2019-ம் ஆண்டில் நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் வந்திருக்கும் முடிவுகளும், தென்இந்தியாவில் இருந்து – கர்நாடகம் தவிர்த்து – வந்திருக்கும் தேர்தல் முடிவுகளும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள், அதன் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்கள் மட்டுமே உண்மையான இந்தியா என்று கருதும் தேசிய கட்சிகளின் கருத்தை உறுதிப்படுத்துவதாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன.

Modi and Amit Shahகடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய இந்தி பேசும் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு நேர் மாறாக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாரதிய ஜனதா கட்சியோ தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் இந்த வெற்றி அனைவரின் புருவத்தையும் உயர்த்தி விட்டது.

எதிர்க் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே சொன்ன வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்ற சந்தேகத்தை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், அதை வைத்துக் கொண்டு பாஜக‌ வெற்றிக்கான காரணத்தைப் பற்றி விவாதிக்க முடியாது என்றால், வேறு எதை வைத்துப் பரிசீலித்து நாம் புரிந்துகொள்ள முடியும்?

அதிலும் காங்கிரஸ் கட்சி, தான் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சியின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர் தமது வாழ்வாதாரத்தை இழந்தது ஆகிய பிரச்சனைகளால் பாஜக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபத்தின், வெறுப்பின் வெளிப்பாடாக மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், நாடு முழுக்க நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் வெளிப்பட்டதாக அப்போது அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தன்னால் உருவாக்கப்பட்ட, மக்களின் இந்தக் காயங்களுக்கு பாஜக அரசு அப்படி என்னதான் மருந்து கொடுத்து அவற்றை சரி செய்து விட்டது! தான் ஏற்படுத்திய காயத்திற்கு மருந்திடுவதற்குப் பதிலாக அந்தக் காயங்களை, தான் உருவாக்கியது நியாயமானது தான் என்று உறுதியாகக் கூறியது மட்டுமல்லாது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று மேலும் அவற்றைத் தீவிரப்படுத்தவும் செய்தது. மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றியோ இடைத்தேர்தல் முடிவுகள் பற்றியோ அப்போதே பாஜக சிறிதும் கவலைப்படவில்லை.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவில்லை என்றால் அப்படி என்னதான் மக்களின் மனதை கனப்பொழுதில் மாற்றிடும் மந்திரத்தை அது வைத்திருந்தது? தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய ராணுவ வீரர்கள் மீதான புல்வாமா தாக்குதல், இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட் தீவிரவாத முகாம்களின் மீது துல்லிய தாக்குதல் ஆகியவற்றின் மூலம் தேசப்பாதுகாப்பு என்ற அம்புதான் வட இந்திய மக்களின் மனதை கனப்பொழுதில் மாற்றிய மாய மந்திரமா?

பாரதிய ஜனதாக் கட்சி கையில் எடுக்கும் தேசப் பாதுகாப்பு என்ற கூச்சலையும், அப்படியே அதை வழிமொழியும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறுவதைப் போல பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளால் தேசப் பாதுகாப்பு என்பது உண்மையாகவே பாதுகாப்பற்ற நிலையில்தான் மாறிவிட்டதா? தனி நாடாக்கக் கோருவோரும் அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கக் கோருவோரும் அவ்வளவு வலிமையான ராணுவ பலத்தை கொண்டவர்களா என்ன? இந்தியாவிற்கு இணையான அணு ஆயுதங்களையும் பல்வேறு நவீன ரக ஏவுகணைகளையும் வைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தையே கண்டு சிறிதும் கவலைப்படாத இவர்கள், இத்தீவிரவாதிகளால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது?

இவர்களே கூறுவது போன்று ஊடுருவல்காரர்களால் மிக சொற்பான தாக்குதல்களை மட்டுமே நிகழ்த்தவும் முடியும். உலகத்தில் உள்ள மிகப் பெரிய ராணுவ சக்திகளில் ஒன்றான இந்திய இராணுவத்தோடு ஒப்பிடும்போது கடுகளவு பலத்தைக் கூடப் பெற்றிராத பலவீன சக்திகளால் தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்து வந்து விட்டது என்ற பாரதீய ஜனதாவின் கூச்சல் மக்களின் வாழ்விலும், சிந்தனையிலும் உண்மையிலேயே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வலிமையான ஆற்றலை உள்ளடக்கியதா என்ன?

நாடு முழுக்க விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிவிடும் காரணிகளை விட தேசப் பாதுகாப்பு என்ற பாஜகவின் கூப்பாடு வலிமையானதா? பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் தனது வாழ்வாதாரத்தை இழந்த சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோரும், இத்தொழில்களை நம்பி வாழ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தையும் பறித்த காரணிகளை விட தேசப் பாதுகாப்பு என்ற காரணியை வலிமை மிக்கதாக இவர்களால் கருத முடியுமா? அப்படி கருதியிருந்தால் அது தென்மாநில விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளிகளிடம் ஏன் சென்றடையவில்லை?

சரி, இவர்கள் கூறும் தீவிரவாதிகளால் தேசப் பாதுகாப்பிற்கு உண்மையிலேயே அச்சுறுத்தல்கள் வந்து விட்டது என்றால், இந்தியாவில் உள்ள எந்த தேசத்திற்கு அச்சுறுத்தல் வந்துவிட்டது? இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று அங்கு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அந்நாட்டு அரசை எச்சரித்த இந்திய உளவுத்துறை உள்நாட்டில் நடக்கப்போகும் தீவிரவாதத் தாக்குதலை முன்னரே கணிக்க முடியாமல் போனது ஏன்? இந்திய ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏராளமான சோதனைச் சாவடிகளைக் கடந்து, ஒரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் ஊடுருவியது எப்படி? இப்படியான வினாவிற்கு பதில் கூறாமல், தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசு மறுத்தது. இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாக கூறிய பாலக்கோட் பகுதியை சர்வதேசப் பத்திரிக்கையாளர்களை நேரில் அழைத்துச் சென்று காட்டியது. இந்தியா கூறியது பொய்யான தகவல் என்றும் அறிவித்தது.

அமெரிக்கா, தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த மட்டுமே அளித்த விமானங்களை ஒப்பந்தத்தை மீறி அவ்விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி, இந்தியாவைத் தாக்க முயன்றதாகவும், அப்படி அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் விமானம் ஒன்றை விரட்டிச் சென்று இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும், அப்படி சுட்டு வீழ்த்திய விமானத்தின் பாகங்களை தாம் வைத்திருப்பதாகவும் இந்தியா கூறியதை பாகிஸ்தான் மறுத்தது. பாகிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்காவே நாங்கள் அளித்த அத்தனை விமானங்களும் பாகிஸ்தானிடம் பத்திரமாக உள்ளன; இந்தியா அந்த விமானங்களில் எதையும் சுட்டு வீழ்த்தவில்லை என்று கூறியிருக்கிறது. அப்படியானால் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இம்மூன்று நாடுகளில் யார் கூறியது உண்மை அல்லது பொய்யான தகவல்? இந்துத்துவா வேதங்கள் கூறுவதை எப்படி கேள்வி கேட்க முடியாதோ, அதேபோன்று அதை பாதுகாப்பதற்கென்றே அவதாரம் எடுத்துள்ள பாரதிய ஜனதா கட்சி கூறுவதையும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும் அவர்களுக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது.

ஏரியில் உள்ள நீர் வெய்யலில் ஆவியாகாமல் இருப்பதற்காக அந்த நீரின் மீது தெர்மாகோல் அட்டைகளைப் போட வைத்த புத்திசாலி தமிழக அமைச்சர் செல்லூர் ராஜீ தொடங்கி இப்படி அறிவுப்பூர்வமான புதிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவரும் தமிழக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் கூறியதற்கும், இவர்களின் டாடியும், இந்தியாவின் பிரதமருமான மோடி அதிபுத்திசாலிதனமாக, பாகிஸ்தான் பாலக்கோட் பகுதியில் மேகக் கூட்டம் திரண்டிருந்த சரியான தருணத்தில் ரேடார் கண்களில் படாமலிருக்கும்போதே உடனடியாக துல்லிய தாக்குதல் நடத்த, இந்திய விமானப் படைக்கு தான் உத்தரவிட்டதாக கூறியதற்கும் என்ன வேறுபாடு உள்ளது?

இப்படி 'முட்டாள்தனமாக' கேள்வி கேட்டதற்காகத்தான் ராகுல் தலைமையிலான காங்கிரசை உலகிலேயே அதிபுத்திசாலிகளான வட இந்தியர்கள் படுதோல்வி அடையச் செய்துவிட்டார்கள் போலும்! இதே கேள்வியை எழுப்பியதால்தான் 'முட்டாள்களான' தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களும் பாஜகவையும் அவர்களின் உள்ளுர் கூட்டாளிகளையும் மண்ணைக் கவ்வச் செய்துவிட்டார்கள் போலும்! தமிழக மக்களின் இந்த 'முட்டாள்தனமான' செயலுக்காகத்தான் டாக்டருக்குப் படித்த 'அதிபுத்திசாலி'யான தமிழிசை, தமிழக மக்கள் தங்களை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கன கச்சிதமாக தமிழக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறாரோ!.

திருமதி.தமிழிசை அவர்களே! நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டும். உமது தோப்பனார் திருவாளர் குமரி அனந்தனுக்கு முதலில் நீர் இந்த உபதேசத்தை செய்யும். எதற்கும் அதற்கு முன்பு பனை மரத்தைப் பற்றிய வரலாற்றை நீர் ஒருமுறை தெரிந்து கொள்ள முயற்சி செய்யும்!

தமது வாழ்வாதாரத்தைவிட தேசப் பாதுகாப்பே முக்கியம் என்று கருதும் இந்தி பேசுவோர்தான் உண்மையான இந்தியர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிருபித்திருக்கிறார்கள்! அப்படியானால் இதற்கு நேர்மாறாக கர்நாடகத்தை தவிர்த்த ஏனைய ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய தென்மாநில மக்களிடம் மோடி மஸ்தானின் தேசப் பாதுகாப்பு என்ற மந்திரம் பலிக்காமல் போனதற்கு என்ன காரணம்? ஒரு வேளை தென்மாநில மக்கள் உண்மையான இந்தியர்கள் இல்லையோ? அதனால்தான் போனி புயல் ஒடிசாவைத் தாக்கியபோது புயலின் வேகத்திற்கு இணையாக பறந்து வந்த மோடியார், தமிழகத்தை கஜா புயல் தாக்கிய போது ஓர் ஆறுதல் அறிக்கை கூட விடவில்லையோ?

உண்மைதான். திருவாளர் மோடி அவர்களே! நாங்கள், நீங்கள் கருதும் இந்தியர்கள் இல்லை. இந்தி பேசுவோரும், உமது இந்துத்துவா தர்மமான வர்ண தர்மத்தை ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பாமலேயே கை கட்டி, வாய் பொத்தி ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் இந்தியர்கள் என்றால் அப்படிப்பட்ட இந்தியர்களாக ஒரு போதும் நாங்கள் மாற மாட்டோம். உமது மொழியிலேயெ சொன்னால், பாழாய்ப் போன எங்களின் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், தோழர் பகத்சிங்கும் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பாமல் எதையும் ஏற்காதே என்று சொல்லிக் கொடுத்தது எமது மண்டைகளில் எம்மையே அறியாமல் ஆழப் பதிந்துவிட்டதே.. நாங்கள் என்ன செய்ய முடியும்! ஓய் நீரும் தமிழகத்தில் A- டீம், B – டீம் என பலவற்றை உருவாக்கியும் பார்க்கிறீர் , ஆனால் உமது எந்த பாச்சாவும் எங்களிடம் எடுபட மாட்டேன் என்கிறது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உங்களது மூதாதையரை இந்திய துணைக் கண்டத்தின் தென் பகுதிக்குள் கால் பதிக்க விடாமல், தடுத்தது விந்திய மலை என்றால், இப்போது உங்களை இங்கே கால் பதிக்க விடாமலும், உமது மோடி மஸ்தான் மாய மந்திரங்களை பலிக்க விடாமலும் எங்களது சுயமரியாதையும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி வேண்டும் என்ற சிந்தனா முறையுமே விந்திய மலையாய் உங்களுக்கு குறுக்கே நிற்கிறது. அன்றும், இன்றும், இனி என்றும் நீங்கள் ஊடுருவல்காரர்களாக மட்டுமே எம்மிடையே அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்க முடியும். எடப்பாடியையும், ராமதாசையும், கிருஷ்ணசாமியையும் போன்ற எட்டப்பர்களை வேண்டுமானால் உங்களால் விலைக்கு வாங்கி விட முடியும். ஆனால் தமிழக மக்களாகிய எங்களை ஒரு போதும் உங்களால் வெற்றி கொள்ளவோ, விலைக்கு வாங்கவோ முடியாது!

(தொடரும்)

- சூறாவளி

Pin It