப்பா அல்லது வரையறுக்கப்பட்ட சுதந்திரமா?" எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் குடிமக்களின் எந்த ஒரு அனுமதியுமின்றி அரசு சட்டவிரோதமாக அவர்களை ஒரு பயங்கரவாதியாகப் பாவித்து உளவு பார்ப்பதையும், இது ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்பதையும் வசதியாக மறந்து (மறைத்து) விட்டனார்.

மேலும், இப்படி குடிமக்களை உளவு பார்த்து திரட்டப்பட்ட தகவல்களை அரசு மட்டுமா பயன்படுத்துகிறது அல்லது வேறு எந்தெந்த நிறுவனங்கள் இதனை சேமித்து வைத்துள்ளார்கள் எனும் கேள்வி முக்கியமானது. குறிப்பாக இந்தத் தகவல்களைத் திரட்டித் தரும் இணையதளங்களான முகநூல், கூகுள் போன்றவை எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அத்துடன் வேறு யாருக்கு எல்லாம் இந்தத் தகவல்கள் விற்கப் படலாம் போன்ற கேள்விகள் மிக முக்கியமானவை.

இவ்வாறு விவாதங்கள் செல்ல, இரண்டு வருடங்கள் முன்பு, கேம்பிரிஜ்ட் அனாலிடிக்கா எனும் தனியார் நிறுவனம் 2016 அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக எவ்வாறு மக்களின் கருத்துக்கள் பொய்களின் மூலம் உருவாக்கப் பட்டு தேர்தல் வெற்றியையே மாற்றியமைத்தது என்ற செய்தி, விவாதத்தை மேலும் தீவிரப் படுத்தியது. கேம்பிரிஜ்ட் அனாலிடிக்கா என்பது தேர்தலுக்கான யுத்திகளை வகுத்துக் கொடுக்கும் ஒரு பிரிட்டானிய தனியார் நிறுவனம். அமெரிக்கா மட்டுமின்றி பல நாட்டின் முக்கிய தேர்தல்களிலிலும் இந்த நிறுவனம் பங்கு வகித்துள்ளது. மேலும், அய்ரோப்பிய கூட்டமைப்பினை விட்டு பிரிட்டன் வெளியேறுவது குறித்து முடிவு எடுக்கும் பிரக்சிட் தேர்தலிலும் இது முக்கியப் பங்காற்றியது.

இந்த நிறுவனத்தின் முக்கிய பணி, அவர்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்க பல பொய்களை முகநூல் மற்றும் இன்னும் பல இணையதளம் வழி பரப்புவதும், அதற்கான யுத்திகளை உருவாக்குவதும். இன்றைய பல வலதுசாரி ஆட்சியாளர்கள் இவர்களின் தயவால் தான் கட்டற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். அமெரிக்காவில் 2016 தேர்தலில் கருப்பின வெறுப்பை உண்டாக்க, பல போலி புள்ளிவிவரங்களை உருவாக்கிப் பரப்பினர். பலர் ஆதாரப்பூர்வமாக இதை மறுத்தும் அவை (அந்த பொய்யான புள்ளிவிவரம்) பல அமெரிக்க நடுத்தர மக்களின் வாக்குகளை மாற்றியமைத்தது. நம் நாட்டில் சங்கிகள் சிறுபான்மையினருக்கு மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு எதிராக மேற்கொள்ளும் அதே யுத்திதான்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் எப்படி பொய்த் தகவல்கள் நம்ப வைக்கப்படுகின்றன என்பதே. மீண்டும் மீண்டும் பகிரப்படுவது, அரசியல் தெளிவின்மை என்பது போன்ற காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியில் ஒரு முக்கிய விடயத்தையும் விளக்க வேண்டும்.

பிரிட்னி கைசிர் (Brittany Kaiser) எனும் கேம்பிரிஜ்ட் அனாலிடிக்காவின் முன்னாள் இயக்குனர் கூறுகிறார், நம் செயல்களின் மூலம் திரட்டப்படும் தகவல்கள் கொண்டு நம்மை வகைப்படுத்தி அதற்கு ஏற்றாற் போல் தகவல்கள் நம்மை வந்தடையும். எடுத்துக்காட்டாக, ஒருவர் ஜனநாயகவாதியாக இருக்கிறார் மற்றும் மதத்தின் மீது அவர் ஈடுபாடு கொண்டவர் என்றால், அவருக்குத் தொடர்ச்சியாக மதம் சார்ந்த தகவலும், அதன் அடிப்படை கொண்ட அரசியல் செய்திகளும் தொடர்ந்து அனுப்பப்படும். இதன் மூலமே ஒரு சராசரியான ஜனநாயக எண்ணம் கொண்ட நபர் கூட வலதுசாரிகளுக்கு சாதகமாக வாக்களிக்கிறார். ஒரு தனியார் நிறுவனம் நம்மை வேவு பார்த்து தகவல்களைத் திரட்டி நம்மை முட்டாள் ஆக்கி, சக மனிதர்கள் மீது வெறுப்புணர்வை விதைத்து (பொய்களின் மூலம்) நம் தகவல்களை வியாபாரம் செய்கிறது. அதன் உதவியால் ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை வேறு ஒரு தனியார் நிறுவனம் ஆட்சியில் அமர வைக்கிறது.

உலகளவில் நடக்கும் இந்தத் தகவல் வியாபாரத்திற்கும் நமக்கும் இந்த கொரோனா காலத்தில் என்னதான் சம்பந்தம் என்றால், இன்றுவரை சட்டரீதியாக இவை தடுக்கப்பட்டு வருகிறது. உலகளவில் இரகசிய உரிமை, தனிமனித உரிமை என அனைத்துத் தளங்களிலும் இதை ஒரு முக்கிய சிக்கலாகப் பேசி ஒரு எதிர்வினையை ஜனநாயக சக்திகள் உருவாக்கியுள்ளன. ஆனால், இன்று பல அரசாங்கங்கள் மேலே குறிப்பிட்டது போல இந்த கொரோனா காலத்தில் அரசு கண்காணிப்பிற்கான சட்டரீதியான அனுமதிகளை அவரச அவரசமாக நிறைவேற்றுகின்றன. அப்படிப்பட்ட சட்டத்தைத் தான் இஸ்ரேல் அரசு அனுமதித்துள்ளது. அதுவும், நாடாளுமன்ற ஒப்புதலின்றி, அமைச்சரவைக் கூட்டத்தின் மூலமே.

இஸ்ரேல் அரசு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளின் கைப்பேசியின் இணையதள வசதியோடு அவர்கள் அருகில் இருந்தோர், அவர்கள் பக்கத்தில் இருந்தோர் என அனைவரையும் கண்காணித்துத் தகவல் தருவதாகக் கூறுகிறார்கள். இதற்காக அவர்கள் ஒவ்வொரு குடிமக்களின் கைப்பேசியையும் அவர்களின் அனுமதியின்றி டிராக் செய்கிறார்கள்.

இது ஒரு அவசர காலச் சட்டம் தானே என நினைக்கலாம் ஆனால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் யுவால் நோவா ஹாராரி (Yuval Noah Harari), "1948யில் இஸ்ரேல் போரின் போது அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டம் (பத்திரிக்கை தணிக்கை இன்னும் பிற உரிமை மறுப்பு சரத்துகளுடன்) போர் முடிந்து அரை நூற்றாண்டு காலம் வரை நடைமுறையில் இருந்தது. இவ்வாறு வரலாறு இருக்க எப்படி இந்தச் சட்டம் தற்காலிகம் என நம்புவது?" என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், இஸ்ரேல் உயர்நீதிமன்றம் இந்த முன்னெடுப்பை கடுமையாகச் சாடியுள்ளது. இது தனிமனித உரிமையை வேரோடு அழிக்கும் முயற்சி எனக் கருத்து தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சட்டம் ஒவ்வொரு முறையும் இரண்டு வாரம், மூன்று வாரம் என நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் மட்டுமல்ல, தென்கொரியா, சிங்கப்பூர், சீனா என பல நாடுகள் இவ்வாறு கண்காணிப்புச் சட்டத்தை முன்மொழிகிறார்கள். சென்ற முறை, அரசின் கட்டற்ற கண்காணிப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, முழுப் பாதுகாப்பா அல்லது சுதந்திரமா எனக் கேட்டவர்கள், இன்று நம் முன்னே உங்களின் உயிரா இல்லை உரிமையா எனக் கேட்கிறார்கள். இந்த நெருக்கடிக் காலத்தை முன்வைத்து இந்த அரசாங்கங்கள் இன்றியமையாத நம்முடைய உரிமையைப் பறிக்கின்றன. எதிர்காலத்தில் நம் உரிமையை மொத்தமாக அழிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கும் போது இந்திய ஊடகங்கள் மெளனம் காக்கின்றன.

இந்தியா

இந்தியாவில் முழுஊரடங்கு தவிர வேறு எந்த சரியான நடவடிக்கையையும் இந்த அரசு செய்தபாடு இல்லை. மேலும், இந்த காலத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மாநில உரிமைகளைப் பறிப்பது, நாம் கடுமையாக எதிர்த்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது, காவிரியில் தமிழர் உரிமையைப் பறிப்பது என மக்கள் விரோதமான திட்டங்களை நிறைவேற்றுவது ஒரு பக்கமாகவும், காவல் துறை கொண்டு அரசின் நடவடிக்கையை கேள்வி கேட்போரைக் கைது செய்வது எனவும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல் துறைக்கு அளவுகடந்த அதிகாரத்தை அளித்து குடிமக்களை பயத்தில் ஆழ்த்தி தனது திட்டங்களை நிறைவேற்றுகிறது.

மக்கள் விரோதத் திட்டங்களை நிறைவேற்றுவதோடு இல்லாமல், இஸ்ரேல் போல் கட்டற்ற கண்காணிப்புக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பையும் உருவாக்க எண்ணியுள்ளது. அது தான் ஆரோக்யா சேது எனும் செயலி. ஆதார் போல இந்தச் செயலியும் தனிமனித இரகசிய உரிமையை கேள்விகுள்ளாக்கி உள்ளதாகச் செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த செயலியில் உள்ள பிரச்சனைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று தொழிற்நுட்பம் சார்ந்த போதாமை மற்றும் குளறுபடிகள். இரண்டு சட்டரீதியான பாதுகாப்பின்மை. மூன்றாவது பொது சுகாதாரத்தைத் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான ஒரு முன்னேற்பாடு.

ஆரோக்யா செயலி இந்திய அரசாங்கத்தால் கொரோனா தொற்று ஏற்பட்டோர் குறித்து தகவல் திரட்டுவதற்கு இஸ்ரேல் பயன்படுத்தும் அதே போன்ற contact tracing தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. ஆனால் இந்தச் செயலியில் தொழிற்நுட்பப் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் வருந்தத்தக்க முறையில் உள்ளன.

பிரெஞ்சு எதிகல் ஹாக்கர் (Ethical Hacker) எல்லியாட் அண்டர்சன் (Elliot Alderson) இந்தச் செயலியின் பாதுகாப்பின்மையை வெளிபடுத்தியுள்ளார். குறிப்பாக அவர் கோடிட்டுக் காட்டியுள்ள ஒரு பிரச்சனை, எந்த எந்த பகுதியில் யார் எல்லாம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் பெயர்கள், மற்ற விவரங்களை எளிதாக எடுக்கும் நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், செயலியின் இடத்தை மாற்றியமைத்து வேறு இடங்களில் இருக்கும் நோயாளிகளின் தகவல்களையும் எடுக்க முடிகிறது என்கிறார். இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் மற்ற இடத்தில் உள்ள நோயாளிகளின் விவரங்களை ஒரு மூன்றாம் நபர் எடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூறிய பிறகு இந்திய அரசு சரி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர் கூறிய மற்ற பிரச்சனைகளை மறுத்துள்ளது. ஆனால் அதை அவர் செய்து காட்டியுள்ளார். ஆதார் தகவல்களை யாரலும் எடுக்க முடியாது என்று வீறாப்பாய் சொல்லிய ஆதார் இயக்குநரின் தகவல்களை இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வேவு பார்ப்பது, அதை தனியாரின் உதவியோடு பெறுதல் போன்ற பிரச்சனைக்கு மத்தியில் இந்த ஆரோக்யா சேது செயலியும், ஆதாரும், எளிமையாக எந்த ஒரு மூன்றாம் நபரும் ஹாக் செய்து தகவல்களை எடுக்கும் நிலையில் இருப்பது நமக்கான அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

இரண்டாவதாக மிக முக்கியமான கேள்வி, நம்மிடம் இருந்து திரட்டப்படும் தகவல்கள் எங்கு சேமிக்கப்படுகிறது என்பதுதான். அரசு சொல்லுகிறது, நம் கைப்பேசியில் மட்டுமே சேமிக்கப்படுவதாக... ஆனால் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க இந்த செயலியின் source codeயை (எவ்வாறு இந்த செயலி வடிவமைக்கப்பட்டது, இதன் கட்டளை குறித்த விவரங்கள்) வெளியிடாமல் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் android-க்கான source code மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் ios (iphone), மற்றும் மிக முக்கியமாக நம் தகவல்களை பெறும் server க்கான source code-ஐ வெளியிட மறுக்கிறது.

இவ்வாறு இன்றிமையாத தகவல்களை மறைப்பதன் நோக்கம் என்ன என்பதே நமது முதல் கேள்வி. ஒரு புறம் மூன்றாம் நபரே எளிமையாகத் திருடும் அளவுக்கு அஜாக்கிரதையாக செயலியின் வடிவமைப்பு, மறுபுறம் நம் தகவல்கள் எங்கு எல்லாம் சேமிக்கப்பட்டு யாருக்கெல்லாம் கிடைக்கப் போகிறது என்பது குறித்த தெளிவின்மை. இப்படியான குழப்பதிற்குப் பதில் தர வேண்டிய சட்டத்துறையில் இதன் பாதுகாப்பு குறித்தும், இதன் பரிமாற்றம் குறித்தும் இன்னும் சரிவர சட்ட வரையறை செய்யப்படவில்லை.

கடந்த பத்து வருடங்களாகவே ஆதாரை முன்வைத்து தனிமனிதத் தகவல் மற்றும் இரகசியப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதம் இந்தியாவில் நடக்கிறது. எனவே இது குறித்து தெளிவான வரையறையை வல்லுனர்கள் வகுக்கும் வரை தற்போதைய குழப்ப நிலையே நீடிக்கும். இதைப் பயன்படுத்தி நிறுவனங்களும், அரசும் நமது தகவல்களை எடுத்துச் செல்ல முடியும்.

ஆதாருக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய சட்ட வல்லுனர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசன்னா, "ஆதார் தனிமனித உரிமைக்கு எதிரானதா என நீதிமன்றம் விசாரிக்கும் போதே அரசு 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தி வாங்க வைத்து விட்டது. அந்த எண்ணிக்கையை வைத்தே அதன் சட்ட அங்கீகாரத்தை வேண்டியது அரசு" என்கிறார்.

ஆரோக்கிய செயலியின் மூலம் தகவல் திரட்டலிலும் இவை நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், சட்ட வல்லுனர்கள் முன்வைக்கும் மிக அடிப்படையான எந்தக் கேள்விக்கும் அரசு பதில் அளிக்கவில்லை. குறிப்பாக, கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த செயலியின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் அழிக்கப்படுமா? அவரச காலத்தில் முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் எதிர்கால நிலைபாடு என்ன? இதற்கும் நிதி ஆயோக் ஜுலை 2018யில் வெளியிட்ட National Health Stack திட்டத்திற்கும் தொடர்புள்ளதா? இவை அனைத்தும் நமது மூன்றாவது பிரச்சனையான பொதுத்துறையை தனியாருக்கு தாரைவாக்கும் புள்ளிக்கு இட்டுச் செல்லும்.

National Health Stack என்பது இந்திய குடிமக்களுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட மின்னனு சுகாதாரத் தகவல் பதிவு. 2018யில் நிதி ஆயோக் இதன் செயல்பாடு குறித்த வரைவை வெளியிட்டது. இதன்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு மருத்துவ எண் (Health ID) உருவாக்கப்பட்டு அதன் கீழ் உங்களுடைய மருத்துவத் தகவல் பதிவு செய்யப்படும். தனிநபரின் தகவல்கள் அரசு, மருத்துவர் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பகிரப்படும். தற்போதைய நிலையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் அங்கமாக்கப்பட வில்லை என்றாலும். விரைவில் அவர்களை இணைப்பதற்கான வாய்ப்பு சட்டவரைவில் இருக்கிறது.

மேலும், இந்தக் கட்டமைப்பை உருவாக்குவது எளிமையானது அல்ல, மிகவும் செலவு பிடிக்கும் திட்டம். எனவே தான் தனியார் நிறுவனங்கள் தற்காலிகமாக இந்தத் திட்டத்தில் இருந்து விலகி உள்ளன. ஆனால் அடிப்படையான செயல்திட்டம் வரும் போது கட்டாயம் தனியாரிடமே இந்த கட்டமைப்பு அளிக்கப்படும்.

எவ்வாறு உறுதியாகக் கூறுகிறோம் என்றால் தற்போதைய நிலையில் இது ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) எனும் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்திற்காக உருவாக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்டம் என்பது தனியார் காப்பீட்டுத் திட்டங்களுக்கும் இதை விரிவு படுத்துவது தான். முதலில் அரசுத் துறைக்கு என மிகவும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை தனியார் துறைக்குப் பின்னால் அளிப்பது ஒன்றும் புதியது அல்லவே. BSNL தொடங்கி இன்று விண்வெளி ஆராய்ச்சி வரை அது தான் நடக்கிறது.

கடந்த ஒரு வருடமாக இந்தத் திட்டத்திற்கான செயல் வடிவத்தை அரசால் உருவாக்க முடியவில்லை. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள். ஒன்று இந்த கட்டமைப்புக்கான செலவு, இரண்டு இது ஏற்கனவே உலக அளவில் தோல்வியடைந்த ஒரு திட்டம். 2002யில் இங்கிலாந்து நாட்டில் இந்தத் திட்டம் (National Health Service Information Authority) முதலில் முயற்சி செய்யப்பட்டு மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. கிட்டதட்ட 12.5 பில்லியன் பவுண்ட்(pounds) செலவு செய்து இந்தத் திட்டத்தை மூடிவிட்டனர். மேலும் தங்களது பொது சுகாதாரத் துறையை பல கோடி செலவு செய்து மீட்ருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.

இங்கிலாந்து போன்ற பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாட்டிற்கே இந்த நிலை எனில், இந்தியாவில் எவ்வாறு சாத்தியப்படும் என்று வினவினர். எனவே அரசு சிறிது காலம் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து இருந்தது. ஆனால் இன்றைய அசாத்திய நிலையைப் பயன்படுத்தி இந்த தோல்வியடைந்த திட்டத்தை நம் மீது திணிக்கப் பார்க்கிறது. அரசு மக்களுக்குத் தேவையான மருத்துவமனையை உருவாக்காமல் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பாருங்கள், அதற்கான செலவை நாங்கள் தருகிறோம் என்று ஏமாற்றுகிறது.

இந்த contact tracing தொழிற்நுட்பம் மூலம் திரட்டப்படும் தகவல்கள் தொற்று நோய் பரவாத காலத்தில் எதற்காக பயன்படுத்தப்படும் என்பது இன்றும் விடை தெரியாத கேள்வி. ஒரு குடிமகனின் நகர்வுகளைக் காண்காணிக்கும் ஒரு கருவியை அரசு கட்டாயப்படுத்துவது நமது சுதந்திரத்திற்கு எதிரானது இல்லையா?

கொரோனா எனும் தொற்று நோய் பரவும் இந்த நேரத்தில் அரசுக்கு எது கடமையாக இருக்க வேண்டும்? அனைவருக்கும் முகக் கவசம், கையுறை, உணவு அளிப்பது என்பதே முதன்மையான செயல்கள். ஆனால் இதுவரை அரசு இதைச் செய்துள்ளதா? இன்றுவரை பெரியாரிய, தமிழ்த் தேசிய, இஸ்ஸாமிய தோழர்களே அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்குகிறார்கள். மோடியோ, ஆரோக்கியா சேது செயலியை பதிவிறக்கச் சொல்லுவதும் அது ஏதோ கொரோனாக்கான மாற்று மருந்து போலப் பேசுவதும் ஆக இருக்கிறார்.

ஹங்கேரியில் அரசு அவசரச் சட்டத்தின் வழியே கட்டற்ற அதிகாரத்தை தன்வயப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இந்த நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி அரசு கண்காணிப்புக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த இரண்டையும் ஒருசேரச் சேர்த்து இந்திய அரசு நடைமுறைப் படுத்துகிறது. ஒரு பக்கம் காவல் துறை அதிகாரத்தைக் காட்டி அப்பாவி மக்களைத் துன்புறுத்துவது, மறுபக்கம் மக்கள் விரோதச் சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது என அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை இந்த கொரோனா காலத்தில் செயல்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசு.

தனது எதிர்காலத் தேவையை கணக்கில் கொண்டு மக்களின் தகவல்களை எடுக்கவும், மக்கள் விரோதக் கட்டமைப்பை உருவாக்கவும் ஆரோக்யா சேது செயலியை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது விருப்பத்தின் பெயரிலே என்கிறது அரசு. ஆனால் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயப் பதிவிறக்கம் செய்யுமாறு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். இவை அனைத்திற்கும் மேல் டில்லி அருகில் உள்ள நொய்டாவில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யாதற்காக மக்களை கைது செய்துள்ளார் அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி. ஹாரியானாவில் பேருந்து பயணத்திற்கு இந்த செயலி கட்டாயம் என்கிறது அந்த மாநில அரசு. "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" எனும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.

- மே 17 இயக்கக் குரல்