இந்தியாவிலுள்ள வெறும் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியை இலவசமாக வழங்கலாம் என்று ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு ஞாயிறன்று தொடங்கிய நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ வெளியிட்டுள்ளது. அதில் இதேபோல மேலும் பல விவரங்களை ஆக்ஸ்பாம் அளித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவிகிதம் அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது. பலரின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் 10 சதவிகிதம் பேருக்கு வெறும் ஒரு சதவிதம் கூடுதல் வரி விதித்தால் கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும். 98 சதவிகித பெரும்பணக்கார குடும்பங்களுக்கு சொத்துவரி விதித்தால், ஒன்றிய அரசின் மிகப்பெரிய காப்பீடுதிட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தேவையான நிதியை அடுத்த 7 ஆண்டுகளுக்கு வழங்க முடியும். சொத்துக்களில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. 142 பெரும்பணக்கார்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு ரூ. 53 லட்சம் கோடிக்கும் மேலாக (71900 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள 40 சதவிகித மக்களின்- அதாவது 55.5 கோடி பேரின் ஒட்டுமொத்த சொத்துக்கு இணையான சொத்தை (ரூ. 49 லட்சம் கோடி) வெறும் 98 பெரும்பணக்காரர்கள் மட்டும் வைத்திருக்கின்றனர்.

முதல் 10 இடங்களில் உள்ள பெரும்பணக்காரர்கள், தங்களிடமுள்ள பணத்தில் நாள்தோறும் 10 லட்சம் டாலர் (ரூ. 7.41 கோடி) என்று செலவு செய்தாலும் அவர்களின் சொத்துக்களை முழுவதும் செலவழித்து முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். இந்த 142 கோடீஸ்வரர்களுக்கு சொத்துவரி விதித்தால், ஆண்டுக்கு 7,830 கோடி டாலர் ஒன்றிய அரசுக்கு வருமானமாக கிடைக்கும். அதாவது, ஒன்றிய அரசின் சுகாதாரத்துக்கான செலவுக்கான தொகையை 271 சதவிகிதம் உயர்த்த முடியும். இந்தியாவில் உள்ள 10 சதவிகித பெரும்பணக்கார்களிடம்தான் நாட்டின் 45 சதவிகித சொத்துக்கள் இருக்கின்றன, மற்ற 50 சதவிகித மக்களிடம் வெறும் 6 சதவிகிதம் சொத்துக்களே உள்ளன.

ஒன்றிய அரசால் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு போதுமான அளவு செலவு செய்ய முடியாததால்தான், தனியார் மருத்துவமனைகள், கல்விநிலையங்கள் அதிகரித்துள்ளன. வருவாயை அதிகப்படுத்தவும், வரிவிதிப்பில் முற்போக்கான முறையையும், கோடீஸ்வர்களின் சொத்துக்களை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்புக்கு அதிகமான அரசு நிதியை திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் சமத்துவ மின்மையை குறைக்க முடியும், இந்த துறைகளை தனியார் மயமாக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரியை மீண்டும் விதித்து, அல்லது புதிய வரியை விதித்து வருவாயைப் பெருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் கல்வி, சுகாதாரம், ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதற்காக கோடீஸ்வரர்களிடம் தற்காலிகமாக ஒரு சதவிகிதம் மட்டும் வரி மட்டும் விதிக்கலாம். இந்திய பெரும்பணக்கார்கள் பட்டியலில் கடைசி 10 இடங்களில் இருப்பவர்களின் சொத்துக்களின் மதிப்பில் பாதிக்கும் குறைவான தொகையைத்தான் ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது.

இந்தியாவில் உள்ள 100 பெரும்பணக்காரர்களின் சொத்துக்களை வைத்து, தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்துக்கும், மகளிர் சுய உதவிக்குழுவுக்கும் அடுத்த 365 ஆண்டுகளுக்கு நிதியுதவி செய்ய முடியும். இந்தியாவில் 98 கோடீஸ்வர குடும்பங்களுக்கு 4 சதவிகிதம் சொத்துவரி விதித்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒன்றிய சுகாதார குடும்ப நலத் துறைக்கு நிதி வழங்க முடியும். இந்த 98 கோடீஸ்வர்களின் ஒட்டுமொத்த சொத்து மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பைவிட 41 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். கல்வியில் சமத்துவமின்மை குறித்து ஆய்வில், 98 கோடீஸ்வர்களின் மீது ஒரு சதவிகிதம் வரி விதித்தால், ஒன்றிய கல்வித்துறைக்கு தேவையான ஆண்டுச் செலவை சமாளிக்க முடியும். 4 சதவிகிதம் வரி விதித்தால், மதிய உணவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை அடுத்த 17 ஆண்டுகளுக்கு வழங்கலாம் என்று கூறுகிறது, அந்த ஆய்வு.

- விடுதலை இராசேந்திரன்

Pin It