இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டங்களிலும், தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவிலும், மதுரையில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஏற்கனவே டிசம்பரில் ஒரு முறையும், ஜனவரியில் ஒரு முறையும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பதற்கேற்ப நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தான் பிரதமர் தமிழ்நாட்டிற்கு மாதம் ஒருமுறை வந்து கொண்டிருக்கிறார்.

டிசம்பரில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு ஒன்றிய அரசின் சார்பில் நிவாரணமாக இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கப்பட வில்லை. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்திய போது 27.01.2024 அன்று நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, தமிழ்நாடு வரும் மோடி நிதி ஒதுக்கீடு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.modi 473பா.ஜ.க பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை வெகுவாக புகழ்ந்தார். இருவரும் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தியதாகப் பாராட்டினார். ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியைப் பாராட்டிப் பேசும் பிரதமர் மோடிக்கு இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது? சி.ஏ.ஜி அறிக்கையில் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதமர் மோடி, ஊழல் குற்றவாளியைப் புகழ்வதில் வியப்பில்லை தான்.

ஆளில்லாத சொத்தை அபகரிக்க நினைப்பது போல் அ.இ.அ.தி.மு.கவின் வாக்கு வங்கியைக் குறிவைத்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா மீது பாசத்தைப் பொழிந்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தப் பசப்பு வேலைக்குப் பகுத்தறிவு மண்ணில் எவரும் பலியாக மாட்டார்கள்.

ஒன்றிய அரசின் திட்டங்களைத் தி.மு.க தமிழ்நாட்டில் மறைத்து விட்டதாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மோடியால் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு அவரது அரசு வழங்கிய நலத்திட்டங்களைப் பட்டியலிட முடியவில்லை. ஒரு வேளை அதையும் அவருக்கும் தெரியாமல் தி.மு.க தான் மறைத்து விட்டதோ, என்னவோ!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க இருக்காது என்று ஆவேசமாகப் பேசியிருக்கும் பிரதமர் மோடிக்குத் தி.மு.கவின் தியாக வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாநில உரிமைக்காகப் பண்டிதர் நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையே எதிர்த்துக் களம் கண்ட இயக்கம் தி.மு.க. 2001 அக்டோபர் முதல் 2014 மே வரை குஜராத்தின் முதல்வராக இருந்த பிரதமர் மோடி 12 முறை விடுதலை நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அவருக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்த இயக்கம் தி.மு.க தான் என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. தி.மு.கவை அழித்து விடுவேன் என்று கிளம்பிய அனைவரும் அரசியல் களத்திலிருந்து காணாமல் போய் இருக்கிறார்கள். இன்னும் மூன்று மாதங்களில் பிரதமர் மோடியும் அந்த வரிசையில் இணைவார்.

மாதம் ஒரு முறை அல்ல மாதக் கணக்கில் இங்கேயே தங்கினாலும் மோடி வித்தைக்கு மயங்காமல் அவருக்குப் படுதோல்வியைப் பரிசளிக்கும் தமிழ்நாடு!

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It