எண்ணெய் தேடுதலுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆர்பாட்டம்

நாடெங்கிலும் உள்ள 44 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கும் அதை  விரிவுபடுத்துவதற்கும் ஒப்பந்தங்களை மத்திய அரசு பிப்ரவரி 14 அன்று அறிவித்தது.

அறிவிப்பு வெளிவந்தவுடன், இந்த ஒப்பந்த இடங்களில் ஒன்றான தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் கிராமத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. அங்கு எண்ணெய்யையும், எரிவாயுவையும் எடுப்பதற்காக 10 சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலம் ஒரு தனிப்பட்ட  ஒப்பந்ததாரருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நெடுவாசல் ஒப்பந்தமானது கருநாடகாவில் உள்ள ஜெம் லெபாரட்டரிஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர எண்ணெய்க் கிணறுகளில் பங்கேற்பதற்கு தனியார் துறையை அழைக்கும் நோக்கம் கொண்ட மார்ஜினல் பீல்ட் பாலிசி என அக்டோபர் 2015-இல் இந்திய அரசு கொண்டுவந்த கொள்கையின் ஒரு அங்கமாகும் இது.

இந்த ஆர்பாட்டத்தில் நெடுவாசல் கிராம மக்களோடு, சுற்றுப் புறத்திலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான ஆடவர்களும், பெண்களும் கடந்த சில வாரங்களாக பங்கேற்று வருகின்றனர். சுற்றுப்புற ஆர்வலர்களும், மாணவர்களும், மற்றும் பிறரும் கூட இந்த ஆர்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.

நிலத்தடி நீர் நிறைந்துள்ள ஒரு பகுதியில் நெடுவாசல் அமைந்துள்ளது. செழுமையான இந்தப் பகுதியில் ஒரு வளமையான பல பயிர்களை உள்ளடக்கிய வேளாண் பொருளாதாரம் இருக்கிறது. நெடுவாசலிலிருந்து, 100 கிமீ வட்டாரத்தில் ஓஎன்ஜிசி 100-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளையும், பிறவற்றையும் செயல்படுத்தி வருகிறது. நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சை போன்ற மாவட்டங்களில் நடைபெற்றுவரும் எண்ணெய் தேடுதல் முயற்சிகளுடைய மோசமான அனுபவங்களிலிருந்து நெடுவாசலையும், அதையொட்டிய கிராமங்களிலும் உள்ள மக்கள் படிப்பினைகளைப் பெற்றிருக்கின்றனர். அதனால் மக்களுடைய உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் மிக மோசமான அபாயங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை அவர்கள் அறிவார்கள்.

காற்றும், நீரும் மாசுபடுதல், நிலத்தடி நீர் வரண்டுபோதல், நெஞ்சக நோய்கள் அதிகரித்தல், வேளாண்மை நிலங்கள் தரிசு நிலங்களாக ஆதல், பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டமைப்பதில் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகள் குறித்து மக்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். அந்த இடங்களில் இழப்பீட்டுத் தொகைக்காக உழவர்கள் பதிவு செய்த விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

குறிப்பிட்ட நிகழ்வுகள் மக்கள் நினைவில் பசுமையாக இருந்து கொண்டிருக்கின்றன. நெடுவாசலுக்கு அருகில் 2008-09 இல் ஓஎன்ஜிசி நிறுவிய ஒரு தேடுதல் கிணற்றிலிருந்து வெளியேறிய எரிவாயுக்கள் அது தோண்டப்பட்ட பின்னர் 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து எறிந்து கொண்டே இருந்தன. எண்ணெய்க் கழிவுகள் நிரம்பிய பள்ளங்கள், ஏழாண்டுகளுக்கு திறந்தே கிடந்தன. மிகுதியாக மழை பெய்த போது, இந்தக் குட்டைகளிலிருந்த கழிவுகள் வெளியே பாய்ந்து அக்கம் பக்கத்திலிருந்த நிலங்களையும் மாசு படுத்தியது. நிலத்தடியிலுள்ள கச்சா எண்ணெய்க் குழாய்களிலிருந்து கசிந்து வந்த கச்சா எண்ணெய் பயிர்களை மோசமாக பாதித்தது. அது பாசன கால்வாய்களையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தியது. எண்ணெய் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்ட நிலங்கள் எப்போதுமே மீட்டெடுக்கப்பட வில்லை. வெற்றி பெறாத கிணற்று நிலங்கள், அப்படியே விடப்பட்டதால், 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட செழுமையான வேளாண்மை நிலங்கள் தரிசு நிலங்களாகின.

எண்ணெய் தேடுதல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நல்வாழ்வை நாங்கள் கவனித்துக் கொள்ளுவோமென அதிகாரிகள் கொடுக்கும் பொய்யான வாக்குறுதிகளை நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நம்பத் தயாராக இல்லை.

Pin It