கீழடி அகழாய்வில் கிடைத்த வரலாற்றுப் புதையல் நமது இலக்கியப் பெருமைகளுக்குக் கிட்டிய மகுடம். நமது இலக்கியத்தில் கிடக்கும் நவநாகரீகத்தை கற்பனை என்று குறுங்சால் வெட்டிய இருண்டகர்களின் முகத்திலும் மூளையிலும் விழுந்த அடி.
சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழகத்தில் முறையாக அகழாய்வு நடத்தாமலும், அதன் மூலம் தமிழர்களுக்குப் பெருமை கிட்டிவிடாமலும் பார்த்துக் கொண்ட கெட்டிக்கார மத்திய பார்ப்பனிய அரசுகளுக்கும் எதிர்பாராமல் விழுந்த அடியே.
நமது இலக்கியப் பெருமைகளை கற்பனை என்று உதாசினப்படுத்திய, வன்மம் நிறைந்த பகையாளிகள் நாக்கில் நல்ல பாம்பு கொத்தியதுபோல் ஊளையிடுகிறர்கள், உளறுகிறார்கள். இதை எல்லாம் பார்த்து பார்ப்பனர்கள் மீது கோபம் கொள்ளாமல், சீற்றங்கொள்ளாமல் கீழடியைக் கொண்டாடுகின்ற திராவிட இயக்கத்தினரை வஞ்சகமாய் வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தினர்களுக்குப் பெயர் தமிழ்த் தேசியர்களாம். தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வசதியான வாழ்விற்கும் தமிழரின் வாழ்க்கையை அடமானம் வைக்கும் தமிழ்த் தேசியவாதிகளை என்ன செய்வது?
மொழிமரபில் வேர்ச்சொல் தேடி உலக மொழிகளை ஆய்ந்தறிந்த மொழிஞானி தேவநேயப் பாவாணர் உலக மொழிகளில் எல்லாம் தமிழ் வேராய், விழுதாய் இனம் காட்டி நிற்கிறதென்று சொன்னார். ‘உஹடு’ என்ற மாராட்டியச் சொல்லுக்குள் ‘உரல்’ என்ற தமிழ்ச்சொல் மறைந்து நிற்கிறது. ‘கரணே’ என்ற அரியானச் (அரியான மொழிக்கு வரிவடிவம் இல்லை) சொல்லுக்குள் ‘கரண்டி’ என்ற தமிழ்ச்சொல் முகம் மாறிக் கிடக்கிறது. ‘சுண்டு’ என்ற இந்திச் சொல்லுக்குள் ‘சுக்கு’ என்ற தமிழ்ச் சொல்லே கோலோச்சுகிறது. இப்படி வேர்ச்சொல் மூலம் சொல்லை அடையாளம் கண்டு மொழிப் பெருமை பேசும் நாம், கொஞ்சம் இனத்தின் வேரையும் ஆய்வு செய்ய வேண்டாமா?
உலக மொழிகளில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லோருக்கும் தன் தாய்மொழி உயர்வானதே. மொழி அமைப்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கலாம். அது போல் உலக மாந்தரில் உயர்வு, தாழ்வு இல்லை. உரிமைப் போராட்டமும் அதிகாரப் போட்டியுமே இங்கு இனங்களாய் வேறுப்பட்டு முரண் கொள்கின்றன.
2009 ஈழ இன அழிப்பிற்குப் பிறகு தமிழினத்தில் ஏற்பட்ட தாக்கத்தால் தமிழ் இளைஞர்களிடம் ஏற்பட்ட புத்தெழுச்சியைக் கண்டு வெலவெலத்த பார்ப்பனிய வல்லாதிக்கம் தனது ஊடறுப்பு வேலையை விரைவுபடுத்தியது. எடுத்துக்காட்டுக்கு, மும்பை தாராவி 90 அடிச்சாலையில் உலகத் தமிழர் சார்பில் 2010, 2011 ஆண்டுகளில் நடத்திய மாவீரர்கள் நாள் நிகழ்ச்சிகளில் 200 இளைஞர்களுக்குமேல் கலந்து கொண்டார்கள். அதில் கிட்டத்தட்ட150 இளைஞர்கள் புதியவர்கள். அதில் சில ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். ஈழத்தில் நடந்த இன அழிப்பு அனைவரையும் பாதித்திருந்தது.
இந்த இளைஞர்களிடம் இனம்சார்ந்த விவாதங்கள் வரும்போது பார்ப்பனர்கள்தான் ஈழதேச அழிவிற்குக் காரணம் என்று சொல்லும்போது முகம் சுழித்தார்கள். பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தால் முகம் கறுத்தார்கள். இப்படி இரண்டு மூன்று ஆண்டுகள் மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த முரண், நடிகர் சீமான் ‘நாம் தமிழர் கட்சி’ ஆரம்பித்த உடன் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்கு வரும் இளைஞர்கள் கூட்டம் குறைந்தது. அப்படியே வந்தாலும் பெரியாரையும், கலைஞரையும், தி.மு.கவையும் குறை சொல்வதற்கென்றே வந்த கூட்டம் என்று அவர்கள் நடவடிக்கையில் தெரிந்தது.
நாம் தமிழர் கட்சி தனியாக மாவீரர் நாள் நடத்த ஆரம்பித்தார்கள். பிற இலக்கிய நிகழ்வுகளிலோ, வேறு நிகழ்வுகளிலோ கூடும் இடமெல்லாம் பெரியாரை தெலுங்கரென்றும், தமிழரைக் காட்டுமிராண்டி என்று சொன்னவரென்றும், தமிழினத்திற்கு தமிழர்தான் தலைவராய் வர வேண்டுமென்றும் மும்பையில், ஈழப் போருக்குப் பிறகு ஒருங்கிணைந்த தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்தார்கள்.
இன்று மும்பையில் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முதன்மையானவர்கள் பலர், நேற்றுவரை ஆர்.எஸ்.எஸ்சில் இருந்த (இருக்கும்) இந்து வெறியர்கள். தங்களைத் தமிழர்களின் மீட்பர்களாய் காட்டிக் கொள்கிறார்கள். பெரியாரை தெலுங்கர் என்று விமர்சிக்கும் எவரும் பார்ப்பனர்களைக் குறை கூறுவதில்லை. பெரியாரை சரியாக, முறையாகப் படித்து உள்வாங்கத் தெரியாத விடலைகள்தான் இப்படி என்றால், கற்றறிந்த மணியரசன் போன்றோர்களே அப்படித்தான் இருக்கிறார்கள். அரசுகள் செய்த ஒரு தவறைச் சுட்டிக் காட்டி "மத்திய அரசும், மாநில திராவிட அரசுகளும்" என்று பேசுகிறார். "மத்திய பார்ப்பனிய அரசும் மாநில திராவிட அரசும்" என்று பேசுவதற்கு அவருக்கு நாக்கு வருவதில்லை.
பெரியாரின் மொழிக் கொள்கை தவறு என்று பேசும் மணியரசன், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் எவ்வளவு நன்மை பயக்கிறது என்று பேசுவதில்லை. பார்ப்பனிய உண்ணிகள் மேய்ந்து மணிப்பிரவாளமாய் சோகை பற்றி மாண்டுப் போகக் கிடந்தத் தமிழை புதுக் குருதி பாய்த்து புத்துணர்ச்சி ஊட்டியது திராவிட அமைப்புகள்தான் என்பதை தன்பின்னால் நிற்கும் விடலைகளுக்குச் சொல்வதில்லை. அன்று சமணத்தையும், பவுத்தத்தையும் அழித்தொழித்த பார்ப்பனியத்திற்கு சார்பாய் தமிழக இளைஞர்களை மடைமாற்றம் செய்யும் இவர்களை போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொன்னால் அதில் பிழையேது?
தமிழ், தமிழர் என்று சொன்னால் நம் இனம் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டுமே அடங்கி விடும். இன்றைய இந்தியா முழுக்கப் பரவி இருந்த நாம், பார்ப்பனியக் கேடொழுக்க ஊடுருவலால் மொழி திரிந்து மராட்டியனாய், மொழி சிதைந்து தெலுங்கனாய், கன்னடனாய், மலையாளியாய், கொங்கணியராய் நம் இனம் மாறிப் போன வரலாற்றை எப்படி உணர்த்துவது? இந்தியப் பார்ப்பனியத்தை நன்குணர்ந்த பஞ்சாபிக்காரர் சொல்கிறார், நானும் திராவிடன்தான் என்று. பஞ்சாபிக்காரர் இன்றைய காலச் சூழலில் தன்னைத் தமிழன் என்றோ, தமிழ்க் குடிமரபில் வந்தவன் என்றோ ஒப்ப மாட்டான். அதைப் போலத்தான் பிற மாநிலத்தவரும்.
திராவிடம் என்ற சொல் உங்களுக்குக் கசப்பாய் இருந்தால் தமிழ்த் தேசியத்தை முன்னெடுங்கள், வரவேற்கிறோம். தமிழ் உணர்வால் உங்கள் பின்னால் நிற்கும் இளைய தலைமுறைக்கு பெரியாரை ஏன் தவறுதலாக அடையாளப்படுத்துகிறீர்கள்? தெலுங்கன் என்று ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்? இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் பெரியாரும், அவர் வழிவந்த திராவிட இயக்கங்களும்தான். பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் நாம் இழந்துவிட்டு பார்ப்பனியத்தை எதிர்ப்பது பொய்க்கால் குதிரையில் போர்க்களத்திற்குப் போவதற்கு சமம். பார்ப்பனியத்தை வெற்றி கொள்ளாமல் தமிழருக்கு விடுதலை இல்லை. ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமே விடுதலை இல்லை.
பெரியார் உங்களை விடவும் பன்மடங்கு தமிழுக்கும், தமிழருக்கும் தன் வாழ்நாளெல்லாம் வதைபட்டவர். அவர் போர்க்கருவியும் பட்டறையுமாக வாழ்ந்தவர். தூர்ந்து கிடந்த துறைதோறும் தூர்வாரி ஊற்றுக்கண் திறந்த உண்மையான சமூக நீதிப் போராளி. தமிழ்நாடு இந்தியாவிலிருந்து துண்டாகி, தனிநாடு ஆனால் ஒரு சிறந்த நாடாகத் திகழும் என்று கூறியவர்.
இந்தியாவில் அரசியல், வழிபாட்டு முறைகள், வாழ்வியல், மொழியியல், உளவியல் அனைத்தும் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு ஆட்பட்டே கிடக்கிறது. அப்படியே தமிழ் மொழியும் தாக்குதல் பெற்றே நிற்கிறது. இந்தியர் பார்வைக்கும் அவர்கள் வழி வெளிநாட்டுப் பார்வைக்கும் நாம் திராவிடர்களே. ஈழத் தமிழர்களாலும், விடுதலைப் புலிகளாலுமே நம்மீது புதுவெளிச்சம் பாய்ந்து, நாம் தமிழர்களாய் அறியப்படுகிறோம்.
இப்பொழுதும் மும்பையில் ‘மதராசி’ என்றால் ஒட்டுமொத்த தென்னிந்தியரைத் தாங்கி நிற்கும் சொல். இன்றைய கன்னடர் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழரே, இன்றைய தெலுங்கர் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழரே, இன்றைய மலையாளிகளும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்தானே. இந்த இனங்கள் எல்லாம் வேர்மூலம், விழுதுமூலம் கிளைத்த நம் இனத்தவர்தானே. மொழிக் கலப்பால், மொழித் திரிபால், மொழித் தேய்வால் வேறு இனத்தவராய் மாறிப் போனவர்கள். இன உணர்வற்று அவர்கள் நமக்கு எதிரியாய்த் தோற்றம் பெறலாம். ஏனெனில் அவர்கள் இனவுணர்வு ஊட்ட அங்கு பெரியார் போன்ற ஒருவர் இல்லை.
இன்று காவேரிச் சிக்கலும் முல்லைப் பெரியாறு போன்ற சிக்கல்களும் இருப்பதால் அவர்கள் வேறு இனமாய் ஆகிவிட மாட்டார்கள். அங்கு நடக்கும் சிக்கலுக்கு அடிப்படைக் காரணம் ஆர்.எஸ்.எஸ்.சும், இந்துத்துவா கும்பலும்தான். தமிழ்நாட்டிலேயே நம்மை திராவிடம் என்றும், தமிழ்த் தேசியம் என்றும் வேறுபடுத்தி கூர்தீட்டும் பார்ப்பனியம், அண்டை மாநிலத்தில் கிடைக்கும் வெல்லம் போன்ற சூழலை விடுவார்களா? எனவே நம்மிடையே உள்ள முரணைக் கூர்தீட்டி முறுக்கேற்றுகிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புள்ளியைக் கோடாக்கி, கோட்டினை கீறலாக்கி, கீறலை பெரும்பிளவாக்கி நம்மைத் துண்டாடுவதில் வல்லமை பெற்றது பார்ப்பனியம்.
உருமாறி, வடிவம் மாறி வேற்றுமொழியில் கிடக்கும் சொற்களை தக்கச் சான்றோடு தமிழ்ச் சொல் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், மொழியால் திரிபுற்ற தெலுங்கரை, மலையாளியை, கன்னடத்தவரை நம் இனம் என்று ஏற்க மறுக்கிறோம்? வெல்லத்தை வேறுமொழி சொல்லி தந்தால் கசந்துவிடுமா என்ன? சூழ்நிலையால் நமக்கு எதிரியாய்த் தெரிந்தாலும் அவர்கள் நம் இனமே.
மூவாயிரம் ஆண்டுகள் ஆனாலும், பார்ப்பனர்கள் பார்ப்பனர்களே. அவர்கள் ஆதிகாலத்திலும் நம் நீர்த்தேக்கங்களை உடைத்து சேதப்படுத்தியது போல, ஆநிரைக் கூட்டத்தைக் களவாடி சென்றதுபோல, இன்றும் நம்மோடு தொடர்ந்து சமமாய் சேர்ந்து வாழ விரும்பாமல் நமக்குக் கேட்டினையே செய்கிறார்கள். நம்மைக் கீழோராய் ஆக்க முனைகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உயிர்நீத்து, நம்மோடு இன்றும் போர்க்களத்தில் நிற்கிறார்கள். எடுத்துக்காட்டுக்குக் கூட தமிழுக்கும், தமிழருக்கும் உயிர் ஈகம் செய்த ஒரு பார்ப்பனரையோ, ஈழத்துக்கு ஆதரவாய் இந்தியத்தை எதிர்த்த ஒரு பார்ப்பனரையோ நம்மால் காண முடியவில்லை. காலங்காலமாய் அந்த இனம் நம் இனத்திற்குச் செய்த, செய்து கொண்டே இருக்கும் கேட்டிற்கு அளவே இல்லை. வரலாறு முழுக்க அவர்கள் செய்த கேடு நம் மூளையை நகரவிடாமல் நங்கூரமாய், கால்களிலும், கைகளிலும் தொடரியாய் (சங்கிலி) விழிகளில் நிறக் குருடாய் நிலை பெற்று நிற்கின்றன. நாம் அனைத்தும் இழந்து ஓர் இரந்துண்ணிபோல பார்ப்பன சமூகம் முன் நிற்கிறோம்.
இந்த அடர்ந்து, திரண்ட இருளிடையே, அறிவுச் சுடரேந்தி மானப்போர் தொடுத்த தனக்குவமை இல்லாத பேராசான் தந்தை பெரியாரை வீழ்த்தவே, பார்ப்பனியம் நம்மிடையே திராவிடர், தமிழர் என்ற இரு முனைகளையும் கூர்மைப் படுத்துகிறது. இந்தச் சூழ்ச்சியை உள்வாங்கி உணரவில்லையானால், பெரியரால் நாம் பெற்ற மான உணர்வு வெளிச்சத்தை, பார்ப்பனியம் தன் இருள் கொண்டு நிரப்பும். வரலாற்றில் நாம் அடிமைகளாகவே அறியப்படுவோம்; அடிமையாகளாவே பதியப்படுவோம்.
- இறை.ச.இராசேந்திரன், மும்பை