அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற நடைமுறையை 2018-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு. உரிய விவாதம் கூட இல்லாமல் நிதி மசோதாவாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் கார்பரேட் நிறுவனங்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இந்த நன்கொடையை வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரங்களை பெற்று, அரசியல் கட்சிகளிடம் கொடுத்து விட்டால், அந்த கட்சிகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்தி பணமாக பெற்றுக் கொள்ளும். இதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் சட்டத்தில் ஏற்படுத்தினார்கள்.modi 425இச்சட்டம் இயற்றப்பட்டபோது பெருநிறுவனங்கள் தங்களுடைய மூன்று ஆண்டு லாபத்தின் சராசரியில் 7.5% விழுக்காட்டுக்கும் மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியாது என்ற வரம்பும் நீக்கப்பட்டது. அதாவது, நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சட்டத்தின் வாயிலாகவே ஏற்படுத்தி வைத்தது பாஜக அரசு. எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது என்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம். தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2018-இல் இருந்து 2022 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான நன்கொடைகள் மூலமாக 16,437 கோடி ரூபாய் பெற்றுள்ளன. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் 9,188 கோடி ரூபாய் பெற்றிருக்கின்றன.

இதில் பாஜக மட்டுமே 5,271 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 2022-23 ஒரு ஆண்டில் மட்டும் பாஜக 1,294 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 171 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இவ்வளவு பணத்தை பாஜகவிற்கு யார் கொடுத்தார்கள் என்பது மக்களுக்கும், பிற அரசியல் கட்சிகளுக்கும் தெரியாது. பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.க்கு மட்டுமே தெரியும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை அரசால் தெரிந்து கொள்ள முடியும். அதனால்தான் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் நிதி கிடைப்பதில் மலையளவுக்கான வித்தியாசம் இருக்கிறது.

எனவே இந்த மோசடிச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புகளில் இருந்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், “தேர்தல் பத்திரங்கள் நடைமுறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்கள் நடைமுறையானது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையான பிரிவு 19(1)(a)-ஐ மீறுவதாக உள்ளது. கம்பெனிகள் சட்டத்தில் அவர்களின் நன்கொடை வரம்பில் திருத்தங்களை மேற்கொண்டது அரசியல் சாசனத்திற்கு முரணானது. எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் பத்திரங்களை விநியோகிப்பதனை நிறுத்த வேண்டும். இன்னும் பணமாக மாற்றப்படாமல் தேர்தல் கட்சிகள் கையில் வைத்திருக்கும் பத்திரங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும். மார்ச் 13, 2024 தேதிக்கு உள்ளாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.” என்று கூறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட இச்சூழலில், பாஜகவின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பாஜகவுக்கு நிதி கொடுத்தவர்கள் யார் என்ற சில முக்கிய விவரங்களை ‘நியூஸ் லாண்டரி’ ஊடகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை அனைத்துமே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமானவை. குறைந்தபட்சமாக சுமார் 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்நிறுவனங்கள் அனைத்துமே ஒன்றிய அரசு நிறுவனங்களான அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளின் சோதனைகளுக்கு அல்லது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளன.

சில நிறுவனங்கள் சோதனைகளுக்கு பிறகு அதிக நிதி கொடுத்துள்ளன. நிதியே கொடுக்காத சில நிறுவனங்கள் சோதனை நடந்த உடனே நிதி கொடுத்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த டிஸ்டில்லரி நிறுவனம் ஒன்று, அதன் உரிமையாளருக்கு பிணை கிடைத்த மறுநாளே நன்கொடை கொடுத்திருக்கிறது. ஆக, நிறுவனங்களை மிரட்டி லஞ்சமாக பணம் வாங்க, தேர்தல் பத்திரங்கள் என்ற சட்டத்தை பாஜக கொண்டு வந்தது என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது. இத்தகைய மெகா மோசடியை நடத்தியிருக்கிற பாஜக அரசு, தங்களை ஊழலற்றவர்கள் என்றும், வெளிப்படைத்தன்மையானவர்கள் என்றும் கூறிக்கொள்வது எவ்வளவு அபத்தமானது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த மெகா மோசடிக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஏற்கெனவே பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இப்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்திருக்கிற மோசடிகளும் அம்பலமாகியிருகின்றன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் இவற்றை கொண்டு சேர்க்கிற முயற்சியில் எதிர்க்கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் ஈடுபட வேண்டும். அதன்மூலம் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்! 

- விடுதலை இராசேந்திரன்

Pin It