ஆளுநர் ரவியின் உளறல் பேச்சுக்கு தமிழ்நாடு இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.

சன் தொலைக்காட்சி நடத்திய விவாதம் ஒன்றில் பங்கேற்ற பேராசிரியர் வீ. அரசு தமிழகம் என்றாலே தமிழ்நாடு என்பதுதான் அதற்குப் பொருள் என்று சரியான விளக்கத்தைத் தந்திருக்கிறார். ஆளுநருக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் இதைக் கூட சொல்லிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா? என்ற கேள்வியை அவர் எழுப்பி இருக்கிறார்.

சரி; தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும், தமிழ்நாடு என்று அழைக்கக் கூடாது சொல்லுகிற ஆளுநராக இருந்தாலும் சரி, அவரது சங்பரிவார் கூட்டமாக இருந்தாலும் சரி இந்தியாவை இந்தியா என்று அழைக்காமல் பாரதம், பாரதீயம் என்று அழைப்பது ஏன்?

அவர்கள் கட்சிகளுக்கும் துணை அமைப்புகளுக்கும் இந்தியா என்ற பெயரை முழுமையாக தவிர்ப்பது ஏன்? இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

பாரதம், பாரதம் என்றால் என்ன? இதற்கு ஆதாரம் புராணங்களில் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கால்டுவெல் ‘பரத கண்ட புராதனம்’ என்ற ஒரு தமிழ் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ‘பரத கண்டம்’ பாரதம் என்பதற்கு சரியான விளக்கத்தைக் கூறியிருக்கிறார்.

பரதன் என்ற அரசர் சந்திர குல வம்சத்தைச் சேர்ந்தவன். முதல் சக்கரவர்த்தியாக இந்து தேசத்தை ஆண்டவன் அவன் தானாம். தன்னுடைய இராஜ்யத்தில் இந்து தேசத்தின் சகலப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டான் என்று, மகாபாரதத்தில் ஒரு பாடல் வருகிறது.

எனவேதான் இந்த தேசம் பாரத தேசம் பரத கண்டம் அவன் வழி வந்தவர்கள் பாரதியர்கள் என்று புராணங்களின் அடிப்படையிலேயே இவர்கள் வரலாற்றைத் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆக பாரத தேசம் என்று இவர்கள் சொல்வதும் பாரதியம் என்று இவர்கள் சொல்வதும் இது இந்துக்களினுடைய நாடு என்பதைத்தான் வெளிப்படையாக பிரகடனப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவை இந்தியா என்று அவர்கள் ஒப்புக் கொள்ளாத நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வாக்கர் விளக்கியிருக்கிறார். இந்தியா என்றால் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கும், பாரதம் என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும் என்று கூறுகிறார்.

எனவே இது மதத்தின் வழிப்பட்ட ஒரு நாடு என்பதற்காக பாரத தேசம் பரத கண்டம் என்று சங் பரிவாரங்கள் பேசுவதைப் போல் ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரை கண்டால் எரிச்சலாகி தமிழ் அகம் என்று வைக்கலாமா என்று ஆலோசனை கூற வந்திருக்கிறார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It