நவம்பர்1 இன்றைய தமிழ்நாடு என்கிற அமைப்பு உருவான நாள். தமிழரின் வரலாற்றுப் பகுதி ஒரு திட்டவட்ட வரையறை பெற்ற நாள். இதில் இழப்புகள் இருக்கின்றன என்றபோதும், அந்த இழப்புகளில் சிலவற்றைத் தவிர்ப்பதில் அன்றைய தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்றவர்கள் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால், இன்றைய நதிநீர்ப் பிரச்சனைகள் பலவற்றின் போக்கும் மாறியிருக்கும் என்பதும் உண்மை.
குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளும், நெல்லூர், குப்பம் போன்ற பகுதிகளும் தமிழகத்துடன் இருந்திருந்தால் இன்றைய பிரச்சனைகளின் தீவிரம் இருந்திருக்காது என்பதும் உண்மை.
இன்றைய நிலையை அன்றைக்கு அத்தலைவர்கள் முன்னறிய முடியவில்லை, எதிர்பார்க்கவில்லை என்பது தமிழகத்தின் கெடு வாய்ப்பே. எல்லைப் போராட்டங்களின்போது நாம் கேட்டவற்றில் சில பகுதிகள் கிடைத்தன. சில பகுதிகள் கிடைக்கவில்லை என்பதாக சமாதானம் ஆகிவிட்டார்கள்.
அதே சமயம் ஏதோ, மபொசி போன்றவர்களே தமிழக எல்லைப் போராட்டம் நடத்தியவர்கள்/ ஆதரித்தவர்கள் என்பதும், பெரியார், அண்ணா போன்றவர்கள் எல்லைப் போராட்டங்களில் அக்கறை இல்லாதவர்கள்/ கலந்து கொள்ளாதவர்கள் என்பதான பிரச்சாரம் வன்மமானது, வரலாற்று உண்மைகளுக்கு மாறானது. மார்ஷல் நேசமணி போன்றவர்களே பெரியாரின் பங்கை நினைவு கூர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு வாலாசா வல்லவன் போன்ற பல பெரியாரிய ஆய்வாளர்களும் அதற்கான வளமான வரலாற்று ஆதாரங்களை நிறுவியிருக்கிறார்கள்.
மபொசியின் தமிழரசுக் கழகம் என்கிற, காங்கிரசிலேயே ஓர் உள் அமைப்பாக 1946இல் தொடங்கப்பட்ட அமைப்பின் நோக்கமே, அன்றைக்கு பெரியாரால் தமிழரிடையே எழுந்த தனி திராவிடநாடு பிரிவினைக்கு எதிராகத்தானே ஒழிய, தனித் தமிழ்நாட்டுக்கானதல்ல. இதை மபொசியே கூறியிருக்கிறார்.
சுருக்கமாக சொல்லப் போனால், பெரியார் கேட்ட, இந்தியாவிலிருந்து பிரிந்த, திராவிட நாட்டுக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய, இந்தியாவிற்குள்ளேயே தமிழ்நாடு என்கிற அமைப்புக்கான கோரிக்கையே மபொசியின் தமிழ்நாடு கோரிக்கையாகும். அதற்கான போராட்டங்களாகும்.
பெரியார் சொன்னது இந்தியாவிலிருந்து வெளியேறுவது.
மபொசி சொன்னது இந்தியாவிற்குள்ளேயே இருப்பது.
பெரியார் வேண்டியது இந்திய தேசிய, இந்து தேசிய, இந்தி தேசிய மறுப்பு/விடுதலை. தனிநாடு.
மபொசி கேட்டது இந்திய தேசிய, இந்து தேசிய, இந்தி தேசிய ஆதரவு. தனிமாநிலம்.
அதனால்தான் இந்திய தேசியத்தை மறுக்காத, இந்து தேசியத்தை மறுக்காத, பார்ப்பன தேசியத்தை மறுக்காத, சொல்லப் போனால் அவற்றைப் பாதுகாக்கவே 1946இல் தமிழரசு கழகத்தை, அதுவும், காங்கிரசின் உள் அமைப்பாக தொடங்கிய மபொசியின் வெறும் மொழி அடிப்படையிலான, அதுவும் இந்தியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு என்கிற இறையாண்மை அற்ற, மாநில அமைப்பு பிரச்சாரங்களை/ செயல்பாடுகளை பெரியார் எதிர்த்தார். அவற்றில் கலந்து கொள்ள வேண்டாம், அவை சூழ்ச்சியே என்றார். (சொல்லப்போனால் எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்த பலரும் காங்கிரசுகாரார்களே. எல்லைப் போராட்டங்களுக்குப் பிறகும் அந்த போராட்டங்களை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளியவர்கள் அகில இந்திய காங்கிரசில் இருந்தவர்களே.)
அதுவே உண்மை என்பதுதான் இன்றைக்கும் இந்தியாவில் தமிழ், தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் வழியே புரிந்து கொள்ள முடியும்.
பெரியார், இந்திய தேசியத்தை மறுத்தல், இந்தியாவிலிருந்து பிரிதல் என்பதை தமிழர் ஒரு தேசிய இனம், அதனால் இந்தியாவை எதிர்க்கிறேன் என்ற நோக்கில் பார்க்கவில்லை. பெரியார், தனிநாட்டுக்காக இயக்கம் கண்டவரும் இல்லை.
அவரின் அடிப்படை நோக்கம், இயக்கத்தின் நோக்கம், அவர் காங்கிரசில் இருந்தபோதும், சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோதும், திராவிடர் கழகமாக இயங்கியபோதும், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பதுதான். அவற்றிற்கு எவை, எவை எதிரானதோ அவற்றை எதிர்த்தார். அவற்றிற்கு எவை, எவை அனுகூலமானதோ அவற்றை ஆதரித்தார்.
இந்தியா என்கிற அமைப்பே சாதியத்திற்கு ஆதரவானது என்பதால் இந்தியாவை எதிர்த்தார். இந்தி மொழி ஆதிக்கம் என்பது சாதியத்திற்கு ஆதரவானது என்பதால் இந்தியை எதிர்த்தார்.
திராவிடநாடு அமைந்தால் சாதிய ஒழிப்புக்கு பயன்படும் என்பதால் 1930களில் திராவிடநாடு கேட்டார். அந்த திராவிடநாட்டில் (அன்றைய சென்னை மாகாணம்) இருந்த பிறமொழியாளர்கள், வரலாற்றுத் தொடர்பை புறந்தள்ளி, சமூக நோக்கம் அற்று, 1950களில் வெறும் மொழி அடிப்படையில் நாங்கள் பிரிகிறோம் என்ற நிலையெடுத்த பிறகு, தனித்தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். அந்த தனித்தமிழ்நாடு என்பதையும் அவரின் அடிப்படை நோக்கமான சாதி ஒழிப்புக்கான வாய்ப்புக்காகவே கேட்டார்.
எனவேதான் நவம்பர் 1, 1956இல் அமைந்த தமிழ்நாடு என்கிற மாநில அமைப்பை வரவேற்றார் பெரியார், அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் அண்ணா.
ஆனால் அந்த நாள் பெரியாரால், அண்ணாவால், திராவிட இயக்கத்தவரால் பெரிதாகக் கொண்டாடப்படாமல் போனதற்குக் காரணம், மேலே சொன்னவாறு பெரியார், அண்ணாவின் நோக்கம் தனித்தமிழ்நாடே தவிர, தனித் தமிழ்நாடு மாநிலமல்ல. அது இடைக்கால ஆறுதல்தானே என்பதுதான் அடிப்படைக் காரணமே தவிர, இன்றைய சீமான், மணியரசன் ஆதரவாளர்கள் கூறுவது போல தமிழ்த் தேசிய எதிர்ப்போ/ அக்கறை இன்மையாலோ அல்ல. திராவிட இயக்கத்தவரின், குறிப்பாக பெரியாரின் நோக்கம் தனித் தமிழ் மாநிலமல்ல.
மாறாக மபொசி போன்றவர்களுக்கு தனி மாநிலம் என்பதுதான் இறுதி இலக்கு என்பதால் அந்த நாளை ஏதோ முற்று முடிவான விடுதலை நாள் என்பதாக பிரச்சாரம் செய்தார்கள், மடை மாற்றினார்கள். அதனால்தான், இந்திய தேசியத்தை, அதன் மேலாண்மையை, அதன் நலன்களுக்கு உட்பட்ட தமிழ் மாநிலத்தை ஆதரித்த மபொசி, ஈழ விடுதலையை, விடுதலைப் புலிகளை பிரபாகரனை ஆதரிக்க மறுத்தார், அவர்களை எதிர்த்தார்.
இந்திய தேசியத்தை, அதன் மேலாண்மையை, அதன் நலன்களுக்கு அப்பாலான தனித் தமிழ்நாட்டை நோக்கிய பெரியாரிய ஆதரவாளர்கள் ஈழ விடுதலையை, விடுதலைப் புலிகளை, பிரபாகரனை ஆதரித்து நின்றனர். அவர்களுக்காக தியாகம் செய்தனர்.
எனவே இந்திய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்ட, இந்தியை ஏற்றுக்கொண்ட, பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட, அவற்றிற்கு உட்பட்டு, அவற்றிற்கு அடங்கிய, ஒரு மாநில அமைப்பைக் கேட்ட மபொசியை தமிழ்த் தேசியப் போராளியாக வேசம் கட்டுவதும், இந்தியாவை மறுத்த, இந்தியை மறுத்த, பார்ப்பனியத்தை மறுத்த, அந்த நோக்கில் திராவிட நாடு கேட்ட, பிறகு தனித்தமிழ்நாடு கேட்ட பெரியாரை தமிழ்த் தேசிய விரோதியாக வேசம் கட்டுவதும் வரலாற்றிற்கு முரணானது, வன்மமானது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஊறு விளைவிப்பதாகும்.
அதே சமயம், இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலம் என்ற அமைப்பில், தமிழ், தமிழர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளில், குறிப்பாக ஈழப் படிப்பினைகளுக்குப் பின்னால், தமிழர் ஓர்மை என்பதற்கான, தமிழ்த் தேசிய கட்டுமானத்திற்கான, அதற்கான மக்கள் திரட்சிக்கான ஒரு செயல்பாடாக மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் 1 நாளைக் கொண்டாடுவது என்கிற நிலைப்பாட்டிற்கு பெரியாரியிலாளர்கள் பெரிதும் வந்திருக்கின்றார்கள். அது வரவேற்கத்தக்கதும், காலத்தால் அவசியமானதும் ஆகும்.
காலச் சூழலே, அதன் தேவையே எந்த உத்தியை, எந்த செயல்பாட்டை முன்னிறுத்துவது என்பதை முடிவு செய்யும்.
- ப.பூங்குமரன்