நீங்கள் வல்லரசாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்லரசாக இருக்க, நாட்டு மக்கள் உணரத்தக்க வகையில் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்து வையுங்கள்.
"ஆணவமும் அதிகாரமும் உங்களையே சுட்டுச் சாம்பலாக்கி விடும்"
என்று ஒரு பேரரசுக்கு எதிராக வெகுமக்கள் கொதித்தெழுந்தது, காஷ்மீரில் அல்ல, ஹாங்காங்கில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆம், சீனாவின் ஆளுகையில் சுயாட்சி அதிகாரத்தோடு இருவாரங்களுக்கு முன் பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீரைப் போலவே ஹாங்காங்குக்கு எனத் தனிச்சட்டம் , தனிஆட்சி அடையாளத்தோடு மட்டும் இல்லாமல், தனி நாணயமும் என்று ஹாங்காங் சீனாவில் ஆளுகைக்குட்பட்டு தனிநாடாகவே இருந்து வருகிறது.
காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைத்த ஹரிசிங் மன்னன் போல், பிரிட்டன், சீனா இருநாடுகளும் மூன்றாண்டு பேச்சுவார்த்தையில் 1984இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், பிரிட்டன், ஹாங்காங்கை 99ஆண்டுகாலம் குத்தகை அடிப்படையில் ஆட்சி செய்து 1997இல் சீனாவிடம் ஒப்படைத்தது. சீனா சட்டதிட்டம் ஏதும் இல்லாமல் பிரிட்டன் சட்டத்தோடு அரை நூற்றாண்டு காலம் சுயாட்சியோடு இருக்கவும் , 2047இல் சீனத்தின் சட்டத்தோடு இணையவும் அந்த ஒப்பந்தத்தில் முடிவாயிற்று.
ஹாங்காங்வாசிகள், 80 விழுக்காட்டினர்க்கு மேல் சீனர்கள் என்றாலும், தங்களைச் சீனர்கள் என அழைத்துக்கொள்ளாமல், ஹாங்காங்கியர் என்றே அழைத்துகொள்கிற உளவியல் உருவாக்கம் பெற்ற தனித் தேசிய இனத்தவர்கள்.
அறிஞர் அண்ணாவின் மாபெரும் லட்சியமான, மாநில சுயாட்சி போல் சீனாவின் ஆளுகையில் மாநில சுயாட்சியாக ஹாங்காங் 22ஆண்டு காலம் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் இந்தியப் பேரரசு காஷ்மீர் 370சட்டப்பிரிவைச் சிதைத்தது போலவும், அதை எதிர்த்துப் போராடும் காஷ்மீரிகளை எவ்வித விசாரணையும் இன்றிக் கைது செய்வது போலவும், சீனா ஹாங்காங் குற்றவியல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவர முயன்றது..
நம் நாட்டின் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்திருத்தம், கொண்டுவரப்பட்ட ஜூலை 15, 2019க்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஹாங்காங்கில் குற்றவாளி அல்லது குற்றவாளி எனச் சந்தேகிக்கும் நபரை நாடு கடத்த, அதாவது சீனாவுக்குக் கொண்டுபோய் விசாரணை நடத்த, சட்டத்திருத்தம் ஹாங்காங் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
தன் நாட்டுக் குற்றவாளி அல்லது குற்றஞ்சாட்டப்பட்டோரை நாடு கடத்த அனுமதிப்பது, தன் நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தானது. அத்தோடு ஹாங்காங்கியர்களை, யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து நாடுகடத்த இச்சட்டம் வழிவக்கும் என்பதால், "ஒட்டுமொத்த நாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரானது இச்சட்டம்" எனக் கொந்தளித்த ஹாங்காங்கியர்கள், சீனாவுக்கும், ஹாங்காங்கின் சீனா பொம்மை அரசுக்கும் எதிராகக் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இந்தப் போராட்டம் இரண்டு மாதமாக நீடித்து வந்தாலும், கடந்த வாரம் வீக்கென்ட் என்ற வார இறுதிநாள் போராட்டத்தில் 17லட்சம் பேர் கலந்துகொண்டு, ஹாங்காங் விமான நிலையம். இரயில் நிலையம் என்று அனைத்தையும் முடக்கினர்.
ஹாங்காங்கியர்களின் வீரம் செறிந்த இந்தப் போராட்டம் உலகம் முழுக்க முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஹாங்காங்கின் ஆட்சி அதிகாரம் ஹாங்காங்கியர்க்கே என அம்மக்கள் சொன்னாலும், 1984இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிட்டன் சட்ட ஆட்சி முறை இன்னும் 28ஆண்டுகள் மட்டுமே ஹாங்காங்கில் இருக்கும்.
வரலாற்றில் ஹாங்காங் ஒரு நாடு இல்லை.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களைத் தங்கள் வணிக நோக்கத்திற்காக உருவாக்கியது போல் சீனாவில் ஹாங்காங்கை உருவாக்கினார்கள்.
இதில் காஷ்மீர் மொகலாய மன்னர் அக்பர் ஆட்சிக்கு முன்னும், ஆங்கிலேய ஆட்சியிலும் தனிநாடாக இருந்து, சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலமாக - சுயாட்சி மாநிலமாக - இருந்ததை, தந்திரத்தால் ஒரு மாநிலமாக கூட இருக்கவிடமால்,ஒரு மாநகராட்சியை போல் இந்துத்வா ஆட்சி செய்துவிட்டது.
ஒரு நகரமான ஹாங்காங், தன்னை ஒரு நாடாக அறிவிக்கப் போராடுவதும்.ஒரு தனிநாடாக இருந்த காஷ்மீர், மூன்று ஒன்றிய பிரதேசங்களாகச் சுருக்கப் பட்டதும் வரலாற்று அவலங்கள் .
இந்தியா, எளிதில் காஷ்மீரைச் சிதறடித்தது போல் , சீனா ஹாங்காங்கை நசுக்க முடியாது.
உலக முதலீட்டாளர்கள் உலகளாவிய வர்த்தக நகரமாக ஹாங்காங்கை ஆக்கியுள்ளனர் தங்கள் கள்ளப்பணத்தை அல்லது வருவானவரிக் கேள்விக்கு உட்படாமல் சேமித்துப் பாதுகாத்த பணத்தை, ஹாங்காங்கில் பதுக்கி வைக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஹாங்காங்கை, முழுமையாகச் சீனச் சட்டத்திற்குப்பட்ட நாடாக மாற்றினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் 1500க்கு மேற்பட்டவைகளின் கிளை அலுவலகங்களை வேறு நாடுகளுக்கு மாற்றும் நிலைவரும்.
ஹாங்காங்கை, சிங்கப்பூரைப் போல் தனிநாடாகப் பிரிந்துபோகச் சீனா ஒருபோதும் சம்மதிக்காது.
ஹாங்காங், சீனா விவகாரம் இந்தியா காஷ்மீர் போல உள்நாட்டுப் பிரச்சினை அன்று. அதில் அண்டை நாடுகள் தலையிடும். ஐக்கிய நாடுகள் சபையும் உள்ளே வரும்.
ஹாங்காங்கின் கட்டுப்பாடற்ற கார்ப்ரேட் வர்த்தகத்தினாலும். கட்டுப்பாடற்ற பிரிட்டன் சட்டமுறையினாலும், உலக வல்லாதிக்க நாடுகள் குரல்கள் ஹாங்காங்கிற்கு ஆதரவாக வலிமையாக ஒலிக்கும். இருநாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவை இவ்விடயத்தில் எச்சரிக்கும் போதே இதனை நாம் புரிந்து கொள்ளளாம்..
காஷ்மீரின் ஜனநாயகத்தை மதவாதத்தால் வீழ்த்தியது போல். ஹாங்காங் சுயாட்சி ஜனநாயகத்தை அடக்குமுறையைக் கொண்டு சீனாவால் வீழ்த்த முடியாது. உலக நாடுகள் ஒருபோதும் அதனை அனுமதிக்காது.
காஷ்மீரிலும், ஹாங்காங்கிலும் ஒடுக்கு முறைகள் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் காஷ்மீர் மக்களின் இன உரிமைக் குரலைக் காட்டிலும், ஹாங்காங்கின் பணவலிமையே உலக அரங்கில் உரத்துக் கேட்கும் என்பதுதானே எதார்த்தம்!