கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சு.ரா.வின் படைப்பில் அவரது மூன்று நாவல்கள் உன்னதமாகக் கருதப்படுகின்றன. அவரது பிம்பத்திற்கு இந்த மூன்றும் முக்கியமானவை என்பதால் அவை பற்றி இங்கே ஏதோ நம்மால் முடிந்த மட்டும் பார்க்கலாம்.

Sundara Ramasamyசு.ரா.வின் முதல் நாவலான “ஒரு புளிய மரத்தின் கதை” வெகு சாதாரண தரத்தில் அமைந்திருந்தாலும், அவரது பின்னாளைய இமேஜ் காரணமாக மறுவாசிப்பு செய்யப்பட்டு வியந்தோதப்படுகிறது. சமூக மாற்றத்தைச் சித்தரிக்கும் இலக்கியமாகப் போற்றப்படும் இந்த நாவலின் நாயகனான அந்த மரமும், கதைக்களமான வேப்பமூடு ஜங்சனும் கூட, சு.ரா.வின் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் தான் உள்ளன என்ற உண்மையை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம். நாவலின் முதல் பாதியில் கதை குறைவாகவும், சு.ரா. ஏதோ அபூர்வமாகச் சொல்லப்போவதான பீடிகையும், மற்றும் அவரது நீதி உபதேசங்களும் சலிப்பூட்டும் விதத்தில் வருகின்றன.

நாவலின் மறுபாதியில் இரண்டு வியாபாரிகள் அதில் ஒருவர் இந்து, மற்றொருவர் முசுலீம் வளர்ந்த கதையும், வளர்ந்த பின் இருவரும் போட்டியிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வீழ்த்துவதும், ஒரு மலிவான துப்பறியும் மர்ம நாவல் பாணியில் சொல்லப்படுகிறது. இந்த நாவலின் விறுவிறுப்பே அடுத்து என்ன நடக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று தொடருகின்ற மேலோட்டமான ஆவலில்தான் அடங்கியிருக்கிறது. இங்கும் அந்தப் பத்து புகழ் பெற்ற கருத்துக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேடம் போடுகிறார்கள், முனிசுபாலிட்டியில் ஊழல், பத்திரிக்கையாளர்களிடம் பிழைப்புவாதம், அரசியல்வாதிகள் வெற்று முழக்கத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள், வியாபாரிகளிடம் தருமம் இல்லை என்று நாவல் முழுக்க நம்மைத் துன்புறுத்துகிறார் சு.ரா. 

இலக்கியவாதிகள் கூறுவது போல இந்தக் கதை ஒரு சமூகமாற்றத்தின் குறியீடு, அடையாளம், பதிவு என்பதெல்லாம் தாங்க முடியாத கருத்துச் சித்திரவதைகளே. குமரி மாவட்ட சமூக வாழ்க்கையும் அதன் மாற்றமும், ஒரு காய்ந்த இலைச் சருகாய் பறப்பது போன்ற பாவனை கூட இந்த நாவலில் இல்லை. குறைந்தபட்சம் நாகர்கோவிலின் சுக்குக்காபி, மட்டிப்பழம், ரசவடை, தாராமுட்டை ஆம்லெட் கூடப் பதிவாகவில்லை.

இந்தக் கதை எழுதும்போது ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாய் இருந்த சு.ரா.வின் சுதர்சன் ஜவுளிக்கடை இன்று ஆண்களுக்கான ஆடையகமாய் மாறியிருக்கிறது. சு.ரா.வுக்குத் தெரிந்திருக்கக்கூடிய குமரி மாவட்டத்தின் ஒரே சமூகமாற்றம் இதுவாகத்தான் இருந்திருக்க முடியும். அதையும் அவர் ஒரு வியாபாரி என்ற அளவில்தான் புரிந்திருக்கக் கூடுமென்பதால் அந்த மாற்றம் ஒரு கதையாகக் கருத்தரிக்கவில்லை போலும். சுந்தரவிலாசம் சு.ரா.வின் அக உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானித்தது என்றால் சுதர்சன் ஜவுளிக்கடை அவரது புற உலகப் பார்வையைப் பொருத்தமான விதத்தில் இணைத்தது. போத்தீஸ், ஆர்.எம்.கேவி முதலான ஜவுளிக்கடை வியாபாரிகளின் வணிக அனுபவத்தில் தோய்ந்த உலகக் கண்ணோட்டம்தான் மற்றொரு வணிகரான சு.ரா.விடமும் உருவாயிருந்தது. 

இத்தகைய பெரிய வியாபாரிகள் எல்லா வகை அதிகார நிறுவனங்களுடனும் பணிந்து இசைந்து, குழைந்து, சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள். தன் கீழே வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிந்து இரக்கமின்றி நடத்துவார்கள். ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்ற செலவினங்களில் கஞ்சத்தனமாக இருக்கும் அதேவேளையில் விளம்பரம் கோவில் கொடை போன்றவற்றுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். நுகர்வோரான மக்களை மந்தைகளைப் போலப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் பசி, ருசி, பணப்புழக்கம், சாதிவர்க்கப் பின்னணி, இப்படி அனைத்தையும் வியாபார நிமித்தம் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள். கல்லா கட்டக் கட்ட உலகமே தன் கல்லாப் பெட்டிக்குள் அடங்கி விடுவதாகக் கற்பித்துக் கொள்வார்கள்.

சுந்தரவிலாசத்திலிருந்து சென்டிமெண்ட் எனப்படும் அகமும், சுதர்சன் கடையிலிருந்து மேட்டிமைத்தனம் கலந்த சமூகப்பார்வை என்ற புறமும் கைவரப் பெற்று இலக்கியம் படைக்க வந்த சு.ரா. ஒரு புளியமரத்தின் கதையில் திருவிதாங்கூர் மன்னர் வந்து போகும் வருணனைகளையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். எனவே அவர் குமரிமாவட்டத்தின் உக்கிரமான சமூக நிகழ்வுகளையெல்லாம் நிச்சயம் செவி வழியிலோ பாட்டி வழியிலோ கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவையும் அவர் காலத்தில் நடந்த முக்கியமான சமூக நிகழ்வுகள் எவையும் அவர் படைப்பில் இடம் பெற்றதில்லை.

அவரது வீடு இருக்கும் இராமவர்மபுரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் கோட்டாறு சவேரியார் சர்ச் உள்ளது. போர்ச்சுக்கீசியப் பாதிரியõரான சவேரியார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல லட்சம் மக்களை மதம் மாற்றியவர். இவ்வளவு பெரிய மதமாற்றம் ஏன் நடந்தது? பார்பனக் கொடுங்கோன்மை கொடிகட்டிப் பறந்த சமஸ்தானம் அது. பார்ப்பனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே அய்யா வைகுண்டநாதர் அய்யா வழி என்ற தனி வழிபாட்டுப் பிரிவையே உருவாக்கினார். அவரும் குமரிமாவட்டம்தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கெதிராக நாடார் இனப் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டமும் அப்பகுதியில்தான் நடந்தது. 1981-82இல் சு.ரா. தனது இரண்டாவது நாவலை வெளியிட்ட போதுதான் மண்டைக்காடு கலவரம் மூலம் இந்துமதவெறியர்கள் குமரிமாவட்டத்தில் வேர்விட ஆரம்பித்தார்கள். அதன்மூலம் தமிழகத்திற்கு இந்துமதவெறியை அறிமுகப்படுத்தினார்கள்.

சாதியால் ஒன்றுபட்டிருந்த நாடார்கள்கூட மதத்தால் பிரிக்கப்பட்டார்கள். வணிகவர்க்கமாக மாறியிருந்த நாடார்களில் சிலர் சங்கபரிவாரங்களின் தளபதிகளாகத் தலையெடுத்தனர். அப்புறம் தாராளமயத்தால் நலிவடைந்த வடசேரி, கிருஷ்ணன் கோவிலின் கைத்தறி, பாமாயில் இறக்குமதியால் பாதிப்படைந்த குமரிமாவட்ட தென்னை விவசாயிகள், ரப்பர் இறக்குமதியால் வாழ்விழந்த பால் வெட்டும் தொழிலாளிகள், கடைசியாக சுனாமி... இவ்வளவு உக்கிரமான சமூக இயக்கங்கள் எவையுமே சு.ரா.வின் படைப்பிலோ, கட்டுரையிலோ இலை மறைவு காய் மறைவாகக் கூட இறங்கவில்லையே, ஏன்? இந்தப் பிரச்சினைகள் சு.ரா. என்ற இலக்கிய பீடத்தின் முன் மண்டியிட்டுத் தங்களைத் தாங்களே போதுமான அளவு விளக்கிக் கொள்ளவில்லை என்பதாலா?

கேட்டால் ‘படைப்புச் சுதந்திரம், எந்த ஒரு படைப்பாளியையும் இன்னதுதான் எழுத வேண்டும் என்று கட்டளையிட முடியாது’ என்பார்கள். அப்படியே இருக்கட்டும். ஆனால் சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி வாழ்ந்து கொண்டே, வாழ்வை ரசனையுடன் அனுபவித்துக் கொண்டே, தன்னைச் சுற்றிய வாழ்வின் இயக்கத்தையும், வலியையும், போராட்டத்தையும், கண் கொண்டு பார்க்காமல், வேதனையுடன் உணராமல், இதயத்தைத் தடிப்பாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை என்னவென்று அழைப்பது? இதை உணராத ஒரு படைப்பு மனம் எப்படித் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு உக்கிரமாக வெளிவர முடியும்? 

இதே சு.ரா. அமெரிக்காவிலிருந்து கவிஞர் பௌத்த அய்யனாருக்கு எழுதிய கடிதமொன்றில், “ஹிந்து சர்வதேசப் பதிப்பு இங்கே வருகிறது. அதன் மூலம் இந்தியச் செய்திகளின் சாராம்சம் கிடைக்கிறது. சிலுக்கு காலமான செய்தி மனதைப் பாதித்தது. 15 வருடங்களில் 600 படங்கள். எவ்வளவு கடுமையான உழைப்பு” என்று துக்கம் விசாரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியச் செய்திகளின் சாராம்சம் சு.ரா.வினுள் இந்த அளவுதான் இறங்கியிருந்தது. திருவிதாங்கோடு முசுலீம் மக்கள், பழமைவாதத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக அனுபவித்த வலி நிறைந்த வாழ்வை உணர்த்தும் தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதையை வேண்டுமானால், ஒரு சமூக மாற்றத்தைப் புரியவைத்த நாவல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு புளிய மரத்தின் கதையை அப்படி எவரும் கூற முடியாது.

நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60