சில மாதங்களுக்கு முன்பு, சுந்தர ராமசாமியின் சிறுகதையான "பிள்ளை கெடுத்தாள் விளை' குறித்த விவாதத்தை "தலித் முரசு' தொடங்கி வைத்தது.

காய்ந்து கருகிக் கிடக்கும் காட்டில் தீக்குச்சியொன்றை கொளுத்தி எறிந்தது போலாகிவிட்டது நிலவரம். எழுத்தாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் கட்டாயம் கருத்துச் சொல்ல வேண்டும் என்றொரு நெருக்கடி. மவுனம் காத்தால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற பதற்றம். இருவேறு நிலைகளில் நின்று பேசியும் எழுதியும் தமது கருத்துகளைப் பலரும் பதிவு செய்து கொண்டனர்.

மிகச் சமீபத்தில் அம்பையும், ஜி. முருகனும், சிறீநேசனும் இது தொடர்பாக தங்களின் கருத்துகளை எழுதியுள்ளனர். அம்பையின் கட்டுரை ("காலச்சுவடு' செப்டம்பர் 2005) முற்றிலும் வேறு தளத்தில் நின்று பேசுகிறது. வாதப்பிரதிவாதங்களை அவர் கவனம் கொள்ளவில்லை. அந்தக் கதையை எப்படி ஒரு பெண் நிலை பிரதியாய் புரிந்து கொள்வது என்றே எழுதுகிறார். பங்களாதேஷ், நேபால் போன்ற நாடுகளின் சில இனங்களில் பெண்கள் படிப்பதற்கு இருக்கும் தடையைச் சுட்டிக்காட்டி இந்தக் கதையும்கூட அப்படியானதொரு சமூகத்தடையை மய்யப்படுத்துகிறது என்கிறார். சில இனங்களில் பெண்கள் படிக்கவிடாமல் தடுக்கப்படுவது இன்றும் நடப்பதுதான். தமது இனத்தின் கட்டுதிட்டங்களை மீறுகிற பெண்களைக் கொன்றுவிடும் போக்கு, இன்றும் பல இடங்களில் இருக்கிறது.

ஆனால், இப்படியான சிக்கலை அந்தச் சிறுகதை பேசவில்லை. அது, இருவேறு சமூகத்தவர்களை முன்னிறுத்திப் பேசுகிறது. நவீன சிறுகதைகளை எழுதிவரும் ஜி. முருகனும், கவிஞர் சிறீநேசனும் தங்களின் சமீபத்திய "வனம்' இதழில், இன்றைய அறமற்ற இலக்கியச் சூழலைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் என்பதற்காகவே அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் விமர்சிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள் அவர்கள். இது, அக்கறையோடும் நியாயமான கோபத்தோடும் எழுந்த விமர்சனங்களையும், விவாதங்களையும் கொச்சைப்படுத்துகிறது.

கலைஞர்கள் இனம், மொழி, சாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களின் படைப்புகளையும், கருத்துகளையும் இனம், மொழி, சாதி நீக்கம் செய்து பார்க்க வேண்டும் என்றால், பார்க்கலாம்தான்! ஆனால், அவர்களின் படைப்புகளும், கருத்துகளும் சாதிய உள்ளடக்கத்தோடு இருக்கும்போது என்ன செய்வது? கலைஞன் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன் என்றால், இந்தச் சார்புகள் மட்டும் ஏன் தொக்கிக் கொண்டு நிழல்போல் உடன் வருகின்றன?

இதிலெல்லாம் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என இந்த விவாதங்களில் பங்கேற்ற சாருநிவேதிதாவை மென்மையாகக் கடிந்து கொண்டு, மது அருந்திக் கொண்டே இதைப் பற்றிப் பேசவும் அழைக்கிறார்கள் இருவரும். இந்த விவாதத்தை இதை விடவும் யாராலும் அசிங்கப்படுத்திவிட முடியாது. அறம் கெட்டுவிட்டது என இவர்கள் அங்கலாய்ப்பதில் அர்த்தமேயில்லை.

அண்மையில் யூகா என்றொரு பெண்மணி, ஜப்பானிலிருந்து எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அங்கே ஒரு பல்கலைக் கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருக்கும் அவருக்கு, அந்நாடு உதவித் தொகையொன்றை வழங்கியிருக்கிறது. அதனைக் கொண்டு இந்தியாவில் தமிழகம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் தலித் மக்களைப் பற்றி ஆய்வுகளைச் செய்கிறார்.

அவர் எங்களூரிலே தங்கியிருந்தபோது, மாட்டுக்கறி விற்கும் கடையொன்றுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆச்சரியத்தோடு அவர் மாடுகளை அறுக்கும் இடத்தையும், இறைச்சியை விற்கும் இடத்தையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, சில குறிப்புகளையும் எழுதிக் கொண்டார்.

அவர் அப்போது சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாய் இருந்தது. ஜப்பானில் மாட்டுக்கறியின் விலைதான் மற்ற எல்லா இறைச்சிகளை விடவும் அதிகமாம்! ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை இந்திய ரூபாயில் ஏறக்குறைய ஆயிரத்து எழுநூறு ரூபாய்க்கும் மேல் இருக்குமென்றார். இந்தியாவிலே அதுதான் மலிவான இறைச்சி. எங்கள் ஊரில் ஒரு கிலோ மாட்டிறைச்சி நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஜப்பானில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள். இந்தியாவிலோ ஏழை தலித்துகள். இங்கு தலித்துகளுக்கும், அங்கு பணக்காரர்களுக்கும் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் வேறு வேறு சமூக மதிப்பு. என்ன வகையான முரண் இது?!

இன்று அச்சு வசதிகள் பெருகிவிட்டதால், புத்தகங்களின் வரத்தும் அதிகரித்துவிட்டன. தலையணை பெரிய புத்தகங்களெல்லாம் மிகச் சாதாரணமாக வருகின்றன. இந்த வாரம் நூறு புத்தகங்கள் என்றால், அடுத்த வாரம் இருநூறு புத்தகங்கள் என்ற அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. புத்தகம் படிப்பவர்களை கவருவதற்காகப் பல்வேறு உத்திகள் பதிப்பகங்களால் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று குறைந்த விலையில் வெளியிடப்படும் சிறு நூல்கள். இந்த நூல்களைக் கையில் எடுத்துச் செல்வதும், வேகமாக வாசித்து முடிப்பதும் எளிதாக இருக்கிறது. இதைவிட எளிதானது அதை வாங்க முடிவது!

"பாரதி புத்தகாலயம்' நூறு தலைப்புகளில் இத்தகு சிறு நூல்களை வெளியிட்டுள்ளது. அதேபோல், "கங்கு' "கறுப்புப் பிரதிகள்' ஆகியவையும்கூட. ஞான. அலாய்சியசின் நூல்கள் பலவும் இப்போது சிறு நூல்களாக ஆங்கிலத்தில் வருகின்றன. "கங்கு' வெளியீட்டில் வந்துள்ள ராஜ்கவுதமனின் "தலித்திய அரசியல்' சிறு நூல், சமீபத்தில் இப்படி வந்த சிறுநூல்களில் சிறப்பானது. அறுபத்து நான்கு பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலை ஒரே வாசிப்பில், ஒருமணி நேரம் செலவிட்டுப் படித்துவிடலாம்.

தமிழகத்தை மய்யப்படுத்தி சாதியின் தோற்றத்தையும், கட்டுமானத்தையும், அதன் தீவிர வளர்ச்சிகளையும் இதில் ராஜ்கவுதமன் ஆராய்கிறார்.

சாதி ஒழிப்பில் முனைப்புடன் பங்கேற்ற அயோத்திதாசப் பண்டிதர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பின்னணி, களம், சிந்தனைகளை முன்வைத்து ஆராயும் கவுதமன் இன்று கல்வி, கலப்புமணம், மதமாற்றம் ஆகிய மாற்று முயற்சிகள் சாதியிடம் பலனற்றுப் போனதை கவனப்படுத்துகிறார். பார்ப்பன எதிர்ப்பின் வழியே தங்களை தனி சாதிகளாய் அடையாளப்படுத்திக் கொண்டு பயன்களை அடைந்த இடைசாதியினரை ஒப்ப, தலித்துகளும் இந்து மதத்துக்குள்ளிருந்தபடியே தம் தலித் அடையாளத்தை முன்வைத்து மேலெழ வேண்டும் என்று சிலர் முன்வைக்கும் கருத்தியலை நிராகரிக்கிறார் கவுதமன்.

இருக்கின்ற பல்வேறு முரண்களைப் பட்டியலிட்டு “நவீன பார்ப்பனியத்தை வேரறுத்த அவ்விடத்தில், மனிதனை மனிதனாக மட்டும் மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தும் அக்கறை கொண்டவர்கள், முன்னோடி சாதி ஒழிப்புப் புரட்சியாளர்களின் விடுதலை அரசியலை அதிகாரத்துக்கு கொண்டுபோக வேண்டும்'' என்கிறார் கவுதமன். இந்நூல், பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுக்கும், விவாதத்துக்கும் கொண்டு செல்லும் வகையிலான கட்டமைப்பினை அதன் தன்மையிலேயே கொண்டுள்ளது.

Pin It