கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேர்தல் முடிவுகள் எந்தவிதமான அதிர்ச்சியையும் தரவில்லை. நிச்சயம் பாசிச சக்திகள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். வட மாநில மக்களின் அரசியல் அறிவு பற்றிய நம்முடைய கருத்தும் கூட பெரும்பாலும் பொய்த்துப் போய்விடவில்லை. மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்தாளும் பிஜேபியின் சூழ்ச்சிக்கு ஏற்ற களமாக வட மாநிலங்கள் எப்போதுமே உள்ளன. தீவிரமான சாதிவெறியும், மதவெறியும், மூடப் பழக்க வழக்கங்களும் கொண்ட வடமாநில மக்கள் இயல்பாகவே பிஜேபியின் பிற்போக்குவாத அரசியலுடன் தங்களை இயல்பாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேர்கள் வடமாநிலங்கள் முழுவதும் ஆழமாக இறங்கியுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் அதிகமாக வாழும் குஜராத் போன்ற மாநிலங்களில் கூட பிஜேபியால் பெரும்பான்மையாக வெற்றி பெற முடிந்திருக்கின்றது என்பதற்கு அதுவே காரணம்.2019 election result

தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் பிஜேபியின் சாதிய, மதவாத அரசியலை தீவிரமாக சித்தாந்த தளத்தில் எதிர்கொள்ள வலுவான முற்போக்கு இயக்கங்கள் இல்லாத நிலை பிஜேபியின் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக சாதகமாக உள்ளது. தமிழகத்தில் திமுக பெரும்பான்மையான இடங்களை இன்று பெற்றிருப்பதற்கு முழுக் காரணமும் இங்குள்ள முற்போக்கு இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியின் பாசிச அரசியலை வீச்சாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து, மக்களை எதிர் பிஜேபி மனநிலைக்கு மாற்றி வைத்திருந்ததே காரணமாகும். அதைத்தான் தற்போது திமுக அறுவடை செய்திருக்கின்றது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் எந்தவித நிபந்தனையும் இன்றி திமுகவை ஆதரித்தார்கள். நமக்குத் தெரிந்து பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் வலிய வந்து திமுகவிற்கு வாக்கு சேகரித்தார்கள். இவை அனைத்தும் திமுக மீதுள்ள நம்பிக்கை என்பதைத் தாண்டி தமிழகத்தில் எந்தவகையிலும் பாசிச பிஜேபியோ, இல்லை பிஜேபியை ஆதரிக்கும் கட்சிகளோ வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

பிஜேபியின் இந்த அசுரத்தனமான வெற்றி நிச்சயம் மோடி என்ற தனிமனிதருக்குக் கிடைத்த வெற்றி என்று நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது, அப்படி மதிப்பிடுவதற்கு மோடி இந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு எந்த உருப்படியான திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்பதோடு, அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த ஒரு ஆட்சியையே மோடி இந்திய மக்களுக்குத் தந்தார். பெரும் வேலை இழப்புகளும், விலைவாசி உயர்வும், விவசாயிகள் தற்கொலைகளும், வங்கி மோசடிகளும், ஊழல்களும் எந்த வகையான எதிர்ப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. அப்படி என்றால் மோடியின் அராஜக ஆட்சியை இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா என்றால், அவர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. முதலாளித்துவம் பார்ப்பனியத்துடன் கரம்கோர்த்து மக்களை சித்தாந்த ரீதியாக பாசிசத்தை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கின்றது. சாதிக்கு அடிமையாகவும், மதத்திற்கு அடிமையாகவும், கடவுளுக்கு அடிமையாகவும் இருக்கும் ஒருவன் இயல்பாகவே முதலாளிக்கும் அடிமையாக இருக்கின்றான். இன்று இந்திய மக்களில் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பன அடிமைகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதைத்தான் மோடியின் வெற்றி காட்டுகின்றது.

மோடியின் வெற்றியை மதிப்பிடும் நாம் இந்தத் தேர்தலில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம், இடதுசாரிகளின் படுதோல்வி. கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அந்தக் கட்சி ஒரு தொகுதியைக்கூட பெற முடியாத அளவிற்கு படுதோல்வி அடைந்திருக்கின்றது. அங்கே பிஜேபி தனித்த செல்வாக்கு பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது. திரிபுராவில் மொத்தமிருக்கும் இரண்டு தொகுதிகளையும் பிஜேபியே கைப்பற்றி இருக்கின்றது. அதே போல கேரளத்திலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே சிபிஎம் வெற்றி பெற்றிருக்கின்றது. பிற தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கின்றது . பினராயி விஜயன் போன்ற கவர்ச்சிமிக்க தலைவர்கள் இருந்தும் கூட கம்யூனிஸ்ட்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது கம்யூனிஸ்ட் கட்சி பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது. பாசிசத்தின் பிரமாண்டமான எழுச்சியில் பாட்டாளி வர்க்கக் கட்சி அடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றது. இவ்வளவு கடுமையான நெருக்கடி நிலையில் கூட மக்கள் கம்யூனிஸ்ட்களை விரும்பவில்லை என்பது அவர்களின் ஒட்டுமொத்த அரசியல் வியூகங்களையே கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. சென்ற முறை அடைந்த தோல்வியில் இருந்து அந்தக் கட்சி எந்தவகையான படிப்பினைகளையும் பெற்றுக் கொண்டதுபோல் தெரியவில்லை.

இந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி மண்ணைக் கவ்வி இருக்கின்றது. குறிப்பாக சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் அந்தக் கட்சி தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் சொற்ப எண்ணிகையிலான வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. சீமானின் பொய்யையும், புரட்டையும், இரட்டை நாக்குப் பேச்சையும் மக்கள் நம்பவில்லை என்பதையே இது காட்டுகின்றது. சீமான் இந்த மலிவான உத்தியையே இனியும் கடைபிடிப்பாரானால் கூடிய விரைவில் தமிழக மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு அரசியால் அநாதையாக மாற்றப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றபின், மக்களின் மீது அக்கறை வந்து கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யமும் படுதோல்வி அடைந்திருக்கின்றது. இந்தத் தோல்வி அரசியலுக்கு வர காத்துக் கொண்டிருக்கும் ரஜினி தாத்தாவுக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். அதே போல தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று சொல்லிக் கொண்டிருந்த மன்னார்குடி மாஃபியா கும்பலையும் இந்தத் தேர்தலில் மக்கள் தோற்கடித்து இருக்கின்றார்கள்.

bjp aliance 2019இந்தத் தேர்தலில் மகிழ்ச்சியான செய்தி என்றால் அது தமிழ் மக்களிடம் சாதிவெறியைத் தூண்டிவிட்டு அவர்களை தலித் ம‌க்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடத் துடித்த நச்சுக் கிருமியான பாமக அன்புமணி தோற்றதாகும்.

திமுகவிற்கு மக்கள் கொடுத்த இந்த வெற்றியின் மூலம் அவர்கள் திமுகவிடம் இருந்து எதிர்பார்ப்பது தமிழ்நாட்டின் மீது பாசிச பாஜக திணித்திருக்கும் நாசகாரத் திட்டங்களை தடுத்தி நிறுத்தி, தமிழகத்தின் சூற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

13 பேரை ஸ்டெரிலைட் கம்பெனிக்காக சுட்டுக் கொன்ற அதிமுக கும்பலை 9 சட்டப்பேரவை தொகுதிகளில் மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கின்றார்கள் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கின்றது. ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றார்கள்.

மத்தியில் பாசிசம் அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருப்பதால் முற்போக்கு இயக்கங்களின் பணிச்சுமை இன்னும் பல மடங்கு கூடி இருக்கின்றது. இதுவரை முற்போக்கு இயக்கங்கள் இந்த மண்ணில் கட்டமைத்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபு, சாதிய, மதவாத, இனவாத பாசிச சக்திகள் அனைத்தையும் வெற்றி கொள்ள உதவி இருக்கின்றது. தமிழகம் இன்று இந்தியாவிற்கே பார்ப்பன பாசிச எதிர்ப்புக்கு வழிகாட்டி மாநிலமாக மாறியிருக்கின்றது. இதை ஒரு முன்னுதாரணமாக வைத்து மற்ற மாநிலத்தில் உள்ள அரசியல் இயக்கங்களும் தங்கள் மாநிலத்தில் பார்ப்பன பாசிசத்தை சித்தாந்த ரீதியாக எதிர்த்து நிற்கும் அமைப்புகளை உருவாக்கி அதைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அப்படி செய்வதால் மட்டுமே மக்களின் மனங்களில் வேர்பிடித்து இறங்கியிருக்கும் சாதிய மதவாத பிற்போக்கு கருத்தியல்களை அழித்தொழிக்க முடியும். இது மட்டுமே பிஜேபியை தோற்கடிப்பதற்கான ஒரே வழி.

- செ.கார்கி