bkrerபேராசிரியர் எம்.வேதசகாய குமார் அறிஞர் ஜேசுதாசனின் மாணவர். ஜேசுதாசன் தமிழ் செவ்வியல் இலக்கியத்திலும் சங்க இலக்கியத்திலும் மட்டும் அல்ல, நவீன இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டவர். அறிஞர் வையாபுரிப் பிள்ளையின் மாணவர். அந்த வரிசையில் பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவரான வேத சகாயகுமார் மூன்றாம் தலைமுறையினர் எனலாம்.

வேத சகாயகுமார் காத்திரமான இலக்கிய விமர்சகர். தமிழ்ச் சிறுகதை வரலாறு என்னும் தன் நூல் வழியாக விமர்சன உலகுக்கு அறிமுகமானவர். கொல்லிப்பாவை, சொல்புதிது, வைகை, சதங்கை, மாற்றுவெளி, உயிரெழுத்து முதலிய இதழ்களில் தன் கருத்துகளைப் பதிவு செய்தவர்.

சுந்தர ராமசாமியின் காகங்கள் இலக்கிய இயக்கத்தில் இயங்கியவர். சுந்தர ராமசாமியை ஒரு இலக்கியப் பிழம்பாகப் போற்றுபவர். சுந்தரராமசாமியும் பேராசிரியர் ஜேசுதாசனும் தன் இரு இறகுகள் என நினைக்கிறவர் இவர். புதுமைப்பித்தன், கால்டுவெல் தொடர்பான இவருடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் இலக்கிய மரபின் சிறுசிறு அசைவுகளைக் கூடக் கவனத்தில் கொள்பவர் வேத சகாயகுமார்.

வேத சகாயகுமார் கல்லூரிக் கல்விப் புலத்தின் உள்ளே தன் செயல்களை முடக்கிக் கொண்டவர் அல்ல. நெய்தல் சமூக இளைஞர்களைத் திரட்டி, அவர்களுக்கு இலக்கிய உணர்வு ஊட்டி, படைப்பாளிகளாக ஆக்க முயன்றவர். பெருமளவு வெறர்றியும் பெற்றவர். அவருடைய நெய்தல் உரைகளை எக்கர் என்னும் தலைப்பில் அ.சஜன் தொகுத்திருக்கிறார்.

வேத சகாயகுமார் பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவராகக் கேரளம் சித்தூர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி, 2005இல் பணி நிறைவு பெற்றார். கல்விப் புலத்திற்கு அப்பால் எத்தனையோ ஆர்வலர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர் இவர்.

வேதசகாயகுமாரின் வழிகாட்டி பேராசிரியர் ஜேசுதாசன் சாதாரணமானவர் அல்ல. அவருடைய துணைவியார் எப்சிபா ஜேசுதாசன் தமிழ்ப் பெண் நாவல் ஆசிரியர்களில் முதன்மையான ஒருவர். அவர் எழுதிய ‘புத்தம் வீடு’ சிறந்த எதார்த்த நாவல்.

அன்றைய கல்விச் சூழல் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் பேராசிரியர் ஜேசுதாசன் புதுக்கவிதையைக் கேரளப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்தார். தன் மாணவர்களுக்கு எழுத்து இலக்கிய வட்ட இதழ்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்தார். பேராசிரியர் ஜேசுதாசனின் முயற்சியால். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ் ஆய்வு அரங்கில் சண்முகசுந்தரம் மற்றும் புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து சுந்தரராமசாமி உரையாற்றினார்.

சுந்தர ராமசாமியின் வீட்டு மாடியில் அவர் தலைமையில் மாதம் தோறும் காகங்கள் இலக்கியக் கூட்டம் நடந்தது. வேத சகாயகுமார், ராஜ மார்த்தாண்டன், அ.கா.பெருமாள் ஆகியோர் இந்த அமைப்பின் உள் வட்டத்தில் செயல்பட்டனர்.

புதுமைப்பித்தன் கதைகளை ஒழுங்குபடுத்திக் கால அடிப்படையில் வரிசைப்படுத்தினார். வேத சகாயகுமார் இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார். முக்கியமான தமிழ்ப் படைப்பாளிகளைச் சந்தித்தார். சி.சு.செல்லப்பா, பி.எஸ்ராமையா ஆகியோரிடம் உரையாடி, மணிக்கொடி காலச் சூழலை அறிந்துகொண்டார். விடுதலைப் போராட்ட காலச் சிற்றிதழ்களைப் பார்வையிட்டார்.

ராஜ மார்த்தாண்டன், வேத சகாயகுமார் இன்னும் ஒருவரும் சேர்ந்து கோகயம் இலக்கியச் சிற்றிதழை வெளிக்கொண்டு வந்தனர். 70களின் பின் பகுதிகளில் ஆய்வு மாணவர்கள் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் பங்கெடுக்கத் தொடங்கினர்.

1989இல் இருந்து ஏப்ரல் 2000 வரை நெய்தல் இலக்கிய இயக்கம் காகங்களின் தொடர்ச்சியாகச் செயல்பட்டது. இதில் வேத சகாயகுமார்¤ன் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இக்காலத்தில் அவருடைய முதல் நூலான தமிழ்ச் சிறுகதை வரலாறு வெளிவந்தது.

இலக்கிய மறுமலர்ச்சியின் உடன் நிகழ்வாகப் பிரச்சார எழுத்து தமிழில் தோன்றியது. வணிக எழுத்து பிரச்சார எழுத்தின் மாற்று வடிவம் என்றார் வேத சகாயகுமார். தமிழ்ப் படைப்புச் சூழலில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தை முழுமையாக மறுத்தார் அவர்.

மணிக்கொடிப் படைப்பாளிகளை இரு தளத்தில் எதிர்கொண்டார் வேத சகாயகுமார், புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி, பிச்சமூர்த்தி ஆகியோரை ஒரு தளத்திலும் பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, ந.சிதம்பரசுப்பிரமணியம் ஆகியோரை இன்னொரு தளத்திலும் எதிர்கொண்டார் அவர். அவர்களெல்லாம் அவார் பார்வையில் சமூக எதார்த்தப் படைப்பாளிகள். மௌனியின் போக்கை வரவேற்கிறார் இவர்.

நவீனத்துவ விமர்சனத்தையும் கணக்கில் எடுக்கிறார் வேதசகாயகுமார். நவீனத்துவம் என்பது என்ன? இரு உலகப்போர்களுக்கிடையே செல்வாக்குப் பெற்ற இருத்தலியத் தத்துவத்தின் இலக்கிய வெளிப்பாடு இது என்கிறார். இவர், எதார்த்தவாதத்தைப்போல இதுவும் உலகளாவிய இலக்கியக் கோட்பாடு என்கிறார். சமூகம் தனி மனிதனின் மனதில் எழுப்பும் நெருக்கடிகளையே அது பதிவுசெய்கிறது என்கிறார். இறுக்கமான மொழி நடை நவீனத்துவத்தின் மொழ¤யாக அமைந்தது. அழகியல் கூறுகளில் படிமம் முதலிடம் பெற்றது.

தமிழில் மார்க்சியக் கோட்பாடு சார்ந்த விமர்சனங்களை சரஸ்வதி அறிமுகம் செய்தது. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதற்கு நேர் எதிர்மறையான நிலைப்பாட்டினை மேற்கொண்டது. ‘நடை’யைத் தொடர்ந்து ‘யாத்ரா’ ‘கொல்லிப்பாவை’ இதழ்கள் நவீனத்துவப் பார்வையில் இயங்கின. மார்க்சிய விமர்சகார்களான கைலாசபதி, ரகுநாதன் முதலியோர் படைப்புகளின் உள்ளடக்கம் மீதே கவனம் செலுத்தினர். வடிவம் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை எனக் கடுமையாக விமர்சிக்கிறார் வேதசகாயகுமார்.

வாசிப்பு முக்கியமானது என்கிறார் வேதசகாயகுமார். நல்ல படைப்புகள் உருவாவது போல, நல்ல வாசகர்கள் உருவாவதும் மொழிக்கு ஆரோக்கியத்தைத் தரும். கலையின் குணம் வாழ்வின் பெரும் புதிரை வாசக உணார்விற்கு நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் என்கிறார்.

வேதசகாயகுமார் தொகுத்த புதுமைப்பித்தன் கதைகளைக் காலச்சுவடு வெளியிட முற்பட்டது. புதுமைப்பித்தனின் தழுவல் கதைகளை இனம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றார் வேதசகாயகுமார். சுந்தரராமசாமி இதற்கு உடன்படவில்லை. ஆகவே இந்த முயற்சியில் இருந்து ஒதுங்கிவிட்டார் வேதசகாயகுமார்.

மரபை விமர்சிக்கும் படைப்பாளியின் ஊடாகவே மரபு அர்த்தமுள்ள தொடர்பினைப் பெறுகிறது. இதனால் பலவீனங்கள் களையப்பட்டு, பலங்கள் மட்டுமே தொடர்ச்சி பெற அனுமதிக்கப்படுகின்றது என்னும் அவர் கருத்து மிகுந்த முக்கியத்துவம் உடையது.

மலையாள விமர்சகரான ஐயப்ப பணிக்கர் செய்ததைப் போலவே திணைக்கோட்பாடு தமிழில் மீட்டுருவாக்கம் பெற்றிருக்க வேண்டும், மாற்று அழகியலுக்கான பார்வையாக அதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்னும் வேதசகாயகுமாரின் கருத்தும் மிகுந்த முக்கியத்துவம் உடையது.

‘சொல் புதிது’ என்னும் சிற்றிதழின் காரணமாகக் காலச்சுவடு இதழோடு வேதசகாயகுமாருக்கும் ஜெயமோகனுக்கும் இருந்த உறவு சீர்கெடத் தொடங்கியது. இது ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்னும் கதையை வேதசகாயகுமார் எழுதத் தூண்டியது. இந்தக் கதை காரணமாக அவருக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வந்தது.

தமிழ் விமார்சனக் கலைக் களஞ்சியம், தமிழ்ப் புனைகதைக் களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் என்ற மூன்று கலைக் களஞ்சியங்களை உருவாக்கத் திட்டமிட்டார் குமார். தமிழ் விமர்சனக் கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் நிறைவு பெற்றது. அவருடைய கல்விப் பணியில் இது முக்கியமானது.

கால்டுவெல்லின் திராவிட மொழியின் ஒப்பிலக்கண நூலின் முன்னுரையை முக்கியமானதாகக் கருதுகிறார் குமார். இந்த முன்னுரை பின் வந்த பதிப்புகளில் நீக்கப்பட்டது. இதைத் திரும்பச் சேர்க்கும் பணியை வேதசகாயகுமார் வெற்றிகரமாக மேற்கொண்டார்.

ஆழிப்பேரலை குமரி மாவட்டக் கடலோரத்தை முழுமையாக புரட்டிப்போட்ட பின், கடலோர வாழ்வை மீட்டுருவாக்கம் செய்ய அருள்தந்தை ஜெயபதி அடிகளார் மறுகட்டுமானம் தொடங்கி இருந்தார். 2007இல் பேராசிரியர் வறீதையாவும் வேதசகாயகுமாரும் இணைந்து நெய்தல் படைப்பாளிகளின் இயக்கத்தைத் தோற்றுவித்தனர். வாசிக்கும் பழக்கம் கடலோர மக்களிடம் குறைவாக இருந்தது. அவர்களைப் படைப்பாளர்களாக மாற்ற, முதலில் செய்ய வேண்டியது அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொள்ள ஊக்குவிப்பதுதான் என நினைத்தார் குமார்.

மூளை உழைப்பு என்பது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படை. நாடார்கள் அளவுக்கு அவர்களைச் சுறர்றியிருந்த பிற சமூகங்கள் முன்னேறாததற்கு அடிப்படை என்ன? அவை நாடார் சமூகம் அளவுக்கு மூளை உழைப்பை முன்னெடுத்துச் செல்லவில்லை.

செவ்வியல் இலக்கியங்களின் இரண்டாம் கட்ட வாசிப்பை திராவிட இயக்கங்கள் பெற்றன, திராவிட இயக்கங்கள் சமயச் சார்பு இலக்கியங்களை வெறுத்தன. செவ்விலக்கிய மூலத்தை வாசிப்பதை வேதசகாயகுமார் வற்புறுத்தினார்.

அற நூல்களின், குறிப்பாக திருக்குறளின் மொழிப் பாங்கு சங்க இலக்கியங்களிலேயே தோற்றம் கொண்டு உள்ளது என்பதை முதன்முதலில் பதிவு செய்தவர் வேதசகாயகுமார்.

பரத்தமை பற்றிய வேதசகாயகுமார்¤ன் பார்வையும் சிந்திக்கத்தக்கது.

சமகாலத் தமிழ்ச் சமூகம் செயற்கையாக ஒட்டப்பட்ட ஒரு கூட்டு சமூகம் என்கிறார் வேத சகாயகுமார். இன்று இச்சமூகத்தின் பேச்சு மொழியாகத் தமிழ் விளங்குவது ஒரு வரலாற்று விபத்து என்கிறார். இதுவும் விவாதிக்க வேண்டிய கருத்து.

தமிழர்களின் இன உணர்வை மறு உயிர்ப்பு அடையச் செய்வது அவசியமானது என்பது அவார் கருத்து. எல்லிசு என்னும் ஆங்கில அதிகாரி 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதன் காரணமாகவே திருக்குறளைப் பதிப்பித்தார்.

தமிழ்க் கைத் தொழிலாளர் மரபை விரிவாகப் பதிவு செய்கிறார் வேதசகாயகுமார். கடற்கரை ஓரங்களில் இருந்த தமிழ் நெசவாளார்கள் பற்றிய தகவல்களைத் தக்கச் சான்றிதழ்களுடன் முன் வைத்துள்ளார் இவர்.

இந்த நூல் இலக்கியம் பற்றி மட்டும் பேசவில்லை. தமிழ் வரலாறு, தமிழக வரலாறு, தமிழர் வரலாறு பற்றி எல்லாம் பேசுகிறது. தமிழ் சமூகம் பற்றி பேசுகிறது. பண்பாடு பற்றியும் பேசுகிறது. நவீனத் தமிழ் இலக்கியம் பற்றியும், பண்பாட்டு வரலாறு பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இதை அருமையாகத் தொகுத்த அ.சஜனைப் பாராட்டுகிறேன்.

ஒரே ஒரு குறை என் மனதில் படுகிறது. கலை கலைக்காகவே என்ற சிந்தனை உள்ள படைப்பாளிகளையும், பனுவல்களையும் அவை பற்றிய மதிப்பீடுகள் பற்றியும் விரிவாகப் பேசும் வேத சகாயகுமார் கலை சமூகத்துக்காகவே. சமூக வளார்ச்சிக்காகவே, மேம்பாட்டிற்காகவே என்னும் பார்வை கொண்டவரின் கருத்துகளையும் படைப்புகளையும் கூட விமார்சித்திருக்க வேண்டும்.

ஆராய்ச்சிக் குழுக்கூட்டம், கலை இலக்கியப் பெரு மன்ற நிகழ்வுகள் ஆகியன பற்றியும் தன் நினைவுகளை நோர்நிலையாகவோ எதிர் நிலையாகவோ பதிவு செய்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் அவருடைய பார்வை சம நிலைப்பட்டிருக்கும்.

சுந்தர ராமசாமியின் பார்வைக்கு நேர் எதிரிடையாகச் செயல்பட்ட குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் அவார் விட்டிருப்பது குறையாகப் படுகிறது, இன்னொரு குறை, சமூகத்தையும் இலக்கியத்தையும் இணைத்துப் பார்க்கத் தவறியிருக்கிறார் சஜன். மற்றபடி மிக அருமையான நூல் இது. அ.சஜனின் பணி பாராட்டத்தக்கது.

- பொன்னீலன்

Pin It