நீட் தேர்வினால் வருடம்தோறும் பல மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்நிலையில், தற்போது முதுநிலை மருத்துவ நீட் தகுதி தேர்வில் பூஜியம் மதிப்பெண்ணுக்கும் கீழே குறைவான(Minus) மதிப்பெண் எடுத்தாலே மருத்துவம் பயில முடியும் என அறிவித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியான இடங்களை நிரப்ப நீட் மதிப்பெண்ணை குறைப்பது என்பது விலை மதிப்பில்லாத உயிரை விட நீட் பயிற்சி மையங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மட்டுமே பாஜக அரசிற்கு முக்கியம் என்பதைத்தான் காட்டுகிறது.
இந்த சூழ்ச்சியை உணர்ந்ததனால்தான் தமிழ்நாடு ஆரம்பம் முதலே சமூக அநீதியான இந்த நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.
இந்த ஆண்டு 2023-க்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசிற்கு தர வேண்டிய 50% ஒதுக்கீட்டிற்குப் போக, மீதமுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் சுற்று முடிவுற்ற நிலையில், தற்போது மூன்றாவது சுற்றும் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 1300 இடங்களுக்கு மேலாகவும், இந்திய அளவில் கிட்டத்தட்ட 13000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்கள் நிரம்பாமல் இருக்கவே, இனி “முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ஜியம் விழுக்கூறு (Zero Percentile)” என்பதை கட்-ஆஃப் மதிப்பெண்ணாக அறிவித்துள்ளதன் மூலம் நீட் தேர்வு எழுதிய அனைவரும் தகுதியானவர்கள்” என்ற அறிவிப்பை ஒன்றிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது “பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவான நெகடிவ் மதிப்பெண் எடுத்தால்கூட மருத்துவ சேர்க்கை பெற்று கல்லூரியில் சேரலாம்” என சொல்லியிருக்கிறார்கள்.நீட் தேர்வினால் தகுதியான மருத்துவர்களை உருவாக்கமுடியும் என்கிற அடிப்படையற்ற வாதத்தினை இதுவரையில் வைத்துக் கொண்டிருந்த பாஜக அரசு தற்போது அதற்கு நேர் எதிரான ஒரு அறிவிப்பினை வெளியிட்டதன் மூலம் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கார்ப்பரேட் நல செயல்பாடுகள் மேலும் வெளிப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் வென்று இளநிலை மருத்துவம் பயின்று மருத்துவர் ஆன பின்பு, முதுநிலைக்கும் நீட் தேர்வு எழுத வேண்டும். முன்பு 50 கட்-ஆஃப் மதிப்பெண்ணாக இருந்து, பின்பு 40 மற்றும் 25-ஆக மாறி, தற்போது ‘0’ கட்-ஆஃப் மதிப்பெண் என்கிற அளவில் குறைத்துள்ளது. இது பூஜ்ஜிய விழுக்கூறு (Zero Percentile) தரவரிசை எனப்படுகிறது. இந்த பூஜ்ஜிய விழுக்கூறு தரவரிசை என்பது மருத்துவம் மற்றும் பல்மருத்துவ முதுகலை சேர்க்கைக்கு பூஜ்ஜியத்துக்கு கீழ் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களும் மருத்துவம் பயில தகுதியுடையவர்கள் என்பது பொருளாகும். அதாவது அரசு கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குரிய மதிப்பெண்களைப் பெற்றவர்கள் போக, அதை விட ஒன்றிரண்டு மதிப்பெண் கீழே பெற்றவரும், மைனஸ் 40 மதிப்பெண் பெற்றவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய தகுதியானவர்கள் ஆகிறார்கள். பணம் கொட்டிக் கொடுத்தால் இரு சாராரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரலாம். படிப்பு அல்லாமல் பணம் மட்டுமே முடிவு செய்யும் இந்த நீட் அநீதி மருத்துவ படிப்பிற்கான தகுதியாக முன்வைக்கப்படுகிறது.
பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்கிற நிலையில் இது போன்ற நீட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு மருத்துவத்தை ஊழலின் சட்டப்பூர்வ வடிவமாக மாற்றியிருப்பதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெறுகிறது. அனிதா துவங்கி இதுவரை 23 மாணவர்களும் ஒரு பெற்றோரும் நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், பாஜக அதற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போதைய இந்த அறிவிப்பையொட்டியும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் வழக்கம் போல பொய்யை கட்டவிழ்த்துள்ளார். கடந்த 2022-2023 ஆண்டு 1.80 லட்சத்திற்கும் மேல் முதுநிலை மருத்துவ இடங்கள் இருந்ததாகவும், அதில் பல இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்ததால் தற்போது பூஜ்ஜிய கட்-ஆஃப் மதிப்பெண் அளவில் குறைந்துள்ளதாகவும், மேலும் MBBS படிப்பின் இறுதித் தேர்வே மதிப்பெண் மருத்துவ மேற்படிப்பு (PG) சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணாக கருதப்படும் என வாய்க்கு வந்தபடி முற்றிலும் தவறாக பேசியுள்ளார்.
PG seats in TN |
Years |
55,495 |
2020-2021 |
60,202 |
2021-2022 |
64,059 |
2022-2023 |
67,802 |
2023-2024 |
இவ்வாண்டு மருத்துவ இளநிலை (UG) 1,07,948 மற்றும் முதுநிலை (PG) 67,802 இடங்களையும் சேர்த்தால் கூட 1,75,750ஆக தான் வரும், ஆனால் அண்ணாமலையோ சென்ற ஆண்டு PG 64,059 காலியிடங்களை 1.80 லட்சத்திற்கு மேல் இருப்பதாக உளறியுள்ளார். அதுமட்டுமல்ல, மருத்துவ மேற்படிப்புக்கு இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதித் தேர்வு மதிப்பெண்ணே போதும் என ஒன்றிய அரசு அறிவிப்பாணையில் எங்கும் குறிப்பிடவில்லை. இதே போல் தெலுங்கானா ஆளுநராக இருக்கும் பாஜகவை சேர்ந்த தமிழிசை அவர்களும், மருத்துவராக இருந்தும்கூட இதற்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் குழப்பமான பதிவுகளை செய்கிறார்.
ஒன்றிய அரசு என்பது மாநிலங்களின் நலனில் என்றுமே அக்கறைக் கொண்டதில்லை. தற்போதுகூட தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி மறுத்துள்ளது ஒன்றிய அரசு. இந்த அறிவிப்பு ஆகத்து 16, 2023-ல் தேதி அரசிதழில் வெளியானது. அதற்கு மேலும் இரண்டு விதிமுறைகளை வகுத்துள்ளது.
- முதலாவதாக, 2024 – 25 ஆண்டு முதல் ஒரு அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரியில் 150 இருக்கைக்கு மேல் சேர்க்கை அனுமதி கிடையாது, 2023-2024 ஆண்டுக்கு பிறகு புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி கிடையாது.
● இரண்டாவதாக, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 70 மருத்துவக் கல்லூரிகளில் 10,000 மருத்துவ இருக்கைகள் உள்ளதால், கூடுதலாக அதிக கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாது என்கிறது.
Best Medical States |
Worst Medical States |
||
States |
People per Doctor |
States |
People per Doctor |
Tamil Nadu |
253 |
Jharkhand |
8180 |
Delhi |
334 |
Haryana |
6037 |
Karnataka |
507 |
Chhattisgarh |
4338 |
Kerala |
535 |
Uttar Pradesh |
3767 |
Goa |
713 |
Bihar |
3207 |
Punjab |
789 |
Himachal Pradesh |
3124 |
அதாவது 2018-ம் ஆண்டில் சுமார் எட்டு கோடி மக்கள் தொகையுள்ள கணக்குப்படி, தமிழ்நாட்டில் 250 நபருக்கு ஒரு மருத்துவர் அதாவது ஆயிரத்துக்கு நான்கு மருத்துவர் (1000:4) என்ற விகிதத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10,000 மருத்துவ பட்டதாரிகள் மற்றும் 1,500 வெளிநாட்டு பட்டதாரிகள் மருத்துவ உரிமத்திற்கு விண்ணப்பிக்கிறார்கள். பாஜக மோடி அரசோ ஆயிரத்துக்கு ஒரு மருத்துவர் (1000:1) என்ற விகிதத்தை பரிந்துரைக்கிறது. நாடு முழுவதும் சமத்துவமான பங்கீடு வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாட்டை விதிப்பதாக கூறுகிறது.
ஒரு நாட்டின் ஆரோக்கியத்திற்கு கல்வி மற்றும் சுகாதாரம் முதன்மையானது. அப்போதுதான் அந்த நாடு சமூக, அரசியல், பொருளாதார ரீதியான வளர்ச்சியடைய முடியும். இந்தியாவில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 27% மட்டுமுள்ள நிலையில், தமிழ்நாடு 50% முதலிடம் பிடித்துள்ளது. அதனால்தான் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற மாநிலங்களை விட வளர்ச்சியடைந்த சுகாதாரக் கட்டமைப்பினைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அதனை மேலும் பரவலாக்க முயன்றுக்கொண்டிருக்கும்போது, ஒட்டுமொத்த நாட்டிற்கான மருத்துவ விதியென்று கூறி அதனைத் தடுக்கிறது மோடி அரசு.
நீட் தேர்வை பெயரளவில் எழுதினால் போதும் என்கிற நிலையை ஏற்படுத்துவதற்கு, எதற்கு இந்த நீட் தேர்வு என்ற கேள்வியே மிஞ்சுகிறது. 12 வருடங்கள் படித்த படிப்பில் தரம் இல்லை, நாங்கள் நிர்ணயிப்பதே தரம் என்று கூறிய மோடி அரசுதான் இப்போது பூஜ்ஜியத்தையும் தரமாக சொல்கிறது. ஏழ்மை நிலையிலும் பள்ளி படிப்பினில் சாதித்து உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கிய அனிதா முதல் செகதீசுவரன் வரை 23 உயிர்களை தமிழ்நாடு இழந்ததும், இந்த பூஜ்ஜிய தகுதி கொண்டவர்களால்தான். இதே தகுதி கொண்டதனால்தான் ஆளுநர் ஆர்.என். ரவியும் நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு கையொப்பம் போடாமல் இழுத்தடித்தார். தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை நீதிக்கட்சி உடைத்தெறிந்தது. அதற்குப் பின்னரே தமிழர்கள் மருத்துவத் துறையில் கால் பதிக்க முடிந்தது. மருத்துவக் கட்டமைப்பும் வலுவானது. இந்த கட்டமைப்பை உடைக்கவே பார்ப்பனிய-பனியா நலனிற்கான ஆட்சி நடத்தும் மோடி அரசு நீட் தேர்வை புகுத்தியது. தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை புறக்கணித்து ஒன்றிய பாடத்திட்டத்தின் படி நீட் தேர்வாணையம் தேர்வுகளை நடத்த அனுமதி அளித்தது. தகுதி, திறமை என சொல்லி புகுத்திய இந்த தேர்வில் இப்போது இந்த பூஜ்ஜிய சதவரிசை (Zero Percentile) அறிவிப்பு எந்த தரத்தை பூர்த்தி செய்யும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மாணவர்களின் தேர்வுக் கட்டணம் செலவு, பயிற்சி செலவு, படிப்பு மற்றும் பயண நேரச் செலவு என மாணவர்களின் பணத்தை கொள்ளையடிக்கவே நீட் தேர்வு என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது. நீட் என்னும் சமூக அநீதியை விரட்டும் காலமே மருத்துவ உலகின் பொற்காலம் என்பதை நினைவில் கொள்வோம். களம் அமைப்போம். நீட் தேர்வை விரட்டுவோம்.
- மே பதினேழு இயக்கம்