டெல்லி அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மக்களாட்சியை விரும்புபவர்களுக்கு இனிப்பாக வந்துள்ளது. துணைநிலை ஆளுநர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவரே என்கின்றது அந்தத் தீர்ப்பு.

விடுதலை இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்று சொல்லிக் கொண்டாலும், தெளிவற்று விடப்பட்டுள்ள அதிகார வரம்புகளைக் கொண்டு மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்கும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகத் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது ஆளுநர் பதவியைக் கொண்டு மாநில அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவது.

ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அல்லது அதன் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆளுநர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்.

arvind gejriwalமக்களால் தேர்வு செய்யப்படாத, நியமன ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடுகள் இந்தியா இன்னும் முழுமையான மக்களாட்சியாக மாறவில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

டில்லி நீதிமன்றத்தில் தற்போது வந்துள்ள தீர்ப்பு இதுபோன்ற செயல்பாடுகள், சட்டமன்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டமன்றம் நீர்த்துப்போகும் என்றால் மக்களாட்சி என்பது கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது என்பது பொருள். அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் அரசுக்கும் அமைச்சரவைக்கும் கட்டுப்பட்டவர்களே என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு கூறியுள்ளது.

ஆளுநர் பதவி என்பதே கங்காணியாக மாநில அரசின் செயல்பாடுகளைக் கவனிக்க பிரிட்டிஷ் இந்தியாவில், அதாவது விடுதலைக்கு முன்பு, மக்களாட்சி முழுமையாகாத நிலையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் விடுதலைக்குப் பின் மக்களாட்சி என்று அறிவித்துக்கொண்ட போதும் ஒன்றிய அரசின் நியமன ஆளுநர் பதவியைத் தொடரவிடுவதும், அவ்வப்போது மாநில அரசின் செயல்பாடுகளில் அவர் குறுக்கிட முற்படுவதுவும் மக்களாட்சியைக் கேலிக் குரியதாக ஆக்கிவிடுகிறது.

ஆளுநர் என்ற கயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு; மக்களாட்சியை, ஒரு ஜனநாயக ஆட்சியை விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மராத்திய உத்தவ் தாக்கரே அரசின் சிறப்புச் சட்டப் பேரவையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதால் அந்த ஆட்சி வீழக் காரணமாக அமைந்தது. அது அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியைப் பறிப்பது குறித்த குழப்பம் நிலவக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவு தன் தீர்ப்பில் ஆளுநரின் இந்தச் செயல்பாடு தவறானது எனக் கூறியுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க முடியாது என்றும் கூறியுள்ளது. அதற்குக் காரணமாக உத்தவ் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் பதவியிழக்கவில்லை. மாறாகத் தாமாக முன்வந்து பதவி விலகினார் என்றும் அத்தீர்ப்பு கூறியுள்ளது

இதுபோன்ற நிகழ்வுகளால் மக்களாட்சி மீது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த அய்யங்கள் எழுகின்றன. தவறாக செயல்பட்ட ஆளுநருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. அந்தத் தவறால் கவிழ்ந்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் நிறுவ முடியாது. ஆனால் நடந்தது மட்டும் அநீதி எனத் தீர்ப்பளிக்கப் படுகிறது. உத்தவ் தாக்கரே பதவி விலகினார் என்றால், எது அவரைப் பதவி விலகச் செய்தது? ஆளுநரின் தவறான நடவடிக்கை தானே! அப்படியானால் இதுவும் ஆளுநரின் தவறான நடவடிகையின் தொடர்நிகழ்வின் பகுதி தானே? ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகத் தவறான நடவடிக்கை எடுத்தாலும், அதை எதிர்கொள்ள என்ன வழி இருக்கிறது? இந்த இடத்தில் நியமன ஆளுநரின் அதிகாரம் குளறுபடியாகி மக்களாட்சி அரசைக் குலைக்கும் என்றால் அந்த ஆளுநர் பதவி இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழத் தொடங்கி விட்டது மக்களிடம்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள பல சட்டவரைவுகள் சட்டமாகாமல் காலதாமதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் ஆளுநர் இரவியின் நடவடிக்கை இங்கே கவனிக்கத்தக்கது. இதுவும் அரசுக்கு எதிரான திட்டமிட்ட காலதாமதமே. அது அவர் பேச்சில் இருந்தே வெளிப்படுகின்றது. இதுவும் மிகத் தவறான நடவடிக்கை. மக்களாட்சி மீதான தாக்குதல்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால அளவு வரையறுக்கப்பட வேண்டும் என்பது கூட தற்காலிகத் தேவை என்பதே சரியாகும். ஆனால் நிரந்தர தீர்வு என்பது ஆளுநர் என்ற தேவையற்ற பதவியை ஒழிப்பதுவும், மாநில சுயாட்சிக் குரலை உயர்த்துவதுமே ஆகும். மாநில சுயாட்சி என்பது திராவிடக் கொள்கைகளில் ஒன்று. அதுவே இந்தியாவையும் முழுமையான மக்களாட்சியாக மாற்றும் வல்லமை பெற்றதாகும்.

ஆளுநரின் நேரடி அதிகாரம் கட்டுப்படுத்த முடியாத வானளாவிய அதிகாரமாய் இருப்பது மக்களாட்சிக்கு எதிராக அமையும்.

- மதிவாணன்

Pin It