சு.ரா. தனது மூத்த மகள் சௌந்தரா நோயுற்று இறந்ததைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அதில் தன் மகளுக்கு வந்த அபூர்வமான நோய் குறித்தும், அதற்கான மருத்துவத்தின் போதாமைகள் குறித்தும், மகளைப் பிழைக்க வைக்க பிரார்த்தனை மூலம் முயற்சி செய்யும் தனது நண்பர் குறித்தும், அந்தப் பிரார்த்தனையில் அறிöயாணாவாதியான தான் பங்குபெற இயலாததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி குறித்தும் விளக்கி எழுதியிருக்கிறார். துள்ளலும், உற்சாகமுமாய் இருந்த சு.ரா. தனது மகள் இறந்த பிறகு அடிக்கடி தனிமையிலும், துயரத்திலும் மூழ்கி விடுவதாக ஜெயமோகனும் எழுதியிருக்கிறார்.
இங்கும் ஜெயமோகனது ஆன்மீகம் சமூகத்துயரத்தை அற்பமானதாகவும், சொந்த வாழ்க்கைத் துயரத்தை மகத்தானதாகவும் எப்படிச் சித்தரிக்கிறது பாருங்கள்! அவ்வகையில் இந்த ஆன்மீகத்தை அற்பவாதத்தின் தத்துவம் என்றும் அழைக்கலாம். கொடியங்குளம் என்ற சமூகத் துயரத்தை பேசினாலும் எழுதினாலும் ‘மிகை’ என்று ஒதுக்கி விட்ட சு.ரா.வின் இதயம், தனது சொந்த வாழ்க்கைத் துயரத்தை மட்டும் இந்திய அளவிலான வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்றால் அதன் இதயத்துடிப்பின் இலக்கணம் என்ன? ஒரு குடிமகனுக்கு இருக்கவேண்டிய கடமையுணர்வும், பொறுப்புணர்வும் கூட சு.ரா. என்ற இலக்கியவாதியிடம் இல்லாமல் போனதன் மர்மம் என்ன? இலக்கிய உன்னதங்களுடைய சமூகப் பொறுப்புணர்ச்சியின் இலக்கணம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்!
பிறகு ஏன் சு.ரா.வை சாதி மதங்களைத் துறந்தவரென்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள்? ஒரே விடை சு.ரா. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இலக்கியவாதிகளை காரில் வரவேற்று, மேசையில் உணவிட்டு, வீட்டில் தங்கவைத்து, உபசரித்து விருந்தோம்பியிருக்கிறார் என்பதே. சு.ரா.வின் சாப்பாட்டு மேசையில் சங்கோசத்துடன் சாப்பிட்டதையும், சு.ரா. அதற்கு நேரெதிராக இயல்பாக உபசரித்துப் பழகியதையெல்லாம் அறிஞர் ராஜ் கௌதமன் போன்றோர் தமது அஞ்சலிக் குறிப்பில் பதிவு செய்திருக்கின்றனர்.
தமிழக வரலாற்றில் புலவர்களுக்கும் புரவலர்களுக்குமான உறவு வாசகர்கள் எல்லோரும் அறிந்த ஒன்று. புரவலர்களைத் தேடி வரும் புலவர்கள், புரவலர்களின் இல்லாத நல்லதுகளை இட்டுக்கட்டிப் பாடிப் புகழ்ந்து பரிசுகளை வாங்கிச் செல்வார்கள். பரிசுகள் தர மறுக்கும் புரவலர்களை புலவர்கள் மறைமுகமாக வசைபாடுவார்கள். மற்ற புலவர்களை “நீயெல்லாம் புலவனா” என்று எகத்தாளமாக கேலி செய்வார்கள். சிறு பத்திரிகைகளின் உலகமும் குழுச் சண்டைகளும் இந்த மரபின் தொடர்ச்சிதான்.
பாடிப் பரிசு பெறுவதும், தூற்றிக் கேலி செய்வதுமான தமிழ் மரபை வரித்திருக்கும் சிறு பத்திரிக்கை உலகில் சு.ரா. யார்? அவர் புலவராக மட்டுமல்ல, புரவலராகவும் இருந்திருக்கிறார் என்பதே சரியான விடை. எழுதியதால் அவர் புலவர். தன் எழுத்தை நிலைநாட்டுவதற்காகப் பலரை வரவேற்று உபசரித்திருப்பதால் அவர் புரவலர். எழுத்தின் உணர்ச்சியை அவருக்களித்த அதே சுந்தரவிலாசம்தான், அவரது எழுத்தை மற்றவர்கள் சிலாகிப்பதற்கான விருந்தோம்பலையும் ஒரு சத்திரம் போலச் செய்திருக்கிறது. இதை சலிக்காமல் செய்து வந்ததற்கு சு.ரா.வின் மனைவி கமலா மாமி போக, கார், பங்களா, சமையல்காரர் முதலான சகல வசதிகளும் அவருக்கு கைகூடி இருந்தன.
ஒரு நிறுவனம் போல தன் எழுத்தை மற்றவர்கள் வியந்தோதுவதற்கு இத்தகைய மக்கள் தொடர்புத்துறை வேலைகள் சு.ரா.வுக்குத் தேவைப்பட்டாலும், அதை சலிக்காமல் செய்வதற்கான உபசரிப்பு மனநிலையை அவர் கொண்டிருந்தார். இந்த மனநிலையை அவர் போலி கம்யூனிசக் கட்சியுடனான ஆரம்ப காலத் தொடர்பில் பெற்றிருக்கலாம். விருந்தோம்பும் ‘அதிதி தேவோ பவ’ உணர்வில் அவர் மற்றவர்களை விட முன்னணியில் இருந்திருக்கலாம்.
சு.ரா. தனது வீட்டிற்கு இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், போலி கம்யூனிசத் தலைவர்களை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சண்முகநாதன் போன்றோரையும் வரவேற்று உபசரித்திருக்கிறார். மண்டைக்காடு கலவரத்திற்குப் பின் இந்து மதவெறியர்கள் குமரி மாவட்டத்தில் வேர்விட்ட காலத்தில்தான் சண்முகநாதன் அங்கே அடிக்கடி விஜயம் செய்வார். வரும்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போது சுந்தரவிலாசத்திற்கும் செல்வார். சு.ரா.வின் மகன் கண்ணனும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பில் இருந்ததாகக் கூறுகிறார்கள். காலச்சுவடின் அரவிந்தனும் முன்னாளில் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ்காரர்தான். குஜராத் கலவரத்தின்போது, காலச்சுவடு பத்திரிக்கை, இந்துமதவெறி என்று குறிப்பிடாமலே அதைக் கண்டித்தும், காசு வசூலித்தும் தனது மதச்சார்பற்ற கடமையை ஆற்றியது. இன்னும் ஜெயேந்திரன் பிரச்சினையில் கூட சங்கரமடம் எப்படி நல்ல மடமாக மாறவேண்டும் என்றுதான் காலச்சுவடு அருள் வாக்கு அளித்தது. மேலும், பார்ப்பனியத்தின் அடியாளான தினமலர்தானே காலச்சுவடின் நிரந்தர விளம்பரப் புரவலர்!
சிறுவனாக இருக்கும்போது கடற்கரைக்குச் சென்ற சம்பவம், அப்போது என்ன சட்டை போட்டிருந்தார், பார்த்த சிப்பி ஓட்டின் டிசைன் முதலியனவற்றையெல்லாம் சு.ரா. நினைவு கூர்ந்தார் என்பதைக் கூரிய அவதானிப்புடன் பதிவு செய்திருக்கும் ஜெயமோகன் மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். கனைக்சனை மட்டும் விட்டுவிட்டார். இது செலக்டிவ் அம்னீஷியாவா, இல்லை தெரிந்தே அழிக்கப்பட்ட வரலாறா? முக்கியமாக, இந்த வரலாற்றில் சு.ரா.வைவிட ஜெயமோகனுக்குத்தான் முதன்மைப்பங்கு உள்ளது. ஜெயமோகனது இலக்கிய வாழ்க்கை ஆர்.எஸ்.எஸ்.உடனும், சு.ரா.வுடனும் சேர்ந்தேதான் ஆரம்பித்தது. சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் தனது மனைவி, மகன், வீட்டுநாய் ஹீரோ போன்றவர்களையெல்லாம் இடம் பெறச் செய்த ஜெயமோகன் தனது ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை மட்டும் திட்டமிட்டு மறைத்திருக்கிறார்.
அப்புறம் சு.ரா.வின் வழிகாட்டலில் அவர் நவீன இலக்கியம் கற்று எழுத ஆரம்பித்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்திலும் சில ஆண்டுகள் எழுதியிருக்கிறார். அவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு குறித்தும் அதன் பத்திரிக்கையில் எழுதுவது குறித்தும் சு.ரா. என்ன கருத்து தெரிவித்தார் என்பதையெல்லாம் அவர் தந்திரமாக சுய தணிக்கை செய்து விட்டார். சு.ரா. இல்லத்திற்கு நல்லகண்ணு வந்தபோது சு.ரா. ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்தாராம். அதேபோல சண்முகநாதன் வந்தபோது அழைத்தாரா, சண்முகநாதனுடன் பேசியதை ஜெயமோகனிடம் சு.ரா. பகிர்ந்து கொண்டாரா என்பதெல்லாம் ‘நினைவின் நதி’யில் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.
ஜெயமோகனின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும் கடைந்தெடுத்த கம்யூனிச வெறுப்பும், சநாதனச் சார்பும் அவரது சங்கபரிவார் தொடர்பில்தான் உருவாகியிருக்க வேண்டும். காசர்கோடில் போலி கம்யூனிச தொழிற்சங்கத்தின் கம்யூனில் தங்கியதை வைத்து, (நாலு பேர் சேர்ந்து ரூம் எடுத்துத் தங்குவதெல்லாம் கம்யூன் என்றால் திருவல்லிக்கேணி முருகேசநாயக்கர் மான்சனில் தங்கியவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளே) கம்யூனிசம், கட்சி நடைமுறை, தோழர்களின் உளப்பாங்கு ஆகியவற்றைக் கரைத்துக் குடித்ததாக மனப்பாங்கு கொண்டு அதையே கற்பனையில் ஊதிப் பெருக்கி பின்தொடரும் நிழலின் குரல் என்று ஒரு கம்யூனிச வெறுப்பு நாவலையே எழுதிவிட்டார். இதற்கு அதிகமாகவோ நிகராகவோ ஆர்.எஸ்.எஸ். அனுபவமும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். மேலும் விஜயபாரதத்திற்கு அவர் எழுதியதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சங்கபரிவாரின் தமிழகத் தலைமையுடனும் நெருக்கம் இருந்திருக்க வேண்டும். இந்த அனுபவத்தை வைத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையை இணைத்து, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு நாவல் மேலோட்டமாகவேனும் எழுதியிருக்கலாம் அல்லவா?
பல ஆண்டுகளுக்கு முந்தைய புகாரின் கதையையெல்லாம் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ரசியாவிலிருந்து பொய்யுடனும், புனைவுடனும் இழுத்து வந்து எழுதியவருக்கு, அருகிலிருக்கும் குஜராத்தில் இந்தியாவே வெட்கித் தலைகுனியும் வண்ணம் நடந்த ஒரு படுகொலையை அறிந்து கொண்டு எழுத மனம் வரவில்லையே, ஏன்? ஒருவேளை விஷ்ணுபுரம் நாவலை வெளியிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் உதவிய ஸ்வயம் சேவகர்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற நன்றியுணர்வு காரணமாக இருக்கலாம். அல்லது ஆர்.எஸ்.எஸ்.இன் தமிழ்நாட்டுப் புரவலர்களில் ஒருவராக இருக்கும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தரமான ரசிகர்களை இழக்க நேரிடும் என்ற பயம் கூடக் காரணமாக இருக்கலாம். அத்துடன் உலக முதலாளித்துவச் சந்தையில் தண்டியான கம்யூனிச எதிர்ப்பு நாவல்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்ற காரியவாதக் காரணமும் சேர்ந்திருக்கலாம்.
இன்றைக்கு இந்து மதவெறியர்கள் மிகவும் அம்பலப்பட்டுள்ள நிலையில் ஜெயமோகன் தனது இமேஜை தோற்றத்தில் மாற்றியிருக்கலாம். “இந்திய அரசியலில் கம்யூனிசக் கட்சிகள்தான் சற்றே நம்பிக்கை தரும் வகையில் செயல்படுகின்றன” என்ற சு.ரா.வின் வாக்குமூலத்தை வழிமொழியலாம்; அல்லது “நான் சி.பி.எம்.முக்குத்தான் ஓட்டுப் போடுகிறேன்” என்றும் ஜெயமோகன் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இலக்கியமல்லவே. ஒரு இலக்கியவாதியை அவரது படைப்பை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பதுதானே இலக்கியவாதிகளின் கொள்கை. எங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு இலக்கியவாதி எதைப்படைத்தான் என்பதை வைத்து மட்டுமல்ல, எதைப் படைக்கவில்லை என்பதை வைத்தும் மதிப்பிட முடியும் என்கிறோம்.
தனது இளமைப்பருவத்தையும், ஆதர்சநாயகன் மற்றும் போலி இலக்கியவாதி ஜே.ஜேவையும் தேடி கேரளாவுக்குப் போன சு.ரா தான் வாழ்ந்த குமரிமாவட்டத்தின் இந்து மதவெறியர்களை எதிர்த்து தனது படைப்பில் ஒரு சொல்லைக்கூடச் சேர்க்கவில்லை எனும் போது சீடப்பிள்ளை மட்டும் என்ன செய்யமுடியும்? ஆகவே எப்படிப் பார்த்தாலும் சு.ராவும் சரி, அவரது தலைமைச் சீடரும் சரி போலி மார்க்சிய ஆதரவு என்ற பெயரில் கம்யூனிச வெறுப்பும், இன்னொருபுறம் தீவிரமான பார்ப்பனிய ஆதரவும் கொண்ட மேட்டிமைத்தனமான இலக்கியவாதிகள் என்றுதான் அறுதியிட முடியும். எழுதியவற்றுக்கும், எழுதாதவற்றுக்கும் இடையில் உள்ள இடைவெளியிலிருந்தும் ஒரு படைப்பாளி யாரென்பதை நாம் கண்டுபிடிக்க முடியும்.
மதுரை இறையியல் கல்லூரியில் ஒருநாள் தங்கியிருந்த அனுபவத்தை சு.ரா. பின்வருமாறு சொன்னாராம். “காலம்பற கதவைத் திறக்கிறேன், கொழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் குடுக்கிறாங்க. ஓ...ன்னு கத்தி பாடறதுகள். ‘எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட நாயே’ன்னு... கண்ணீர் வந்துடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும்? என்ன படிச்சிருக்கும்ங்க? ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா? ஏதோ சாப்பாடு, எடம் இருக்குன்னு வந்து படிக்கிற ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உட்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்தி மேல மட்டுமில்ல, காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு... அதனால் யாருக்கு என்ன இலாபம்? அன்னியப்பட்டுப் போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறத விட்டா என்ன நடக்கும்? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை...”
இதை பிளான் போட்டுச் செய்தது வேறு யாருமல்ல, நாங்கள்தான். இந்தப் பாடல் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘அசுரகானம்’ என்ற பாடல் ஒலிப்பேழையில் உள்ள பாடலின் சரியான வரி... “ஆயிரங்காலம் அடிமை என்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே..” என்று வரும். இந்தப் பாடல் ஒலிப்பேழை பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய மாதங்களில் இந்து மதவெறியை எதிர்த்து வெளியிடப்பட்டது. இந்தப் பேழை உழைக்கும் மக்களையெல்லாம் இந்துக்கள் என்று சித்தாந்த ரீதியாக அணிதிரட்டிய ஆர்.எஸ்.எஸ்இன் வருணதர்ம மோசடியைக் கூர்மையாக அம்பலப்படுத்தியது. அக்கிரகாரம், சேரி என்று பிரித்து வைத்து இழிவாக நடத்தியது, அப்துல்காதரா, அனந்தராமய்யரா என்று உண்மையை எள்ளலுடன் கேள்வி கேட்டது.
நந்தன், ஏகலைவன், சம்பூகன் போன்ற பார்ப்பனியத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று மாந்தர்களின் கதைகளை உழைக்கும் மக்களுக்கு நினைவுபடுத்தியது. முசுலீம்களைத் தோற்றத்திலும், சாரத்திலும் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் சதியை எடுத்துக் காட்டியது. சு.ரா. குறிப்பிட்டதாக ஜெயமோகன் பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல் பல நூற்றாண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பஞ்சமரென்று இழிவுபடுத்தி விட்டு இப்போது அரிஜன் என்று அழைக்கும் காந்தி, காங்கிரஸ், பா.ஜ.க.வின் பார்ப்பனமயமாக்கத்தை நூறாண்டுக் கோபத்துடன் கேள்வி கேட்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தப் பாடல். எல்லா தலித் இயக்கங்களும் இந்தப் பாடலையே தமது தேசிய கீதம் போல அங்கீகரித்து மேடைகள் தோறும் பாடினர். தங்கள் வரலாற்றுத் துயரத்தை போர்க்குணத்துடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடலை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றினர். இந்தப் பாடல் ஒலிப்பேழைகளின் விற்பனை பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கும். இதன் தொடர்ச்சியாக திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ்மக்கள் இசைவிழா போன்ற நிகழ்வுகள் இந்து மதவெறியர்களை உழைக்கும் மக்களிடமிருந்து கருத்து ரீதியாகத் தனிமைப்படுத்தின.
பார்ப்பன இந்து மதவெறியர்களை எதிர்த்த எமது போராட்ட வரலாறு அவர்களை எப்படி வெல்ல முடியும் என்ற பாடத்தை, புரிதலை இந்திய அரசியல் அரங்கில் முதன்முதலாகச் செய்து காண்பித்தது. பார்ப்பனியத்தை நெஞ்சில் ஏற்றிப் போற்றி வைத்திருக்கும் சு.ரா. ஜெயமோகன் போன்றோருக்குத்தான் இந்தப் பாடல் கடுங்கசப்பை ஏற்படுத்த முடியும். இந்த உண்மையை ஆய்வுகள் ஏதுமின்றியே எமது பாடல் ஒன்று போகிற போக்கில் நிரூபித்திருப்பது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சு.ரா.வின் அரசியல் சமூகப் பார்வை என்பது துக்ளக் சோ ராமஸ்வாமியிடம் கற்றுக் கொண்டதுதான். சோவை அவர் முக்கியமான அரசியல் விமர்சகராகக் கருதியதைப் பதிவு செய்திருக்கிறார். காந்தி நல்லவர், காமராஜ் ஆட்சி பொற்காலம், தமிழகத்தை திராவிட இயக்கம்தான் சீரழித்தது... போன்ற சோவின் கருத்துக்களை சு.ராவும் பல இடங்களில் பிரயோகித்திருக்கிறார். எனினும், சோவை ஒரு பாசிஸ்ட் என்று அழைப்பது போல சு.ராவை நாம் அழைக்க முடியாது. ஏனென்றால் சு.ரா.வின் அரசியல் சிந்தனையில் கோமாளித்தனமும் பாசிசமும் பிரியுமிடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
“திராவிட இயக்கத்துக்கும் இலக்கித்துக்கும் சம்பந்தமே கிடையாது, கம்யூனிஸ்டுகள் இலக்கிய விரோதிகள்” என்பவை சு.ராவின் புகழ் பெற்ற பத்து கருத்துகளில் முக்கியமானவை. அரசியல்வாதிகள் இலக்கியத்தில் நுழைந்தால் பூசையறையில் நுழைந்த பன்றிகளாக அவர்களைக் கருதி உறுமுவது, சு.ரா. குருகுலத்தின் மரபு. ஆனால் அரசியல் சமூக விவகாரங்களில் தெக்கு வடக்கு தெரியாத இந்தக் கோமாளிகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிப்பார்கள். ‘பெரியார் எதிர்மறை அரசியல், காந்தியிசம் நேர்மறை அரசியல்’ என்று உளறுவார்கள். இப்படி உலக விவகாரங்கள் அனைத்திற்கும் தம்மைத்தாமே அத்தாரிட்டிகளாக நியமித்துக் கொள்வது பற்றி இவர்கள் எள்ளளவும் கூச்சப்பட்டதுமில்லை.
சு.ரா.விடம் நட்பு கொண்டிருந்த அனைவரும் அவரது பெரியமனிதத் தோரணை காரணமாக, தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி மனச்சமாதானம் அடைந்திருக்கின்றனர். சொந்தப் பிரச்சினைகள் பற்றி யாரிடமாவது வாய் திறந்தால், அதையும் அச்சிலேற்றி அசிங்கப்படுத்தி விடுவார்களோ என இலக்கியவாதிகள் ஒருவரையொருவர் ஐயுறும் ஆவிகள் நிறைந்த சிற்றிலக்கியச் சூழலில், சு.ரா. மட்டும் பாவ மன்னிப்புக் கூண்டில் காதை வைத்திருக்கும் பாதிரியாரைப் போல பலருக்கும் ஆறுதலளித்து வந்தார்.
அவருடைய இலக்கிய அந்தஸ்தைத் தீர்மானித்த காரணிகளில் புரவலர் பாத்திரத்துக்கு இணையானது இந்தப் பாத்திரம்.
கவிஞர் சல்மா, சு.ராவுக்கான தனது அஞ்சலிக் குறிப்பில், “ஒருமுறை என் கணவர் என்னை அடித்து விட்டதாக நான் எழுதிய கடிதத்தைக் கண்டு தொலைபேசியில் அழைத்து, “ஏம்மா, உங்கள அடிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது” என்று கேட்டவரின் குரலில் உணர்ந்த துயரம் எனக்கு வாழ்நாள் முழுக்கத் தேவையான குற்றவுணர்வை இன்றும் தந்து கொண்டிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார். இதையே சல்மா ஒரு இலக்கிய அறிவற்ற பெரியவர் யாரிடமாவது கூறியிருந்தால், அவர் சல்மாவின் புருசனைக் கூப்பிட்டு எச்சரித்திருப்பார். விவகாரம் பஞ்சாயத்து செய்யப்பட்டிருக்கும். அல்லது போலீசுக்காவது போயிருக்கும்.
சு.ரா.விடம் சொன்னதில் பயனென்ன? வாங்கிய அடி போதாதென்று போனசாக குற்றவுணர்வு! உலகப் பிரச்சினைகளுக்கெல்லாம் விடை சொல்லும் சு.ரா.விடம் சல்மாவின் பிரச்சினைக்கு ஏன் தீர்வில்லை? ஏனென்றால் சு.ரா.வின் அந்த புகழ் பெற்ற பத்து கருத்துக்களில் இந்த சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வில்லை.
ஒரு மென்மையுள்ளம் கொண்ட முதியவரை, இப்படி ஏளனம் செய்வதா என அவரது அபிமானிகள் வருந்தலாம். இந்த குரு சிஷ்ய கோழைகள், கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தைக் கேலி செய்து சிரித்ததை ஜெயமோகன் தனது நூலில் குறிப்பிடுகிறார். அச்சுத மேனனும் இ.எம்.எஸ்ஸூம் கையில் துப்பாக்கியுடன் தடுப்பரணின் பின்னே அமர்ந்திருக்கும் காட்சியைக் கற்பனை செய்து இவர்கள் கண்ணீர் வருமளவு சிரிப்பார்களாம். கொத்தி எடுக்கவேண்டிய அளவுக்கு உடல் முழுவதும் பார்ப்பனக் கொழுப்பு நிறைந்த இந்த அற்பர்கள் விசயத்தில் இரக்கம் காட்டுவது அபாயகரமானது.
கட்டுரையின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டபடியால் ஜெயமோகனது ‘நினைவின் நதி’ என்று பெயரிடப்பட்ட அற்பவாதக் குட்டையை கடைசியாக ஒருமுறை மூக்கைப் பொத்திக் கொண்டு பார்த்து விடலாம். இந்த நூலில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று இரண்டு பார்வைகள் உள்ளன. கிட்டப்பார்வையில் சு.ராவின் அற்பமான வாழ்க்கை ரசனை விசயங்களும், தூரப்பார்வையில் சு.ராவைவிட ஜெயமோகன் எப்படி ஒரு பெரிய எழுத்தாளர் ஆனார் என்பதும் பதிவாகியிருக்கின்றன. இடையில் குட்டையின் நாற்றத்தை அடக்குவதற்கு சு.ராவின் சாதாரண மனிதாபிமான நடவடிக்கைகள், பதிவுகள் அசாதாரணமாக்கப்பட்டு ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.
“சிற்றிலக்கியவாதிகளின் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்” என்று பறைசாற்றுவதற்காகவே சு.ராவின் இறப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அவரது தன்னெழுத்துத் தற்காதலியத்தை இலக்கிய வாசிப்பு மனங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கென்றே இந்த நூல் வெகு அவசரமாக எழுதப்பட்டிருக்கிறது. இருவருக்கும் நடந்த உறவு, பிரிவு, போராட்டம் அனைத்தும் தங்கப்பதக்கம், கௌரவம் ரேஞ்சுக்குச் செதுக்கப்பட்டுள்ளது. சென்டிமென்டுக்கு வீழப் பழகியிருக்கும் வாசிப்பு மனம் இதை மாபெரும் பாசப் போராட்டமாய்க் கற்பிதம் செய்து கொள்ளும்.
உண்மையில் இருவருக்கும் நடந்த பிரச்சினை என்ன? சு.ரா.வைத் தேடி ஜெயமோகன் வந்தார். அவர் உதவியால் இவர் எழுத்தாளரானார். நாவல்கள் எழுதினார். சீடன் தன்னை விஞ்சுவதாக எண்ணியபோதெல்லாம் குரு அஞ்சினார். அவர் அஞ்சும் தருணங்களுக்காகவே காத்திருந்து இவர் குரூரமாக ரசித்தார். ‘தான் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்பதை குருவின் வாயிலிருந்தே வரவழைக்க ஜெயமோகன் அவரது தொண்டை வரை விரலை விட்டு நோண்டினார். ரத்தம் கக்கிய குரு சத்தம் போடாமல் அமெரிக்காவுக்குத் தப்பினார். இந்த வரலாறு எதுவும் எங்கள் சொந்தச் சரக்கு அல்ல, ஜெயமோகன் தந்த சரக்குகள்தான்.
இந்தக் குட்டை முழுவதும் எஸ்ரா பவுண்டு, கீஸ்லர், டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கி முதலான உலக இலக்கியவாதிகள், நல்லகண்ணு, இ.எம்.எஸ்., காந்தி முதலான அரசியல்வாதிகள், க.நா.சு., லா.ச.ரா போன்ற உள்ளூர் இலக்கியவாதிகள், பட்டுப்புடவை, சினிமா போஸ்டர் முதலான ஜடப் பொருட்கள் போன்ற அனைத்தையும் தமது தத்துவ வாளால் கலக்குகிறார்கள் குருவும் சீடரும். ஆனால் தத்தம் சொந்தப் படைப்புகள் பற்றிய விவாதமோ, கருத்துப் பரிமாற்றமோ வரும்போது மட்டும் ஒரு மகாமவுனம் இருவர் மீதும் கவிந்து விடுகிறது. அந்த மவுனத்தின் ஊடாகவே ஒரு எழுதப்படாத உடன்பாடு அவர்களுக்கிடையில் கையெழுத்தாகி விடுகிறது.
“என்னைப் பற்றி நீ பேசாதே, உன்னைப் பற்றி நான் பேசவில்லை. உலகத்தைப் பற்றி நாம் பேசுவோம்” என்பதே அந்த உடன்படிக்கையின் சாரம். அதுவும் வெகு நாள் நீடிக்க முடியவில்லை. நாச்சார் மட விவகாரமாக வெளியே வந்து புழுத்து நாறியது.
வாழ்க்கையில் தமது குறை நிறைகளை மனம் திறந்து பரிசீலிக்கும் சாதாரண உழைக்கும் மக்களிடம் நிலவும் நாகரிகம் கூட இல்லாத இரண்டு அற்பங்கள், தமிழிலக்கிய உலகில் முடி சூட்டிக் கொள்வதற்காக இலக்கியப் போர் புரிந்ததும், இந்த ஆபாசத்தை ஷகீலா பட ரசிகனின் கிளுகிளுப்புணர்ச்சியோடு பார்த்து ரசித்துப் பரிமாறிக் கொள்ளும் கும்பல் தன்னை ‘சிற்றிலக்கிய உலகம்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ள முடிவதும்தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் அவமானங்கள்.
நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60