‘கரிசல் காட்டு இலக்கியம் இந்த மண்ணோட விளைச்சல் என்று பலரும் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். கரிசல் காட்டு இலக்கியம் மட்டுமல்ல, கரிசல் காட்டு ஓணானும், கரிசல் காட்டு உடைமரமும் அந்த மண்ணுக்கே உரிய தனித்துவமான விளைச்சல்தான்” -  எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

             mathavankurichi  உலக வல்லரசாக வளர்ந்துவரும் இந்தியாவின் தென்கோடியில், அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட தொழில்வளம் மிக்க மாநிலமான தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்தில், கப்பலோட்டிய தமிழன் சுதேசி நாவாய்க்கப்பல் ஓட்டிய, உலகுக்கே உப்பு ஏற்றுமதி செய்யும் தூத்துக்குடி மாவட்டத்தில், சுனாமியே சுறுசுறுப்பின்றி அமைதியான திருச்செந்தூர் தாலுகாவில், ராக்கெட் ஏவுதளம் அமைக்க வானியல் முறைப்படி, சரியான இடம் என கணிக்கப்பட்ட குலசேகரன்பட்டிணம் கிராமத்திலிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம்தான் மாதவன்குறிச்சி வருவாய் கிராமம். உண்மையில் பிழைக்கவும் வழியில்லை, மக்கள் அங்கே இருக்கவும் வழியில்லை. பெயரளவுக்குத்தான் அரசு ஆவணங்களில் வருவாய் கிராமம்.

               கடல், தேரிமணல், சமவெளிக்காடு என மூன்று அடுக்கு நில மற்றும் நீர்ப்பகுதிகளைக்கொண்டு காட்சியளிக்கும் இக்கிராமத்தில் நிலஅளவை எல்லைக்கற்கள் மட்டுமே தெளிவாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் சிதிலமடைந்த சிலைபோல் பாழ்பட்டு கிடக்கிறது.

               கருப்பு வைரம் கருப்பட்டியை நாடெங்கும் கொண்டு சேர்த்த இக்கிராமம் இன்று ரேசன் கடையில் மானியம் குறைக்கப்பட்டதால் விலை உயர்ந்த சீனி வாங்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறது. சென்னையில் எத்தனை ஏரிகள், கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் எத்தனை அணைகள் ஆறுகள். இவ்விரண்டு இடங்களிலும் வெள்ளம் வந்தால் தாங்காது தமிழர் நெஞ்சம். இந்த கிராம மக்கள் என்ன பாவம் செய்தார்கள். குடிக்க தண்ணீர் இல்லை வருடத்தின் 365 நாட்களும். பூமித்தாயை துளைத்து சுமார் 40 அடியிலேயே தண்ணீர் வரும் அற்புத இடம் இக்கிராமம். ஆமாம், கடல் தண்ணீர் நிறைந்து பொங்கி வரும் புண்ணிய பூமி இக்கிராமம். இக்கிராமம் வழியாக கருமேனி ஆறு (குடமுருட்டி ஆறு என்ற பெயரும் உண்டு) ஓடி மணப்பாடு கடலில் கலக்கிறது. கடைசியாக கலந்தது 2005 ஆம் ஆண்டில்.

               சாத்தான்குளம் பகுதியில் உள்ள சடையனேரி கால்வாயில் இருந்து உபரிநீர் திறந்து விட்டதனால் நடந்தது அந்த அதிசயம். சேர்த்து வைக்க தடுப்பணையும் இல்லை, நல்ல தண்ணீர் குடிக்க இக்கிராம மக்களுக்கு கொடுப்பனையும் இல்லை. இத்தனைக்கும் அந்த வெள்ளம் வந்ததால், மூன்று போகம் விளைந்த பயிருக்கு சேதமில்லை. ஏனென்றால் இக்கிராம பூமித்தாய் ஏற்றுக்கொண்ட பயிர்கள் புளியமரம், உடைமரம், பனைமரம். முக்கியமாக இந்தப்பூமியின் செல்லப்பிள்ளை சீமைக்கருவேலமரம்.

               பிழைப்புக்கு வழியில்;லாதவர்கள் தங்கள் உழைப்பை மூலதனமாகக்கொண்டு 5 வருடங்கள் கண்பார்வை பார்த்து, வளரவிட்டு, சீமைக்கருவேல மரத்தை வெட்டி பிழைப்பு நடத்தினால், அந்த நிலையும் தொடர விடாமல் இடையில் வந்து நின்றது உயர்நீதிமன்றத்தின் உயர்வான உத்தரவு. சீமைக்கருவேல மரங்களை அடியோடு (இம்மக்களின் வாழ்வாதாரத்தை) அழிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். ஆம் அடியை விட்டால் கூட வளர்ந்து விடும் தன்மையது இம்மரம்.

குலசேகரன்பட்டிணம், ஆதியாக்குறிச்சி, மாதவன்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்களில் வீடு, காடு, கரையெல்லாம் முளைத்து, கருமேனி ஆறு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வளர்ந்து, காக்கை, குருவி கூடுகட்ட முட்களை கொடுத்து, ஆடு, மாடுகள் சாப்பிட உடங்காய் கொடுத்து (உடைமரத்தின் காய், பட்டர்பீன்ஸ் போன்ற வடிவத்தில் இருக்கும்) வாயில்லா ஜீவன்களுக்கும், வாயுள்ள மனிதர்களுக்கும் நிழலை வழங்கிய கற்பக விருட்சமாம் சீமைக்கருவேலம் என்ற உடைமரத்தை வெட்டித் தள்ளினார்கள் இவ்வூர் மக்கள். உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடந்தார்கள் இக்கிராம மக்கள். வெட்டச் சொன்ன உயர்நீதிமன்றம் அதற்கு மாற்றாக வேறு மரம் நட்டச் சொன்னதா என்றால் இல்லை. சாலைகளை சரிசெய்ய சட்டம் போடாமல், மக்களே ஹெல்மெட் போடுங்க என்று உத்தரவு மட்டும் போட்ட மாதிரி உயர்நீதிமன்றமும் இம்மக்களை கைவிட்டது.

               சரி எல்லாம் வெட்டியாச்சு. இனி மாற்று மரம் நட வேண்டாமா? நம்மூர் தண்ணிக்கு நட்டால்தான் வளர்ந்திடுமா? என்ற கேள்வி எழுந்தது மக்கள் மத்தியில்.

               ஏற்கனவே, பனையத்து (பனைமரங்களிலிருந்து பதனீர் எடுத்து கருப்பட்;டி காய்ச்சும் தொழில்) என்னும் பனைத்தொழில் மரம் ஏற ஆளில்லாமல் முடங்கிப்போனது. இன்னும் பலரும் தாது மணல் கம்பெனிக்கு தங்கள் விளையை (எதுவும் விளையாத காட்டுநிலம்) விற்றுவிட்டு மதுரையிலும், சென்னையிலும் மளிகைக்கடையோடு செட்டிலாகிவிட்டார்கள்.

               பொருளாதார ரீதியாக சீமைக்கருவேலம் என்ற உடைமரத்தை வெட்டும் தொழில்தான் தினசரி வேலைவாய்ப்பாக உள்ளது இக்கிராமங்களில்.

               வெட்டருவாளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி நாள் கணக்கில் உடைமரத்தை வெட்டி வணிகரீதியான பயன்பாட்டிற்காக லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள் இக்கிராமத்து உழைக்கும் வர்க்கத்தினர். டன் கணக்கில் உடைமரங்கள் வெட்டினாலும் சில நூறுகள் தான் கிடைக்கும் சம்பளம்.

               மழையின்றி சும்மா கிடக்கும் நிலத்தில், தானாக முளைத்து, நாட்டு உடைகளை விட வேகமாக வளர்ந்து, 5 வருடங்களில் சீமைக்கருவேல உடைமரக்கம்புகள் பலன் தரக்கூடியதாக உள்ளது. அதன் முட்களையே வேலியாகவும் பயன்படுத்துவதால் பாதுகாப்பு செலவும் மிச்சம்.

               அவ்வூர் மக்கள், உடைமரத்தை வெட்டி கைக்கம்பைக் கொண்டு (உடைமரத்திலிருந்தே செய்யப்படும் ஊக்கு போன்ற வடிவம் கொண்ட ஒரு நெம்புகோல்) லாவகமாக முட்கிளைகளை தூக்கிக்கொண்டு நடக்கும்போது, காலில் மாட்டியிருக்கும் முள் துளைக்காத எசலை மரத்தில் ( ஒருவகை முள்மரம்) தாங்களே செய்து கொண்ட செருப்பு தரையுடன் சேர்ந்து, புதிய சங்கீத ராகத்தை உருவாக்கும் திறன் பெற்றது. அந்த இசையைக்கேட்ட உழைக்கும் மக்களுக்கே அதன் அருமை தெரியும்.

               முன்பு பனைத்தொழில் இருந்தது. பனை ஓலையைக் கொண்டு பெட்டி முனைதல், பாய் முனைதல் என்று கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டிருந்தது. பெண்கள் இந்த வேலைகளை செய்து கொண்டே கிடைக்கும் வருமானத்தை சேமிப்பாக மாற்றினர். இன்று பனையில் ஏறி ஓலை வெட்ட ஆளில்லை. காடு, கரை வைத்திருந்த பலரும் பனையத்து தொழிலை விட்டுவிட்டதால், பனைமரங்களை வெட்டி விற்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். பனைமரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டன. இனி புதிதாக விதைத்தால் மட்டுமே எதிர்கால சந்ததிக்கு பனைமரம் காணக் கிடைக்கும். உடன்குடி கருப்பட்டிக்கு பேரும் பெருமையும் சேர்த்த தரம் வாய்ந்த பனைமரங்கள் இன்று நிலத்தில் இல்லை. வீட்டின் கூரைகளில், சில வீடுகளில் மட்டுமே பனைமரத்தின் பாகங்கள் எஞ்சி உள்ளது.

               எஞ்சியிருக்கும் ஒரே வேலைவாய்ப்பு உடைமரம் வெட்டுவதுதான். இக்கிராமங்களை நம்பி வெளியூருக்கு இடம்பெயராமல் அங்கேயே வாழும் மிச்சசொச்சம் மனித உயிர்களுக்கும் வாழ வழி செய்வது, இச்சமூகத்தின் கைகளில்தான் உள்ளது.

               சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும், குடிக்க தண்ணீரும், பிழைக்க வழியும் இல்லாத இக்கிராம மக்களுக்கு, அரசியல் சாசனத்தில் உள்ளபடி, வாழவழியும், வேலைவாய்ப்பும், குடிநீரும் வழங்க அரசாங்கத்துக்கு மனம் வருமா? என்றால் பதில் இல்லை என்றே வரும்.

               ஆனால், இதுபோன்ற கிராமங்களில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காக தமிழகம் முழுவதும் சென்று வாழ்ந்து வரும், உழைக்கும் மக்கள் ஒருசேர முயற்சித்தால், இக்கிராமங்கள் போன்ற இன்னும் பல கிராமங்களை மக்கள் கைவிட்டு அகதிகளாக நகரத்தை நோக்கி இடம்பெயரும் நிலையைத் தவிர்க்கலாம்.

               கிராமங்கள் வாழ தகுதியுள்ள இடங்கள். அதனை நகரங்களோடு போக்குவரத்து ரீதியாக மட்டுமே இணைக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து மொத்த மக்களையும் நகரத்திற்கே கொண்டு சேர்ப்பது என்பது தவறான நிர்வாகத்தின் விளைவாகும்.

               நாம் இன அழிப்பை பார்த்துவிட்டோம் இலங்கை, மியான்மர் மற்றும் பல நாடுகளில், அரசாங்கத்தை நிர்வகிப்பவர்களின் கையாலாகாத நிலையை பார்த்து விட்டோம் கன்னியாகுமரி ஒக்கிப்புயலின்போது, ஒரு தனியார் கம்பெனிக்காக 13 பேரை அரசே சுட்டதை இந்த உலகம் அறியும்.

               அழிப்பதில் ஆர்வம் காட்டும் அரசுகள், குடிமராமத்து, நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தினால், இதுபோன்ற கிராமங்கள் மீண்டும் வாழ்வாதாரம் பெறும். கிராமங்கள் வாழத்தகுதியற்றவை என்ற எண்ணம் ஆளும் அரசுகளின் அலட்சிய செயல்பாட்டால் உருவாக்கப்படுகின்றன. இந்த எண்ணங்கள் செயற்கையானவை, கிராமங்கள் இயற்கையானவை.

               இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்கள் உள்ளது என்பதை யார் சொன்னது என்று கேட்டால் ‘மகாத்மா காந்தி “ என்று பதில் வரும். உண்மைதான் முதுகெலும்பை முறித்துவிட்டால் உயிர் வாழ்க்கை கடினம்.

               சமீபத்தில் ஒரு கிராமத்தின் நுழைவுச்சாலையில் டிஜிட்டல் கிராமம் உங்களை வரவேற்கிறது என்ற வாசகம் பெரிய பேனராக வைக்கப்பட்டிருந்ததை பேருந்;து பயணத்தில் பார்க்க முடிந்தது. அக்கிராமத்தில் வங்கி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் அவ்வூர் மக்கள். எப்ப வேண்டுமானாலும் மெஷினில் பணம் போடலாம், எடுக்கவும் செய்யலாம் என்றனர் சிலர்.

அக்கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில், கழிவுநீர் செல்லும் பாதை மூடப்படாமல், அனைத்து மக்களும் முகத்தை மூடிக்கொண்டு பேருந்துக்காக காத்திருக்கும் நிலை. மழை வந்தால் பேருந்து நிறுத்தத்தில் நிற்க கூட இடம் இல்லை. கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை என்ற போர்டுடன் மூடப்பட்டுக்கிடந்தது. குடிதண்ணீர் எங்கும் இலவசமாக கிடைக்கவில்லை. ஆனால் அக்கிராமத்தில் டிஜிட்டல் கிராமம் என்ற போர்டு மட்டுமே செழிப்பாக பளபளத்துக் கொண்டிருந்தது.

               இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் கிராமங்களின் அவலநிலை. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையை அவல நிலை என்று தான் குறிப்பிட முடியும். ஆயிரம் டிஜிட்டல் மயங்கள் வந்தாலும் நம் அடிப்படைத்தேவைகளுக்கே நாம் அல்லாடும் நிலை நீடிப்பது வளர்ச்சி ஆகாது.

               இந்த கிராமங்களும் இந்தியாவில்தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- சுதேசி தோழன்

Pin It