கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Sundara Ramasamy‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ சு.ரா.வின் மூன்றாவது நாவல். அவர் இறந்துவிட்டதால் இறுதி நாவலுங்கூட. முதலாவது, ஜவுளிக் கடையில் அமர்ந்து கொண்டு வேப்பமரத்தையும் அதைச் சுற்றியிருக்கும் வியாபாரிகளையும் வேடிக்கை பார்த்து எழுதப்பட்ட நாவல். இரண்டாவது, போலி மார்க்சியர்கள், சிற்றிலக்கியவாதிகளிடம் உரையாடிக் கேட்டும், ஐரோப்பாவின் மார்க்சிய எதிர்ப்புக் குப்பைகளைக் கிளறியெடுத்தும் எழுதப்பட்ட நாவல். மூன்றாவது, சு.ரா. தனது சொந்த வாழ்க்கையைப் பல ஆண்டுகளாக அசை போட்டுப் பதப்படுத்தி எழுதிய நாவல். எல்லா இயக்கங்களும், சித்தாந்தங்களும் தோற்று விட்டதான பாவனையில், எழுதுவதற்கான விசயங்கள் இல்லாத நிலையில் எல்லா இலக்கியவாதிகளும் தஞ்சமடைவது அவர்களது இளமைப் பருவம் பற்றிய இனிய நினைவுகளில். சு.ரா.வும் அப்படித்தான் தனது நாவலுக்கான கருவை தனது இளமைப் பருவத்தில் கண்டெடுத்தார்.

இது அவரது பிரச்சினை. நமது பிரச்சினை வேறுமாதிரி. வாழ்நாளிலேயே படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு நொந்து நூலான நாவல் உறுதியாக இதுதான். இந்தக் கட்டுரைக்காக சு.ரா.வின் படைப்புகளைப் படிக்க வேண்டியிருந்தது ஒரு தண்டனை என்றால், அதில் கொடிய தண்டனை இந்த நாவல்தான். இது சு.ரா.வின் குடும்ப நாவல். அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே “இது நம்ம மாமி, இது நம்ம அத்திம்பேர், இது நம்ம தோப்பனார், இவதான் நம்ம மன்னி, இவாதான் நம்ம ஓரகத்தி” என்று அடையாளம் காட்டி, கலந்துரையாடி மகிழ்ச்சியடைய வேண்டிய நாவல். மற்றவர்கள் எவருக்கும் தனது பிரதியாகப் படிப்பதற்கோ, படித்ததை அனுபவமாக உணர்வதற்கோ, உணர்ந்ததை மற்றவரிடம் பகிர்வதற்கோ இதில் துளியும் இடமில்லை.

சு.ரா. கோட்டயத்தில் சிறுவன் பாலுவாகக் கழித்த ஐந்து வருடங்களைப் பற்றிய விரிவான, விலாவாரியான தினசரி டயரிக் குறிப்புதான் இந்த நாவல். கோட்டயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது வீடு, வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்ட வாழைத்தோட்டம், வீட்டுக்குள் இருக்கும் தேக்குமரத்தினாலான ஓவல் வடிவமேசை, சக்கை உப்பேரி தின்ன ஆசைப்படும் சித்தப்பா, ஜே.ஜேயைப் போல வாழ்வின் நிலையாமை குறித்து குடும்ப அளவில் பதட்டமடையும் சு.ரா.வின் அப்பா, சு.ரா.வைவிட சாமர்த்தியமாக வளரும் அக்கா ரமணி... இப்படி உயர்திணைகளும் அஃறிணைகளும் மாறி மாறிக் கலந்து கசிந்துருகி அற்ப உணர்வின் பிரவாகமாய் சுமார் 640 பக்கங்கள் எவரும் தடுக்க முடியாதபடி பெருக்கெடுதது ஓடுகிறது. இதை ஒரு நாவலென்று சு.ரா. ஏன் எழுதினார், இதை எதற்காக அச்சிட்டு வெளியிட்டார்கள், இதை பல அப்பாவிகள் பணம் கொடுத்து ஏன் வாங்குகிறார்கள்... ஒன்றும் புரியவில்லை.

இந்த விசயத்தில் மட்டும்தான் வாழ்வின் புரியாமை பற்றிய பிரச்சினை நம்மை அச்சுறுத்துகிறது. ஒரு பார்ப்பன மேட்டுக்குடியின் ஐந்தாண்டு வாழ்க்கையை, உண்டு களித்து அசைபோட்டுச் செத்த கதைகளை சு.ரா.வின் புகழ் பெற்ற அந்த பத்துக் கருத்துக்களின் நமத்துப்போன வகைபேதங்களோடு நுணுக்கி, மினுக்கி எழுதப்பட்ட இந்தக் ‘காப்பியம்’ சு.ரா. யார் என்பதை நிச்சயம் அடையாளம் காட்டும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் போன்றோர் இந்த நாவலை கலையமைதி கொண்ட நாவல் என்றும் சு.ரா.வின் படைப்பிலேயே இதுதான் சிறந்தது என்றும் பாராட்டுகிறார்கள். செஞ்சோற்றுக்கடனா, பாம்பின்கால் பாம்பறியுமா, இனம் இனத்தோடு சேருமா இதற்கு எந்தப் பழமொழி பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவில்லை.

நான்கு சுவர்கள் மற்றும் ஒரு பெரிய இரும்புக்கதவால் திறக்க முடியாதபடி மூடப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை, உரையாடலை, மனவோட்டத்தை, நெகிழ்ச்சியை, தத்தளிப்பை யார் ரசிக்க முடியும்? யாரெல்லாம் தெருவையும், ஊரையும் மறந்து, மறுத்து குடும்பத்திற்குள் மட்டும் வளைய வருகிறார்களோ, அவர்கள் மட்டும்தான் கதைப்பதற்கு வேறு விசயங்கள் இன்றி, குடும்பத்தின் அற்ப விசயங்களை மெய்மறந்து பேசவோ, நினைக்கவோ, ரசிக்கவோ முடியும். “இந்த நாவலில் நகரும் காலமில்லை; வரலாற்றுப் பின்புலம் இல்லை” என்பது சீடர் ஜெயமோகனின் ‘விமர்சனம்.’ சக்கை உப்பேரிக்கும் அடைப்பிரதமனுக்கும் இடையில் காலம் நகர்ந்தாலென்ன, நகராவிட்டாலென்ன?

சு.ரா.வின் சித்தப்பா பலாப்பழம் பறித்த கதை வைக்கம் போராட்டம் நடந்த காலத்தில் தான் நடக்கிறது. இந்த வரலாற்றுப் பின்புலத்தை விளக்குவதன் மூலம் சு.ரா. வீட்டுப் பலாப்பழம் பற்றியோ, சு.ரா. பற்றியோ என்ன புதிய ‘தரிசனம்’ கிடைத்துவிடும்? சமூக உணர்வற்ற அற்பவாதக் குட்டைதான் உலகம் என்றான பிறகு அதில் கிழக்கென்ன, மேற்கென்ன? இப்படிப்பட்ட நாவல் எழுதியவருக்கு என்ன தரத்தில் அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளும் எடுத்தியம்புகின்றன. நிகழ்கால சு.ரா. இளமைப்பருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு இந்த நாவலும், இந்த நாவலில் வரும் சிறுவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு நிகழ்கால சு.ராவும் உதவி செய்வதால் இந்த நாவல் தன் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆதலால் இந்த நாவல் குறித்த நமது விமரிசனத்தை இதற்கு மேல் இழுப்பது என்பது அந்த வரலாற்றுக்குச் செய்யப்படும் அநீதி என்பதால் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

சு.ரா.வின் படைப்பிலக்கியங்கள் இத்துடன் முடிவதால் படைப்புக்கு வெளியே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பார்க்கலாம். தமிழகப் படைப்பாளிகளில் பலர் சாதி, மத, மூடநம்பிக்கையுடன் வாழ்ந்தாலும் அவர்கள் விமரிசிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த அடையாளங்களைத் தவிர்த்தும், துறந்தும் வாழ்ந்த சு.ரா.வை மட்டும் சனாதனி, பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர் என்று பல விமரிசகர்கள் சு.ரா.வின் வாழ்நாள் முழுவதும் அவதூறு செய்து வந்ததாக அவரது அபிமானிகள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் கூறுகின்றனர். இதன்படி பார்த்தால் சு.ரா. சாதி மத மூடநம்பிக்கைகளை முற்றிலும் துறந்த ஒரு புரட்சிக்காரர் என்றாகிறது. இது உண்மைதானா?

சு.ரா. சாதி மறுப்புத் திருமணம் செய்தாரா? இல்லை, சரி தொலையட்டும், திருமணமாவது சீர்திருத்த முறையில் சடங்கின்றி நடந்ததா? இல்லை, அதை விடுங்கள். சு.ரா. தனது குழந்தைகளுக்காவது சாதி மறுப்பு சுய மரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தாரா? அதுவும் இல்லை என்பதோடு தினமலர் என்ற பார்ப்பன பிரச்சார பீரங்கிக் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டார். சு.ரா.வின் இல்லமான சுந்தரவிலாசத்தில் பூஜை அறை உண்டா? நிச்சயமாக உண்டு, சுந்தரவிலாசத்தில் தீபாவளி, ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவார்களா? அதெப்படிக் கொண்டாடாமல் இருக்க முடியும்? சு.ரா.வின் சொந்த ஊரில் இருக்கும் ‘தழுவிய மாகாதேவர் கோவிலுக்கு’ அவர் நன்கொடை ஏதும் கொடுப்பாரா?

இவரே மறந்து போனாலும் அந்த ஊர் பார்ப்பனர்கள் விடாமல் ஆண்டுதோறும் வாங்கிக் கொண்டு போவார்கள். இருக்கட்டும், சு.ரா. பேசுகின்ற தமிழ் எந்த வகை? அதுவும் சுத்தமான அக்கிரகாரத்துத் தமிழ்தான். இப்படி சாதிமத மூடநம்பிக்கைகளின் எல்லா அம்சங்களோடும் வாழ்ந்து கொண்டே தன்னைப் பொருத்தவரை சு.ரா. அவற்றைத் துறந்துவிட்டு வாழ்ந்தார் என்றால் என்ன பொருள்? தாமரை இலைத் தண்ணீர் போல இந்த அடையாளங்களோடு வாழ்ந்து கொண்டே மனதளவில் மட்டும் துண்டித்துக் கொண்டு வாழ்ந்தார் என்பதா? அவரை அவரது பௌதீக இருப்பில் வைத்து அல்ல, சிந்தனையின் இருப்பில் வைத்து மட்டும்தான் பார்க்க வேண்டுமா? “வரதட்சிணை வாங்கக் கூடாது என்பது என் கொள்கை, ஆனால் என் பெற்றோர் வாங்கினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று மாப்பிள்ளை இளைஞர்கள் கூறுவார்களே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான எமது புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் சாதிதீண்டாமை மறுப்புத் திருமணங்களை தாலி முதலான சடங்குகள் எதுவுமின்றி எளிமையாகச் செய்து கொள்கிறார்கள். திருமணத்தில் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் முதலியவற்றைத் துறந்தும் குடும்பப் பிரச்சினைகளை ஜனநாயக முறைப்படி தீர்த்துக் கொள்வதாகவும், தமது குடும்ப வாழ்வை பொது நலனுக்கேற்ற வகையில் அமைத்துக் கொள்வதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாலைகளை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி மாதம் ஒரு திருமணமாவது நடக்கத்தான் செய்கிறது. அதேசமயம் இந்தத் திருமணங்கள் ஒரு புனைகதை எழுதுவது போலச் சுலபமாக நடைபெறுவதில்லை.

பலசுற்றுப் போராட்டங்களைத் தாண்டி நடக்கும் இந்தத் திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர் பலர் வருவதில்லை. திருமணம் முடிந்தாலும் உற்றார் உறவினர், மேல்சாதி ஆதிக்கம் முதலானவற்றை எதிர்கொண்டு போராடியபடிதான் வாழவேண்டியிருக்கிறது. மேலும் எமது தோழர்கள் பார்ப்பனப் பண்டிகைகள் எதையும் கொண்டாடுவதில்லை. நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் முதலான உலகமக்கள் இதயத்தில் நிறுத்த வேண்டிய நாட்களைத்தான் திருவிழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். இப்படி சொல்லிலும் செயலிலும் அரசியலிலும் வாழ்விலும் சாதி மத அடையாளங்களையும் மூடநம்பிக்கைகளையும் துறந்து வாழும் எமது தோழர்கள் உன்னதமான உலக உள்ளூர் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இல்லை. எங்களுக்கும் இத்தகைய போராட்ட வாழ்வை இலக்கியமாக்குவதற்கான நேரம் இருப்பதில்லை.

கவிதையும், கவித்துவமும், இலக்கியத்தின் உன்னதமும் எங்கள் தோழர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது. அவற்றை வெறும் தாள்களில் மட்டும் பார்க்கும் இலக்கியவாதிகளின் வாழ்வோ சராசரிக்கும் கீழே சாதாரணமாகச் சோம்பிக் கிடக்கிறது. அதையே முற்போக்கு என்றும் அசாதாரணம் என்றும் காட்டிக் கொள்வதுதான் அற்பத்தனம் என்கிறோம். ஜெயமோகனது ஆன்மீகத்தின் படி எமது தோழர்களின் புதிய பண்பாட்டிற்கான இந்த போராட்டத்தின் காரணங்கள் எளிமையானவை. அபத்தமானவை. அதே ஆன்மீகம், மேட்டுக்குடிப் பார்ப்பனராக வாழ்ந்து மரித்த சு.ராவை மட்டும் பார்ப்பன வாழ்க்கையைத் துறந்தவராக செயற்கையாக, உக்கிரப்படுத்திச் சித்தரிக்கிறது. சாரமாகக் கூறுவதென்றால், பிழைப்புவாதத்தையும், காரியவாதத்தையும் உன்னதப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் ஜெயமோகனது ஆன்மீகம்.

நம்மைப் பொருத்தவரை சு.ரா. மட்டுமல்ல அநேகச் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் சாதிமத வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்தான். அதனால்தான் சாதி மத அடையாளங்களைத் துறப்பது குறித்து “உண்மையில் அது ஓர் எழுத்தாளன் என்ற அளவில் உகந்ததுதானா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது” என்று முன்னெச்சரிக்கையாகத் தப்பித்துக் கொள்கிறார் ஜெயமோகன்.

அடித்தட்டுச் சாதிப்பெண் ஒருத்தி சுதர்சன் ஜவுளிக்கடையில் வளைகாப்பிற்காக 7000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவை எடுத்ததை பெரும் தலித் எழுச்சிபோல சு.ரா. கொண்டாடியதை ஜெயமோகன் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சு.ரா. கல்லாப் பெட்டியிலிருந்துதான் உலகத்தை பார்த்தார் அளவெடுத்தார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த விசயம் மகிழ்வுக்குரியதல்ல் வருத்தத்திற்குரியது. வளைகாப்பை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுவதெல்லாம் உழைக்கும் சாதிகளிடம் பொதுவில் இல்லை. இப்போது அப்படிக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது பார்ப்பனமயமாக்கம் மற்றும் நுகர்வியத்தின் மோசமான வெளிப்பாடு.

அரசு வேலையில் இருக்கும் வசதியான தலித் நடுத்தரவர்க்கத்தினர் பிறந்தநாள், சஷ்டியப்த பூர்த்தி, நவமி, அஷ்டமி முதலானவற்றைக் கொண்டாடுகின்றார்கள் என்பது சு.ரா.வுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அதன் பொருள் என்ன? யார் பார்ப்பனியத்தைச் சிக்கென இதயத்தில் பிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் இப்படிப் பார்ப்பன மயமாக்கத்தைப் பாராட்ட முடியும். தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் இப்படித்தான் மாற வேண்டும் என்று இந்து முன்னணியும் கூறுகிறது. எனில் சு.ரா.வுக்கும் இராம கோபாலனுக்கும் என்ன வேறுபாடு?

வாச்சாத்தி சம்பவத்திற்குப் பிறகு சு.ரா.வின் மனதைப் பாதித்த தமிழக அளவிலான சம்பவம் கொடியங்குளம் கலவரமாம். “அதை பேச்சிலும் எழுத்திலும் பதிவு செய்து நானும் இது பற்றிக் கருத்துக் கூறியிருக்கிறேன்” என்று மிகையாகக் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லையாம். அப்படியெனில், சு.ரா.வின் மனதை அது பாதித்தது என்பதன் நிரூபணம் என்ன? அவரது அன்றாடப் பணிகளான ஜவுளி வியாபாரம், படைப்பு எழுதுவது, மாலை உலா, இரவில் இலக்கிய அரட்டை, எல்லாம் செவ்வனே நடக்கும், ஆனால் மனது மட்டும் தென்மாவட்டச் சாதிக் கலவரங்களுக்காக வருத்தப்படுமாம். மொத்தத்தில் தினசரி செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்து விட்டு பாவம் என்று ‘உச்’ கொட்டிவிட்டுத் தனது வேலைகளைப் பார்க்கப் போகும் நடுத்தர வர்க்கத்தின் உதட்டளவிலான மனிதாபிமானம்தான் இது.

நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60