வழிபாட்டுத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு மனிதனிடம் இருந்து கடவுள்களும், கடவுள்களிடம் இருந்து மனிதர்களும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள். கடவுளுக்கும், மனிதனுக்குமான இணைப்புக் கண்ணி தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. பூசைகளும், புலம்பல்களும், அர்ச்சனைகளும், காதைச் செவிடாக்கும் மணி ஓசைகளும், தன்னைத் தானே கடவுளின் தரகனாக நியமித்துக் கொண்ட தண்டச்சோறுகளின் புகழ்மொழிகளும் இல்லாததால் நிசப்தமற்ற ஆலயங்களில் கடவுள்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருக்கின்றன. அறிவியலைத் தவிர மனிதர்களை வேறு எதுவுமே காப்பாற்றாது என்பதை இருபத்தி நான்கு மணி நேரமும் இடைவிடாமல் கொத்துக்கொத்தாய் செத்து விழுந்து கொண்டிருக்கும் பிணங்களும், இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சுடுகாடுகளும், இடுகாடுகளும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, ஆட்டிப் படைக்க நினைத்த வல்லாதிக்க சக்திகளை எல்லாம் உயிரை காப்பாற்றிக் கொள்ள நான்கு சுவர்களுக்குள் முடக்கிப் போட்டிருக்கின்றது கொரோனா. பிணக்குவியலுக்கு முன்னால் பணக்குவியல் மண்டியிட்டு இருக்கின்றது. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும் என்றார் மார்க்ஸ். ஆனால் இன்று, சவக்குழி கூட கிடைக்காமல் அனாதையாய் தெருவில் வீசி எறியப்படுகின்றன சக மனிதனை சுரண்டிக் கொழுத்த அந்தக் கொடும்பாவிகளின் உடல்களும்.
உலகை ஆட்சி செய்ய தனக்கு மட்டுமே தகுதி உள்ளது என இத்தனை நாளாக பிதற்றி வந்த முதலாளித்துவத்தின் கையாலாகா தனத்தையும், ஓட்டாண்டித்தனத்தையும் முதன் முறையாக தரிசித்த மக்கள், அந்த இரக்கமற்ற முதலாளித்துவத்தின் கோர முகத்தின் மீது ஒரு சேர காறி உமிழ்கின்றார்கள். காசிருப்பவனுக்கு மட்டுமே இந்த உலகில் உயிர் வாழும் உரிமை உள்ளது எனப் பிரகடனம் செய்த முதலாளித்துவம் இன்று அதே காசை வைத்துக் கொண்டு தன்னைக் கூட காப்பாற்றிக் கொள்ள வழியற்ற, நிர்கதியற்ற நிலையில் மயானத்தின் பாதையை வெறித்துப் பார்த்தபடி சாவை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றது.
முதலாளித்துவம் ஒன்றே மக்களைக் காக்கும் சர்வ வல்லமை படைத்தது என்ற மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்து, அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய கூட்டம், இப்போது முதலாளித்துவம் மக்களைக் கொல்லும் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றது.
இன்று கொரோனாவால் மிகப் பெரிய மனிதவள இழப்பையும், பொருளாதார இழப்பையும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவைப் பற்றியும், ஐரோப்பிய நாடுகள் பற்றியும் உலகின் பிற பகுதி மக்கள் கொண்டிருந்த பிரமிப்பு எல்லாம் தவிடுபொடியாகி நரகத்தின் தேசமாக இன்று காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக உலக நாடுகள் அனைத்துமே கொரோனா நோய்த் தொற்றை எப்படி கையாள்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன என்பதுதான் உண்மை. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் அழிவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டெழுவதற்கு போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உலகிற்கே செப்படி வித்தை காட்டும் மோடி மகாராஜா மட்டுமே இந்தியாவில் கொரோனாவைப் பார்த்து அஞ்சாமல் அதற்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்கின்றார்.
உலகில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு பற்பசையில் இருந்து சோப்பு வரை வேதத்தில் சொல்லப்பட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி, முன்னோர்களின் வழியில் செய்யும் நாடாக இந்தியா விளங்கி வருகின்றது. வேதத்திலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் இன்னும் யாருக்குமே தெரியாத நூல்களிலும் முன்னோர்களால் சொல்லப்பட்டது என சொல்லி விட்டால் அதற்கு மறுப்பே கிடையாது. இங்கே உங்களால் முன்னோர்கள் சொன்னது என்று சொல்லி எதை வேண்டுமானாலும் வணிகப்படுத்த முடியும். மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் உங்களால் கொரோனாவுக்கு மருந்து என அமெரிக்காவிலோ, இல்லை ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளிலோ வணிகப்படுத்த முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் இந்தியாவில் அது முடியும். அதுதான் இந்தியா!
இந்தியர்களின் இந்தத் தாராள அடிமை மனோபாவம்தான் நைந்து போன பார்ப்பனிய பிற்போக்குத்தனத்திற்கும், முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும் ஆணிவேராக இருக்கின்றது. கொரோனா மட்டுமில்லை, வேறு எந்த நோய்த் தொற்று ஏற்பட்டு கொத்துக்கொத்தாக மக்கள் செத்தாலும், நீங்கள் இந்தியாவின் ஆட்சியாளர் என்றால் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மருத்துவமனை இல்லை என்றோ, மருந்துகள் இல்லை என்றோ, மருத்துவர்கள் இல்லை என்றோ, இதை எல்லாம் செய்து முடிக்க பணம் இல்லை என்றோ கவலைப்படத் தேவையில்லை. மிக எளிதாக எல்லா நோய்க்கும் சர்வரோக நிவாரணியாக மாட்டு மூத்திரத்தையோ, பஞ்சகவ்யத்தையோ மக்களுக்குப் பரிந்துரைக்கலாம். இன்னும் வேப்பிலை, மஞ்சள், கபசுர குடிநீர், நிலவேம்புக் கசாயம் என எதையாவது இதை எல்லாம் முன்னோர்கள் சொன்னது என்று சொல்லி குடிக்கச் சொல்லலாம். இந்திய மக்களின் சிந்தனை மட்டத்திற்கு இதுவே போதுமானதாக இருக்கின்றது. ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் மக்களை இந்தச் சிந்தனை மட்டத்தில் இருந்து வெளியேறாமல் அதிலேயே தக்க வைப்பதில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கின்றார்கள்.
இது போன்ற பரிந்துரைகள் இரண்டு வகையில் ஆட்சியாளர்களுக்கு உதவுகின்றது. ஒன்று நோய்க்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து, அதை ஒழிப்பதற்கான செலவுகளில் இருந்து அரசுகளை விடுவிக்கின்றது மற்றொன்று மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைத்து, மர்ம மரணம் என்று சொல்லி உண்மையான பிரச்சினையை அப்படியே ஊத்தி மூடுவதற்கு.
ஏறக்குறைய 34 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கி உள்ளது. இதன் மூலமாக அமெரிக்க வாழ் மக்களுக்கு தலா 1200 டாலர் கிடைக்கும். அதுவும் அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக. இந்திய மதிப்பில் இது 90 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேபோல் தொழிற்சாலைகளுக்கு 500 பில்லியன் டாலர் நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க 367 பில்லியன் டாலர் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உள்ளிட்ட பொது சுகாதாரத் தேவைக்கு 100 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.
வெறும் 5.61 மில்லியன் மொத்த மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காக $55 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 11% ஆகும். ஆனால் ஏறக்குறைய 134 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, மருத்துவ வசதிகளை மேம்படுத்த வெறும் 15 ஆயிரம் கோடியைத் தான் பிரதமர் ஒதுக்கினார். தற்போது கொரோனா பாதிப்பைத் தடுக்க பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.1,611 கோடியும், கேரளாவுக்கு ரூ.157 கோடியும், கொரோனா தொற்றில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்துக்கு ரூ.510 கோடியும் ஒதுக்கி உள்ளது. இந்த ஆண்டு மொத்த ஜி.டி.பி-யில் 2.5 சதவிகிதம் மட்டுமே மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் 7 முதல் 9 சதவிகிதம் வரை ஒதுக்குகின்றார்கள்.
ஏன் மற்ற நாடுகள் எல்லாம் அதிகமான நிதி ஒதுக்கின்றார்கள், இந்தியா குறைவான நிதியை ஒதுக்குகின்றது என்பதற்கான அடிப்படையான காரணம் இந்தியர்களில் பலர் மாட்டு மூத்திரமும், பஞ்சகவ்யமும், வேப்பிலையும், மஞ்சள் தூளுமே அனைத்து நோய்களுக்கும் அருமருந்து என நம்ப வைக்கப்பட்டிருப்பதுதான். அப்படி பெரும்பாலான பொதுமக்கள் நம்புவதற்கும், அவர்களை நம்ப வைப்பதற்கும் இந்த அரசும், அது கட்டிக் காப்பாற்றும் பிற்போக்கு வகுப்புவாத சக்திகளுமே காரணம். இவர்கள் ஒரே இரவில் இந்திய மக்களின் பொதுப்புத்தியை மாற்றும் அளவிற்கு வல்லமை வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நினைத்தால், உங்களை ஒரு குரங்கைப்போல ஆட்டுவிக்க முடியும். உங்களை சாலையில் நின்று கை தட்ட வைக்க முடியும், தட்டை தட்ட வைக்க முடியும், மணியாட்ட வைக்க முடியும். கோ கொரோனோ, கோ கோரோனோ என ஒரு பைத்தியக்காரனைப் போல கத்த வைக்க முடியும். எரியும் விளக்குகளை அணைக்கச் சொல்லிவிட்டு விளக்கு பிடிக்க வைக்க முடியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், டார்ச் லைட் அடித்தும், பட்டாசு வெடித்து வீட்டைக் கொளுத்தியும், ஏன் துப்பாக்கியால் சுட்டும் கூட கும்பல் மனநிலையை உருவாக்க முடியும். இத்தனைக்கும் மேலாக இதை எல்லாம் செய்தால் கொரோனா இந்தியாவை விட்டே தலைதெறிக்க ஓடிவிடும் என்று அதற்கொரு போலியான அறிவியல் காரணத்தையும் கண்டுபிடித்து மக்களை நம்ப வைக்கவும் முடியும்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் எதையும் நம்பும் மனநிலையில்தான் இன்றும் உள்ளார்கள். அதுதான் மோடியின் பலம். அதுதான் பார்ப்பனியத்தின் பலம். அதுதான் முதலாளித்துவத்தின் பலம்.
தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் வேலையிழந்து, பிழைக்கப் போன மாநிலங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு அல்லது நிர்க்கதியாய் விடப்பட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள் பற்றி மோடி கவலைப்படவில்லை. வழியில் பட்டினியால் செத்துப் போனவர்கள் பற்றி மோடி கவலைப்படவில்லை. ஆனால் இந்திய தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு தற்போது வீழ்ச்சி அடைந்தது மோடியின் மனதை இந்நேரம் வெகுவாக பாதித்து இருக்கும். அதனால் கூடிய விரைவில் பல தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கொடுக்கப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
கொரோனா வைரசால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 37 சதவீதமும், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவநாடாரின் சொத்து மதிப்பு 26 சதவீதமும், உதய் கோடக்கின் சொத்து மதிப்பு 28 சதவீதமும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. இதனால் அதானி, சிவநாடார், உதய் கோடக் ஆகிய மூவரும் உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி விட்டனர். இதனால் பல ஆயிரம் மைல்கள் நடந்தே தங்களது சொந்த இடங்களுக்குச் சென்ற கூலி அடிமைகளை மீண்டும் பணிக்கு வர வேண்டிய சூழ்நிலையை மோடி எந்நேரமும் ஏற்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசு உருக்கு எண்ணெய் சுத்திகரிப்பு, சிமெண்ட் ரசாயனம், உரங்கள், ஜவுளி, சர்க்கரை ஆலைகள், கண்ணாடி, உலோக உருக்கு ஆலைகள், பதனிடும் நிலையங்கள், பேப்பர், டயர், கழிவுகள் அகற்றும் தொழிற்சாலைகள் போன்ற 13 தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து, தமிழக அரசின் அனைத்து செயலர்கள், காவல் துறை தலைவர், அனைத்து துறைகளின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியது. பிறகு சிறிது நேரத்தில் ஞானோதயம் வந்து அதை ரத்து செய்து விட்டார்கள்.
அப்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுத்தால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மோடியின் அருளாலும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசீர்வாதத்தாலும் கொரோனா பரவாது என்று நாம் உறுதியாக நம்புவோம். காரணம் மோடியைப் பார்த்துப் பயந்து போய் கொரோனா இந்தியாவை விட்டு ஓடிவிட்டதாக ஏற்கெனவே சங்கிகளும், சங்கிகளின் அடிமைகளும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியே கொ ரோனா வந்தாலும் மாட்டு மூத்திரத்தையோ, கபசுர குடிநீரையோ உங்களுக்குக் கொடுத்து சரி செய்து விடுவார்கள். கொரோனாவைவிட கொடியவர்களாய் ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்கள் என்ன சொன்னாலும் ஏன் எதற்கு என்று கோள்வி எழுப்பி பகுத்தறிந்து அதை ஏற்றுக் கொள்ளும் திராணியற்ற மூடர்களாய், பழமை விரும்பிகளாய், அறிவியல் மனப்பான்மை அற்ற அடிமைகளாய் மக்களும் இருக்கும் வரை மக்களின் உயிரை கிள்ளுக்கீரைகளாக நினைக்கும் ஆட்சியாளர்கள்தான் நம்மை ஆட்சி செய்வார்கள்.