என் மீது பாசத்தைப் பொழியும் தமிழ் மக்களே! உங்களுக்கு நான் கேரண்டி தருகிறேன். ஒன்றல்ல; இரண்டல்ல; வண்டி வண்டியாக….
- ‘நீட்’டை திரும்பப் பெற மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி
- வெள்ளம் வந்தால் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி
- வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட தர மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி
- மெட்ரோ ரயில் திட்டமா? எங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் தந்தார்களா? கவலைப்படாதீர்கள். அதற்கு நிதி ஒதுக்காமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வராது. இப்போது அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது ஒரு நாடகம். கவலைப்படாதீங்க, அடுத்தக்கல்லு வராமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி
- கிராமப்புற வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காமல் முடக்கிப் போடுவதற்கு நான் கேரண்டி
- அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறைகளை எங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மட்டுமே ஏவி விடுவோம். இதற்கு நான் கேரண்டி.
- மருத்துவ, பொறியியல் படிப்புகளில் கிராமப் புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீங்கள் கொண்டுவந்த போது பதறிப் போனேன். ஆளுநர் புரோகித்திடம் ஒப்புதல் தர வேண்டாம் என்று உத்தரவிட்டு தடுத்தோம். அப்படியும் எங்களை மீறி அமுலுக்கு வந்து விட்டது. நம்புங்கள், அந்த இட ஒதுக்கீட்டை ஒழித்தே தீருவோம், இதற்கு நான் கேரண்டி.
- நீங்கள் உங்கள் செலவில் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் எங்கள் கோட்டாவை பறித்துக் கொண்டு இட ஒதுக்கீடே இல்லாமல் நிரப்புவோம். இதற்கும் நான் கேரண்டி. உச்சநீதிமன்றம் போய் உங்கள் முதல்வர் ஸ்டாலின், நாங்கள் மறுத்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவந்துவிட்டார். கொடுமையினும் கொடுமை, இதை ஒழிப்பதற்கு ‘ராமபிரான்’ சத்தியமாக நடவடிக்கை எடுத்தே தீருவோம். அதற்கு நான் கேரண்டி.
- தமிழ்நாட்டு அரசுக்கு தெரியாமல் ரகசியமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக பலத்திட்டங்களை தந்திருக்கிறோம் என்று வாய் கூசாமல் பொய் பேசுவேன். நாங்கள் தரும் திட்டங்களை உங்கள் மாநில ஆட்சி அமுல்படுத்தவில்லை என்று துணிவோடு பொய்களை அவிழ்த்து விடுவேன். அப்படி வீரதீரத்துடன் பொய்களை அவிழ்த்துவிடும் துணிச்சல் 56 அங்குல மார்பு கொண்ட எனக்கு மட்டுமே உண்டு. அதற்கு நான் முழு கேரண்டி.
- பெண்களுக்கு உங்கள் ஆட்சி தரும் திட்டங்களை, உரிமைகளை ‘இலவசம்’ என்று கேலிப் பேசுவேன். அதே திட்டங்களை மாநில தேர்தலுக்காக எங்கள் கட்சியின் அறிக்கையில் உறுதி கூறி வாக்கு கேட்போம். இந்த இரட்டை வேடத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி.
- ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியை உடைத்து சிதைத்து, மிரட்டி எங்கள் கட்சிக்குள் விழுங்கி ஏப்பம் விட திட்டமிட்டு காய்களை நகர்த்தினோம். பிறகு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி அதிமுகவினர் காதில் பூசுற்ற ஆரம்பித்துள்ளோம். இந்த ‘தில்லுமுல்லு, திருட்டுத்தனங்களுக்கு எங்களால் மட்டுமே கேரண்டி தர முடியும்.
- ஆளுநர் ரவி பாஜகவின் பேச்சாளராக, ஆர்.எஸ்.எஸ் தூதுவராக உறுதியாக செயல்படுவார். பதவியை விட்டு ஓடும்வரை இருப்பார் என்பதற்கு நான் கேரண்டி.
- இன்னும் எவ்வளவோ கேரண்டிகள் கைவசம் உண்டு; ‘வாரண்டி’ இல்லாத கேரண்டி.
- வாங்க வாங்க வாக்களித்து எங்கள் கேரண்டிகளை உறுதிப்படுத்துங்க
‘பாரத் மாதா கி ஜே, ஏமாளி டமிழர்களே’
- கோடங்குடி மாரிமுத்து