கீற்றில் தேட...

[1939-1949 காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட சோவியத்து இந்தியவியலர்களில் முதன்மையானவர் ஏ.எம். தியாக்கோவ். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் 1952இல் சோவியத்து (குமுகியக் குடியரசுகள்) ஒன்றியத்தின் (USSR) கீழையியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் ”இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேசிய இனச் சிக்கல் பற்றி” தியாக்கோவ் எழுதிய கட்டுரை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் இந்தியாவின் தேசிய இனச் சிக்கல் குறித்து அவர் செய்த முகன்மையான ஆய்வின் முடிவுகள் இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன. தியாக்கோவின் கருத்துரைகளை இந்தியப் பொதுமை இயக்கம் பொருட்படுத்தாமல் விட்டு விட்டது. இப்போதும் கூட இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனச்சிக்கலைப் புரிந்து கொள்ள தியாக்கோவின் பார்வைகள் துணைசெய்யக் கூடியவை என்பதால் அவரது கட்டுரையை இங்கு தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.]

இந்திய ஒன்றியத்தில் தேசிய இனச்சிக்கல்

nehru 281புதிதாக நிறுவப்பட்டுள்ள இரு தன்னரசுகளான (டொமினியன்கள்) இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேசிய இனச் சிக்கல் பெரிதும் அக்கறைக்குரிய சிக்கல்களில் ஒன்றாகியுள்ளது. இந்திய ஒன்றியத்திலும் பாகிஸ்தானிலும் நிலக்கிழார்களும் குறுநில மன்னர்களும் முற்றுரிமை (ஏகபோக) முதலாளர்களும் சேர்ந்த பிற்போக்குக் கும்பல் அதிகாரத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியரது நேராளுகைக் காலத்திலேயே கூட, இந்திய முதலாளர் வகுப்பின் முற்றுரிமைக் குழுக்கள் எப்படியோ தமக்கென்று ஒருவகை உயர்நிலையைக் கைப்பற்றுவதில் வெற்றி கண்டு விட்டன. இந்தியாவில் முதலிய வளர்ச்சியின் குறிப்பான தனித்தன்மைகளின் காரணத்தால் நாட்டின் பெரிய முதலியக் குழுக்கள் (முதலியம் = முதலாளித்துவம் [capitalism]) இந்தியாவின் அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த முதலாளர்களின் முழுப் பேராளர்களாக இருக்கும் நிலை இல்லவே இல்லை. முதலிய வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் தேசிய முதலாளர்களின் முகன்மைப் பிரிவினர் பம்பாய் (மும்பை) முதலாளர் வகுப்பின் தரகுப் பிரிவிலிருந்து வெளிப்பட்டவர்களாகவே இருந்தனர்: அவர்கள் இந்திய குசராத்தியரும், குசராத்தியரோடு நடைமுறையளவில் கலந்து விட்ட பார்சிகளுமான முதலாளர்களின் பேராளர்களாக இருந்தனர். குசராத்தில் மட்டுமல்லாமல், பம்பாய் நகரத்திலும், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றின் மராத்தி வட்டாரத்திலும் கூட, அதே போல் பம்பாய் மாகாணத்தின் கன்னடப் பகுதிகளிலும் நெசவுத் (ஜவுளி) தொழிலின் ஒரு பெரும் பகுதி மேற்கூறிய முதலாளர் குழுவின் கையில் இருந்தது.

முதல் உலகப் போருக்குப் பிறகு இராஜஸ்தானத்தைச் சேர்ந்த மார்வாரி வட்டிக்காரர்களின் மூலமுதல் தொழில்துறைக்குள் பாயத் தொடங்கிற்று. தொடக்கக் காலத்திலிருந்தே இந்த வட்டிக்கார்கள் வங்கம் உள்ளிட்ட வட இந்தியா முழுவதிலும் முனைப்புடன் செயல்பட்டு, தெற்கே தக்காணத்தில் நுழைந்து தமிழ்ப் பகுதிகள் வரை சென்றடைந்தார்கள். அங்குதான் சற்றே வலுவான தமிழ்க் கடுவட்டி மூலமுதலால் அவர்களின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஒருசில விதிவிலக்குகள் நீங்கலாக கிட்டத்தட்ட எல்லா முற்றுரிமை முதலியக் குழுக்களுமே --- டாட்டா, பிர்லா, டால்மியா, சிங்கானியா, பட் போன்றவை யாவும் --- குசராத்தி அல்லது மார்வாரி மூலமுதல் அணிகளைச் சேர்ந்தவைதாம். சென்னை மாகாணத்தில் மட்டுமே, தமிழ் முதலாளர்களும், சற்றே குறைந்த அளவில் தெலுங்கு, கன்னட, மலையாளி முதலாளர்களும் வடக்கிலிருந்து முற்றுரிமைக் குழுக்கள் இப்படி ஊடுருவுவதை எதிர்த்தனர். குறிப்பான இந்த முற்றுரிமைக் குழுக்கள் இந்தியக் குறுநில மன்னர்களோடும் நிலக்கிழார்களோடும் பிரித்தானிய மூலமுதலோடும் மிக நெருங்கிய பிணைப்புடையவை ஆகும்.

இந்திய முதலாளர்களின் முற்றுரிமைக் குழுக்கள் இந்திய அங்காடி முழுவதையும் கைப்பற்றிக் கொள்வதில் அக்கறை கொண்டவை. இந்திய முதலாளர்கள் பெருமளவுக்கு இந்தியாவின் இரு தேசிய இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை ஓரளவு பரந்த தன்னாட்சிக்கான இந்திய மக்களினங்களின் போராட்டத்துக்கு உரமூட்டுகிறது.

உறுதியாகச் சொல்லலாம்: பிரித்தானியர் இந்தியாவை மத அடிப்படையில் பிரித்த போது, இந்திய முதலாளர்கள் தமது நலன்களையே மனத்திற்கொண்டு அந்தப் பிரிவினையையும் எதிர்த்தார்கள், ஒன்றுபட்ட (அகன்ற) இந்தியாவுக்கான இயக்கத்தை ஆதரித்தார்கள், புரட்சிக்கு அஞ்சியே நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொண்டார்கள். முதலில் நாட்டைப் பிரிக்காமல் இந்தியாவுக்கு விடுமை (சுதந்திரம்) வழங்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதால்தான் அவர்கள் மவுண்ட்பாட்டன் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு, இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்து விட்ட நிலையிலும், இந்தக் குழுக்களின் நலன்களுக்குப் பேராளர் (பிரதிநிதி) என்ற முறையிலும், நிலக்கிழார்கள், குறுநிலமன்னர்கள் ஆகியோருடன் சேர்ந்து தனது 1920ஆம் ஆண்டுத் தேசியத் திட்டத்தையே நிறைவேற்ற மறுத்தது. மொழிகளின் அடிப்படையில் மாகாணங்கள் என்பவற்றை அமைப்பது பெருமுதலாளர்களுக்கோ குறுநில மன்னர்கள் மற்றும் நிலக்கிழார்களுக்கோ நலம்பயப்பதாகாது. மராத்தியரும் தெலுங்கர்களும் வங்காளிகளும் ஒரியர்களும் கன்னடர்களும் மற்றவர்களுமான வலுக்குன்றிய தேசிய முதலாளர்களிடமிருந்து எழும் போட்டி குறித்து இந்திய முற்றுரிமை முதலாளர்கள் அச்சப்பட்டார்கள் என்பதே காரணம். இந்தியப் பெருமுதலாளர் வகுப்புக்கும், குறுநில மன்னர்களுக்கும் நிலக்கிழார்களுக்கும் தெரியும்: ’மொழிவழி’ மாகாணங்களில், அதாவது தேசிய மாகாணங்களில் தன் முகவர்களின் – தேசிய காங்கிரஸ் தலைமையின் – சமூக அடித்தளம் குறுகியதொன்று என்பது. ஏனென்றால் இந்த இடங்களில் கூடுதல் குடியாட்சிய (ஜனநாயக) இயல்பு கொண்ட கூறுகள் வலுக்கூடியுள்ளன என்பதால் டாட்டா, பிர்லா, வகையறாவுக்கு ஏற்ற கொள்கைகளை நிறைவேற்ற மாட்டா. வலுமிக்கதோர் உழவர் இயக்கமும் தேசிய இன இயக்கமும் இந்த மாகாணங்கள் பலவற்றிலும் பரந்த தேசியத் தன்னாட்சியும் பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரமாக்குவதற்கு இன்னும் தோதான நிலைமைகளைத் தோற்றுவிக்கும்.

ஆகவே இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்தவுடனேயே 1945இல் வெளியிடப்பெற்ற தன் தேர்தல் அறிக்கையை ஒதுக்கித் தள்ளி விட்டு, மொழிவழி மாகாணங்கள் என்பவற்றைத் தோற்றுவிப்பது குறைந்தது 10 ஆண்டு காலம் தள்ளி வைக்கப்படும் என்று அறிவித்தது.

1948 ஜூலையில் இந்திய அரசமைப்புப் பேரவையின் தலைவர் இராஜேந்திர பிரசாத் ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், கேரளம் ஆகிய ’மொழிவழி’ மாகாணங்களிலான தேசிய இயக்கத்தின் அழுத்தத்தால் ஓர் ஆணையத்தை அமைத்தார் – சிக்கலை ஆராய்வதற்கென்று சொல்லிக் கொண்டாலும், சிக்கலைப் புதைப்பதே உண்மை நோக்கம். 

1948 திசம்பரில், ஜெய்ப்பூரில் நடந்த தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மேற்கூறிய இந்திய வட்டாரங்களின் பேராளர்கள் தந்த அழுத்தத்தால் ’மொழிவழி மாகாண’ச் சிக்கலை’, அதாவது இந்தியாவின் ஆட்சிப் பிரிவுகளை மீள்கட்டமைப்புச் செய்யும் சிக்கலை ஆராய்வதற்காக ஓர் உட்குழு அமைக்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே, உட்குழு 1949 ஏப்ரலில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தேசிய இன மாகாணங்கள் அமைக்க முடியாதென்று தீர்மானித்தது. இந்த முடிவுக்குச் சொல்லப்பட்ட காரணம் ’அரசதந்திர’ வடிவில் தரப்பட்ட போதிலும் இந்தியாவில் ’மொழிவழி’, அதாவது தேசிய இன மாகாணங்கள் அமைக்க ஆட்சியாளர்கள் மறுப்பதன் உண்மைக் காரணத்தை வெளிப்படுத்துகிற அளவில் கருத்துக்குரியது. இந்திய தேசிய காங்கிரசின் பழைய கொள்கை ‘மொழிவழி’ மாகாணங்கள் அமைப்பதற்கு ஆதரவாக இருந்தது என்றாலும் அப்போது அதற்கொரு நியாயம் இருந்தது, ஏனென்றால் இந்தக் கொள்கையைச் செயலாக்கும் கேள்வி அந்தக் கட்டத்தில் செயல்திட்ட நிரலில் இல்லை என்று உட்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டிற்று. காங்கிரஸ் திட்டம் வெறும் வாய்வீச்சுதான் என்று உட்குழுவே ஒப்புக் கொள்கிறது என்பதே இதன் பொருள்.

மேலும், இந்தியாவின் இப்போதைய மாகாணங்கள் செயற்கையானவை என்றாலும், நீண்ட காலமாய் இருந்து வருவதால் ஒருவிதமான நிலைத்தன்மையை ஈட்டி விட்டன, எனவே அவற்றின் எல்லைகளைக் கலைப்பது விரும்பத்தக்கதன்று என உட்குழு சொல்கிறது. இந்த வாதுரை ஒரு காலத்தில் இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராகக் கடைந்தெடுத்த பிரித்தானிய வல்லரசியர் (ஏகாதிபத்தியர்) தொடுத்த கந்தல் முடிவுகளையே திருப்பிச் சொல்கிறது. ஆனால் உட்குழு இந்த வாதுரையை மைய வாதுரையாகக் கருதவில்லை. தேசிய மாகாணங்கள் அமைப்பதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முதன்மையான வாதுரைகள் பின்வருமாறு:

இந்தியாவைப் பிரித்ததே அதனளவில் பிரிவினைப் போக்குகளைத் தோற்றுவித்தது; தேசிய மாகாணங்கள் அமைப்பது இந்தப் போக்குகளை வலுவாக்கும்; ஏனென்றால் பல தேசிய இன வட்டாரங்களில் ’சீர்குலைவு’ ஆற்றல்கள் இயங்கி வருகின்றன.

இந்தியாவால் பொருளியல் தற்சார்பைச் சாதிக்க இயலவில்லை என்று உட்குழு அறிந்தேற்கிறது. ஆனால் இந்த வரம்புக்குட்பட்ட (அழுத்தம் எனது – தியாக்கோவ்) தற்சார்பை (சுதந்திரத்தை) காக்கும் பொருட்டு இந்தியாவை வலுவாக்க வேண்டிய தேவையுள்ளது;

மொழி என்பது இணைக்கும் கருவி மட்டுமன்று, மக்களினம் ஒன்றைப் பிறிதொன்றிலிருந்து பிரித்து வைக்கும் தடையுமாகும் என்பதை மனத்திலிருத்த வேண்டும்;

ஆந்திரம், கேரளம், மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய புதிய மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்டால் சமஸ்தான அரசுகள் கலைக்கப்படுவதில் போய் முடியும். இது மோசமான முற்காட்டாகி விடும். ஏனென்றால் சமஸ்தான அரசுகள் பற்றிய சிக்கலை வேறு வழிகளில் அணுகி வருகிறோம். இவ்வாறு ‘மொழிவழி மாகாணங்கள் அமைப்பதைக் குறைந்தது 10 ஆண்டுக் காலம் ஒத்திப்போட வேண்டும்.

ஆட்சியாளர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையும் இந்தியாவின் ஆட்சிப் பிரிவினையை மீள்கட்டமைப்புச் செய்ய விரும்பாமைக்கான காரணங்கள் இங்கே தெள்ளத் தெளிவாகின்றன.

இப்படியொரு மீள்கட்டமைப்பு எவ்விதமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லக் கூடும் என்பதை நிலக்கிழார்களும் குறுநில மன்னர்களும் முற்றுரிமை முதலாளர் குழுக்களும் சேர்ந்த பிற்போக்குக் கூட்டணி அறிந்துள்ளது. வட்டாரங்கள் பலவற்றிலும் சீர்குலைவு ஆற்றல்கள் செயல்பட்டு வருகின்றன என்று, அதாவது மக்களினங்களின் வலுவான இயக்கம் இருந்து வருவதை, உட்குழு போதிய அளவு தெளிவாக்குகிறது. இந்தியா பொருளியல் வகையில் பிரித்தானிய வல்லரசியத்தைச் சார்ந்திருப்பதை அறிந்தேற்கும் உட்குழு, இதனைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறது. உட்குழுவின் வாதுரைகளிலிருந்து தெளிவாகும் உண்மை என்னவென்றால், விரிவான தன்னாட்சி கொண்ட மாகாணங்கள் அமைவதில் குறுநில மன்னர்களுக்கும் நிலக்கிழார்களுக்கும் பெருமுதலாளர்களுக்கும் அக்கறை இல்லை என்பதே. அதிகாரத்துக்கு வந்து விட்ட இவர்கள் இந்திய மக்களுக்கு எவ்வித வளர்ச்சியும் வேண்டுமென விரும்பவில்லை. அவர்களை அடிமைப்படுத்தவே முயன்று வருகிறார்கள். பிரபுத்துவ சமஸ்தான அரசுகள் ஒழிக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை.

இந்த முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுகள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்காக திருவிதாங்கூரின் தலைநகரத்தில் நடந்த விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சீதாராமையா கலந்து கொண்டார். இந்த ஒன்றுபட்ட சமஸ்தான அரசில் சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தை சேர்த்து ஐக்கியக் கேரளம் அமைக்க அங்கே முடிவெடுக்கப்பட்டது. சீதாராமையா இந்த ஒன்றிணைப்பை எதிர்த்துப் பேசவே இல்லை. ஆனால் மலபாரிலும் அந்த இரு சமஸ்தானங்களிலும் வெகுமக்கள் இவ்வாறான ஒன்றிணைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சமஸ்தான அரசுகளை ஒழித்து ஐக்கிய கேரளத்தைத் தோற்றுவிக்கக் கோரினார்கள்.

இந்தியக் குறுநில மன்னர்களும் பெருநிலக்கிழார்களும் ஆட்சியாளர்களின் தேசிய இனக் கொள்கையை முழுமூச்சாக ஆதரிக்கின்றார்கள். ‘மொழிவழி’ மாகாணங்கள் அமைக்கப்படுவது சமஸ்தான அரசுகள் தொடர்வதற்கு அச்சுறுத்தலாவதைத் தவிர்க்கவியலாது. இவ்வாறு, குறுநில மன்னர்கள் இந்த வழிமுறைகளின் செயலாக்கத்தை அழுத்தமாக எதிர்க்கின்றனர்.

 (தொடரும்)

- ஏ.எம்.தியாக்கோவ்