கீழடி - ஒரு வாரமாக அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக இருக்கும் விடயம்!! பல ஆண்டுகளாக கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சியின் நான்காம் கட்ட முடிவை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. மிக முக்கியமாக கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கல்வியறிவு பெற்றிருந்திருக்கின்றனர் என இந்த ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வை எவ்வளவு தடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் தடுத்து வந்த இந்திய அரசின் தொல்லியல் துறையைத் தாண்டி, மாநில அரசின் தொல்லியல் துறை இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருப்பது உள்ளபடியே பாராட்டுதலுக்குரியது.

keezhadi excavationஇந்த ஆய்வு முடிவுகள் மூலம் ஏற்கனவே இந்திய வரலாற்றையே மாற்றி அமைத்த ஹரப்பா, மொகஞ்சதாரோ வரிசையில் இன்று கீழடி நாகரீகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 1921 ஆம் ஆண்டு இன்றைய பாகிஸ்தான் அருகில் ஹரப்பா நாகரீகம் அன்றைய பிரிட்டிஷ் அரசின் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு 1922 ஆம் ஆண்டு இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியில் மொகஞ்சதாரோ நாகரீகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரண்டு ஆய்வு முடிவுகளையும் 1924 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசு வெளியிட்டது...

இந்த இரு ஆய்வு முடிவுகளும் அதுகாலம் வரை வேதத்தை மையமாக வைத்து இந்திய துணைக் கண்டத்தின் தொன்மையை வரையறுத்து வந்த ஆரிய பார்ப்பனக் கூட்டத்திற்கு பேரிடியாய் விழுந்தது. வேத நாகரீகத்தின்படி ஆரிய பார்ப்பனர்களே படிப்பறிவுள்ள நாகரீகமான கூட்டமென்றும், அவர்களைத் தவிர்த்த திராவிட இன மக்கள் எல்லாம் படிப்பறிவில்லாத காட்டுமிராண்டிகள் என்றும், நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டமென்றும் வரலாற்றை நிலைபெறச் செய்திருந்த ஆரிய பார்ப்பனக் கூட்டத்திற்கு ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வு முடிவுகள் என்பது நிச்சயம் பேரிடி தான்...

காரணம் இந்த நாகரீகம் தான் இந்த நிலப்பரப்பின் மிகவும் தொன்மையான நாகரீகம் என்றும், இந்த நாகரீகத்திற்குச் சொந்தமானவர்கள் திராவிட இன மக்கள் தான் என்றும் அறுதியிட்டுக் கூறியது... இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட திமிலுள்ள காளை வடிவ சிற்பங்கள் எல்லாம் திராவிட நாகரீகத்தையே பறை சாற்றுவதாக இருந்தன. ஆனால் இதை ஒரு துளி கூட ஜீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பனக் கூட்டம் இந்த நாகரீகம் ஆரிய நாகரீகம் தான் என்றும், அது காளை அல்ல, குதிரை தான் என்றும் பல குப்பை நூல்களை எழுதித் தள்ளின. ஆய்வு முடிவு வெளியாகி 94 ஆண்டுகளானபோதும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் இந்தப் பொய்யை சொல்லிக் கொண்டே தான் உள்ளது. இப்படியிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள கீழடியில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது தான் வேடிக்கை!!

கீழடிக்கும், ஹரப்பா நாகரீகத்திற்குமான தொலைவு கிட்டத்தட்ட 1900 கிலோ மீட்டர்கள். அதே போல ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்குமான தொலைவும் கிட்டத்தட்ட 1900 கிலோ மீட்டர்கள். அதாவது சுமார் 4000 கிலோ மீட்டர்கள் திராவிடத் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என இந்த மூன்று ஆய்வு முடிவுகள் நிறுவுகின்றன..

ஆக இந்த ஆய்வு முடிவுகளில் இருந்து நமக்கு எழும் அடிப்படை கேள்விகள் என்ன? 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் எப்படி தமிழ்நாடு என்ற சிறிய பகுதியில் வாழும் மக்களாக மாறினார்கள்? எப்படி 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளில் பேசப்பட்ட தமிழ் மொழி இன்று தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படும் மொழியாக மாறியது? 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கல்வியறிவோடு இருந்திருக்கின்றனர் என்றால், இடையில் அவர்களின் கல்வியைப் பறித்தது யார்? என்பது எல்லாம் தான் நமக்கு எழ வேண்டிய அடிப்படைக் கேள்விகள்!!

இந்தக் கேள்விகளுக்கான ஒற்றைப் பதில் - ஆரியப் பார்ப்பனர்கள் என்பதே!! அவர்கள் தான் மண்ணின் மைந்தர்களான தமிழ் பேசும் திராவிட மக்களை தென்னகம் வரை ஒடுக்கியவர்கள்... அவர்கள் தான் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழியோடு கலந்து தமி்ழ் மொழியை பல்வேறு மொழிகளாக சிதைத்தவர்கள்... திராவிடத் தமிழர்களின் கல்வியை, அடிப்படை உரிமைகளைப் பறித்து நான்காம் தர சூத்திரர்களாக ஆக்கியவர்கள்...

ஆக இந்த கீழடி முடிவு என்பது முழுக்க முழுக்க ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரானது என்பது தான் வரலாற்றின் தொடர்ச்சியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...

அப்படி என்றால் இந்த கீழடி ஆய்வு முடிவைத் தொடர்ந்து அனைத்து தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று ஆரிய பார்ப்பன இனத்தை நோக்கி தங்கள் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்... அது தான் 2000 வருட ஒடுக்குமுறைக்கு, துரோகத்திற்கு தமிழ் சமூகம் ஆற்ற வேண்டிய குறைந்தபட்ச எதிர்வினையாக இருக்கும்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஆரியத்திற்கு எதிராக அணி திரண்டிருக்க வேண்டிய தமிழ்ச் சமூகத்தை பெரியாரை நோக்கித் திருப்பி உள்ளது ஒரு புல்லுருவிக் கூட்டம்!!

அதுவும் 6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு பெற்றிருந்த தமிழர்களை திராவிடர் இயக்கமா படிக்க வைத்தது என படு மொக்கையான ஒரு வாதத்தை நாம் தமிழர் என்ற கட்சியைச் சேர்ந்த அனைத்து இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நபர்களும் கேட்டுள்ளனர். இவ்வளவு அறிவுபடைத்த அனைவரும் ஒரு கொடையின் கீழ் திரண்டிருப்பது சீமானுக்குக் கிடைத்த பேறு என்றே சொல்ல வேண்டும். அரசியல் அரிச்சுவடி அறியாத சாமானியன் கூட கேட்கத் துணியாத படுகேவலமான வாதத்தை நாங்கள் தான் "அறிவின் டிப்போ" என பீற்றிக் கொள்ளும் கூட்டம் கேட்டிருப்பது நகை முரண்!!

(6 ஆம் நூற்றாண்டில் படித்த தமிழர்களை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் படிக்க வைத்ததா எனக் கேட்பவர்கள் தங்களது தாத்தா, கொள்ளுத் தாத்தாவின் டிகிரி சர்டிபிகேட்டை பொது வெளியில் வெளியிட்டு இக்கேள்வியை கேட்டிருக்க வேண்டும்)

ஆனால் இப்படியொரு வாதத்தை வைத்த இந்தக் கூட்டத்தை சாதாரணமாகக் கிண்டலடித்து நகர முடியவில்லை. இந்தக் கூட்டம் செய்வது எவ்வளவு பெரிய பச்சைத் துரோகம் என நினைக்கையில் இனத் துரோகிகளுக்கு இந்த இனத்தில் 2000 ஆண்டுகளாக பஞ்சமே இருந்ததில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது...

அடுத்து இந்தக் கூட்டம் ஆரிய பார்ப்பனர்களைக் காப்பாற்ற முன் வைக்கும் வாதம் "இது திராவிடர் கலாச்சாரமல்ல, தமிழர் கலாச்சாரம்" என்பது. எந்த திராவிடர் இயக்கத்தினரும் இதை தமிழர் கலாச்சாரம் எனச் சொல்வதை எதிர்க்கவோ, முரண்படவோ இல்லை... ஆனால் நாம் இதிலிருக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியலை முன் வைக்க "திராவிடர் கலாச்சாரம்" என்ற வார்த்தையை முன் வைக்கும் போது, பார்ப்பனர்களை முந்திக் கொண்டு வந்து குட்டையைக் குழப்புகின்றனர்... ,

இந்த கீழடி ஆய்வு முடிவையொட்டி ஆரிய பார்ப்பனர்களை நோக்கி தங்கள் சுண்டு விரலைக் கூட நீட்டத் துணியாத கூட்டம், இன்னொரு பக்கம் ஆரியத்திற்கு எதிரான அரசியல் சொல்லான திராவிடத்தை எதிர்க்க முதல் ஆளாய் ஆஜராவதிலிருந்தே இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றனர் என்பது அம்பலமாகிறது...

இத்தனை ஆண்டுகள் திராவிடர் இயக்கம் என்ன அரசியலை முன் வைத்ததோ, அதைத் தான் இன்றைய கீழடி ஆய்வும் உறுதிபடுத்துகிறது. "ஆரிய பார்ப்பனர்கள் தான் மண்ணின் மக்களாகிய நம்மை வடக்கிலிருந்து துரத்தியடித்தவர்கள்... ஆரிய பார்ப்பனர்கள் தான் சாதியற்ற சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் சாதியப் பிளவுகளை ஏற்படுத்தியவர்கள்... நான்காம் தர சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அடிமையாக்கியவர்கள்... நமது பண்பாட்டை ஆரிய மையமாக்கியவர்கள்... நமது மொழியை சிதைத்து பல்வேறு மொழிகளாக உடைத்தவர்கள்... மீதமிருந்த தமிழ் மொழியையும் சமஸ்கிருத மயமாக்கியவர்கள் என இத்தனைக் கொடுமைகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு 2000 வருடங்களாக செய்து வருபவர்கள் ஆரிய பார்ப்பனர் தான்" என திராவிடர் இயக்கம் கூறியது இன்று உறுதியாகியுள்ளது... நம் இனத்தின் முதன்மை எதிரி ஆரிய பார்ப்பனக் கூட்டம் தான் என கீழடி மெய்ப்பித்திருக்கிறது... ,

இப்படி இருக்க ஆரிய பார்ப்பனர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முற்படுகையில் இவர்கள் ஏன் பதறுகிறார்கள்? ஆம் கீழடி ஆய்வு முடிவுகளைக் கண்டும் ஆரிய பார்ப்பனர்களின் மீது சிறு விமர்சனமும் வைக்காத அந்த இனப்பற்றாளர்கள் தான் திராவிடர் என்ற சொல்லுக்கு மட்டும் எதிராகப் பொங்குபவர்கள்...

பெரியார் திராவிடர் என்ற சொல்லை ஆரிய பார்ப்பனர்கள் தவிர்த்து ஏனையோர்களை குறிக்கப் பயன்படுத்தினார்... ஆனால் இந்த சொக்கத் தங்கங்கள் ஒரு பக்கம் தமிழினத்தின் 2000 ஆண்டுப் பகைவர்களாக இருக்கும் ஆரிய பார்ப்பனர்கள் இங்கே தமிழ் மொழி பேசுகிறார்கள் என்ற காரணத்தால், அவர்களை சுத்த தமிழர்கள் என சான்றிதழ் கொடுத்துவிட்டு வந்து தான், இந்தப் பக்கம் ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியல் சொல்லான திராவிடர் என்ற சொல்லை எதிர்க்கின்றனர்...

இவர்களுக்கு குறைந்த பட்ச அறிவு நாணயம் இருந்திருந்தால், பெரியார் என்ன காரணத்திற்காக திராவிடர் என்ற சொல்லை முன் மொழிந்தாரோ, இந்த வாதத்தை தமிழ் என்ற சொல் கொண்டு பொய்யாக்கிவிட்டு, திராவிடர் என்ற சொல்லை எதிர்த்து அரசியல் செய்திருக்க வேண்டும். பெரியார் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை மிகத் தெளிவாகவே விளக்கிவி்ட்டு சென்றுள்ளார்.. "இங்கே தமிழினத்தின் ஒற்றை எதிரியாக ஆரிய பார்ப்பனர்களும், இங்கே தமிழ் மொழி பேசி தமிழர்களாகவே தான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்க தமிழர் என்ற சொல் கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழின விடுதலை அரசியலை முன் வைக்க முடியாது... காரணம் நாமும் தமிழன் தான் என பாப்பானும் வந்து நிற்ப்பான். ஆக அவனை உள்ளே விடாமல் தடுக்க ஆரியத்திற்கு நேர் எதிர் சொல்லான திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்" என 70 வருடத்திற்கு முன்பாகவே தெளிவுபடுத்திவிட்டார்...

ஆனால், இந்தக் கூட்டமோ தமிழினத்திற்கு 2000 வருடங்களாக தொடர் துரோகத்தையும், வஞ்சகத்தையும் செய்து வருகின்ற ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளில் தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி, அவர்களை பச்சைத் தமிழர்கள் என அங்கீகரிக்கிறது. பிறகென்ன யோக்கியதை இருக்கிறது, உங்களுக்கு திராவிடர் என்ற சொல்லை எதிர்க்க என்பது தான் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தை நோக்கி வைக்க வேண்டிய கேள்வி!!

தமிழினத்தின் ஒற்றை எதிரியான ஆரிய பார்ப்பனர்களை சுத்த தமிழர்கள் என ஏற்றுக் கொள்ளும் இந்தக் கூட்டம், இன்னொரு பக்கம் அந்த ஆரியப் பார்ப்பனர்களால் சிதைக்கப்பட்ட தமிழ் மொழியின் எச்சத்திலிருந்து உருவான மக்களை வந்தேறிகள் எனக் கூறி, எதிரிப் பட்டியலில் சேர்க்கத் துடிப்பது தான் மாபெரும் கேலிக் கூத்து... நியாயத்திற்கு பேரினமாக வாழ்ந்து வந்த தமிழினத்தை சிதைத்த ஆரிய பார்ப்பனர்கள் மீது தான் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உலக மகா இன உணர்வாளர்களுக்கு ஆரிய பார்ப்பனர்கள் மீது கொள்ளைப் பாசம்!! ஆனால் ஆரிய பார்ப்பனர்களிடம் பலியான மக்கள் தான் எதிரிகளாம்!!

அதுவும் கர்நாடகாவில், ஆந்திராவில், கேரளாவில் வாழும் மக்கள் மட்டுமல்ல... தமிழ்நாட்டிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தாலும் எதிரிகள் தானாம்!! 2000 வருடங்களாக தமிழினத்தின் எதிரிப் பட்டியலில் இருக்கும் பார்ப்பனர்களைக் காப்பாற்ற, பாவம் வேறு வழி தெரியவில்லை எளிய தமிழ்ப் பிள்ளைகளான நாம் தமிழர் கும்பலுக்கு.

இவர்களிடம் நாம் முன் வைக்கும் அடிப்படைக் கேள்வி, இவர்களால் வந்தேறிகள் என அடையாளப்படுத்தப்படும் மக்கள் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படும்போது தமிழ்நாட்டிற்காக போராட்ட களத்தில் இருந்துள்ளனர். தமிழ் மொழிப் போரில் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஈழ விடுதலைக்காய் தங்கள் இன்னுடலை தீக்கு தின்னக் கொடுத்துள்ளனர். தமிழர்களின் எல்லா உரிமைப் போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். இன்றும் கூட சிறையில் வாடும் பல பேரை உதாரணமாகக் கூறலாம். கடைசியாக நடைபெற்ற ஸ்டெர்லைட் படுகொலையில் கூட இரண்டு தோழர்கள் இந்தக் கும்பலின் வரையறைப்படி வந்தேறிகளே!!

இப்படி தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்து, தமிழர்களாக தங்களை உணர்ந்து, வாழ்ந்து வரும் மக்கள் வந்தேறிகளாம்!! போங்க சார்!! உயிரக் கொடுத்ததுக்கு எல்லாம் தமிழரா ஏற்க முடியுமா எனக் கேட்க கூச்சப்படாது இந்தக் கும்பல்.

சரி அது இருக்கட்டும்!! நீங்கள் சுத்த தமிழர்கள் சான்றிதழ் கொடுக்கும் ஆரிய பார்ப்பனர்களில் ஒருவராவது மொழிப் போரில் உயிர் நீத்ததுண்டா? ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்ததுண்டா ?? உயிர் கொடுக்க வேண்டாம், குறைந்த பட்சம் தமிழரின் வாழ்வாதாரப் பிரச்சனை முதற்கொண்டு, மொழிப் பிரச்சனை வரை ஏதேனும் ஒரு பிரச்சனையில் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா? இல்லவே இல்லை... மாறாக தமிழர்களின் எல்லாப் பிரச்சனையின் போதும் ஆரிய பார்ப்பனர்கள் எதிராகவே நின்றுள்ளனர். மொழிப் போராட்டம் துவங்கி, ஈழ விடுதலைப் போராட்டம், இந்தித் திணிப்பு, நீட், ஸ்டெர்லைட் வரை தமிழர்களுக்கு எதிராக நிற்பது தான் அவர்களுக்கான எழுதப்படாத விதி!! அனிதாவின் மரணத்தைக் கேலி செய்த பார்ப்பனக் கும்பலின் ஈவு இரக்கமற்ற செயலை இன்னும் நாம் மறக்கவில்லை...

ஆக ஆரிய பார்ப்பனர்களுக்கு பேரிடியாய் விழுந்துள்ள கீழடி ஆய்வு முடிவை இந்தக் கும்பல் எதற்காக பெரியாருக்கு எதிராகவும், திராவிடத்திற்கு எதிராகவும் திசை திருப்புகிறது என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன், ,

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments

11 comments

11
சுகந்தகுமார்தாஸ்
ஒரே ஒரு கேள்வி மனோஜ் அண்ணே. தமிழகத்தில் இருப்பவர்களை பெரியார் படிக்க வைத்தார் என்றே வைத்துக் கொள்வோம்(உங்கள் வாதப்படி);கேரளத்திலும் ஆந்திரத்திலும் இருப்பவர்களை யார் படிக்க வைத்தது? பெரியாருக்கு முன்பே பலரும் தமிழருக்குத் தொண்டாற்றியிருக்க தமிழை வேலைக்காரியிடம் கூட பேசாதே என்று கூறி பெருந்தொண்டாற்றிய பெரியாரை மட்டுமே முன்னிலைப்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம்.
கன்று குட்டி
திரு மனோஜ் அவர்கள் எத்தனை பார்ப்பான் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் விளக்க வேண்டும்...
அதே சமயம் திராவிட கட்சியில் எத்தனை பார்ப்பனர் உள்ளனர் என்பதை நான் ஆதாரத்துடன் விளக்குகிறேன்...
அதேபோல் இங்கு தமிழ் மொழிக்கும் நாட்டுக்கும் உரிமைக்கும் போராடிய பிறமொழி மக்கள் உள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
ஸ்டெரிலைட் உயிர் பலியில் இரண்டு வேற்று மாநிலத்தவர் என்று நீங்கள் கூறிதான் தற்போது தெரியும்...அவர்களை தமிழராகத்தான் நினைக்கின்றனர்... நீங்கள்தான் முரணை உண்டாக்கி திராவிடர் சொல்லாடலை தவறாக பயன்படுத்தி உள்ளீர்...
பெரியார் கூறிய கருத்து கீழடியில் நிரூபணம் ஆகி உள்ளது...ஆனால் அது திராவிடர் வரலாறு என்பது அபத்தம்... தமிழர் வரலாறு என்பது உண்மை...
பார்ப்பீனியத்தை நாம் தமிழர் எதிர்க்கவில்லை என்பது நகைச்சுவை...இதை நமக்கெதுக்கு வம்பு என்று இருக்கும் திராவிட கட்சிகள் கேட்டால் குபீர்னு சிரித்துவிடுவார்கள்...
பெரியார் பிரச்சனை இல்லை அப்போது அவர் பயன்படுத்திய திராவிடர் அந்த காலகட்டத்தில் சரியே... அதன் பிறகு காலம் கடந்து தமிழர் சொல்லாடலுக்கு பதில் திராவிடர் என்ற சொல்லை உங்களைப்போன்றோர் எதற்க்கு பயன் படுத்துகிறர்கள் என்று கூட தெரியாத அறிவற்றோர் இல்லை...
ராதாரவியை கேளுங்கள் திராவிடர் விளக்கம் நிகழ்காலத்தில் என்னவென்று....
இதையெல்லாம் கேட்டால் பெரியாரை திட்டுகிறார்கள் என்று கூப்பாடு போடுவது அபத்தம்...
பெரியார் ஒரு அறிவுஜீவி அவரை வைத்து பிழைப்பு(திராவிடர் சொல்லாடல்) ஓடுகிறது அறிவு ஜீவி என்று கருத்திக்கொள்ளும் சிலருக்கு...
குமார்
பெரியார் யாரையும் படிக்க வைக்கவில்லை நமக்கு எதிரான சூழ்ச்சியின் தந்திரத்தையும் குறித்து விழிப்புணர்வு செய்தார்.ஒரு இனம் மட்டும் வம்சாவழியாக மேன்மையுற்று ஆதிக்க சக்தியாய் உயர்ந்திருப்பதின் வேர் கண்டு அதனை உடைக்கவே பெரியார் பாடுபட்டார்.அன்றைய பார்பனர்கள் ஆங்கில மொழி கற்றதாலே ஆங்கிலேயர்களுக்கு கூஜா தூக்கி உயர்பதவிகளை அடைந்தனர்.அதன் படி அன்றைய சூழலும் இன்றைய சூழலிலும் ஆங்கிலம் என்பது புறக்கணிக்க முடியாத பெருமொழியாகவே உள்ளது.தமிழன் மேன்மையடைய வழிகள் தன் மொழியை கூறாக்கி உலக மொழியுடன் போட்டி போட வைக்க வேண்டும்.அல்லது உலக மொழிகளின் அறிவை உன் மொழியில் ஊற்ற வேண்டும்.ஆங்கிலம் அறிவியல் மொழியாக இருப்பதால் அதை கற்பதின் மூலமே அறிவியலின் ஆழம் காண முடியும்.அவ்வாறின்றி தமிழ் மொழியை கற்பதற்கு வாழ்க்கை நெறியன்றி வேறென்ன இருக்கிறது என கண்டதின் விளைவே பெரியாரௌ ஆங்கில முன்னுரிமைக்கு காரணம்.அதன் வழி பெற்ற அனுபவத்தின் பேரிலேயே தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்ய பெரியாரை தூண்டியது.நாம் தமிழர் கட்சியில் பார்பனர்கள் இல்லை.ஆனால் நாம் தமிழர்கட்சி பார்ப்பானியத்தின் கீழ் உள்ளது.பெரியாரிய அமைப்புகளில் பார்பனர்கள் இலலை.திமுக அரசியல் பிரதான கட்சி அது திராவிடக் கட்சியே அன்றி திராவிடர் கட்சியல்ல.திராவிடம் என்பது சமுக நீதி சார்ந்தது.அது தமிழர்களுக்கு நீதி வழங் நியமனமான தத்துவம்.அடிப்படை வேறுபாடு அறிந்து பதிவிடுக கன்றுகுட்டி.
கன்று குட்டி
திரு குமார் நான் தமிழ் ஆங்கிலம் என்று ஏதும் நான் பதிவிடவில்லையே...பெரியார் பார்ப்பீனியத்தை மூர்க்கமாக எதிர்த்தார் தமிழ் சமூகம் விழிப்படைய அரும்பாடு ஆற்றினார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை...
மிக தந்திரமாக அது திராவிடர் கட்சி இல்லை திராவிட கட்சியே என்றீர்... திராவிடர் என்பது நண்பருக்கு சற்று உறுத்தியது... அப்போ தி க... திராவிடர் கழகமா இல்லை திராவிட கழகமா...
சரி கீழடிக்கு வருவோம்...
அதில் பெரியார் சொன்னது உண்மையாகி உள்ளது இடையில் ஊடுருவிய பார்ப்பீனியத்தால் இவ்ளோ பின்னோக்கி உள்ளோம்... எனவே கீழடியில் பெரியார் கருத்து வென்றது என்று சொல்லுங்க தவறில்லை ஆனால் திராவிடம்... திராவிட... திராவிடர்... (சொல்லாடலில் ஒரே குழப்பம் ) வரலாறு என்பது அப்பட்டமான அய்யோக்கியதனம்...
சரி கட்சிக்கு வருவோம்...
திராவிட கட்சி என்ற பெயரில் கூடி கும்மாளம் போட்டாலும்வெ,ளிப்படையான ஜாதிய கூட்டணி,பார்ப்பன அடிமைத்தனம், பணத்தை வைத்து வியாபார அரசியல் இவைகள் இருந்தாலும் திராவிட சொல்லாடல் உங்க கண்ணை மறைக்கும் ஆனால் இளைஞர்கள் பல கூடி ஒரு தூய அரசியலை மக்களுக்கு உணர்த்தி,ஜாதிய வேறுபாடு ஒழிய, பெண்ணியம் பேசி சரிநிகர் வாய்ப்பளித்து,பண வியாபார அரசியல் என்று இல்லாமல் இருக்கும் கட்சியை... அந்த திராவிடம் பதில் தமிழர் என்ற சொல்லாடல்தான் உங்களை இவ்வாறு பேச வைக்கிறது என்றால்...மகிழ்ச்சி
Selvarajan
கீழடியை வைத்து யாரும் அரசியல் பண்ணாமல் இருந்தாலே நல்லது ...பலர் தமிழர் நாகரீகம் என்றும் ...சிலர் திராவிட நாகரீகம் என்றும் ...சர்ச்சைகளை உருவாக்கி குட்டை யை குழப்பாமல் ...ஒரு சிலர் இதன் தாென்மையை மறைக்க வரிந்துக்கட்டாமல் முழு ஆய்வும் நல்ல முறையில் நடந்தேற வாய்மூடி இருந்தாலே சிறப்பான வரலாறுக்கு புரியும் தாெண்டாகும் ....!!
ARUL S
senguttuvan aanda malai nhaadu ippodhu malaiyaala naadu. thinnan vaazhndha kaalaththiyum aazhvaar pOtriya vEngadamum indu thelungu naadu. thamizhar pon eduththa kolar indru kannada naadu. ini thamizh endraalum thiraavidam endraalum ondre endru purindhum puriyaadhadhu pola puzhudhi vaarith thootruvor thootrattum. koolikku vElai seybavargalaik kurai solli enna payan?
ஜார்ஜ்
இங்க மட்டும் ஏன் திராவிடம் பேசுறீங்க ஆந்திராவுல இருக்கவன் தமிழிலிருந்து தெழுங்கு வந்தது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வானா?தனித்து இயங்கும் வல்லமையும் வரலாறும் தமிழுக்கு இருக்கிறது திராவிடம் என்று சொல்லி இங்கே தெழுங்கர்களும் கன்னடர்களும் ஆட்சி அதிகாரத்தில் மஞ்சகுளிக்கிறீர்கள்.அதென்ன ஆதி தமிழன் பறையருக்கு ஆதிதிராவிடன் என்றபெயர்.தெழுங்கர் சக்கிலியர்களுக்கு ஆதி தமிழர் என்ற பெயர் எங்கள பாத்தா கேனையனா தெரியுதா?உங்க ஜம்பமெல்லாம் பலிக்காது மூட்டைய கட்டி கெளம்புற வழிய பாருங்க.
Malay
தமிழகத்தில் இருப்பவரகளை பெரியார் படிக்கவைத்தார் என்றால் கேரளா, கோவா வடகிழக்கு மாநிலங்களில் சில மாநிலங்களை காட்டி அங்கு எல்லாம் யார் படிக்கவைத்தார்கள் என்று கேட்கும் அறிவாளிகளே!! ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள் இந்திய அரசு எடுக்கும் கணக்கு எத்துனை பேருக்கு தன் பெயரை எழுத தெரியும் கையெழுத்து போடத்தெரியும் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் கல்வியறிவு கணக்கு...ஆனால் நாம் இங்கு சொல்ல வருவது தமிழகத்தைப்போல தொடக்கக்கல்வி, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி மற்றும் கல்லூரி பல்கலைக்கழக கல்வி நிலை கிறித்து...வேறு எந்த மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் அவ்வற்றில் பலப்படி முன்னணியில் உள்ளது என்பது இந்திய அரசால் வெளியிடப்படும் தரவுகளே சான்று. வேறு அந்த மாநிலங்களிலும் இவ்வளவு பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் அதிகமாகவும் தரமானதாகவும் இல்லை என்பது ஆம்டுத்தோறும் இந்திய அளவில் வெளியடப்படும் முதல் 100 கல்லூரி,பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 30 இடங்களை தமிழகமே பிடிப்பதிலிருந்து தெரியவரும். அதேபோல பொறியியல்,மருத்துவம் போன்ற தொழில் சார்ந்த உயர் படிப்புகளில் தமிழகமே.சிறந்து விளங்குகிறது. ஆண்டுத்தோறும் மருத்துவ இயர்ப்படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழக மாணவர்களே இந்திய அளவில் அதிகம். அதேப்போல மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திலேதான் அதிகம்.மாவட்டத்துக்கு குறைந்தது ஒரு அரசு மருத்துவக்கல்லூரியே உள்ள ஒரே மாநிலம் தமிழகமே.

பள்ளிக்கல்வியில் மற்ற எந்த மாநிலங்களை காட்டிலும் இடைநிற்றல் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம். மேல்நிலை பள்ளிக்கல்வி,கல்லூரிப்படிப்பு படிக்கும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலமும் தமிழகமே. முதல்தலைமுறை அதிகம்.கல்லூரிக்கல்வி,மருத்துவம்,பொறியியல் போன்ற தொழில்நுட்பக்கல்விப் பயிலும் மாண்வர்கள் அதிகம் படிக்கும் படித்த மாநிலமும் தமிழகமே! இதையெல்லாம் வைத்துதான் தமிழகம் திராவிட இயக்கத்தால் பெரியாரால் அதிகம் பயன்பெற்றது என்கிறோம்.ஆனால் மொன்னையாக கேரளாவை பார் கோவாவை பார் என்று வாதம் வைக்கிறீர்கள் போலித்தமிழ்த்தேசியவாதிகள்.
Rajasekaran Arumugam
மிக சிறப்பான பதிவு ஆம், ஒன்றை நம் புரிந்துகொள்ளவேண்டும் அரசு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுவருகிறது ஏன் என்ற கேள்வியை கேட்டால் நாமெல்லாம் ஆங்கில கல்விவலிக்கு பிள்ளைகளை சேர்த்துவிட்டோம் என்பதுதான் பதில் நன்றாக சிந்தித்தால்
அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் வசதிகள் செய்துகொடுப்பதில்லை மாறாக அங்கு ஆசிரியர்கள் சரியில்லை என்பது நமக்குநாமே மல்லாக்க படுத்து எச்சில் துப்புவதுமாதிரி. இதுபோன்ற வளர்ச்சி அரசு கல்விநிலையங்கள் அரசு மருத்துவ மணை போன்றவற்றை புதுப்பிக்காமல் ஆளும் அல்லது கிராம நகர பஞ்சாயத்துகளை கேள்வி கேட்காமல் பெரியாரின் மீதும் கலைஞர் மீதும் சேற்றைவாரி அடிப்பதுதான் ஆரிய ஆட்டிவருடிகளான தம்பிகள்.
quota வில்தான் படித்து மேலேவந்துவிட்டான் என்றும் சூத்திர பயலுக முலையில் ஏற்றி அவர்களுக்கு எதிரான ஒரு செயலை அவர்களாகவே முன்மொழியும் கேவல நிலைக்குத்தான் இன்று தமிழ் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. பொது எதிரியை விட்டுவிட்டு நமக்குள்ளே சண்டை போட்டுகொண்டு ஆரியத்தின் உள்ளடிக்குள் நுழைந்து சுகம் காண்கிறது நாம்தமிழர் மற்றும் அதிமுக சாதி வெறிக்கும்பல்கள்.

மலையாளம் கன்னட தெலுங்கு இவைகளெல்லாம் தமிழுடன் ஆரிய சமஸ்கிருதத்தை உள்வாங்கி உருமாறியிருக்கிறதே தவிர நாமெல்லாம் திராவிடர்கள்தான் எல்லோரும் இணைந்து பொது எதிரியார் என்பதை அடையாளம் தெரிந்தும் சுகம் காண்பது எனோ
Rajasekaran Arumugam
sirappu
கன்று குட்டி
திராவிடம் என்பது ஒரு தத்துவ வடிவத்தின் சொல்லாடலே தவிர வேறஒன்றும் இல்லை என்று 100% சந்திரமுகியாக மாறியிருக்கும் சில கங்காக்கள் வைக்கும் வாதம், இது ஒருபோதும் தமிழர் வரலாறு இல்லை திராவிட வரலாறு என்று...
மீண்டும் ராதா ரவி விசயத்திற்கு வருவோம்..வரலாற்றின் அடியை நோண்டி பார்த்து மும்பை முதல் கன்னியாகுமாரி வரை நாமெல்லாம் திராவிடர் என்ற அற்புத கருத்தை முவைக்கிறார்... ஆனால் நான் தெலுங்கன் என்கிறார்... சரிதான்...ஆகவே நான் திராவிடர் என்கிறார்... இங்குதான் இடிக்குது...
இவரை போன்றோர் நான் திராவிடர் என்கிற சொல்லாடலை ஏன் பயன்படுத்திகிறார் என்று நுணுக்கமாக பார்த்தால் புரியும்... இவர் திராவிட தத்துவத்தை ஏற்று நான் திராவிடன் என்று சொல்கிறார் என்பது சற்று குழப்பம்(இவரை பார்த்தால் அம்மன் கோவில் பூசாரிக்கும் இவருக்கும் ஒரு வேறுபாடில்லை )இருந்தாலும் நான் திராவிடன் என்கிறார்... இப்போது திராவிட... திராவிடம்... திராவிடர் என்று சொல்லும் போலி திராவிட வாதிகள் மொன்னையான கருத்தை முன்வைத்து அர்த்தம் புரியாமல் உலவுகின்றனர்...
பொது எதிரி யார் என்று இங்குள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தெரியும் பெரியார் போன்றோரின் வழிகாட்டுதலினால்...
இங்குள்ள போலி திராவிடம் பேசும் வாதிகள் கட்சிக்கும் இயக்கத்துக்கும் வேறுபாடு தெரியாமல் இரண்டையும் ஒப்பிட்டு மொக்கையான கேள்விகளை கேட்டு சொரிந்துகொள்கின்றனர்...
மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசாமல்...
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பெரியாரியம் பேசாமல்...தனது நோக்கத்திற்காக புல்லரிப்புக்காக... கேவலமான கருத்துக்களை பேசி பேசி இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை இழந்து நிற்க்கிறது...அதனாலதான் இளைஞர்கள் இருபெரும் கார்பொரேட் கட்சிகள் ராஜதந்திரம் என்று அந்த கட்சிக்காரர்களை விட மும்மரமாக சொம்படிக்கும் சில இயக்கங்களை நோக்கி செல்லாமல் பெரியார் கருத்துக்களை சிறிதாவது உபயோகிக்கும்.... இயக்கம் என்றால் திருமுருகன் காந்தி நோக்கியும் கட்சி என்றால் சீமானை நோக்கியும் செல்கின்றனர்...
வேறென்ன பிஜேபி rss நோக்கி செல்லும் இளைஞர்களை தடுத்து தன்பக்கம் திருப்புகின்றனர் என்று ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதை தவிற சொல்வதற்கு ஒன்றுமில்லை...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.