கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக மாறி இருக்கின்றது இந்திய மக்களின் நிலை. மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியிலேயே குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை மோடியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியானது சுடுகாட்டிற்கே அனுப்பி இருக்கின்றது.

modi nirmala amit shah and rajnathஇந்திய மக்களின் மனங்களில் மண்டிக் கிடக்கும் பிற்போக்குத்தனமும், அரசியலற்ற தனமும் தொடர்ச்சியாக வலதுசாரி பாசிசக் கும்பல்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவி வருகின்றது. முற்போக்குவாதிகள் இந்த சங்கிக் கும்பலை அம்பலப்படுத்தி எவ்வளவுதான் கத்தி கூப்பாடு போட்டாலும், அதைச் செவி கொடுத்துக் கேட்கும் ஜனநாயகத் தன்மையை இந்திய மக்கள் ஏறக்குறைய இழந்து விட்டதாகவே தெரிகின்றது.

சங்கி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குள் மிக எளிதாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் சாமானிய எளிய மக்களால், அவர்களை சுரண்டலின் பிடியில் இருந்து பொருளாதார விடுதலை அடைய வழிகாட்டும் பொதுவுடமைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வர முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனால், அதற்கான விலை என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை நடைமுறை ரீதியாக தற்போது சந்தித்து வருகின்றார்கள்.

இதுவரை காணாத கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையின் இதயமாக விளங்கி வரும் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பெரிய அளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், லே-ஆஃப், ஊழியர்கள் பணி நீக்கம், மூத்த அதிகாரிகளுக்கு விஆர்எஸ் கொடுத்து வீட்டிற்கு அனுப்புதல் எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

முதலாளிகள் ஒருபோதும் தங்களின் லாபத்தில் சரிவு ஏற்படுவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வளவு இரக்கமற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் முதலாளிகள் தற்போது வெட்கமின்றி செய்து வருகின்றார்கள். இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கப் போகின்றார்கள் என்கின்றன ஆய்வுகள்.

வாகனங்கள் விலை அதிகமாக உள்ளதாலும், ஓலா, ஊபர் போன்ற கால் டாக்ஸிகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாலும் விற்பனை சரிந்துள்ளதாக சங்கிகளும், முதலாளித்துவ அறிவுஜீவிகளும் சொல்கின்றார்கள். ஆனால் இவை எல்லாம் பிரச்சினையைத் தீர்க்க லாயக்கற்ற தங்களின் கையாலாகத்தனத்தை மறைக்க இவர்கள் சொல்லும் சாக்கு போக்கே தவிர உண்மையில்லை.

முதலாளித்துவம் தன்னுடைய பணப்பையை மட்டுமே நிரப்பிக் கொண்டு, உழைக்கும் சாமானிய மக்களைத் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான கூலியை மட்டுமே கொடுத்து ஒட்ட சுரண்டியதன் விளைவைத்தான், இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தற்போது சந்தித்து வருகின்றன.

அடிப்படையில் ஆட்டோமொபைல் துறையால் தயாரிக்கப்படும் கார், பைக் போன்றவை எல்லாம் இந்தியாவில் உள்ள எல்லா மக்களையும் மையப்படுத்தி தயாரிக்கப்படுபவை அல்ல. அதன் நுகர்வு என்பது வரம்பிற்குட்பட்டது தான். காரணம் ஒரு கார் தொழிற்சாலையிலோ, இல்லை ராயல் என்பீல்டு போன்ற இருசக்கர வாகனத் தொழிற்சாலையிலோ பணி புரியும் ஒரு சாதாரண தொழிலாளியால் தான் தயாரிக்கும் காரையோ, பைக்கையோ தன் வாழ்நாளில் வாங்கவே முடியாது என்பதுதான் உண்மை.

அவை எல்லாம் ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர்குடி வர்க்கத்தை மட்டுமே மையப்படுத்தி தயாரிக்கப்படுபவை. ஆனால் இந்தியாவில் இப்படி ஐந்திலக்க சம்பளம் பெறும் நபர்களை எல்லாம் ஒரு சதவீதத்துக்குள் அடக்கிவிட முடியும். மிகக் குறைவான வருமானமுள்ள அதாவது பெரும்பாலான சாமானிய மக்கள் தங்களுடைய பயணங்களை பொதுப் போக்குவரத்து மூலமே நிறைவு செய்து கொள்கின்றார்கள். இதனால் ஆடம்பர நுகர்பொருளான கார், பைக் போன்றவற்றின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் மக்களின் அடிப்படை சம்பளம் என்பது பெருமளவு அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் இந்திய மக்களின் சராசரி வருமானம் என்பது கடந்த மோடி ஆட்சியில் புள்ளியல் துறை அமைச்சராக இருந்த விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படியே, 2013-14ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 68,572 ரூபாயாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 72,805 ரூபாயாகவும், 2015-16ஆம் 77,826 ரூபாயாகவும், 2016-17ஆம் ஆண்டில் 82,229 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பார்த்தால் ஓர் இந்தியனின் சராசரி மாத ஊதியம் என்பது வெறும் 6852 ரூபாய்தான். சங்கிகளின் கணக்கே இது என்றால் உண்மையான நிலவரம் இன்னும் மோசமானதாகவே இருக்கும்.

இந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு சராசரியாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சோறு தின்பதே பெரும்பாடாகும். அப்படி இருக்கும்போது அவனால் எப்படி கார், பைக் போன்றவற்றை வாங்க முடியும்? நுகர்வுப் பொருள் சந்தை வளர வேண்டும் என்றால் அடிப்படையில் பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறன் என்பது வளர வேண்டும். ஆனால் இந்தியாவில் 60 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விவசாயத் துறையின் வளர்ச்சி என்பது ஆண்டுக்கு 3 சதவீத அளவில் கூட இல்லாத நிலையில் இதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் சங்கிகளுக்கு இதை எல்லாம் புரிந்து கொள்ளவோ, அதற்கான தீர்வை நோக்கி முன்கை எடுக்கவோ எந்தவிதப் பொருளாதார அறிவும் கிடையாது என்பதுதான் உண்மை.

அவர்களின் இயல்பான குணம் என்பதே பணக்காரர்களுக்கு சிறப்பு தரிசனம் என்பதுதான். அதனால்தான் அவர்களால் இந்தியாவின் மிகப் பெரிய 9 பணக்கார குடும்பங்கள் நாட்டின் வளங்களில் 50 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்ள முழு அர்ப்பணிப்போடு வேலை செய்ய முடிந்தது.

ஒரு பக்கம் இந்தியாவின் 9 குடும்பங்கள் நாட்டின் சொத்தை எல்லாம் கபளீகரம் செய்து கொள்ள, இன்னொரு பக்கம் சாமானிய இந்தியர்கள் ஜட்டி கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். உள்ளாடை விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது இதைத்தான் காட்டுகின்றது. நாட்டின் முன்னணி உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்களான ஜாக்கி பிராண்ட் உள்ளாடைகள் ஜூன் காலாண்டில் 2 சதவீதம் மட்டுமே விற்பனையில் உயர்வைக் கண்டுள்ளது. இது கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து குறைவான அளவு. இதைத் தொடர்ந்து டாலர் இண்டஸ்ட்ரீஸ் 4 சதவீதமும், விஐபி கிளாதிங் 20 சதவீத விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0 சதவீத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

மேலும் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட உதவும் முதன்மையான துறைகளான ரியல் எஸ்டேட், வேளாண் துறை, உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகியவை கடுமையான பாதிப்பை அடைந்துள்ளளன. முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தியாவின் முன்னணி நகரங்களான குர்காவன், நொய்டா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 9 நகரங்களில் சுமார் 7.98 லட்ச வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன. ஏற்கெனவே நாட்டில் வேலையின்மையின் அளவு 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அமைப்பு தகவல் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது இன்னும் பல கோடி மக்களை நடுத்தெருவுக்கு இழுத்து வந்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறைந்தால், மாத வருவாயில் ரூ.105 குறையும் என்று பொருளாதரா வல்லுநர்கள் சொல்கின்றார்கள். அதாவது ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைந்தால், வருமானத்தில் மாதத்துக்கு ரூ.105 குறையும். ஆண்டுக்கு ஒருவருக்கு ரூ.1,260 இழப்பு ஏற்படும் என்கின்றார்கள். அதன் படி பார்த்தால் 2018 ஆம் ஆண்டு 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அப்படி என்றால் 2016-17ஆம் ஆண்டில் 82,229 ரூபாய் ஆண்டு வருமானம் வாங்கிக் கொண்டு இருந்த ஒரு சராசரி இந்தியர் அதைவிட 3780 ரூபாய் குறைவாகவே வருமானம் பெறுவார். இது எல்லாம் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் தரும் புள்ளிவிவரங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வளர்ச்சிக்கான எந்தப் பாதையுமே தெரியவில்லை. சங்களிடம் எவ்வித உருப்படியான திட்டமும் இல்லை. அதனால்தான் தற்போது கொள்ளையடிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். ரிசர்வ் வங்கியில் இருந்து 1.76 லட்சம் கோடி மக்கள் பணத்தை மோடி கும்பல் தற்போது கொள்ளையடித்து இருக்கின்றது. ஏற்கெனவே இந்திய வங்கிகளில் இருந்து 8.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை பெருமுதலாளிகள் சுருட்டிக் கொள்ள உதவிய கும்பல், தன் பங்கிற்கு 1.76 லட்சம் கோடியை சுருட்டி உள்ளது. ஆனால் இதனால் எல்லாம் இந்தியப் பொருளாதாரம் மீட்சி அடைந்து விடுமா என்றால் நிச்சயம் மீட்சி அடையாது. அடிப்படையில் இந்தக் கட்டமைப்பே வறியவனை வலியவன் சுரண்டிக் கொழுக்கும் கட்டமைப்பு. நாம் மாற்ற வேண்டியது கட்டமைப்பைத் தானே ஒழிய ஆட்களை அல்ல. சிலர் சொல்கின்றார்கள், மன்மோகன் வந்தால் வெட்டி முறித்து விடுவார், சிதம்பரம் வந்தால் சீர்திருத்தி விடுவார் என்று. அவர்கள் அடிப்படையில் இந்திய அரசின் வர்க்க சார்பையும், அதன் முதலாளிய அடிவருடித்தனத்தையும் அறியாதவர்கள்.

பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்பது சாமானிய மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுவுடைமை சித்தாந்தத்தின் வழியில் மக்களைப் பயிற்றுவிப்பதும் அதன் வழி நின்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே. வேறு மாற்று இருக்கின்றது என்று யாராவது சொன்னால், அவர்களை உற்றுக் கவனியுங்கள். அவர்கள் ஊழல், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு பெரும் செல்வந்தர்களாக வாழும் மக்கள் விரோதிகள் என்பதையும், சாமானிய மக்களின் நலனுக்கான கட்சி நடத்துகின்றோம் என்று சொல்லிக் கொண்டு, அந்த சாமானிய மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்த கார்ப்ரேட்டுகளின் ஏஜெண்டாகவுமே இருப்பார்கள்.

- செ.கார்கி