இராசராச சோழனைப் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துப் பேசிய காணொளியில், திராவிடர் இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் விமர்சித்தே பேசியிருக்கிறார்;

ஆனால் இராசராசனுக்கு ஆதரவாக நின்று, வலதுசாரி தமிழ்த் தேசியக் குழுக்களும், காவிக் கும்பல்களும், சாதியக் கூட்டமும் இரஞ்சித்தைக் கடுமையாக எதிர்த்து வந்த காரணத்தால், இந்த விடயத்தை வைத்து தற்போது இரஞ்சித்தின் திராவிடர் இயக்க எதிர்ப்பு பேச்சைப் பற்றி பேச வேண்டாம் என பொறுமை காத்தோம்; இப்போது இராசராசன் விவகாரம் சற்று ஓய்ந்த காரணத்தால் இரஞ்சித்தின் திராவிடர் இயக்க ஒவ்வாமை குறித்துப் பேசுவோம்.

pa ranjith 370இரஞ்சித் வரலாற்று அறிவின்றி திராவிடர் இயக்கத்தை விமர்சிப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பே பல முறை விமர்சித்துள்ளார்; அனைத்து விமர்சனமும் அரசியல் அறிவின்றி, கள நிலவரம் தெரியாமல், தனக்குப் பயிற்றுவித்தவர்களின் வார்த்தைகளை அப்படியே வாந்தி எடுக்கும் ஆர்வக்கோளாறு வேலையாகவே இருந்த‌து.

அதன் தொடர்ச்சியாக தான் இந்தக் காணொளியிலும் உளறியுள்ளார்; அதாவது பார்ப்பனிய எதிர்ப்பு மட்டும் தலித் ஆதரவு ஆகாது என்கிறார். அதாவது அவர் கூற வருவதை நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால், 'திராவிடர் இயக்கத்தினர் பார்ப்பன எதிர்ப்பை பிரதானமாக வைத்துள்ளனர், இடைநிலை சாதி எதிர்ப்பை முன்னிலைப்படுத்துவதில்லை என்கிறார்' என.

சென்ற ஆண்டு 'சேரிகளில் பெரியார் சிலை இருக்கு, ஊர்த் தெருக்களில் அம்பேத்கர் சிலை இருக்கா?' எனப் பேசினார்; இந்தப் பேச்சும், தற்போது பேசியுள்ள பேச்சின் மூலமும் இரஞ்சித் கூற வருவது இதைத் தான்:

1) திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கானது அல்ல;
2) பெரியார் தலித்துகளுக்கான தலைவர் அல்ல;
3) தலித்துகளின் தலைவரான அம்பேத்கரை இடைநிலைச் சாதிகள் ஏற்பதில்லை, எனவே இடைநிலை சாதிகளின் தலைவரான பெரியாரை தலித்துகள் புறக்கணிக்க வேண்டும்
4) பார்ப்பனிய எதிர்ப்பைப் போல, இடைநிலை சாதிகளையும் எதிரிகளாகத் தான் அணுக வேண்டும்.

( அண்ணன் திருமாவின் வெற்றியை ஒவ்வொரு திராவிடர் இயக்கத்தினரும் எதற்காக மனதாரக் கொண்டாடினர் என்ற ஒற்றைத் தேடுதல் உங்களுக்கான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் திரு. இரஞ்சித் அவர்களே !!)

இவை தான் இரஞ்சித்தின் மிக முக்கிய கோரிக்கைளும், கொள்கைகளும், சுருக்கமாகச் சொல்வதென்றால், திராவிடர் இயக்கத்தையும், பெரியாரையும் தலித் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது தான் ஒற்றை அஜெண்டா. வேறு வரிகளில் சொல்வதென்றால் தலித் மக்களை பொது நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவது.

இதிலிருந்து இரஞ்சித் பெயருக்குக் கூட அம்பேத்கரை வாசித்தது இல்லை எனத் தெளிவாகிறது; அம்பேத்கர் சித்தாந்த ரீதியாக எந்த இடத்திலாவது இடைநிலைச் சாதி எதிர்ப்பை முன்மொழிந்துள்ளார் என இரஞ்சித் காட்டட்டும்; அப்படிக் காட்டினால் இன்றே அரசியலில் இருந்து விலகத் தயார்.

(தலித்துகளுக்கு எதிராக இடைநிலைச் சாதியினர் செயல்படுகையில், இடைநிலைச் சாதிகளுக்கு எதிராகத் தான் திராவிடர் இயக்கம் நின்றிருக்கிறது; விசிக போன்ற அமைப்புகளும் எதிராகத் தான் நிற்கும். ஆனால் அது அந்த விடயத்திற்காக உடனடி எதிர்வினையேயின்றி சித்தாந்த ரீதியான எதிர்ப்பில்லை)

இந்த சமூகத்தில் பார்ப்பனியத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது அடிமட்டத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களான நாமாகத் தானே இருக்க முடியும்!!

காரணம், பார்ப்பனியத்தை, வர்ணாசிரமத்தை எதிர்த்து நின்ற மக்கள் என்பதாலேயே பார்ப்பனக் கூட்டத்தால் சேரியிலும், ஊருக்கு வெளியேயும் ஒதுக்கப்பட்டோம்!!

அதே போல ஏனைய சூத்திர மக்களையும் பல்வேறு சாதிகளாகப் பிரித்து, உண்மை எதிரியான பார்ப்பனியத்திற்கு எதிராக அணிதிரள விடாமல் பிரித்தாண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் வெற்றி பெற்று வருகிறது!!

ஆக பார்ப்பனியத்தின் சூட்சுமம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி என்றால், நம்மை ஒடுக்கிய பார்ப்பனியத்தை வீழ்த்தும் சூட்சுமம் என்பது ஏனைய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பார்ப்பனியத்தை தனிமைப்படுத்துவது தான்!!

அதனால் தான் பெரியார், பார்ப்பனர்கள் யாரை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக காய் நகர்த்துகின்றனரோ, அந்த இடைநிலை சாதி மக்களிடையேயே சென்று, "நீயே பார்ப்பானுக்கு அடிமை, உனக்கு என்ன தகுதி இருக்கு தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்க?" எனப் பரப்புரை செய்து, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்த வேறுபாட்டை ஊதி ஊதி வளர்த்து பார்ப்பனர்கள் குளிர் காய்ந்தனரோ, அதை உடைக்கும் அரசியலை முன் வைத்தார்.

அதையே தான் அண்ணல் அம்பேத்கரும் முன் வைத்தார்.

"தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது, பார்ப்பனியத்தின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு இடைநிலை சாதிகள் விழிப்புணர்வடையும் நாளே" என்றார்.

"அம்பேத்கர்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து மட்டும் வந்தால் போதாது, அம்பேத்கர்கள் இடைநிலை சாதிகளில் இருந்து உதிக்க வேண்டும்" என அதே பொருளில் தான் அண்ணன் திருமாவும் தொடர்ந்து முன் வைக்கிறார்.

சரி விசயத்துக்கு வருவோம்!!

அண்ணலும், பெரியாரும் நமக்கு எதிராக உள்ள இடைநிலைச் சாதி மக்களைக் கூட நம் பக்கம் இழுக்க வேண்டும், அது தான் நம் விடுதலைக்கான அச்சாரம் என தங்களின் அரசியல் கோட்பாடாக முன்வைத்துச் சென்றனர்.

ஆனால் இரஞ்சித்தோ, நமக்கு ஆதரவாக உள்ள திராவிடர் இயக்கத்தினரைக் கூட, "நீ அந்தப் பக்கம் போ!" என விரட்டும் அரசியலை இளைஞர்களின் உணர்வுகளோடு விளையாடி கனகச்சிதமாகச் செய்கிறார்.

பார்ப்பான் எந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமையாக வைத்தானோ, அதே வேலையை ரஞ்சித்தும் செய்கிறார் என்றால்...

பிறகு அம்பேத்கரின் கருத்தியலில் இருந்து ‘நீங்க என்னத்த கத்துக்கிட்டீங்க’ என்று இரஞ்சித்தைப் பார்த்து கேட்கத் தான் வேண்டும்.

இரண்டாயிரம் வருடமா என்ன நிலையோ, அதே நிலை தான் தொடர வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா, இரஞ்சித் அவர்களே!!

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Pin It